ரஷ்யத் தமிழறிஞர் அலெக்ஸாந்தர் துபியான்ஸ்கி மறைவை ஒட்டி ஈழத்தின் முக்கிய எழுத்தாளரான சாந்தன் பகிர்ந்துள்ள இந்தக் கட்டுரை சோவியத் நாட்டில் நடைபெற்ற தமிழாய்வுகள் குறித்து சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.
••
– ஐயாத்துரை சாந்தன்
ரஷ்ய மற்றும் சோவியத் இலக்கியங்கள் தற்காலத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஓரு நீண்ட தனி ஆய்வுக்குரியவை. இவை தவிர்ந்த பிற தொடர்புகள் பற்றிய சில தகவல்களைத் தருவதே இக்கட்டுரையின் நோக்கம்.
தமிழ்மொழி பற்றிய ஆர்வமும் அதனைப் பயிலும் முயற்சிகளும் ருஷ்ய நாட்டில் 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே காணப்பட்டன. பேயர், மெஸ்ஸர் ஸ்மித், பலாஸ், போன்ற அறிஞர்கள் அப்போது முயற்சிகளை மேற்கொண்டார்கள். எனினும் இவை மிக மட்டுப்படுத்தப்பட்டவையாகவே அமைந்தன. 1785ல் தமிழ் நாட்டிற்கு விஜயஞ்செய்யும் வாய்ப்பினைப் பெற்ற பாடகரான கெராசிம் லெபதேவ் என்பவர் தமிழ்மொழியைப் பயிலும் வாய்ப்பினைப் பெற்றார். இதற்கடுத்த நூற்றாண்டில் பாவெல் பெத்ரோவிச், புலிச் , போன்றோர் தமிழியல் ஆர்வலராகத் திகழ்ந்தனர்.
சோவியத் நாட்டின் பிறப்பிற்குப் பிறகு, இம்முயற்சிகள் ஆழமும் அகலமும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இயல்பாகவே அமைந்தன. அலெக்சாந்தர் மெர்வத், அவர் மனைவியான லூத்மிலா மெர்வத் ஆகியோரின் பங்குப் பணியுடன் இம் முயற்சிகளுக்குக் கால்கோள் இடப்பட்டது. மாபெரும் அக்டோபர் புரட்சியின் காலத்தில் ஓரு ஐந்தாண்டு காலம் மெர்வத் தம்பதியினர் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பயணம் மேற்கொண்டிருந்தனர். மெர்வத் பல தமிழ்ப் பழமொழிகள், நாடோடிக்கதைகள் ஆகியவற்றை மொழிபெயர்த்தார். இவர்களின் தீவிர ஈடுபாட்டினதும் ஆராய்ச்சியினதும் பயனாய்த் ‘தமிழ்ப் பேச்சு மொழி இலக்கணம்’என்ற நூல் வெளியானது. இது லெனின் கிராத் பல்கலைக்கழகத் தென்னாசிய மொழியியற் துறையின் கீழைத்தேய பகுதியினரால் 1929 ஆண்டில் வெளியிடப்பட்டது. லெனின் கிராத் பல்கலைக்கழகம் கடந்த 45 ஆண்டுகளிற்கும் மேலாகத் தமிழைப் போதித்து வரும் பெருமைக்குரியது. இங்கு தமிழ்ப் போதனை ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ 10ஆண்டுகளின் பின் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் போதனை தொடங்கப்பட்டது.
1950இன் பிறகு வந்த காலம், சோவியத் நாடு தமிழுடன் கொண்ட உறவானது புது உற்சாகமும் உத்வேகமும் கொண்ட காலமாகும். இந்தக் காலகட்டத்திலிருந்து மிஹையில் அந்திரநோவ், செம்யோன் ருதின்(செம்பியன்) அ. இப்ரஹிமோவ், இறினா ஸ்மிர்னோவா, விளதிமிர் மகறேங்கோ, நிகித்தா குறொவ், அல்யா கபொசினா, நத்தால்யா இவானேவா, விக்தர் பிளின், அலக்ஸேய் சொலதோவ், அலெக்சாந்தர் துபியானஸ்கி, வித்தாலி ஃபுர்ணிகா, லூபோவ் பிச்சிக்கினா, மார்க்கரீத்தா, என்றொரு நீண்ட தமிழறிஞர் பரம்பரையே அங்கு உருவாக ஆரம்பித்தது.
