ரஷ்ய நாவலின் உதயம்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய், இவான் துர்கனேவ் ஆகிய மூவரின் முக்கிய நாவல்களும் ரஷ்யன் ஹெரால்ட் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்திருக்கின்றன. இந்த நாவல்களை வெளியிடுவதற்குத் தேர்வு செய்ததோடு அவற்றை எடிட் செய்து வெளியிட்டு இலக்கிய அந்தஸ்து பெற்றுத் தந்தவர் ரஷ்யன் ஹெரால்ட் பத்திரிக்கையின் ஆசிரியர் மிகைல் நிகிஃபோரோவிச் கட்கோவ்

 இவரது உறுதுணையில் தான் மூன்று படைப்பாளிகளும் தங்களுக்கான இலக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.

கட்கோவோடு இவர்களுக்கு இருந்த நெருக்கம் மற்றும் மோதல்கள் பற்றி SUSANNE FUSSO எழுதிய EDITING TURGENEV, DOSTOEVSKY, AND TOLSTOY புத்தகம் விரிவாகப் பதிவு செய்துள்ளது.

ரஷ்யன் ஹெரால்ட் அல்லது ரஷ்யன் மெசஞ்சர் என அழைக்கப்படும் மாத இதழ் 1856ல் துவங்கப்பட்டது. ரஷ்யாவின் சமகால அரசியல் பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகள் மற்றும் விரிவான வாதங்களை முன்னெடுத்த இந்த இதழ் தொடர்ந்து இலக்கியத்தரமான நாவல்களைத் தொடராக வெளியிட்டு வந்தது.

இதன் காரணமாக ரஷ்யா முழுவதும் பெரிய வாசகப்பரப்பை கொண்டிருந்தது. தேசியவாதம் தலைதூக்கிவந்த காலமது. ஆகவே இளைஞர்கள் மற்றும் உயர் தட்டு மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இதில் விமர்சகர் பெலின்ஸ்கி தொடர்ந்து எழுதி வந்தார். லியோ டால்ஸ்டாய் இதழைச் சந்தா செலுத்திப் பெற்று வந்ததோடு அதில் நடைபெறும் வாதங்களில் தொடர்ந்து பங்கெடுத்து வந்திருக்கிறார்.

இது போலவே தஸ்தாயெவ்ஸ்கி தனது கதைகள் ரஷ்யன் ஹெரால்ட்டில் வர வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து கட்கோவிற்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார், அதிலும் குறிப்பாகச் சைபீரிய சிறைத்தண்டனையை முடித்துக் கொண்டு திரும்பிய தஸ்தாயெவ்ஸ்கிக்கு எழுத்துலகில் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற தவிப்பிருந்தது. அதற்குக் கட்கோவ் பெரிதும் உதவினார். பொருளாதார ரீதியாகத் தஸ்தாயெவ்ஸ்கி மிகவும் சிரமப்பட்ட காலங்களில் தொடர்ந்து அவருக்கு முன்பணம் தந்து எழுத வைத்திருக்கிறார்

இதைப்பற்றி அன்னா தஸ்தாயெவ்ஸ்கி ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார்

தஸ்தாயெவ்ஸ்கியின் நான்கு நாவல்கள் ரஷ்யன் ஹெரால்டில் தொடராக வந்துள்ளன. அந்த நாட்களில் இரண்டு பக்கங்களுக்கு 125 ரூபிள் முதல் 250 ரூபிள் வரை ஊதியம் என முடிவு செய்யப்பட்டு அதற்கான முன்பணம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. எங்கள் திருமணம் பற்றிக் கட்கோவிற்குத் தஸ்தாயெவ்ஸ்கி கடிதம் எழுதி பணஉதவி செய்யும் கேட்டிருந்தார். இரண்டாயிரம் ரூபிள் ( ஒரு ரூபிள் இன்றைய மதிப்பு இந்திய ரூபாயில் ஒன்று ) அனுப்பி வைத்ததோடு தனது வாழ்த்துகளையும் கட்கோவ் தெரிவித்திருந்தார். தொடர்ந்து கட்கோவ் செய்த பணஉதவி காரணமாகவே தஸ்தாயெவ்ஸ்கியால் வாழ முடிந்தது. அவரது புஷ்கின் உரையைத் தனது இதழில் வெளியிட்ட கட்கோவ் அதற்கும் தனியான தொகையை அனுப்பி வைத்தார் என்கிறார் அன்னா.

