ரெட் பைனின் பயணம்

முப்பது நாட்களில் முப்பது கவிஞர்களின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுச் சீனாவில் ரெட் பைன் பயணம் செய்த அனுபவத் தொகுப்பே Finding Them Gone. வித்தியாசமான பயணநூல். இரண்டு வேறு காலங்களுக்கு இடையே அவர் பயணம் செய்து திரும்பியதை உணர முடிகிறது

பீஜிங்கிலிருந்து தனது பயணத்தைத் துவங்கும் ரெட்பைன் மின்சார ரயிலில் சென்று கன்பூசியஸின் சொந்த ஊரை முதலில் காணத் திட்டமிடுகிறார். சீனாவின் அதிநவீன ரயில் சேவை பிரமிப்பூட்டக்கூடியது. ரயில் நிலையங்கள் விமானநிலையம் போலவே அமைக்கப்பட்டிருப்பதையும், முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரயில் நிலையத்தின் வசதிகளையும் ரெட் பைன் வியந்து எழுதுகிறார். 1500 கிலோ மீட்டர் தூரமுள்ள ஊருக்கு ஐந்து மணி நேரத்தில் ரயில் போய்விடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு முந்நூறு கிலோமீட்டருக்கு மேல் வேகம் செல்கிறது ரயில். அந்த ரயில் நிலையத்தில் எல்லா வகையான அமெரிக்க உணவு வகைகளும் கிடைக்கின்றன.

ரயிலில் தரப்படும் சிற்றுண்டிகளும் கூட அமெரிக்கத் தயாரிப்புகளே என்கிறார். ரயிலில் உள்ள கழிப்பறை கூட நட்சத்திர விடுதியில் இருப்பது போல அமைக்கப்பட்டிருப்பதைக் கூறுகிறார். மூன்று நேரப் பயணத்தின் பிறகு ரெட் பைன் இறங்கிய ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க உள்ளூர் வழிகாட்டி ஒருவர் காத்திருக்கிறார். சீனாவில் ஜென் டூரிசம் மிகவும் புகழ்பெற்றது. இது நிறைய வருமானம் தரக்கூடியது. ஆகவே இதற்கான வழிகாட்டிகள் நிறைய இருந்தார்கள்

அவரை அழைத்துச் சென்ற வழிகாட்டி கன்பூசியஸின் சொந்த ஊராக மவுண்ட் நிசானுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே கன்பூசியஸின் பிறந்த இடம், மற்றும் கைவிடப்பட்டு அவர் வளர்க்கபட்ட குகை மற்றும் அவரது வாழ்க்கையோடு தொடர்புடைய முக்கிய இடங்களைக் காணுகிறார். முடிவில் கன்பூசியஸின் கல்லறையைத் தேடிச் செல்கிறார். எளிமையான கல்லறை. இரண்டு நினைவு தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கே தான் கொண்டு போயிருந்த விஸ்கியிலிருந்து ஒரு குவளை ஊற்றி கன்பூசியஸிற்குப் படையல் வைத்து வணங்கியதோடு தானும் ஒரு குவளை மதுவை கன்பூசியஸோடு இணைந்து குடிக்கிறார்.

சீனாவில் வெளிநாட்டவர்கள் எல்லா விடுதிகளிலும் தங்க அனுமதி கிடையாது. குறிப்பிட்ட விடுதிகள் மட்டுமே அனுமதி தந்தன. ஆகவே அவரது நண்பர் மலிவான விடுதி ஒன்றில் ஒரு இரவு தங்க இடம் அமைத்துக் கொடுக்கிறார்

ஒரு பக்கம் அதிநவீன வாழ்க்கையின் காட்சிகள் மறுபக்கம் மரபான சீன நம்பிக்கைகள், வழிபாடுகள். கவிதை மரபைப் பின்தொடரும் முறை எனச் சீனாவிற்குப் பல்வேறு முகங்கள் இருப்பதை ரெட் பைன் அடையாளம் காட்டுகிறார்.