18ம் 19ம் நூற்றாண்டுகளின் தமிழறிஞர்களை முன்னோடிகளெனக் கொண்டால் , மேலே குறிப்பிட்ட பட்டியலில் ’50 ன் பின் வந்தோரை இரண்டாம் தலைமுறையினரெனவும், ’70ன் பின் வந்தோரை மூன்றாந் தலைமுறையினரெனவும் நாம் வசதி கருதிப் பாகுபடுத்திக் கொள்ளலாம்.
ஐம்பதுகளின் பிற்பகுதியில் லெனின்கிராத் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவரான சென்னை அதிர்ஷ்டலட்சுமி தமிழ்-ருஷ்ய சொற்றொடர் அகராதியை ஆக்கினார். 1960ல் ‘பிற மொழி’ அரசாங்கப் பதிப்பகத்தினரால் தமிழ்-ருஷ்ய அகராதி வெளியிடப்பட்டது. அ. பியாதிகோர்ஸ்கி, செம்யோன் ருதின் (செம்பியன்) ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகவும் பூர்ணம் சோமசுந்தரம் அவர்களைப் பொறுப்பாசிரியராகவும் கொண்டு வெளியான இந்த அகராதியில் மிஹையில் அந்திரோனவ் எழுதிய தமிழ் இலக்கணச் சுருக்கமும் சேர்க்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ 38 ஆயிரம் சொற்கள் தொகுக்கப்பட்டிருந்தன.
இதன் பின்னர் 1965 ல் ‘சோவியத் கலைக்களஞ்சிய’ பதிப்பகத்தினரால் ருஷ்ய-தமிழ் அகராதி வெளியிடப்பட்டது. மிஹையில் அந்திரோனவ் அ.இப்ராஹிமோவ், திருமதி நி.யுகனோவா ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகவும் பூர்ணம் சோமசுந்தரத்தைப் பொறுப்பாசிரியராகவும் கொண்டு வெளியான இதில் ஏறக்குறைய 24 ஆயிரம் சொற்கள் அடங்கியிருந்தன. மிஹையில் அந்திரோனவ் எழுதிய இலக்கணச் சுருக்கமும், முன்னுரையும் இடம்பெற்றிருந்தன.
இக்காலகட்டங்களில், திருக்குறள், சிலப்பதிகாரம், பாரதியார் கவிதைகள் போன்றவையும், தற்காலத் தமிழ் எழுத்தாளார்களின் படைப்புக்களும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன. இவ்வகையில் கல்கி, லக்ஷ்மி, ஜெயகாந்தன் ஆகியோரின் நாவல்களும் புதுமைப்பித்தன் கதைத்தொகுதி போன்றனவும் அகிலன், ராஜம் கிருஷ்ணன், கி.வா.ஜகந்நாதன், தி.ஜ.ரங்கநாதன், தி. ஜானகிராமன் , சிதம்பர ரகுநாதன், அழகிரிசாமி, ஆகியோரின் சிறுகதைகளும் மொழிபெயர்ப்பில் வெளியாகின. ’70 களில் ஜெயகாந்தன் கதைத்தொகுதி ஆதவன் , கொ.மா. கோதண்டம் , இந்திரா பார்த்தசாரதி , ஆகியோரின் படைப்புக்களும் வெளியிடப்பட்டன.