தி டெவில்ஸ் நாவல் தொடராக வந்து கொண்டிருந்த போது அதன் முக்கிய அத்தியாயத்தை தனக்கு ஏற்புடையதாக இல்லை என்று கட்கோவ் திருப்பி அனுப்பி வைத்தார். அதை ஏற்றுக் கொள்ள முடியாத தஸ்தாயெவ்ஸ்கி தொடரை வெளியிடுங்கள். வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும் என்று பதில் எழுதினார்.

இதற்குக் கட்கோவ் வாசகர்களுக்கு எதைத் தர வேண்டும் என்று எனக்குத் தெரியும் ஆகவே மாற்றி எழுதினால் மட்டுமே வெளியிட முடியும் என்றார். தேவையான திருத்தங்களை நீங்களே செய்து கொள்ளவும் எனத் தஸ்தாயெவ்ஸ்கி பதில் எழுதியதால் கட்கோவின் திருத்தங்களுடன் தொடர் வெளியானது. நாவல் புத்தகமாக வெளியாகும் போது கட்கோவின் திருத்தங்கள் நீக்கப்பட்டன.

இதன்பிறகு புதிய நாவல் ஒன்றைத் தொடராக எழுத விரும்புவதாகத் தெரிவித்த தஸ்தாயெவ்ஸ்கி The Village of Stepanchikovo and Its Inhabitants குறுநாவலை அனுப்பி வைத்திருக்கிறார். இந்தக் குறுநாவலை வெளியிடத் தகுதியற்றது என்று நிராகரித்ததோடு இது போன்ற படைப்புகளை ரஷ்ய வாசகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று கடுமையான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் கட்கோவ்.

இதனால் ஆத்திரமடைந்த தஸ்தாயெவ்ஸ்கி வேறு இதழ்களில் தனது படைப்புகளை வெளியிட்டு வந்தார். பின்பு கட்கோவுடன் சமாதானம் ஏற்படவே மீண்டும் ரஷ்யன் ஹெரால்டில் தொடர்கதை எழுதத் துவங்கினார்.

குற்றமும் தண்டனையும் நாவலைத் தொடராக எழுதும் முன்பு அதன் கதைச்சுருக்கத்தை தஸ்தாயெவ்ஸ்கி விரிவாக எழுதி அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதம் வியப்பூட்டுகிறது.

முழுநாவலையும் எழுதி முடித்தபிறகு அந்தக் குறிப்பை எழுதியிருப்பாரோ எனும் அளவிற்கு நாவலின் கட்டுமானம் கதைப்போக்கு, கதாபாத்திரங்களின் மனத்தவிப்புகள் உள்ளிட்ட அத்தனையும் அந்தச் சுருக்கத்தில் தஸ்தாயெவ்ஸ்கி எழுதியிருக்கிறார்

தனது ஸ்டெபான்சிகோவா போலின்றி இந்த நாவல் நிச்சயம் ரஷ்ய வாசகர்களுக்குப் பிடிக்கும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

தஸ்தாயெவ்ஸ்கி பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் போதெல்லாம் கட்காவிடம் முன்பணம் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதங்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன

சில கடிதங்களில் கட்கோவ் நீங்களும் ஒரு எழுத்தாளர். என்னைப் போலவே பணமில்லாத நெருக்கடியை அனுபவித்தவர். ஆகவே உடனடியாக எனக்கு முன்பணம் அனுப்பி வையுங்கள் என்று மன்றாடியிருக்கிறார்.

