ரில்கேயின் காதலி.

எழுத்தாளரும், முதல் பெண் மனோதத்துவ நிபுணருமான லூ ஆண்ட்ரியாஸ்- சலோமே கவிஞர் ரில்கேயின் காதலியாக இருந்தவர், தத்துவவாதியான நீட்சே இவரைத் தீவிரமாகக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் சலோமே அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

லூ ஆண்ட்ரியாஸ்-சலோமே வாழ்க்கையை விவரிக்கும் Lou Andreas-Salomé என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஜெர்மானிய பெண் இயக்குநரான Cordula Kablitz-Post இயக்கியது. சர்வதேச திரைப்படவிழாவில் இத் திரைப்படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கான விருதை கோர்டுலா கப்லிட்ஸ்-போஸ்ட் பெற்றிருக்கிறார்

லூ ஆண்ட்ரியாஸ்-சலோமே படம், முதுமையில் தனித்து வாழும் அவரைத் தேடி வரும் ஜெர்மானிய எழுத்தாளர் எர்ன்ஸ்ட் பிஃபர் வழியே துவங்குகிறது.

எழுபத்திரண்டு வயதில் தனித்துவாழும் சலோமேயினைத் தேடி அவரது வீட்டிற்கு வருகிறார் பிஃபர்

சலோமேயின் வளர்ப்பு மகள் மேரி சலோமேயை சந்திக்க இயலாது என விரட்டிவிடுகிறாள். ஆனால் பிஃபர் சலோமேக்குக் கடிதம் ஒன்றைத் தருகிறார். அதைப்படித்த சலோமே அவரைச் சந்திக்க அனுமதி தருகிறாள்.

தீவிர மனச்சோர்வு கொண்டிருந்த பிஃபர் தனக்கு மனநலச் சிகிட்சை அளிக்க வேண்டும் என்று அவளிடம் கேட்கிறார். சலோமே தான் இப்போது மருத்துவசேவையை விட்டு விலகி வாழுவதாகச் சொல்கிறாள்.

ஆனால் பிஃபரின் பரிதாப நிலையைப் புரிந்து கொண்டு அவருக்கு உதவுவதற்காகத் தனது சுயசரிதையை எழுதும் பணியை அவரிடம் ஒப்படைக்கிறாள்.

பழைய புகைப்படங்களின் வழியே தனது கடந்த காலத்தை நினைவுபடுத்துகிறாள். அந்தப் புகைப்படங்கள் அப்படியே உருப்பெறுகின்றன. புகைப்படத்தின் ஊடாகச் சலோமே தனியே நடந்து வருகிறாள். மிக அழகான காட்சி. படம் முழுவதும் பழைய புகைப்படத்தில் சலோமே மட்டும் உயிர்பெற்று இயங்குவது கவித்துவமாக உருவாக்கபட்டிருக்கிறது.

சலோமே ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் பிறந்தவர். அவரது தந்தை குஸ்தாவ் லுட்விக் வான்.

லூ அவர்களின் ஒரே மகள்; அவளுக்கு முன்பு ஐந்து சகோதரர்கள் பிறந்திருந்தார்கள். வீட்டிலே ஆறு குழந்தைகளுக்கும் ரஷ்ய, ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழியை கற்றுத் தந்தார்கள். சலோமேக்குத் தத்துவத்தில் தீவிர ஈடுபாடு இருந்தது. அவள் கடவுளுடன் பேசுவகிறவளாக சிறுவயதில் இருந்தாள்.

ஒரு நாள் அவள் நூலகத்தில் ஹென்ட்ரிக் கில்லட் என்பவரைச் சந்திக்கிறாள். அவர் சலோமே என்ன படிக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகிறார். கிரேக்க தத்துவங்கள் துவங்கி ஸ்பினோசா வரை அவள் எல்லாவற்றையும் ஆழ்ந்து படிக்கிறாள். ஆய்வுரைகள் எழுதுகிறாள். அவளது ஞானத்தைக் கண்டுவியந்த கில்லட் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அவளை மறுமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால் சலோமோ அதை ஏற்கவில்லை.

தத்துவம், இலக்கியம், மதநூல்களை ஆழ்ந்து படித்த சலோமோ இறை நம்பிக்கையற்றவராக வளர்ந்தார். பதினாறு வயதோடு தேவாலயத்திற்குப் போவதை நிறுத்திக் கொண்டுவிட்டார்.

