ரஸ்கோல்நிகோவ்வின் ட்வீட்

உலகம் முழுவதும் தஸ்தாயெவ்ஸ்கியை எப்படி எல்லாம் படிக்கிறார்கள். எப்படி எல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பது வியப்பளிக்கிறது.

1866ல் குற்றமும் தண்டனையும் (Crime and Punishment ) நாவல் தொடராக 12 மாதங்கள் வெளியானது. பின்பு 1867ல் அந்த நாவல் முழுமையான ஒரே நூலாக வெளியானது. அன்று முதல் இன்றுவரை எவ்வளவு பிரதிகள் இந்த நாவல் விற்றுள்ளது என்று துல்லியமாக எவராலும் சொல்ல முடியாது. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கிறது.

1867 முதல் 2021 வரை எத்தனை தலைமுறை அந்த நாவலை வாசித்திருக்கிறது என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

குற்றமும் தண்டனையும் தொடராக வெளிவந்து கொண்டிருந்த நாட்களில் தான் டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலும் தொடராக வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1885ல் முதல் ஆங்கில மொழியாக்கம் வெளியானது அதன்பிறகு இன்று வரை பதினைந்து வேறுவேறு மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. இதுமட்டுமின்றி 25 முறை திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. மேடை நாடகமாகவும், இசைநாடகமாகவும் இதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். காமிக்ஸ் புத்தகம் துவங்கி தற்போதைய கிராபிக் நாவல் வரை உருமாற்றம் கொண்டிருக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் பாடமாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாவலை ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 3127 என்கிறது ஒரு புள்ளிவிவரம். இத்தனை பேர் இந்த நாவலைப் பற்றி ஆராய்ந்து டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள். உலகின் மிகச்சிறந்த புத்தகப்பட்டியலில் சிறந்த ஐம்பது நூல்களில் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது என்கிறார்கள்

செப்டம்பர் 1865ல் ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி ஜெர்மனியின் வைஸ்பேடனில் தங்கியிருந்த போது அவரால் அறைக்கான வாடகையைத் தர முடியவில்லை. சூதாட்டத்தில் ஈடுபட்டு தனது பணம் முழுவதையும் இழந்திருந்தார். சூதாட்ட வெறி அவரை ஆட்டுவித்தது. இதைப்பற்றிச் சூதாடி என்ற நாவலில் மிக அழகாக எழுதியிருக்கிறார்.

தனது வீட்டு உரிமையாளருக்குத் தர வேண்டிய பாக்கி அதிகமாகிவிட்டதால் தனக்கு முன்பணம் அனுப்பித் தரமுடியுமா என ரஷ்ய ஹெரால்டின் ஆசிரியரான மிகைல் கட்கோவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில் தான் ஒரு புதிய நாவலை எழுத திட்டமிட்டுள்ளதால் அந்த நாவலுக்கான முன்தொகையாக 300 ரூபிள் தந்து உதவும்படி கேட்டுக் கொண்டிருந்தார். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கைபிரதியை அனுப்பி வைக்கவேண்டும் என்ற நிபந்தனையோடு மிகைல் கட்கோ முன்பணம் அனுப்பி வைத்தார். அப்படிக் கடனை தீர்ப்பதற்காகப் பெற்ற பணத்திற்காக எழுதிய நாவல் தான் குற்றமும் தண்டனையும்.

நாவல் தொடராக வெளியான நாட்களில் இளைஞர்கள் இதைக் கொண்டாடினார்கள். இன்றும் உலகெங்கும் இளைஞர்கள் இந்த நாவலைக் கொண்டாடுகிறார்கள்.

1881 ஆம் ஆண்டு ரஷ்யாவில் அலெக்சாண்டர் II படுகொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு தஸ்தயேவ்ஸ்கியின் நாவலில் வரும் கொலையின் சாயலிலிருந்த காரணத்தால் தஸ்தாயெவ்ஸ்கியின் தீர்க்கதரிசனம் முன்னதாகவே வெளிப்பட்டதாக வாசகர்கள் கருதினார்கள். .

