ரெட் பைனின் சீனக்கவிதைகள்

சீனக்கவிதைகள் குறித்த விரிவான உரை ஒன்றை மொழிபெயர்ப்பாளர் ரெட் பைன் நிகழ்த்தியிருக்கிறார். இவரது இயற்பெயர் பில் போர்ட்டர். (Bill Porter/Red Pine,) அமெரிக்கரான இவர் ஜென் குருவாகச் செயல்பட்டு வருகிறார். இவரது உரை தற்போது இணையத்தில் காணக்கிடைக்கிறது.

பண்டைய சீனக்கவிதைகள் மற்றும் ஞானநூல்களின் மொழிபெயர்ப்பாளரான இவர் வரலாற்றில் சீனக்கவிதைகளின் இடம் குறித்த சிறந்த அறிமுகத்தைத் தருகிறார். Burton Watson மொழியாக்கம் செய்த சீனக்கவிதைகளை வாசித்திருக்கிறேன். அவரது தொடர்ச்சியை போலவே ரெட் பைனும் செயல்படுகிறார்.

இந்த உரையில் சீனவரலாற்றுக்கும் கவிதை மரபுக்குமான தொடர்பு, சீனாவில் விவசாயிகள் எவ்வாறு கவிஞர்களைக் கொண்டாடினார்கள். கவிஞர்களுக்கான நினைவிடத்தை உருவாக்கினார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கவிஞர்களின் சங்கம் மற்றும் ஒன்று கூடி கவிதை பாடும் முறை, கவிஞரின் நினைவாக நடக்கும் விழாக்கள். கவிதை வாசிக்கும் நாள். அரச சபையில் இடம்பெற்ற கவிஞர்களின் நிலை பெண் கவிஞர்களின் வாழ்க்கை, மற்றும் கவிஞர்களின் நினைவிடங்களைத் தேடிக் கண்டு பெற்ற அனுபவம் என மிகச் சுவாரஸ்யமான உரையைத் தந்திருக்கிறார்.

அவர் கவிதைகளை வாசிக்கும் அழகும் அதற்குத் தரும் விளக்கமும் மிக இனிமையாக உள்ளது.இந்த உரையில் ஒரு மீனவனுக்கும் கவிஞருக்குமான உரையாடல் பற்றிய பகுதி ஒன்றுள்ளது. மிகச்சிறந்த பகுதியது.

ரெட் பைன் உரையில் மூன்று விஷயங்களை முக்கியமாகக் கருதுவேன். ஒன்று சீனாவில் தொகை நூல்கள் எப்படி உருவாக்கப்பட்டன என்பதைப் பற்றிய பார்வை. இரண்டாவது கவிஞர்களின் புனைபெயர்கள். மூன்றாவது கவிஞனின் வாழ்க்கையும் பார்வைகளும்.

நமது அகநானூறு, புறநானூறு போலவே சீனாவிலும் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்த கவிஞர்களின் சிறந்த கவிதைகள் ஒன்று திரட்டப்பட்டுத் தொகைநூலாக அரசால் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இதன் முக்கியத் தேவை அரசு விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது எந்தக் கவிதையை வாசிக்க வேண்டும் என்பதற்கு உதவி செய்வதே. அது போலவே வணிகச் சந்திப்புகள். மற்றும் தூரதேசம் பயணம் செய்கிறவர்கள் ஒன்று கூடும் போது இந்தக் கவிதைகளைச் சொல்லி மகிழ்வதும் இசையோடு பாடுவதும் நல்லுறவின் அடையாளமாக இருந்திருக்கும் என்கிறார்.

ஒருவகையில் கவிதை சொல்வது என்பது ஆளுமையின் அடையாளம். தனது விருப்பம் மற்றும் ரசனையை வெளிப்படுத்தச் சிறந்த கவிதை ஒன்றைச் சொல்வதை அன்றைய சீனர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். தனக்கென தனித்துவமான பார்வையும் உலகை தனது சொந்த மனவெளிப்பாட்டின் படி அணுகுவதும். மொழியை ரசவாதி போல விரும்பும் படி உருமாற்றம் செய்வதும் கவிஞனின் வேலை. அவன் இயற்கையை அப்படியே நகலெடுப்பதில்லை. கண்முன்னே தோன்றும் காட்சிகளின் வழியே அவன் காணாத உலகை,. அறியாத உணர்ச்சிகளை அடையாளப்படுத்துகிறான். தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போலவே உலகின் காட்சிகள் வழியாகவும் பார்த்துக் கொள்கிறான். கவிஞனுக்கு உலகிடம் பயமில்லை. ஆனால் அவன் உலகின் இயக்கத்திற்கு எதிர் திசையில் செல்லவே விரும்புகிறான். கவிஞனின் அகம் எதனால் விழித்துக் கொள்ளும் எதைப் புனைவு கொள்ளும் என்பது கண்டறியமுடியாத ரகசியம்.