1879 இல் சலோமேயின் தந்தை இறந்ததைத் தொடர்ந்து அவரும் அம்மாவும் , ஜுரிச் நகருக்குச் சென்றார்கள். அங்கே பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் இறையியல் கற்றார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் ஒவ்வாமை காரணமாக உடல் நலிவடைந்தது. ரத்தவாந்தி எடுக்க ஆரம்பித்தார். உடல் நலமடைய வேண்டி அவரும் தாயும் ரோம் நகருக்கு இடம் மாறினார்கள்.

அங்கே இருந்த நாட்களில் எழுத்தாளர் பால் ரீயை சந்தித்து நட்பாகப் பழக ஆரம்பித்தார். சலோமேயின் பேரழகில் மயங்கி ரீ அவளைக் காதலிப்பதாகச் சொன்னார். ஆனால் சலோமே அவரை ஒரு சகோதரனாக மட்டுமே நினைப்பதாகச் சொல்லி உடல் ரீதியான நெருக்கத்தைத் தவிர்த்து, அறிவார்ந்த ஒரு கம்யூனை உருவாக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார்.

ரீயின் நண்பரான பிரடெரிக் நீட்சே அப்போது தான் அவர்களுடன் இணைந்து கொண்டார். இந்த மூவரும் ஒன்றாக ஒரே அறையில் தங்கியபடியே படிப்பதும் எழுதுவதும் விவாதிப்பதுமாக வாழ்ந்தார்கள். லூ ஆண்களுடன் சமமாக உணர்ந்தார். அவர்கள் ஒன்றாகப் படித்தார்கள், பயணம் செய்தார்கள் , எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டனர்

சலோமேயின் தீவிரமான தத்துவ ஈடுபாடு, அறிவார்ந்த பேச்சு, நிகரற்ற அழகு நீட்சேவை வசீகரித்தது. அவளைப் போன்ற அறிவார்ந்த துணை இருந்தால் மட்டுமே தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என நினைந்த நீட்சே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார் . சலோமி நீட்சேயை ஒரு நண்பராக மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும் என்று மறுத்துவிட்டாள்.

படத்தில் நீட்சே அவளை இறுகத் தழுவி முத்தமிடுகிறார். காதலில் உருகி அவளுடனே வாழவேண்டும் என்று மன்றாடுகிறார். ஆனால் சலோமி அவரைத் தன்னுடைய கணவனாக நினைக்க முடியவில்லை என்று முகத்திற்கு நேராகவே சொல்லிவிடுகிறாள்.

இன்னொரு காட்சியில் நீட்சேயுடன் ஒன்றாகச் சுற்றும் சலோமேயை நீட்சேயின் சகோதரி எலிசபெத் கடுமையாகத் திட்டி அவமானப்படுத்துகிறாள்.

அவள் பின்னாளில் நீட்சே பற்றி எழுதிய நூலில் சலோமே ஒரு ஏமாற்றுகாரி. ஒழுக்கக்கேடான பெண். காசிற்காக அலைகிறவள் என்று மிக மோசாக எழுதியிருக்கிறாள். அதைப் பற்றிப் பிஃபருடன் பேசும் ஒரு காட்சியும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது.

படத்தின் மிக அழகான பகுதி கவிஞர் ரில்கே சலோமேயைக் காதலிப்பது. மே 1897 இல், ம்யூனிச் நகரில் ஜேக்கப் வாஸ்மேனால் கவிஞர் ரில்கே அறிமுகப்படுத்தபடுகிறார். அப்போது சலோமேயிற்கு வயது 37. ரில்கேவுக்கு 21 வயது. சலோமே மொழியியல் பேராசிரியரான பிரெடரிக் கார்ல் ஆண்ட்ரியாஸை திருமணம் செய்து கொண்டிருந்தாள். அவர்களது திருமணம் 1886 இல் நடந்தது

திருமணமான பெண் என்று அறிந்தும் சலோமேயின் அழகில் மயங்கி அவளைக் காதலித்த ரில்கே அவளுக்காக  நிகரற்ற காதல் கவிதைகளை எழுதினார்.

புத்தக அறிமுகக் கூட்டம் ஒன்றுக்கு வரும் சலோமேயைச் சந்திக்கும் ரில்கே அவளுக்காக மலர்களுடன் காத்திருக்கும் காட்சி சிறப்பானது. கையெழுத்திடுவதற்காகப் பேனாவை கொடுத்துவிட்டு ஏக்கத்துடன் ரில்கே அவளைப் பார்த்தபடியே நிற்கிறார். அவள் ரில்கேயைக் கண்டுகொள்வதேயில்லை. ஆனால் அவரோ துரத்தித் துரத்தி காதலிக்கிறார். அவரது விடாப்பிடியான காதல் முயற்சிகளில் மயங்கி அவரை ஏற்றுக் கொள்கிறாள்.