கட்கோவ் இளைஞராக ஜெர்மனியில் தத்துவம் படிக்கச் சென்ற நாட்களில் கையில் காசில்லாமல் நண்பர்கள் அறையில் தங்கிக் கொண்டு வாழ்ந்திருக்கிறார். அவர் மொழிபெயர்ப்பு செய்த புத்தகத்திற்கான பணத்தைப் பதிப்பாளர் தரவில்லை. ஆகவே நண்பர்களிடம் கடன்வாங்கிச் செலவு செய்திருக்கிறார். அதனால் தஸ்தாயெவ்ஸ்கியின் நெருக்கடியைப் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. நான்கு முக்கிய நாவல்களைத் தொடராக எழுதிய போதும் கட்கோவை ஒன்றிரண்டு முறை மட்டுமே தஸ்தாயெவ்ஸ்கி நேரில் சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்புகள் பெரிதும் பணத்தேவையை ஒட்டி நடந்தவையே.

 தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனை தொடராக வெளிவந்த போது அதற்குப் பலத்த எதிர்ப்பு உருவானது. மட்டரகமான தொடர் கதையை உடனே நிறுத்தவேண்டும் எனப் பலரும் கடிதம் எழுதினார்கள், ஜி. இசட். எலிசீவ் என்ற விமர்சகர் கடுமையான எதிர்வினை கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால் கட்கோவ் எதற்கும் செவிசாய்க்கவில்லை. அவர் தஸ்தாயெவ்ஸ்கி உன்னதமான நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று பதில் எழுதினார். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடு போலவே இன்றும் உலகின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் குற்றமும் தண்டனையும் கொண்டாடப்படுகிறது. இத்தொடர் வெளியான நாட்களில் இதைப்படிப்பதற்காகவே ஐநூறு புதிய வாசகர்கள் ஆண்டுச் சந்தா கட்டினார்கள். இந்த எண்ணிக்கை உயர்வு அதிசயமானது என்று கட்கோவ் எழுதியிருக்கிறார்.

1860 களில், ரஷ்யாவில் குற்றவாளிகளின் உண்மைக்கதைகளை அறிந்து கொள்வதில் பெரிய ஆர்வம் உருவாகியிருந்தது. ஜார் அலெக்சாண்டர் II ஆட்சியின் போது செய்யப்பட்ட சீர்திருத்தங்களில் அடிமைத்தனத்தை ஒழிப்பது, குற்றவியல் நீதி அமைப்பு மாற்றம் மற்றும் பத்திரிகைகளுக்குக் கூடுதல் சுதந்திரம் வழங்குவது ஆகியவை அடங்கும்.

நீதிமன்றத்தில் புதிதாக ஜூரி அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் மக்களும் நீதித்துறையும் இணைந்து தீர்ப்பு வழங்கலாம் என்ற நடைமுறை அறிமுகமானது.

இதனால் குற்றவியல் விசாரணைகளை ஒரு புதிய வகையான வாசிப்புப் பிரதியாக உருமாறின. செய்தித்தாள்களில் இதற்கெனச் சிறப்புப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டன. நீதிமன்ற ஸ்டெனோகிராஃபர்களின் அறிக்கைகளை அப்படியே அச்சிட்டு மக்கள் வாசித்து மகிழ்ந்தார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலும் நீதிமன்ற நடவடிக்கைகளை மக்கள் அறிந்து கொள்ளும்விதமாகக் கொலைசிந்துகள் பாடப்பட்டிருக்கின்றன. மாலை செய்திதாட்களில் கொலைவழக்கு விசாரணைகள் சிறப்புப் பகுதியாக வெளியிடப்பட்டிருக்கின்றன.