இதே நோக்கில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களும் உரிய இடம்பெற்றுள்ளன. மாஸ்கோ ‘புனைகதைப் பதிப்பக’த்தினரால் 1964ல் வெளியிடப்பட்ட ‘த்ஸ்வ்யெத் ச்சாயா’ (தேநீரின் நிறம்) என்ற இலங்கை எழுத்தாளர்களின் கதைத்தொகுதியி லும் அதே பதிப்பகத்தினரால் 1979 ல் வெளியிடப்பட்ட ‘ப்றாவா நா க்ஷ்ஷிஸ்ன்’ (வாழ்வதற்கு உரிமை) என்ற இலங்கை எழுத்தாளர்களின் கதைத் தொகுதியிலும் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன. முன்னதில் ஒன்பது தமிழ்க் கதைகளும் ஒன்பது சிங்களக் கதைகளும். இத் தொகுதியின் தலைப்புக்கதை செ. கணேசலிங்கனுடையது.
அதைத் தவிர ‘பிறப்பு’ என்ற அவருடைய இன்னொரு கதையும் வரதருடைய ‘பிள்ளையார் கொடுத்தார்,’ கே.டானியலுடைய ‘உப்பிட்டவரை’,‘சுவடு’, ‘சோழகம்’ ஆகிய கதைகளும் இலங்கையர்கோனுடைய ‘கங்கைக்கரையில்,’ வ.அ.இராசரத்தினத்தின் ‘தோணி,’ கனக. செந்திநாதனின் ‘ஒருபிடி சோறு’ ஆகிய கதைகளும் இதில் இடம்பெற்றிருந்தன. இவற்றை மொழிபெயர்த்தவர் அ. இப்ரஹிமோவ் ஆவார்.
‘வாழ்வதற்கு உரிமை’ தொகுதியில் தமிழ்க் கதைகள் பத்தும் சிங்களக்கதைகள் பதினைந்தும் இடம்பெற்றிருந்தன. தலைப்புக்கதை குணசேன விதானவுடையது. பத்துக் தமிழ்க் கதைகளும் வருமாறு: இராஜ அரியரத்தினம்- ‘வெள்ளம்,’ வரதர்- ‘பிள்ளையார் கொடுத்தார்,’ டொமினிக் ஜீவா- ‘செய்திவேட்டை’, ‘கொச்சிக்கடையும் கறுவாக்காடும்,’ ‘அவர்களும் இவர்களும்’ ஆகிய மூன்று கதைகள். கே. டானியலுடைய மூன்று கதைகளும் வ.அ. இராசரத்தினம் கனக செந்திநாதன் ஆகியோரின் ஒவ்வொருகதைகளும் (இவ்வனைத்தும் ’தேநீரின் நிறம்’ தொகுதியில் இடம்பெற்றனவை) ஆகும். இவற்றையும் மொழிபெயர்த்தவர் அ.இப்ரஹிமோவ் அவர்கள். இந்நூலில் கதாசிரியர்களைப் பற்றிய சிறுகுறிப்புக்களும் காணப்படுகின்றன.
இலக்கிய மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் இரண்டாம் தலைமுறையில் இப்ரஹிமோவ் அவர்கள் வகித்த இடத்தை மூன்றாம் தலைமுறையில் வித்தாலி ஃபூர்ணிகா வகிக்கிறார். அறுபதுகளிலிருந்து இற்றைவரை அவர் பல தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புக்களை மொழிபெயர்த்தார். உக்ரேனிய மொழியில் பெயர்க்கப்பட்ட ஜெயகாந்தனின் ‘சுந்தரகாண்டம்,’ ருஷ்யனில் பெயர்க்கப்பட்ட காவலூர் ராசதுரையின் ‘ஒருவகை உறவு,’ செ. யோகநாதனின் கதையொன்று ஆகியவையும் இவற்றுள் அடங்கும். ‘தல்ஸ்தோயும் தமிழிலக்கியமும்’ மற்றும் தமிழ்ப் பண்பாடுகளை விளக்கும் ’தொட்டிலிருந்து சுடுகாடு வரை’, ஆகியன அவரின் நூல்களாகும். இவை தவிர, தமிழிலக்கியம் பண்பாடு போன்றவற்றைப் பற்றி 60க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.