தொகை நூலின் வழியே கவிதைகள் தேசம் முழுவதும் பரவத்துவங்கின. இது கவிதைகளைப் பண்பாட்டு செயலாக்கியது என்கிறார். அத்துடன் தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கவிதை பயிலரங்குகள். பயிற்சி நிலையங்கள் உருவாகக் காரணமாகவும் அமைந்தன என்கிறார்

தொகை நூல்களின் நோக்கம் இப்படிதானிருக்ககூடும். தமிழில் புறநானூறு யாரால் தொகுக்கப்பட்டது எவர் தொகுப்பித்தவர் என்று தெரியவில்லை. அகநானூற்றினைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. ஐங்குறுநூறு தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

இந்தத் தொகை நூல்களில் இடம்பெற்ற கவிஞர்கள் எப்படித் தேர்வு செய்யப்பட்டார்கள். எவ்வாறு தொகுப்பு முறை செய்யப்பட்டது. ஒரு கவிஞரின் எந்தக் கவிதையை எப்படித் தேர்வு செய்தார்கள், நானூறு என்ற எண்ணிக்கையை எதை வைத்து முடிவு செய்தார்கள் என்று எந்த விபரமும் கிடைக்கவில்லை. கவிஞர்களுடன் மன்னர்களின் கவிதையும் இடம்பெற்றதை அன்றைய இலக்கியச் சூழல் எப்படி எதிர்கொண்டது. தொகைநூலில் இடம்பெறாத கவிஞர்களின் எதிர்வினை எப்படியிருந்தது என்பது போன்ற கேள்விகள் ஆராய வேண்டியவை.

இது போன்ற கேள்விக்கான பதிலாகவே ரெட் பைன் சீனாவில் தொகுக்கபட்ட கவிதைகளின் தேர்வு மற்றும் பயன்பாடு பற்றிக் கூறுகிறார். பௌத்த சமயம் காரணமாகவே தொகுப்பு முயற்சிகள் உருவாகின என்று கூறுகிறார். இந்தக் கோணத்தில் தமிழையும் நாம் ஆராய வேண்டும்.

இது போலவே கவிஞர்கள் ஏன் புனைப்பெயர் வைத்துக் கொண்டார்கள். அதுவும் கவிதையின் படிமம் அல்லது உருவகத்தைத் தனது பெயராகக் கொண்டது ஏன் என்றே கேள்விக்குச் சீனாவில் கவிதை எழுதியவர்களில் பெரும்பான்மையினர் அடித்தட்டு மக்கள். எளியோர். ஆகவே அவர்கள் புனைப்பெயரை உருவாக்கிக் கொண்டார்கள் என்கிறார். அந்த நாட்களில் வேறு கலைத்துறையைச் சார்ந்த கலைஞர்கள் புனைபெயர் வைத்துக் கொண்டதில்லை. இசைக்கலைஞர்கள். ஓவியர்கள், சிற்பிகள் அவர்களின் சொந்த பெயராலே தான் அறியப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சீனக்கவிஞர்கள் இயற்கையின் அடையாளமாகத் தன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். குளிர் மலை என்பது ஒரு கவிஞனின் பெயர். ஆயிரம் மழைத்துளிகள் என்றொரு கவிஞர். தப்பியோடிய மேகம் என்பது வேறு ஒரு கவிஞரின் பெயர். இப்படிக் கவிதைகளிலிருந்தே அவர்களின் புனைபெயர்கள் உருவாகியிருக்கின்றன. தமிழிலும் இது போலவே சங்க கவிஞர்கள் தனது கவிதையின் வழியாகவே அடையாளம் காணப்பட்டார்கள்.

சங்க கவிஞர்களின் பெயர்களை வாசித்துப் பாருங்கள். அணிலாடு முன்றிலார்,குப்பைக் கோழியார், நெடுவெண்ணிலவினார் மீனெறி தூண்டிலார் வெள்ளிவீதியார் கல்பொரு சிறுநுரையார் – கங்குல் வெள்ளத்தார் என எவ்வளவு கவித்துவமாக இருக்கின்றன. இந்தப் பெயர்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் இன்னும் கவர்ச்சியாக இருக்கிறது.

