ரெயின்கோட்

குறுங்கதை

சம்பத் தனது ஏழு வயதில் முதன்முறையாக ரெயின்கோட் அணிந்த ஒருவரைக் கிராமத்தில் கண்டான். அடைமழைக்காலமது.

மண்வாசனையை அவனுக்கு மிகவும் பிடிக்கும். மழைபெய்யப்போகும் முன்பு எழும் வாசனை ஒருவிதம். மழை விட்ட பின்பு வெளிப்படும் வாசனை வேறுவிதமாக இருக்கும். அது மழை வாசனையில்லை. மண்வாசனை என்பார் தாத்தா. இருக்கட்டுமே. மண்ணை அவ்வளவு வாசனை மிக்கதாக மழையால் தான் முடியும்.

ஊரைச் சுற்றி மழைமேகம் கருகருவெனத் திரளுவதைக் காண அழகாக இருக்கும். மழைவட்டம் போட்டிருச்சி என்று மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மழையின் முதல் துளி எங்கே விழுகிறது என்று யாரும் கண்டறிய முடியாது. ஆனால் மழைத்துளிகள் தபால் பெட்டியின் மீது விழுந்துவிட்டால் அது வேகமான மழை என்று அர்த்தம்.

பகலில் பெய்யும் மழையின் குணம் வேறு. இரவில் பெய்யும் மழையின் குணம் வேறு. இரவில் பெய்யும் மழை எளிதில் நிற்காது. மழை வரைந்த படத்தை மறுநாள் கோவில் சுவரில் காணலாம். மழையும் வெயிலும் சேர்த்துக் கொள்ளும் போது வானுலகில் கல்யாணம் நடப்பதாகச் சொல்வார்கள்.

மழைக்குள் நனைந்தபடி விவசாய வேலை செய்பவர்களையும், ஒடியோடி தூம்புவாயில் தண்ணீர் பிடித்துச் சேகரித்துக் கொள்ளும் பெண்களையும் சம்பத் பார்த்திருக்கிறான்.

ஆனால் இப்படி ஒருவர் மழைக்குள் நனையாமல் கைவீசியபடி நடந்து போவதைக் காண ஆச்சரியமாக இருந்தது. அவர் அணிந்திருந்த அடர் பச்சை நிற ஆடை தான் ரெயின் கோட் என்று அன்று தெரியவில்லை. வீட்டின் திண்ணையில் நின்றபடி அவர் தெருவில் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். நிலா வெளிச்சத்தில் நடந்து போகிறவர் போல நிதானமாக மழைக்குள் நடந்து சென்றார். தலை நனையாமல் இருக்கத் தொப்பி போல ரெயின்கோட்டை இழுத்துவிட்டிருந்தார்.

கிராமத்தில் மழை வேகமெடுக்கும் போது மக்கள் மரத்தடி, பம்ப்செட், அல்லது இடிந்துகிடக்கும் சத்திரம் என ஏதாவது இடத்தில் ஒதுங்கிக் கொள்வார்கள். சிலர் மழையைப் பொருட்படுத்துவதேயில்லை. ஆனால் இப்படி எவரும் ரெயின்கோட் போட்டுக் கொண்டு தெருவில் நடமாடியதில்லை.

அந்தக் காலத்தில் எல்லோர் வீட்டிலும் குடை கிடையாது. வண்ணக்குடைகள் வராத காலமது. பின்னாளில் மடக்குக் குடைகள் வந்த போது அதை மக்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். வியந்தார்கள். ஆண்கள் மடக்குக் குடை வைத்துக் கொள்வதற்குக் கூச்சப்பட்டார்கள்.

ரெயின்கோட் அணிந்திருந்தவரின் பெயர் செல்லசாமி. அவர் ராணுவத்தில் பணியாற்றியவர். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். கிராமத்தில் அவரைப் போல நாலைந்து பேர் ராணுவத்தில் பணியாற்றினார்கள். விடுமுறையில் ஊருக்கு வரும் போது அவர்கள் டீக்கடையில் ஹிந்தியில் தான் பேசிக் கொள்வார்கள்.