இந்த 155 ஆண்டுகளில் உலகில் எத்தனையோ விஷயங்கள் மாறியிருக்கின்றன. ரஷ்யாவில் புரட்சியை ஏற்பட்டது. சோவியத் யூனியன் உருவாகி வளர்ந்து முடிவில் அது உடைந்தும் போய்விட்டது. உலகில் இரண்டு பெரிய யுத்தங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. புதிய தொழில்நுட்பத்தின் வருகை. நகரமயமாக்கம், மக்கள்தொகை பெருக்கம், என எவ்வளவோ மாற்றங்கள். அத்தனையும் தாண்டி இந்த நாவல் தொடர்ந்து வாசிக்கபடுகிறது. கொண்டாடப்படுகிறது.

குற்றமும் தண்டனையும் நாவல் வெளியாகி 150 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு 2016ம் ஆண்டில் ஒரு புதிய முயற்சி நடைபெற்றது.

இந்த நாவலின் நாயகன் ரஸ்கோல்நிகோவ் தன் பார்வையில் நாவலின் நிகழ்வுகளை விவரிக்கும் விதமாகத் தினம் ஒரு ட்வீட் வெளியிட்டிருக்கிறார்கள்.

ரஸ்கோல்நிகோவின் ட்வீட்டுகள் இந்த நாவலுக்குப் புதிய தோற்றத்தை உருவாக்கியது. ரஸ்கோல்நிகோவ்விற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்கள் கருத்துகளை ட்வீட் செய்திருக்கிறார்கள்.

ஒரு நாவலை இப்படி ட்வீட் செய்வது இன்று புதிய பாணியாக வளர்ந்து வருகிறது. வட அமெரிக்கத் தஸ்தாயெவ்ஸ்கி சங்கம் சார்பில் சாரா ஹட்ஸ்பித் இந்த ட்வீட்களைச் செய்திருக்கிறார். பிரிட்டனில் வசிக்கும் இவர் ஒரு பேராசிரியர். மற்றும் தஸ்தாயெவ்ஸ்கி குறித்து ஆய்வுகள் செய்து வருபவர்

இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தஸ்தாயெவ்ஸ்கியை கொண்டாட வேண்டும் என நினைத்த சாரா டுவிட்டரில் இப்படி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்பு இந்த நாவலில் தஸ்தாயெவ்ஸ்கி விவரித்துள்ள வீதிகள். இடங்கள், பாலம் மற்றும் காவல்நிலையம் போன்ற முக்கியத் தொடர்புகளை மேப்பிங் பீட்டர்ஸ்பர்க் என்ற திட்டத்தின் கீழே கூகிள் உதவியோடு அடையாளப் படுத்தியிருக்கிறார். இதனால் நாவலின் முக்கிய இடங்களை வாசகர்கள் நேரடியாகக் கண்டுணர முடியும்

குற்றமும் தண்டனையும் நாவலுக்கு இப்படி ஒரு புதுப் பரிமாணத்தை உருவாக்கியதால் இதனைப் பயன்படுத்திக் கல்லூரி மாணவர்கள் பலர் நாவலுடன் ஒரு பயணம் என்று பீட்டர்ஸ்பெர்க் வீதிகளில் தஸ்தாயெவ்ஸ்கியின் உலகைக் கண்டிருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களில் நாவல் கற்பித்தலுக்கு இது புதுவகைக் கருவியாக மாறியிருக்கிறது.

நாவலை ட்வீட் செய்வதற்கு முன்னதாக இந்த நாவலின் பின்புலம் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கி இதை எழுதிய விதம் பற்றிய அறிமுகத்தைச் சாரா தந்திருக்கிறார். அதன்பிறகு ரஸ்கோல்நிகோவ் பெயரில் ஒரு ட்வீட் கணக்கைத் துவங்கி அவன் பார்வையில் அந்த நாவலின் உலகை விவரிக்கும் விதமாகத் தொடர்ந்து ட்வீட் செய்திருக்கிறார்.

இளந்தலைமுறையினருக்கு இந்த ட்வீட்கள் வசீகரமாக இருக்கவே உடனடியாக எதிர்வினை அளித்திருக்கிறார்கள். பிற கதாபாத்திரங்களோடு ரஸ்கோல்நிகோவ்விற்கு உள்ள உறவை வெளிப்படுத்தும் விதமாகச் சாராவின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து அந்தப் பகுதிகளை ட்வீட் செய்திருக்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகங்களைக் கொண்டே இந்த ட்வீட்டுகள் வெளியாகியிருக்கின்றன

ரஸ்கோல்நிகோவ் தானே ட்வீட் செய்வதால் அவனுக்கு நேரடியாக அறிவுரைகள் சொல்லும்விதமாகப் பலரும் ட்வீட் செய்திருந்தார்கள். இது இந்த நாவலுக்குப் புதியதொரு தளத்தை உருவாக்கியது.