தனது பதிப்பாளரிடம் ரில்கேயின் கவிதைகளை வெளியிடுவதற்கு உதவி செய்யும்படி கேட்கிறாள். ஆனால் பதிப்பாளர் தான் கவிதை நூல்களை வெளியிடுவதில்லை என்று சொல்லிவிடுகிறார்.

தன் வாழ்வில் ரில்கே போல ஒரு ஆணைக் கண்டதில்லை. பெண்மை தன்மையுள்ள அற்புதமான மனிதர். அவருடன் பழகிய நாட்கள் மிகவும் இனிமையானவை எனக் குறிப்பிடுகிறார் சலோமே.

ரில்கேயுடன் சலோமே நெருங்கிப்பழகுவதை அவளது கணவர் கண்டிக்கிறார். ஆனால் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் இருவரும் காதலர்களாக பயணம் செய்கிறார்கள். படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள்.  1897 ஆம் ஆண்டுக் கோடைகாலத்தில் இருவரும் ஒன்றாக வாழ்கிறார்கள், இது அவரது வாழ்க்கையின் சிறந்த கோடை என்று கருதப்படுகிறது. ரெனே மரியா ரில்கே என்ற பெயரை சலோமே தான் ரெய்னர் மரியா ரில்கே என மாற்றினார்.

1900 இல் ரில்கேவை அழைத்துக் கொண்டு ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்டார் சலோமே. அவருக்கு ரஷ்ய மொழியைக் கற்றுக் கொடுத்து டால்ஸ்டாய், புஷ்கின் போன்ற படைப்பாளிகளை வாசிக்கச் செய்தார். ரில்கே அந்த நாட்களில் டால்ஸ்டாயை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார்.

1897 ஆம் ஆண்டில், டால்ஸ்டாய் “கலை என்றால் என்ன?” என்று கட்டுரை நூலை வெளியிட்டிருந்தார். அதில் தூயஅழகியல் மட்டுமே கலை என்பதற்கு மாற்றாக மானுட அறத்தை கலைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று டால்ஸ்டாய்த் தெரிவித்திருந்தார். ரில்கே மற்றும் சலோமே இருவரும் டால்ஸ்டாயின் கட்டுரையை ஆதரித்து எழுதினார்கள். ரஷ்யாவில் இருந்த நாட்களில் விவசாயிகளைப் பற்றி நிறையக் கவிதைகளை எழுதிய கவிஞர் ஸ்பிரிடன் ட்ரோசினைச் சந்தித்துப் பேசினார் ரில்கே.

Rilke’s Russia என்ற நூலில் ரில்கேயின் ரஷ்யப்பயணம் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

ரில்கேயின் கவிதை தேவதையாகச் சலோமே இருந்தாள். மூன்று ஆண்டுகள் அவர்களின் காதல் நீடித்தது. பின்பு ரில்கே அவளைப் பிரிந்து போனார். அவர்களுக்கு இருந்த கடிதப் போக்குவரத்து கடைசி வரை நீண்டது. ஒரு தாயைப் போல ரில்கே மீது பரிவு காட்டினார் சலோமே என்கிறார்கள். இவர்களின் காதல் பற்றி Rilke and Andreas-Salomé: A Love Story in Letters என்ற புத்தகம் வெளியாகியுள்ளது.

ப்ரெட்ரிக் நீட்சேவின் ஆரம்ப கால எழுத்துக்களை வெளியிட்ட முதல் நபர் சலோமே. எழுத்தாளரும் நண்பருமான பால் ரீ தற்கொலை செய்து கொண்டது. லூவை மனச்சோர்வின் சுழலுக்குள் சிக்கவைத்தது. வியன்னாவின் மனநல மருத்துவர் பிரெட்ரிக் பினெல்ஸ் அவருக்கு மனநலச் சிகிட்சைகள் செய்தார். சிகிட்சையின் முடிவில் டாக்டரும் லூவும் காதலர்கள் ஆனார்கள்.