ரஷ்யாவில் வெளியிடப்பட்ட குற்றவாளிகளின் உண்மை கதைகள் நாவலகளை விட உயர்ந்தவையாகக் கருதப்பட்டன. 1860 களில், ரஷ்யாவில் ஒரு பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டினால், உங்கள் கைகளில் இரத்தம் படிந்துவிடும் என்கிறார் விமர்சகர் கான்ஸ்டான்டின் மொசுல்ஸ்கி

செப்டம்பர் 1865 இல், தஸ்தாயெவ்ஸ்கி ஜெர்மனின் சுகவாச ஸ்தலமான பேடன் பேடனில் தங்கியிருந்தார். அங்கே சூதாடி கையிலிருந்த பணம் முழுவதையும் இழந்திருந்தார். அவரால் அவரால் ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை, மேலும் அவருக்கு வழங்கப்பட்ட இரவு உணவை கொண்டு நிறுத்துமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனால் இரவு சாப்பாட்டினை கைவிடுவது என முடிவு செய்தார், இந்நிலையில் அவர் செய்தித்தாளில் ஒரு மனிதன் கோடாரியால் சமையல்காரர் மற்றும் சலவை செய்யும் பெண்மணியை வெட்டிக் கொன்ற செய்தியை படித்தார். அந்த மனிதன், ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் சீர்திருத்தங்களை நிராகரித்தவன் என்று செய்தித்தாள் கூறியது.

இந்த மனிதனின் கதையைத் தான் குற்றமும் தண்டனையும் நாவலுக்கான விதையாகக் கொண்டிருந்தார் தஸ்தாயெவ்ஸ்கி. அதே நேரம் மாஸ்கோ பல்கலைக்கழக மாணவர் ஒரு தபால்காரரைக் கொல்லத் தீர்மானித்ததைப் பற்றிய இன்னொரு செய்தியை கேள்விப்பட்டார். இரண்டினையும் தனது நாவலில் இணைத்துக் கொண்டுவிட்டார்.

தஸ்தாயெவ்ஸ்கி முதலில் 90 பக்க கதையை உருவாக்கினார். தொடராக வெளியான போது ஒரு முழு நாவலாக விரிவடைந்தது என்கிறார் இலக்கிய விமர்சகர் ஜெனிபர் வில்சன

கட்கோவ் ரஷ்யன் ஹெரால்ட் பத்திரிக்கையின் ஆசிரியராக வந்தபின்பு தான் புஷ்கின் ரஷ்யாவின் தேசிய கவியாக முன்னிறுத்தப்பட்டார். புஷ்கின் கவிதைகள் பற்றிய புதிய பார்வைகளைக் கட்கோவ் தனது இதழின் வழியே உருவாக்கினார். அதே நேரம் புஷ்கினின் உரைநடை அவ்வளவு சிறப்பானதில்லை. அந்த இடத்தைத் தஸ்தாயெவ்ஸ்கி நிரப்புகிறார் என்றும் கட்கோவ் குறிப்பிடுகிறார்

இவான் துர்கனேவ் எழுத வந்த நாட்களில் அவரது தந்தையும் தனயர்களும் நாவலைத் தொடராக வெளியிட்ட கட்கோவ் துர்கனேவை ரஷ்ய இலக்கியத்தின் நிகரற்ற நாவலாசிரியராக்க கொண்டாடினார்.

இந்த நாவலை அவரே புத்தகமாக வெளியிட்டார். அத்தோடு இரண்டு விரிவான விமர்சனக்கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரைகளைத் துர்கனேவ் பாராட்டி எழுதியதோடு இரண்டாம் பகுதி எப்போது வெளியாகும் எனக் காத்துக் கொண்டிருந்து படித்தேன் என்றும் குறிப்பிடுகிறார்.

இவான் துர்கனேவை ரஷ்யாவின் சிறந்த எழுத்தாளராக மாற்றியதில் கட்காவிற்குப் பெரிய பங்கிருக்கிறது

ஆனால் இந்த நட்புறவு நீடிக்கவில்லை. துர்கனேவ் தனது அடுத்த நாவலை ரஷ்யன் ஹெரால்டில் தொடராக எழுதுவார் என்று கட்கோவ் அறிவிப்பு கொடுத்தார். ஆனால் துர்கனேவ் அதை எழுதவில்லை.