இந்த ட்வீட்களைத் தொகுத்துத் தற்போது சிறிய நூலாக வெளியிட்டிருக்கிறார்கள்

ட்வீட்டர் உலகில் ரஸ்கோல்நிகோவ் யார். அவனது உலகம் இன்றுமிருக்கிறதா. அல்லது அவன் வெறும் கற்பனை மனிதன் மட்டும் தானா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

அவன் நாவலின் நாயகன் மட்டுமில்லை. அவன் ஒரு அடையாளம். உலகிலிருந்து ஒதுங்கி வாழும் பகற்கனவு காணும் இளைஞனுக்குள் ரஸ்கோல்நிகோவ் ஒளிந்திருக்கிறான். எந்த ஊராக இருந்தாலும் வட்டிக்குப் பணம் வாங்க கையேந்தி நிற்கும் மனிதனுடன் அவன் தோழனைப் போலத் துணை நிற்கிறான். புறக்கணிக்கப்பட்ட மனிதனின் நிழல் தான் ரஸ்கோல்நிகோவ்.

பிரிட்டிஷ் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான டேவிட் மெக்டஃப் குற்றமும் தண்டனை நாவலுக்குப் புதிய ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டிருக்கிறார். இது போலவே ரிச்சர்ட் பேவர் மற்றும் லாரிசா வோலோகான்ஸ்கி – இணைந்து புதிய மொழியாக்கம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த இரண்டு புதிய மொழியாக்கங்களும் நுட்பமான அளவில் வேறுபடுகின்றன. பேவரின் மொழியாக்கம் சிறப்பாக உள்ளது. இந்த இரண்டினையும் விடக் கான்ஸ்டன்ஸ் கார்னெட்டின் மொழியாக்கம் எளிமையானது. பலநேரம் அது தரும் நெருக்கத்தைப் புதிய மொழியாக்கம் தரவில்லை என்பதே உண்மை. கார்னெட் தானே சுயமாக ரஷ்யமொழி கற்றுக் கொண்டவர்.

கார்னெட்

ஜார்ஜ் பாட்டனின் மகளான கார்னெட் இங்கிலாந்தின் பிரைட்டனில் பிறந்தவர், கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்ஹாம் கல்லூரியில் லத்தீன் மற்றும் கிரேக்க மொழியைப் படித்தவர்.

1883 ஆம் ஆண்டில் அவர் லண்டனுக்குக் குடிபெயர்ந்தார், அங்கு அரண்மனை நூலகத்தில் நூலகராகவும் பணியாற்றத் தொடங்கினார். அந்த நாட்களில், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் காப்பாளராக இருந்த டாக்டர் ரிச்சர்ட் கார்னெட்டின் மகன் எட்வர்ட் கார்னெட்டையும் சந்தித்தார். அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். அந்தக் காதல் திருமணமாக மாறியது.

ஆகஸ்ட் 31, 1889 இல் பிரைட்டனில் எட்வர்ட் கார்னெட்டினை திருமணம் செய்து கொண்டார். 1891 ஆம் ஆண்டு அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்டு லண்டனில் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்ட ஃபெலிக்ஸ் வோல்கோவ்ஸ்கியின் அறிமுகம் ஏற்பட்டது. அவரிடமே ரஷ்ய மொழியைக் கற்றுக் கொண்டார். தனது சொந்த விருப்பத்தின் காரணமாகவே அவர் ரஷ்ய இலக்கியங்களை மொழிபெயர்ப்புச் செய்யத் துவங்கினார்.