இதேபோல மூன்றாந் தலைமுறைத் தமிழியலாளர்களாக லூபோவ் பிச்சிக்கினா, அலெக்சாந்தர் துபியான்ஸ்கி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இருவரும் சேர்ந்து தமிழிலக்கிய வரலாறு பற்றிய நூலொன்றினை எழுதியுள்ளார்கள். மார்க்கரீத்தா ‘திருவாசக’த்தை மொழிபெயர்த்துள்ளார்.
இந்தத் தமிழ்த் தொடர்புகள் பற்றி ஆராயும் போது முதன்மையாகத் தெரிகிற தமிழியலாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோருடன் மட்டும் நாம் நிறுத்திவிடமுடியாது. ‘முன்னேற்றப் பதிப்பக’த்திலும், அதன் பிறகு ‘ராதுகா’(வானவில்) பதிப்பகத்திலும் மொழிபெயப்பாளர்களாகப் பணிபுரிந்த – புரியும் – சுப்பிரமணியன், என்.சொக்கலிங்கம், ஏ.கிருஷ்ணமூர்த்தி, பூர்ணம் சோமசுந்தரம், எம்.பிள்ளை, கே. ராமநாதன், ரா.கிருஷ்ணய்யா, சண்முகசுந்தரம், லட்சுமி, நா.தர்மராஜன், முகம்மது சரீபு, ஆகியவர்களை மறந்து விட இயலாது.
இவர்களில் பூர்ணம் சோமசுந்தரம் மொழிபெயர்ப்புப் பணிகளில் மட்டுமன்றிப் பிற தமிழாய்வுப் பணிகளிலும் மாஸ்கோவில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவராவர். இவர்களைவிட, சோவியத் நாட்டிற்கு வெளியேயிருந்து மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்ட கே ரகுநாதன், டாக்டர் ராமகிருஷ்ணன், கே.கணேஷ் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியவர்கள்.
இதேபோல ‘ரேடியோ மாஸ்கோ’வைச் சேர்ந்த மணிவர்மன், திருமதி.ஒல்கா மிரோனவா போன்றவர்களும் மறக்கப்பட்ட முடியாதவர்கள். விசேஷமாக இன்னொருவரையும் இங்கே குறிப்பிட வேண்டும். இவர் இன்னொரு சிறப்பான துறையினர்- ஓவியர் மிஹையில் ஃபியோதரவ். பாரதியாரை ஓவியமாக்கிப் புகழ்பெற்றவர். தவிர வ.உ.சி., வ.வே.சு.ஐயர், ஜெயகாந்தன் ஆகியோரையும் தம் தூரிகையால் தீட்டியவர். சோவியத் நாட்டிற்குச் செல்லும் தமிழ்க் கலைஞர்கள், இலக்கியவாதிகள் அவர் தூரிகையினின்றும் தப்ப முடியாது.
சோவியத்- தமிழ் உறவுகள், தமிழ் எழுத்தாளர்களின் நேரடிப் பயண அநுபவங்கள் பற்றிய ஆக்கங்கள் மூலமும் வளர்க்கப்படுகின்றன. இவ்வகையில் ஈழத்திலிருந்து சிவப்பிரகாசம், இந்திரகுமார், வ.பொன்னம்பலம் , சாந்தன் , லெ.முருகபூபதி, ஆகியோரும், தமிழ் நாட்டிலிருந்து அகிலன், நா.பார்த்தசாரதி, சுந்தரவடிவேலு, ராஜம்கிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் காமராஜர், சோலை, ஜெயகாந்தன், மதுரை காமராஜ் போன்றோரும் எழுதிய பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்கள் சமீப காலங்களில் வெளிவந்துள்ளன.
அண்மையில் என்சிபிஎச் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட ‘நட்பில் பூத்த மலர்கள்’ மற்றும் ‘மகாகவி தராஸ் ஷெவ்சென்கோ’ பற்றிய நூல் ஆகியவற்றிலும் இந்த சோவியத் – தமிழ் உறவுகளின் முன்னேற்றம் தெற்றெனப் புலப்படுகிறது.
(சோவியத் நாடு – ஜூன் 1988)