கவிஞர்களின் கல்லறைகளை முறையாகப் பாதுகாப்பதுடன் அதை ஒரு சுற்றுலா ஸ்தலமாகச் சீன அரசு மாற்றியிருப்பதை நினைவுபடுத்துகிறார் ரெட் பைன். இந்தப் பயணக்கட்டுரைகளின் ஊடாக அவர் நினைவு கொள்ளும் கவிதைகளும் இயற்கைக் காட்சிகளும் சிறப்பானவை.

இந்த நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. பழங்காலச் சீனாவில் கவிதை எழுதத் தெரியாத ஒருவருக்கு அரசுப்பணி கிடைக்காது. அரசுப்பணிக்கான தேர்வின் ஒரு பகுதியாகக் கவிதை எழுதுவது இருந்த்து. ஆகவே அரசு அதிகாரிகள் கவிதைகளில் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார்கள் என்று ஒரு குறிப்பை ரெட் பைன் தெரிவிக்கிறார். அந்த நாட்களில் இருபது வயதிற்குள் அரசின் முக்கியப் பதவிக்கு வந்து விடுவார்கள். ஆகவே இன்றைய இருபது வயதும் அன்றைய இருபது வயதும் ஒன்றில்லை. அன்றைய இருபது வயதில் ஒருவனுக்குத் திருமணமாகி சமூக அந்தஸ்து கிடைத்திருக்கும் என்கிறார்.

இந்தப் பயணத்தில் லி பெய், து ஃபூ, வாங் வீ, சு துங்-பாவோ, ஹுசுவே தாவோ, சியா தாவோ, வீ யிங்-வு, ஷிஹ்-வு , ஹான்-ஷான் போன்ற முக்கியக் கவிகளின் நினைவிடத்திற்குச் சென்று வந்திருக்கிறார்.

சீனாவில் ஒருவர் தன் வயதைப் பிறந்த நாளிலிருந்து கணக்கிடுவதில்லை. புத்தாண்டு தினத்திலிருந்தே கணக்கிடுகிறார்கள் என்றொரு குறிப்பும் இதில் உள்ளது.

கவிதையை மொழியாக்கம் செய்யும் சில வார்த்தைகளைத் தான் புரிந்து கொண்ட விதமும் நேரில் அந்த இடங்களைக் காணும்போது ஏற்படும் புரிதலும் முற்றிலும் வேறுவிதமாக இருப்பதை ரெட்பைன் குறிப்பிடுகிறார். வாசிப்பின் வழியாக மட்டுமே ஒரு கவிதையைப் புரிந்து கொள்ள முடியாது. அந்த நிலக்காட்சிக்கு, வீடுகளுக்கு, மலைகளுக்கு நேரில் சென்றால் மட்டுமே கவிதையின் உண்மையான பொருளை அறிந்து கொள்ள முடியும் என்கிறார்

சீனாவின் முக்கியக் கவிஞர்களில், ஓ-யாங் ஹ்சியுவின் நினைவிடத்தைத் தேடிச் செல்லும் ரெட்பைன் ஓ-யாங் ஹ்சியுவின் வாழ்க்கையை விவரிக்கிறார். அவர் பல நீதிமன்றங்களில் மூத்த பதவிகளில் பணியாற்றியவர். சிறந்த நிர்வாகி, வரலாற்றாசிரியர் என்று குறிப்பிடுகிறார். இளமையில் வறுமையைச் சந்தித்த அவர் தாயின் வழிகாட்டுதலில் படித்து முன்னேறி பெரிய பதவிகளை அடைந்தார் என்கிறார்

மந்திரிக்குப் பிடிக்காத அதிகாரிகளைத் தலைநகரிலிருந்து வெகுதொலைவில் உள்ள ஊருக்கு மாறுதல் செய்வது அந்த நாளைய வழக்கம். சிலர் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்குக் கூட மாற்றப்பட்டார்கள். அப்படி ஓ-யாங் ஹ்சியு தண்டிக்கப்பட்டு ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு மாறுதல் செய்யப்பட்டார். சுச்சோவின் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றிய நாட்களில் அங்குள்ள இயற்கைக் காட்சிகளில் மெய்மறந்து போனார். அது அவரது கவிதை மனதிற்கு மிகவும் பிடித்தமானதாக அமைந்திருந்தது.