1894 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அவர் ரஷ்யாவிற்குத் தனது முதல் பயணத்தை மேற்கொண்டபோது நேரடியாக டால்ஸ்டாயை தேடிச் சென்று சந்தித்தார். துர்கனேவுடன் நெருக்கமான நட்பு இருந்தது. ரஷ்ய எழுத்தாளர்களின் முக்கியப் படைப்புகள் அனைத்தையும் இவர் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

1920 களின் பிற்பகுதியில், தொடர்ந்து படித்தும் மொழிபெயர்ப்பு செய்தும் வந்த கார்னெட் கண்பாதிப்பிற்கு உள்ளாகி எதையும் படிக்க இயலாத நிலைக்கு உள்ளானார். எழுபது தொகுதிகள் ரஷ்ய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பது இவரது பெருந்சாதனையாகும்.

தஸ்தாயெவ்ஸ்கி பயன்படுத்திச் சில வார்த்தைகளை நேரடியாக அர்த்தம் கொள்ள முடியாது. அந்த வார்த்தைகளுக்குச் சொந்த வரலாறு இருக்கிறது. அதைத் தஸ்தாயெவ்ஸ்கி கவனமாகவும் விசேசமாகவும் பயன்படுத்தியிருக்கிறார்.

குற்றமும் தண்டனையும் நாவலில் மட்டுமின்றி The Idiot, The Possessed, and The Brothers Karamazov ஆகிய மூன்று நாவல்களிலும் கொலை முக்கியப் பங்கினை வகிக்கிறது. கொலையை ஒரு லென்ஸை போலவே தஸ்தாயெவ்ஸ்கி கையாளுகிறார். அந்த லென்ஸ் வழியாகக் கொலையாளியின் மனதை ஊடுருவி ஆராய்வதுடன் மற்றவர்களின் அகபுற வாழ்க்கையினையும் ஆய்வு செய்கிறார். குற்றவாளியே துப்பறியும் நிபுணராக மாறும் விநோதம் தஸ்தாயெவ்ஸ்கியிடம் காணப்படுகிறது. வழக்கமான திரில்லர் நாவல்களில் கொலைகாரனைக் கண்டறிவதே நாவலின் முக்கிய நோக்கமாக இருக்கும். ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி கொலைக்கான காரணத்தையே ஆராய்கிறார். கொலைகாரன் யார் என்று வாசகனுக்கு முதலிலே தெரிந்துவிடுகிறது. குற்றம் பற்றி ரஸ்கோல்நிகோவ் எழுதிய கட்டுரையைப் போலீஸ் இன்ஸ்பெக்டர் படித்திருக்கிறார். அதில் சாமானியனுக்கும் அசாதாரண மனிதனுக்குமான வேறுபாட்டினை ரஸ்கோல்நிகோவ் சுட்டிக்காட்டுகிறான். தன்னை அசாதாரண மனிதனாகக் கருதுகிறான். அதை நிரூபிக்கவே அவன் கொலை செய்கிறான்.

ரஸ்கோல்நிகோவின் ட்வீட்களில் நாம் அவன் தன் முடிவுகளை எப்படி எடுக்கிறான். எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக நடந்து கொள்கிறான். எப்படித் தன்னைத் தானே சுயவிசாரணை செய்து கொண்டிருக்கிறான் என்பதைத் தெளிவாக அறியமுடிகிறது

வாசிப்பை புதிய தளத்திற்குக் கொண்டுபோவதற்கு இது போன்ற முயற்சிகள் பெரிதும் துணை செய்கின்றன. தமிழில் பல்லாயிரம் பேர் ட்வீட் செய்கிறார்கள். சினிமா, அரசியல் கிரிக்கெட், சமூகப்பிரச்சனைகள் மட்டுமே அவர்களின் உலகம். அதைத் தாண்டி இது போலத் தனக்குப்பிடித்த தமிழ் நாவல். சிறுகதை, கவிதைகள் குறித்த ட்வீட்களை உருவாக்கி அதன் வழியே வாசிப்பினை மேம்படுத்தலாம் தானே.

எங்கோ பிரிட்டனிலிருந்தபடியே ரஷ்ய இலக்கியத்தினை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் சாராவை போலத் தமிழகத்தில் பத்து பேர் முயன்றால் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கான புதிய வெளியினை உருவாக்க முடியும். எல்லாத் தொழில்நுட்பங்களும் வெறும் பொழுதுபோக்கிற்கானது மட்டுமில்லை. நாம் அதை உணருவதேயில்லை.

•••

0Shares
0