ராஜபாளையத்தில்

கடந்த வாரம் ஒரு திருமண நிகழ்விற்காக ராஜபாளையம் சென்றிருந்தேன். நண்பர் பொன்னுச்சாமி மாலையில் சிறிய சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நிறைய இளைஞர்கள். இரண்டு மணி நேரம் நடந்த சந்திப்பில் வாசிப்பு. பயணம், வரலாறு என நிறைய கேள்விகேட்டார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் அவர்களையும் சுதந்திர சிந்தனையை சார்ந்த நரேந்திரகுமார் மற்றும் நண்பர்களைச் சந்தித்து பேசியது மகிழ்ச்சி தந்தது.

திருமண நிகழ்வு முடிந்தவுடன் ராஜபாளையத்தில் நடைபெற்று வந்த மீனாட்சி புக் ஷாப் நடத்தும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். அங்கே கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோழர்களுடன் ஒரு தேநீர் சந்திப்பு.

திருமண நிகழ்விற்கு இடையில் இரண்டு சந்திப்புகள் இலக்கிய உரையாடல்கள் என நேரம் போனதே தெரியவில்லை. புதிதாகப் படிக்க வந்துள்ள இளைஞர்களை சந்தித்து உரையாடுவதன் வழியே அவர்கள் என்ன படிக்கிறார்கள். எதை நோக்கி ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

ஊர் திரும்பும் முன்பாக கோவில்பட்டிக்குச் சென்று கவிஞர் தேவதச்சனைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். இளம்வாசகர் ரமணா வந்திருந்தார்.

புத்தகக் கண்காட்சியில் அகிலனின் வாழ்க்கை வரலாற்று நூலை வாங்கினேன். அதைக் காரில் வரும்போது படித்துக் கொண்டு வந்தேன். அகிலன் புகழ்பெற்று இருந்த நாட்களில் அவரது பெயரைப் பயன்படுத்தி ஒரு ஆள் பலரது வீடுகளுக்கும் போய் உறவாடி, பணம் பெற்று நான் தான் அகிலன் என்று ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து ஏமாற்றிவந்திருக்கிறான்.

ஒரு தொழிலதிபர் வீட்டிற்கு தன் மனைவியுடன் போய் தங்கிய அந்த டூப்ளிகேட் ஆசாமி சகல சௌகரியங்களையும் மரியாதைகளையும் அனுபவித்துவிட்டு கடனாகப் பணமும் வாங்கிக் கொண்டு கிளம்பி போயிருக்கிறார்.

விஷயம் அகிலனுக்கு தெரிய வந்தவுடன் யார் இந்த மோசடிப் பேர் வழி. இவரை எப்படி தடுத்து நிறுத்துவது என்று புரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்.

அந்த நாட்களில் புத்தகங்களின் அட்டையில் எழுத்தாளர் புகைப்படம் இருக்காது. ஆகவே அந்த போலியை பலரும் உண்மையான அகிலன் என்று நினைத்து மரியாதை செய்திருக்கிறார்கள்.

இந்த ஏமாற்றுபேர் வழிக்காகவே அகிலன் தனது கதைகள். புத்தகங்களில் தனது புகைப்படத்தை போட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்

நிறைய இடங்களில் ஏமாற்றிய அந்த ஆசாமி முடிவில் ஒரு நாள் மாட்டிக் கொண்டான். போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. அந்த வழக்கு நடந்த போது நான் தான் உண்மையான அகிலன் என்று அவரே நேரில் போய் சாட்சி சொல்லியிருக்கிறார். விநோதமான நிகழ்வு.

இதை ஏன் அகிலன் ஒரு நாவலாக எழுதவில்லை என்று தோன்றியது.

ஈரான் இயக்குநர் Abbas Kiarostami இயக்கிய Close-Up திரைப்படத்தின் கதையும் இதுவே. இந்தப் படத்தில் வருபவர் Makhmalbaf என்ற இயக்குநர் பெயரில் சுற்றித்திரியும் போலி ஆசாமி. படப்பிடிப்பிற்கான இடம் தேடுவது போல ஊர் சுற்றி ஏமாற்றுகிறான்.

அகிலன் நான்கு முறை ரஷ்யாவிற்குப் பயணம் செய்திருக்கிறார். அதைப் பற்றி கட்டுரைகள். தனி நூல் எதுவும் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை.

தனது சொந்த ஊரான புதுக்கோட்டை பற்றியும் அந்த சமஸ்தானம் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலையைப் பற்றியும் அகிலன் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

•••

0Shares
0