ஒவ்வொரு நாளும் புதிய ஊரை நோக்கி பயணம் செய்தபடியே இருந்த ரெட் பைன் சீனாவில் பேருந்துகள் சரியான நேரத்திற்குப் புறப்பட்டுச் சரியான நேரத்திற்குச் சென்று அடைந்துவிடும். ரயில்களில் அப்படியில்லை. தாமதம் ஏற்படுவது அதிகம் என்கிறார்

தனது பயணத்தின் ஊடே விவசாயிகள். சிறு வணிகர்கள். சிறார்களுடன் பேசி இறந்த கவிஞரின் வாரிசுகள் இப்போது எங்கே இருக்கிறார்கள். அவர்களின் பூர்வீக வீடு எங்கேயிருக்கிறது என்பதை ரெட் பைன் அறிந்து கொள்கிறார். இதனால் வழிகாட்டிக்குத் தெரியாத புதிய இடங்களை அவர் கண்டுபிடிக்கிறார்.

அந்தக் காலத்தில் கதை சொல்வதற்காக ஊடகமாகவே கவிதை செயல்பட்டது. ஆகவே கவிஞர்கள் கவிதைகள் வழியாகக் கதை சொன்னார்கள். இந்தக் கதைகள் காதலைப்பற்றியதாகவோ, போர்த்திறன் பற்றியதாகவே இருந்தன.

சாண்டாயிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் து ஃபூ இருபது மாதங்கள் கழித்தார், அந்த நேரத்தில் 140க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருக்கிறார். அப்போது இருந்த அவரது வீடு காலமாற்றத்தில் இடிக்கப்பட்டுப் புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கட்டிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நகரின் கிழக்கு வாயிலுக்கு அருகில் அந்த வீடு போல மாதிரி ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்கிறார்

குளிர் மலை எனப்படும் ஹான்-ஷானின் கவிதைகளை அவர் வசித்த குகைக்கே சென்று ரெட் பைன் வாசித்திருக்கிறார்

கவிஞர்களின் நினைவிடங்களில் சில முறையாகப் பாதுகாத்து வரப்படுகின்றன என்றும் பலரது நினைவிடங்கள் சிதைந்த நிலையில் காணப்படுவதையும் தெரிவிக்கிறார். இந்தக் கவிதைகளை இன்றைய தலைமுறை விரும்பி வாசிக்கவில்லை. அவை காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய தலைமுறையின் நோக்கமும் கவனமும் பணம் தேடுவதில் மட்டுமே இருக்கிறது. அவர்களுக்குத் தங்களின் கவிதை மரபை பற்றியோ, புகழ்பெற்ற கவிஞர்கள் பற்றியோ விருப்பமில்லை. வயதானவர்களும் ஆய்வாளர்களும் இலக்கியவாதிகளும் மட்டுமே இவை பற்றிப் பேசுகிறார்கள் என்கிறார். இந்தியாவிலும் இதே நிலை தானே.

இந்தப் பயணத்திற்கான செலவை ரெட் பைனின் பதிப்பாளர் தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அத்துடன் மலிவான கட்டணத்திலுள்ள விடுதிகளில் தங்கிக் கொண்டு பேருந்திலும், ரயிலிலும் படகிலும் வேனிலும் பயணம் செய்தே சீனாவின் குறுக்கும் நெடுக்குமான ரெட் பைன் பயணித்திருக்கிறார். இது கவிதையின் மீது அவர் கொண்டிருந்த பேரன்பின் அடையாளமாகவே உள்ளது.

ரெட் பைன் போல ஒருவர் இந்தியா முழுவதும் சுற்றி இந்தியாவின் புகழ்பெற்ற கவிஞர்கள் வசித்த இடங்களை, நினைவகங்களைப் பார்த்து வருவது சிறந்த கனவுப்பயணமாக அமையும். ரெட் பைன் போல ஒரு மாதகாலத்தில் இதைச் சாத்தியப்படுத்த முடியாது. ஓராண்டு பயணமாக முயன்றால் சாத்தியமாகக் கூடும்.

0Shares
0