1911 இல், சலோமே சிக்மண்ட் பிராய்டைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து வியன்னா உளவியல் ஆய்வுவட்டத்தில் சலோமே உறுப்பினராகச் சேர்ந்தார். அந்த நாட்களில் பிராய்ட் சலோமேயை காதலித்தார். அவருக்குள் ஒரு ரகசிய உறவு இருந்தது என்கிறார்கள்.

சலோமே ஒரு சிறந்த எழுத்தாளர், நாவல்கள், நாடகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மனோதத்துவ ரீதியாக  பெண்களின் அகவுலகை எழுதியவராகவும் சலோமே அறியப்படுகிறார்.

சலோமேயின் கணவர் பிரெடரிக் கார்ல் ஆண்ட்ரியாஸ் புற்றுநோயால் இறந்த பிறகு சலோமே தனித்து வாழ ஆரம்பித்தார். இதயநோய் காரணமாக உடல்நலிவுற்று வீட்டிலே இருந்தார். நாஜி ராணுவம் அவரது வீட்டினை முற்றுகையிட்டு அவரது நூலகத்தைக் கைப்பற்றி எரித்தது. அதற்கு முன்பாக அவரது கையெழுத்துபிரதிகளை அவரே அழித்துவிட்டார்.

படத்தில் பிராய்டும் சலோமேயும் சந்தித்து உரையாடும் காட்சியில் தான் சிறுவயதில் கனவுகண்ட கடவுள் பிராய்டின் உருவத்தில் தோன்றுவதாகச் சலோமே சொல்லிச் சிரிக்கிறாள். அது மனதின் வெளிப்பாடு என்கிறார் பிராய்டு. அவர்களுக்கு நடக்கும் உரையாடல் அழகாக எழுதப்பட்டிருக்கிறது

படம் முழுவதும் தன் விருப்பத்தின் பாதையில் தனியே அலைந்து திரிகிறாள் சலோமே. நூலகத்தில் பெரிய பெரிய புத்தகங்களைத் தேடிப்படித்து ஆராய்ந்து நூலகத்தின் கடைசி ஆளாக வெளி வரும் சலோமே அறிவுஜீவியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். உடல் இச்சைகளை  இசையைப் போலப் பரவவிடுகிறார். படகிலிருந்து தண்ணீரில் தாவிக்குதித்து நீந்துவதும் ,ஈரஉடையோடு கரையேறி உட்கார்ந்து மூச்சுவாங்க நண்பர்களுடன் உரையாடுவதும்  அழகான காட்சிகள். ரில்கேயுடன் கோடையைக் கழிக்கும் சலோமே ஒரு சிறுமியைப் போல உற்சாகமாகயிருக்கிறாள்.

72 வயதில் தனது காதலை நினைவு கொள்ளும் சலோமேயின் கண்களில் அந்தக் கனவுகள் இன்னமும் ஒளிருகின்றன. எர்ன்ஸ்ட் பிஃபர் அவள் சுயசரிதையை எழுதுவதன் வழியே அவளை நன்றாகப் புரிந்து கொள்கிறார்.

நாஜி ராணுவத்திற்குப் பயந்து அவள் தனது நாட்குறிப்புகளை, கையெழுத்துப் பிரதிகளைத் தீயில் எரிக்கும் போது அதைத் தடுக்க முனைகிறார் பிஃபர். வேண்டுமானால் திருடிக் கொண்டு போய்ப் பாதுகாத்து கொள் என்கிறார் சலோமே. அவர் சொன்னது போலவே சலோமேயின் மரணத்தின் பிறகு அவரது சொத்துகளைப் பாதுகாத்து அவரது நூல்களை மறுபிரசுரம் செய்தது எர்ன்ஸ்ட் பிஃபரே.

மிகச்சிறந்த ஒளிப்பதிவு, இசை படத்தொகுப்பு என படம் சிறந்த அனுபவத்தை தருகிறது. சலோமேயாக Katharina Lorenz, Liv Lisa Fries, Nicole Heesters மூவரும் நடித்திருக்கிறார்கள். மூன்று பேரும் மிகச் சிறப்பாக சலோமேயின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். Julius Feldmeier ரில்கேயாகவும் Alexander Scheer நீட்சேயாகவும் நடித்திருக்கிறார்கள்.

சலோமேயின் வாழ்க்கை ஒருவகையில் மேடம்பவாரியை நினைவுபடுத்துகிறது. மேடம் பவாரி சலோமே போன்ற அறிவாளியில்லை. ஆனால் பவாரியின் வேட்கையும் சலோமேயின் வேட்கையும் ஒன்றே.

••

0Shares
0