‘மாஸ்கோவின் மணியோசை’ வாசிப்பனுபவம்.
ரம்யா ரோஷன்
ரஷ்ய இலக்கியமும் எழுத்தாளர்களும் என்றுமே எனக்கு ஆச்சர்யம் தான்.ரஷ்ய எழுத்தாளர்கள் நிச்சயம் தத்துவவாதிகளாகவும் சிந்தனையாளர்களாகவும் இருந்திருக்க வேண்டும். சமூகத்தை இவ்வளவு அக்கறையோடும், கவலையோடும், உணர்ச்சியோடும் பார்க்கும் இலக்கியம் வேறெதுவும் இல்லை என்றே எனக்குத் தோன்றும்.
நம்மில் பலர் ரஷ்ய இலக்கியங்களை ரசிக்க காரணம் எஸ்.ரா ஐயா வாக தான் இருக்க முடியும். ரஷ்ய இலக்கியத்தின் நிகரற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து அவர் பேசியதும் எழுதியதும் ஏராளம். ரஷ்ய இலக்கியம் குறித்த கவனம் தமிழில் உருவாகி வளர்ந்ததற்கும் அவர் ஒரு முக்கிய காரணம்.
‘மாஸ்கோவின் மணியோசை’ – சென்ற புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம்.இதில் ரஷ்ய படைப்புகள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றிய 30 கட்டுரைகள் உள்ளன.
நாம் ஏன் ரஷ்ய எழுத்தாளர்களைப் படிக்க வேண்டும்? – முன்னுரையில் :
//உலகின் சிறந்த எழுத்தாளர்களைப் பற்றி யார் பட்டியலிட்டாலும் முதல் ஐந்து இடத்திற்குள் ரஷ்ய எழுத்தாளர்களே இடம்பெறுகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் வாழ்வின் ஆதாரங்கள் குறித்துப் பேசியவர்கள். வறுமை, பசி, காமம், பிரிவு, காதல், மரணம் போன்ற என்றும் மாறாத விசயங்களைப் பற்றி ஆழ்ந்து விவாதித்தவர்கள், புதிய பார்வையை வெளிப்படுத்தியவர்கள்.
குற்றம், வெறுப்பு, துரோகம், பேராசை போன்ற மனித இருண்மைகளை ஊடுருவி ஆராய்ச்சி செய்கிறார்கள், அரசு, அதிகாரம், மதம், சமூக வேறுபாடுகள் குறித்து உரத்த கேள்விகளை எழுப்புகிறார்கள். எளிய மனிதர்களின் துயரங்களை, சந்தோஷங்களைப் புரிந்து கொண்டு எழுத்தில் வெளிப்படுத்துகிறார்கள். அன்பின் வெளிச்சத்தை உயர்த்திப்பிடிக்கிறார்கள். இந்தச் சிறப்புகளால் தேசத்தின் ஆன்மாவாக ரஷ்ய எழுத்தாளர்கள் விளங்குகிறார்கள். இந்தப் புரிதல் தான் தன்னை மீண்டும் மீண்டும் ரஷ்ய இலக்கியங்களைப் பற்றிப் பேசவும் எழுதவும் வைக்கிறது என்கிறார் எஸ். ரா அவர்கள்.//
இந்த புத்தகம் முழுவதும் டால்ஸ்டாய்,தஸ்தாயெவ்ஸ்கி,செகாவ்,இவான் தூர்கனே என மகத்தான படைப்பாளிகளை பற்றிய கட்டுரைகள்….பல வித்தியாசமான நூல்கள்,திரைப்படங்கள், நிகழ்வுகள் …. எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை வெளியிட சந்தித்த அவதிகள்… நடுவே செகாவின் ஒரு அழகிய சிறுகதை. புஷ்கினில் துவங்கி இன்றைய வேரா பாவ்லோவா வரையிலான கவிஞர்கள்..
தஸ்தாயெவ்ஸ்கி ரசிகர்களுக்கு இது ஒரு முக்கியமான புத்தகம். அவரை பற்றி மட்டுமே அற்புதமான நான்கைந்து கட்டுரைகள் உள்ளன.குற்றமும் தண்டனையும் பற்றிய சில விளக்கங்கள் அருமை.
//எல்லா புனைவுகளையும் விடவும் விசித்திரமானது தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை. துயரத்தின் சாற்றை மட்டுமே பருகி வாழ்ந்த அவரது வாழ்வின் ஊடாகவே அவரது படைப்புகள் உருக்கொண்டிருக்கின்றன. எழுதுவதைத் தவிர வேறு எந்த வழியிலும் தன்னை ஆறுதல்படுத்திக் கொள்ள முடியாத ஒரு மனிதனின் வெளிப்பாடுகள்தான் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துக்கள்.
தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக அவரைப் புரிந்துகொள்வது மிக அவசியம். தான் வாழ்ந்த காலம் முழுவதும் தொடர்ந்து தூஷிக்கப்பட்டும் கடுமையான வசைகளும் ஏளனத்திற்கும், நெருக்கடிக்கும் உள்ளான ஒரு எழுத்தாளர் அவர்.நெருக்கமான மனிதர்களின் மரணமும் வறுமையும் நோயும் நிழலைப் போல அவரது வாழ்வில் பின்தொடர்ந்தன.//
கார்க்கியின் ‘தாய்’ எல்லோருக்கும் தெரியும். அவரின் பாட்டியையும் தெரிந்து கொண்டேன்.கார்க்கியின் கதைகளில் வரும் தைரியமான பெண் கதாபாத்திரங்கள்.. வாழ்க்கை நெருக்கடிகளை அச்சமின்றி எதிர்கொள்ளும் விதம் கஷ்டமும் போராட்டமுமான அன்றாட வாழ்க்கையின் நடுவேயும் உணவும் நடனமும் இசையுமாக வாழ்க்கையை அனுபவிக்கும் விதம் யாவும் பாட்டியின் வழியே அவருக்குக் கிடைத்த வளங்கள் என தெரிந்து கொண்டேன்.
அலெக்சாண்டர் குப்ரின் மற்றும் ஜி நாகராஜன் இருவருக்குமான ஒற்றுமை நன்று.
எழுத்தின் நுட்பங்களை அறிந்து கொள்ள எழுத்தாளனையும் அவனது புற,அக சூழல்களையும் அது உருவாக்கும் பாதிப்புகளையும் அறிந்து கொள்வது அவசியம் அல்லவா?எனில் அவசியம் இந்த நூலை வாசியுங்கள்.
வேதனைகளைக் கணக்கிடும் மனிதன் சந்தோஷங்களை ஒருபோதும் கணக்கிடுவதேயில்லை என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. இனியாவது சந்தோசங்களை கணக்கெடுத்து வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்போம்.
****