சீனக் கவிதைகளின் பொற்காலமாக டாங் அரச வம்சம் ஆட்சி செய்த காலத்தைக் கூறுகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதுமாக 2500 கவிஞர்கள் இருந்ததாகவும் அவர்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியதாகவும் சீன இலக்கிய வரலாறு கூறுகிறது. இதில் துஃபு, , லீ போ, பாய் ஜுய் மூவரும் மிக முக்கியமான கவிஞர்கள், இவர்களின் கவிதைகள் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகின்றன.

சங்க இலக்கியத்திலுள்ள பெண் கவிஞர்களைப் போலவே தன் சொந்த அடையாளத்தை மறைத்துக் கொண்டு சீனாவிலும் பெண் கவிஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். புற உலகம் அறியாதவர்கள் என்றே இந்தக் கவிஞர்களை வகைப்படுத்துகிறார்கள். வீட்டிற்குள் இருந்தபடியே அவர்கள் உலகை அறிந்திருக்கிறார்கள். காற்றை, மழையை, நிலவை, சூரியனை. பறவைகளின் சங்கீதத்தைப் பற்றிக் கவிதை பாடியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் முதுமை, நோய், தனிமை, பிரிவு. மரணம், துக்கம், துரோகம் வஞ்சகம் பற்றியும் எழுதியிருக்கிறார்கள். பெண் கவிஞர்களின் கவிதைகளுக்கு அந்தக் காலத்திலே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் பொது வெளியில் கவிஞராக உலவ முடியவில்லை. அதைப் பண்பாடு அனுமதிக்கவில்லை என்றும் ரெட் பைன் தெரிவிக்கிறார்.

ரெட்பைன் தனது உரையில் பண்டைய பெண் கவிஞர் ஒருவரின் வீடு தேடி அலைந்த சம்பவத்தை விவரிக்கிறார். முடிவில் அதைக் கண்டுபிடித்தபோது அவர் அடைந்த பரவசத்தை உரையின் போதும் அவரது முகத்தில் காணமுடிகிறது

இது போலவே பூங்காவிலிருந்த கவிஞரின் கல்லறை ஒன்றைத் தேடிய அனுபவத்தையும் மிக அழகாக விவரித்துள்ளார்.

சீனக்கவிஞர்களில் பெரும்பாலோர் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். சுற்றியலைந்து பெற்ற அனுபவத்தைச் செல்லும் இடங்கள் தோறும் கவிதை பாடியிருக்கிறார்கள். குறிப்பிட்ட சில கவிஞர்கள் அரச சபையில் மன்னரின் ஆலோசகராகவோ, நிர்வாகப் பணிகளிலோ ஈடுபட்டிருக்கிறார்கள். அரச சபை வாழ்க்கை கவிஞர்களுக்கு ஏற்றதில்லை என்றே விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம் அரச சபையில் இதயத்தில் நினைப்பதை எல்லாம் உதட்டின் வழியே பேச முடியாது. ஒரு வேளை அப்படி மனம் திறந்து பேசினால் அவர்கள் உடனே நாடு கடத்தப்படுவார்கள். அரச சபையிலிருந்து நாடு கடத்தப்பட்ட கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் சிலர் தற்கொலை செய்து கொண்டதும் உண்டு என்கிறார் ரெட் பைன்.

சங்க கவிதை மரபிலும் பாடிப்பரிசல் பெற அலைந்து திரியும் கவிஞர்களையே அதிகம் காண முடிகிறது. கபிலரைப் போலச் சிலர் அரசருக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். ஔவையைப் போலச் சிலர் நீதி சொல்லியிருக்கிறார்கள்.

சீன மன்னர்களுக்குக் கவிதையிலிருந்த ஈடுபாடு என்பது கவிதை வழியாக அவர்கள் உணர்த்தும் அறத்தின் பொருட்டேயிருந்தது என்கிறார் ரெட்பைன். அது உண்மையே, அந்தக் காலத்தில் கவிதையின் வழியே தான் அறம் பேசப்பட்டது. நீதி நெறிகள் அடையாளம் காணப்பட்டன. கவிதை ஒரு ஊடகம். அதன்வழியே தான் நுண்மையான அனுபவங்கள். ஞானம் பகிரப்பட்டது. அதுவும் கவிதையில் நேரடியாக மன்னரைச் சுட்டிக்காட்ட முடியாது என்பதால் விலங்குகளை, பருவகாலத்தைச் சொல்லி அதன் வழியே மன்னருக்குச் சொல்ல வேண்டிய நீதியைப் புரிய வைத்தார்கள்.