அத்தோடு கட்கோவிற்கு எதிராக வேறு இலக்கிய இதழில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை ஆதரித்துத் துர்கனேவ் கடிதம் எழுதினார். இந்தக் கோபம் கட்கோவிற்கும் அவருக்குமான உறவைத் தற்காலிகமாகத் துண்டிக்கச் செய்தது. காலமாற்றத்தில் மீண்டும் நட்பு உருவானது. On the Eve என்ற நாவலை புதிய தொடர்கதையாக ரஷ்யன் ஹெரால்ட் இதழில் துர்கனேவ் எழுத ஆரம்பித்தார். இந்தத் தொடர் வாசகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. அதில் துர்கனேவ் மன வருத்தம் அடைந்தார்.

அந்த நாவலை ஏற்காதவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்து எழுதினார் துர்கனேவ். இதை விரும்பாத கட்கோவ் இந்த நாவல் ஏன் தோல்வியுற்றது என விரிவான கட்டுரை எழுதினார். இந்த மோதலில் கட்கோவின் இலக்கிய ரசனை மிகவும் மட்டமானது எனத் துர்கனேவ் கடுமையாகத் தாக்கி எழுதினார். இந்தச் சர்ச்சை மீண்டும் பிரிவை உருவாக்கியது

 மிகைல் நிகிஃபோரோவிச் கட்கோவ் எழுத்தாளராக விரும்பியவர். மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஜெர்மன் சென்று தத்துவம் படித்திருக்கிறார். ஆங்கிலப் பிரெஞ்சு ஜெர்மானிய இலக்கியங்களில் நல்ல புலமை கொண்டிருந்தார்.

ரஷ்யாவில் தேசியவாதம் தலையெடுத்த காலத்தில் அதனை வழிநடத்தியவர் கட்கோவ். அவர் தனது இதழில் வெளியாகும் இலக்கியப்படைப்புகளை மிகக் கவனமாக எடிட் செய்ததோடு தேவையற்ற பகுதியாகக் கருதியவற்றை நீக்கவும் செய்தார். இதை டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி துர்கனேவ் என எவரும் விரும்பவில்லை . ஆகவே கட்கோவோடு சண்டையிட்டுத் தங்கள் படைப்புகளை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்

 புகழ்பெற்ற அன்னாகரீனினா நாவலை 13 பகுதிகள் கொண்ட தொடராக இரண்டரை ஆண்டுகள் வெளியிட்டார் கட்கோவ். ,இந்தத் தொடரின் இறுதி அத்தியாயத்தை வெளியிடத் தகுதியற்றது என மறுத்துத் திரும்பி அனுப்பினார் கட்கோவ். இதனால் ஆத்திரமான டால்ஸ்டாய் தொடரை அப்படியே நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். இந்த மோதல் காரணமாகத் தொடர் நின்று போனது.

கடைசி அத்தியாயத்தைச் சிலவெளியீடாகத் தனியே டால்ஸ்டாய் வெளியிட்டார். நாவலாகப் பதிப்பிக்கப்பட்ட போது அது மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டது.

அந்த நாட்களில் இரண்டு பக்கங்களுக்கு 500 ரூபிள் ஊதியம் என டால்ஸ்டாயும் 350 ரூபிள் ஊதியம் எனத் துர்கனேவும் பெற்றுவந்தார்கள். இந்தச் சம்பளம் தஸ்தாயெவ்ஸ்கிக்கு வழங்கப்படவில்லை. அவர் அதிகபட்சமாக 300 ரூபிள் பெற்றிருக்கிறார். இதைப் பற்றி வருத்தமாகத் தஸ்தாயெவ்ஸ்கி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்

கட்கோவின் இலக்கிய மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை எழுத்தாளர்கள் விரும்பவில்லை. ஆகவே அவர்களுக்குள் அடிக்கடி கருத்து மோதல்கள் உருவானது. ஆனாலும் இலக்கியவாதிகளை ஊக்கப்படுத்தித் தொடர்ந்து அவர்களின் படைப்புகளை வெளியிட வேண்டும் என்பதில் கட்கோவ் கவனமாக இருந்தார்

 டால்ஸ்டாய் அவருக்கு எழுதிய கடிதங்களில் கட்கோவை புகழும் ஒரு வரி கூடக் காணமுடியாது. கறாராக, எழுத வேண்டிய விஷயங்களை மட்டுமே எழுதியிருக்கிறார் கட்கோவ் தனது நாவலைத் தணிக்கை செய்த போது அதைக் கண்டித்து உடனடியாகத் தனது படைப்பினை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.

