பதிமூன்றாம் நூற்றாண்டு பாரசீக கவிஞர் ரூமி என்கின்ற மௌலானா ஜலாலுதீன் ரூமியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட அனிமேஷன் திரைப்படம் Lamya’s Poem.

சிரியாவில் வாழும் பனிரெண்டு வயதான லம்யாவின் பகல் கனவில் துவங்குகிறது படம். மின்மினிப்பூச்சிகள் பறக்கும் உலகைக் கனவு காணுகிறாள். அதில் மின்மினிப்பூச்சிகள் பறந்து வந்து அவளது கையில் அமர்கின்றன. அதன் வசீகர ஒளியும் பறத்தலும் அவளைச் சந்தோஷப்படுத்துகின்றன. விநோதமான கற்பனையிலிருந்து அவள் விழிப்படையும் போது சாதாரணப் பள்ளி மாணவியாக வெள்ளை உடையில் தோன்றுகிறாள்.
வீட்டில் அவளும் அம்மாவும் மட்டுமே வசிக்கிறார்கள். அவளது வீட்டிற்கு வரும் ஆசிரியர் அவளது படிப்புத்திறமையைப் பாராட்டி தன்னிடமுள்ள ஒரு புத்தகத்தை வாசிக்கத் தருகிறார். அது ரூமியின் கவிதைப்புத்தகம்.
ரூமி யார் என்று தெரியுமா என்று அவளிடம் கேட்கிறார். அவள் தனக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்கிறாள். ரூமியின் வாழ்க்கையை ஆசிரியர் விவரிக்கத் துவங்குகிறார். அவை காட்சிகளாக விரிகின்றன.

மங்கோலிய படையெடுப்பில் சாமர்கண்ட் சூறையாடப்படுகிறது. அங்கே வசித்த ரூமியின் குடும்பம் அகதியாக வெளியேறுகிறார்கள். இந்தப் பயணத்தில் ரூமி எழுதிய கவிதைகள் காற்றில் பறக்கின்றன. அவரது தந்தை அந்தக் கவிதைகளைப் பாதுகாக்க முனையும் போது யாருக்காக நான் கவிதைகள் எழுதுவது. இந்தச் சூழலில் சண்டையிடுவது தானே முக்கியம் எனக் கேட்கிறார் ரூமி. இந்தக் கவிதைகள் என்றும் வாழக்கூடியவை. யாரோ என்றோ அதைப் படிப்பார்கள். கவிதைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்கிறார்
படம் ரூமியின் அகதி வாழ்க்கையினையும் லம்யாவின் அகதி வாழ்க்கையினையும் இருசரடுகளாகப் பிணைத்துச் செல்கிறது. கற்பனை உலகில் ரூமியை சந்திக்கும் லம்யா அவருடன் உரையாடுகிறாள். சாகசங்களை மேற்கொள்கிறாள். அவர் தனது கடந்தகாலத் துயரங்களை மறக்க முடியாமல் தவிக்கிறார்.
ரூமியின் கவிதை அவளது வாழ்க்கையை எப்படி இணைக்கிறது. திசைமாற்றுகிறது என்பதை அழகாகச் சித்தரித்துள்ளார்கள். சூபி ஞானக்கவியாக அறியப்பட்ட ரூமியை இப்படம் அகதியின் பாடலைப் பாடும் போராளியாக மாற்றுகிறது. ரூமியின் தந்தை படத்தில் அமைதியின் தூதுவராகச் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.
வேறுவேறு காலங்களில் வசித்தாலும் ஒரேமாதமான நெருக்கடியை லம்யாவும் ரூமியும் சந்திக்கிறார்கள். இன்றைய இளம் வயதினரைப் போலவே, லம்யாவும் செல்போனும் கையுமாகவே இருக்கிறாள். தொடர்ந்து இசை கேட்கிறாள். நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாள். அவளது இயல்பு வாழ்க்கையைப் போர்விமானங்களின் வான்வழித் தாக்குதல் சிதைக்கிறது.

லம்யாவும் அவரது தாயும் ஊரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பாதுகாப்பான இடம்தேடிச் செல்கிறார்கள். தாயை பிரியும் லம்யாவிற்கு வாழ்வின் மீதான பற்றை ரூமியின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன இன்னொரு மாயதளத்தில் லம்யாவும் ரூமியும் இணைந்து சாகசப் பயணத்தைத் தொடங்குகின்றனர். அவை மியாசகியின் அனிமேஷன் படங்களை நினைவுபடுத்துகின்றன.
சிரியாவின் சமகால அரசியலை, போர் சூழலைப் பேசும் இப்படம் கவிதைகளே நம் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துகின்றன. துயரங்களிலிருந்து நம்மை ஆற்றுப்படுத்துகின்றன என்கிறது, இப்படம் ரூமியின் வாழ்க்கையைப் புதிய கோணத்தில் விவரித்திருப்பது சந்தோஷமளிக்கிறது.