சங்க கவிதைகளைப் போலப் பசியை, வறுமையை, இல்லாமையைச் சீனக்கவிதைகள் அதிகம் பாடவில்லை. வறுமையான சூழலை விவரிக்கும்போதும் தமிழ்க் கவிதையினைப் போலத் துயர்மிகு சித்திரமாக வெளிப்படவில்லை.

மதுவின் மயக்கத்திலே ஆழ்ந்து கிடப்பது அன்றைய கவிஞர்களின் இயல்பு. குடியைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகள் சீனாவில் ஏராளம் இருக்கின்றன. கூடிக் குடிப்பது மட்டுமின்றி, மலையுச்சியில் அமர்ந்து நிலவோடு குடிப்பது, படகில் தனித்திருந்து குடிப்பது எனக் குடிவாழ்க்கையைக் கொண்டாடியிருக்கிறார்கள். அரசசபையில் பதவி வழங்கப்பட்ட கவிஞர்களின் ஒரே வேலை குடிப்பது மட்டும் தான், அது உண்மையைச் சொல்ல வேண்டாதபடி கவிஞனை எப்போதும் மயக்கத்தில் வைத்திருக்கும் என்கிறார் ரெட் பைன்.

இது போலவே உயர்ந்த மலைத்தொடரைத் தேடிச்சென்று சிறிய குடில் அமைத்துக் கொண்டு வாழுவதும் கவிஞனின் இயல்பாக இருந்திருக்கிறது. கவிஞர் லி பெய் திருமணம் செய்து கொண்டு இளம் மனைவியோடு வாழ்ந்த சில மாதங்களிலே இப்படி மலையில் குடில் அமைத்து தனியே தங்கி கவிதைகள் எழுதி வந்தார் என்பதையும் ரெட் பைன் நினைவுபடுத்துகிறார்.

ரெட் பைன் மானுடவியல் பயின்றவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் உதவித்தொகை கிடைக்கிறது என்பதற்காகச் சீனமொழியைக் கற்றுக் கொண்டிருக்கிறார். அந்த ஆர்வம் வளரவே சீனத்திலிருந்து அரிய கவிதைத்தொகுப்புகள் மற்றும் பௌத்த சூத்திரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வருகிறார்.

சில காலம் பௌத்த மடாலயங்களில் தங்கி தியானம் கற்றுக் கொண்டதுடன் ஜென் வாழ்க்கையைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். தைவானில் வசித்த போது மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணியில் இரண்டு ஆண்டுகள் மேற்கொண்டிருக்கிறார். அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு மொழியாக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். Cold Mountain எனும் சீனக்கவியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதற்காக மலையுச்சியிலிருந்த சிறிய விவசாயக் கிராமம் ஒன்றுக்குப் போய்த் தங்கிக் கொண்டு எளிய விவசாயப் பணிகளை மேற்கொண்டவாறு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

சீனாவில் இவர் மேற்கொண்ட பயணங்களும் கவிஞர்களின் நினைவிடங்களைத் தேடிக் கண்டறிந்து வெளிப்படுத்திய விதமும் அபாரமானது.

ஜாங்னான் மலைத்தொடர் மிக நீண்டது, இங்குள்ள குகைகளில் வாழும் பௌத்த துறவிகளைத் தேடி ரெட் பைன் நீண்ட பயணத்தை மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் அவர் அடைந்த அனுபவங்களை ரோடு டு ஹெவன் என்ற நூலாக எழுதியிருக்கிறார். இதில் நிறையப் பெண் துறவிகளைச் சந்தித்து அவர்களின் தனித்துவமிக்க வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார்.

ரெட் பைனின் வாழ்க்கை வியப்பூட்டக்கூடியது . அவரது அப்பா ஒரு வங்கி கொள்ளைக்காரர். அவரும் நண்பர்களும் வங்கி ஒன்றைக் கொள்ளையடித்துவிட்டுத் தலைமறைவாகி விட்டார்கள். துரத்தி வந்து அவர்களைக் கண்டுபிடித்த போலீசாருடன் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினார்கள்.. இதில் முழங்காலில் காயமடைந்த அவரது அப்பாவைத் தவிர மற்றவர்கள் அதே இடத்தில் கொல்லப்பட்டார்கள். ரெட் பைனின் அப்பா சிறைக்குச் சென்றார்.