அவரது போரும் அமைதியும் நாவல் தொடராக வெளிவந்து கொண்டிருந்த அதே காலத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலும் தொடராக வந்திருக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியை பாராட்டி ஒரு வரி கூட டால்ஸ்டாய் எழுதவில்லை. ஆனால் டால்ஸ்டாயின் நாவலைத் தொடராக வாசித்த தஸ்தாயெவ்ஸ்கி வியந்து பாராட்டி தனது டயரியில் எழுதியிருக்கிறார்.

பண்ணையடிமை முறை ஒழிப்பது குறித்தும், பெண்கல்வி அவசியம் என்பது குறித்தும் கட்கோவ் நிறைய எழுதியிருக்கிறார். டால்ஸ்டாய் தனது பண்ணையில் ஆரம்பித்த பள்ளிக்கூடத்தைப் பாராட்டி எழுதியதோடு அதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் தான் செய்யக் காத்திருப்பதாக எழுதியிருக்கிறார்

கட்கோவ் தனது அரசியல் நிலைப்பாட்டிற்காகவே இன்றும் அதிகம் அறியப்படுகிறார். அவர் இறந்த போதும் அரசியல் விமர்சகராகவே மேற்குலகம் அவரைக் கொண்டாடியது. உண்மையில் அவர் சிறந்த இலக்கிய ஆசிரியராகச் செயல்பட்டிருக்கிறார். நல்ல நாவல்களைத் தொடராவ வெளியிட்டு ரஷ்ய நாவல்களின் உதயத்திற்குக் காரணமாக விளங்கியிருக்கிறார்.

தனது சமகாலத்தில் இங்கிலாந்திலும் பிரான்சிலும் நடைபெற்றுவந்த புதிய இலக்கியப்போக்குகளை ஆழ்ந்து அவதானித்து அதற்கு இணையாக ரஷ்ய இலக்கியம் செல்ல வேண்டும் என்று கட்கோவ் முயன்றிருக்கிறார். இங்கிலாந்தில் ஜேன் ஆஸ்டின் புகழ்பெற்ற காலமது. அப்படி ஒரு பெண் எழுத்தாளர் ரஷ்யாவில் உருவாக வேண்டும் என்று கட்கோவ் ஆசைப்பட்டார். அதற்காகச் சில பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை வேண்டிக் கேட்டு தனது இதழில் வெளியிட்டிருக்கிறார்.

டால்ஸ்டாயின். தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களைக் கையெழுத்துப்பிரதியிலே படித்து மகிழ்ந்திருக்கிறார் என்பது கட்காவிற்குக் கிடைத்த அபூர்வ வாய்ப்பு. அவர் வழியாக உருவான படைப்பாளிகள் அவரை நன்றியோடு நினைவு கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் கட்கோவ் மீதான விமர்சனங்கள் இன்றும் தொடரவே செய்கின்றன. கட்காவிற்குச் சிலை வைக்க வேண்டும். அவரது உருவத்தை ஓவியமாக வரைந்து வைக்க வேண்டும் என்று விரும்பிய சிலர் ரஷ்ய ஓவியர் இலியா ரெபினிடம் கேட்டபோது அவர் வரைய மறுத்துவிட்டார். அதற்குச் சொன்ன காரணம் டால்ஸ்டாயை வரைந்த கைகளால் கட்கோவை வரைய முடியாது

நூற்றாண்டினைக் கடந்து இன்றும் அன்னாகரீனினா, கரமசோவ் சகோதரர்கள். குற்றமும் தண்டனையும், தந்தையும் தனயர்களும் போன்ற ரஷ்ய நாவல்கள் உலக அரங்கில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்தப் பெருமைக்குள் கட்கோவின் பங்கு நிச்சயம் மறைந்தேயிருக்கிறது.

••

0Shares
0