தண்டனைக்காலம் முடிந்து அப்பா வெளியே வந்ததும் தான் பதுக்கி வைத்திருந்த பணத்தைக் கொண்டு டெக்சாஸில் ஹோட்டல் வியாபாரத்தில் ஈடுபடத் துவங்கினார். அதில் மிகப்பெரிய வெற்றி பெற்றார். சில ஆண்டுகளிலே அவர் பெரும் பணக்காரராக மாறினார்.

ரெட் பைனின் குழந்தைப் பருவம் ஆடம்பரமான வாழ்க்கையைக் கொண்டிருந்தது. அவரது அப்பாவிற்கு அரசியலில் ஆர்வம் உருவானது. கலிபோர்னியாவில் உள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவரானார். தேர்தலில் போட்டியிட்டார். அந்த நாட்களில் கென்னடி சகோதரர்கள் அவர்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். தேர்தல் அரசியலில் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. ஆகவே நிறையத் தோல்விகளைச் சந்தித்தார்.

இதற்கிடையில் ரெட் பைனின் அம்மாவை அவரது அப்பா விவாகரத்துச் செய்தார், ஆகவே எல்லா வசதிகளையும் இழந்து நடுத்தர வாழ்க்கைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். ரெட் பைன் ஜூனியர் கல்லூரியில் தோல்வியுற்று மன அமைதியை இழந்தார். அதன்பின்பு மூன்று ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். அதிலிருந்து ஓய்வு பெற்று வந்த பிறகே பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பயிலச் சென்றார்.

தைவானில் வசித்த போது சீனப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவரது ஊக்கம் காரணமாகவே சீன இலக்கியங்களை மொழியாக்கம் செய்யத் துவங்கினார்.

எண்பதுகளின் மத்தியில் தான் சீனா அமெரிக்கர்களைத் தன் தேசம் முழுவதும் தடையில்லாமல் பயணம் செய்ய அனுமதி தந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் சீனா முழுவதும் பயணம் செய்தார். தான் படித்து அறிந்த சீனாவின் நிலக்காட்சிகளை, மஞ்சள் நதியை நேரடியாகச் சென்று பார்த்தார்.பௌத்த துறவிகளின் மீது ஈடுபாடு கொண்டு அவர்களைத் தேடி மலைப்பிரதேசங்களில் அலைந்தார்.

ரெட் பைன் 2005ல் சீனாவில் ஒரு மாதகாலம் பயணம் செய்து முப்பது புகழ்பெற்ற கவிஞர்களின் கல்லறைகளைத் தேடிக் கண்டுபிடித்து அக் கல்லறையின் முன்பாக ஒரு கோப்பை ஸ்காட்ச் விஸ்கியை மலர்களுடன் படையல் செய்து வணங்கியிருக்கிறார். இந்த உரையின் போதும் சிறிய குப்பியில் வைத்திருந்த மதுவைச் சந்தோஷத்துடன் உயர்த்திப் பருகிக் கொள்கிறார்.

ரெட் பைனின் முகத்தில் காணப்படும் சந்தோஷம். உற்சாகமான பேச்சு. வேடிக்கையாகச் சொல்லும் விதம் நம்மை அவரோடு நெருக்கமாக்குகிறது. இந்த உரையைக் கேட்ட கையோடு பயணியின் மொழியாக்கத்தில் வெளியான சீனக்கவிதைகளின் தொகுப்பான வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை வாசித்தால் முழுமையான அனுபவத்தை நாம் பெற முடியும்.

ரெட் பைன் போலவே பயணி எனும் ஸ்ரீதரனும் சீனாவில் பணியாற்றிச் சீனமொழியை முறையாகக் கற்றுக் கொண்டு இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார். மிகுந்த பாராட்டிற்குரிய பணியிது.

ரெட் பைன் தேர்வு செய்து வாசிக்கும் கவிதைகளை கேட்கும் போது பெரிய ஈர்ப்பு உருவாகவில்லை. ஆனால் அதே கவிதைகளை மௌனமாக வாசித்தால் அது தரும் அனுபவம் சிறப்பாக உள்ளது.

ரெட் பைனின் முக்கிய நூல்களை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யலாம் என நினைக்கிறேன். அதன் துவக்கப்புள்ளியாக இந்த உரையைக் குறிப்பிடலாம்

Bill Porter/Red Pine, Poetry Readings

0Shares
0