அவர்கள் மூலமாகச் சிலர் டெல்லிக்குச் சென்று வேலை தேடிக் கொண்டார்கள். ஒன்றிரண்டு பேர் டெல்லியில் ஹோட்டல் பணியாளர்களாக மாறினார்கள். டெல்லியிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணெண்ணெய் அடுப்பு. அலுமினியப் பாத்திரங்கள், டார்ச்லைட், ஹிந்தி இசைத்தட்டுகள் ஊரில் வியப்பாகப் பார்க்கப்பட்டன. அந்தக் காலத்தில் எஸ்எஸ்எல்சி பரிட்சையில் பெயிலாகிப் போன பையன்கள் டெல்லிக்கு ஒடிப் போவது வழக்கமாக மாறியது.

அவர் அணிந்திருந்தது ரெயின்கோட் என்பதையும். அதை அணிந்து கொண்டுவிட்டால் மழையில் எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம். உடம்பு நனையாது என்பதையும் அவரது மகன் திரவியம் சொல்லித் தான் சம்பத் தெரிந்து கொண்டான்

அந்த ரெயின்கோட்டை செல்லச்சாமி டெல்லியில் வாங்கியிருக்கிறார். அடுத்த முறை அவனுக்கும் சிறியதாக ஒரு ரெயின்கோட் வாங்கி வரப்போகிறார் என்று திரவியம் சொன்னான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த சம்பத்திற்கும் ரெயின்கோட் வாங்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.அந்த ரெயின்கோட்டை தொட்டுப் பார்ப்பதற்காக அவனையும் இரண்டு நண்பர்களையும் திரவியம் தனது வீட்டிற்கு அழைத்துப் போனான். ரெயின்கோட் பாம்புச்சட்டை போல வழுவழுப்பாக இருந்தது, அவ்வளவு பெரிய பொத்தான்களைச் சம்பத் அதற்கு முன்பு கண்டதில்லை. குடைத்துணியில் தைத்திருக்கிறார்கள் என்று அவனோடு வந்த பையன் சொன்னான். இல்லை. இது வெளிநாட்டுத் துணி என்று மறுத்துச் சொன்னான் திரவியம்.

ரெயின்கோட் பற்றிக் கிராமத்துப் பெண்கள் வியப்பாகப் பேசிக் கொண்டார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் கூட அதைப்பற்றித் திரவியத்திடம் விசாரித்தார்கள். தபால்காரர் தனக்கு அப்படி ஒரு ரெயின்கோட் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

“மழையில் ஒன்றிரண்டு தடவை கூட நனையாமல் போய்விட்டால் மழை கோவித்துக் கொண்டு வராமல் போய்விடும். மழையில் நனைவதும் உடம்புக்குத் தேவை தான்“ என்று சொன்னார் கருப்பையா ஆசாரி.

திரவியத்தின் அப்பா ராணுவத்திற்குத் திரும்பிச் செல்லும் போது அந்த ரெயின்கோட்டை கொண்டுபோய்விடுவார் என்றே சம்பத் நினைத்தான். ஆனால் அதை அவரது வீட்டிலே விட்டுவிட்டுப் போயிருந்தார்.

தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பாக மழை துவங்கியது. அப்போது திரவியத்தின் அம்மா அந்த ரெயின்கோட்டை அணிந்து கொண்டு மழைக்குள் எருமை மாட்டை ஓட்டிக் கொண்டு வருவதைப் பார்த்தான். மழை தன்னை எதுவும் செய்துவிடாது என்ற புன்சிரிப்பு அவரது முகத்திலிருந்தது. ஊரில் ரெயின்கோட் அணிந்த முதற்பெண் திரவியத்தின் அம்மா தான். அது அவருக்குப் பெருமையாக இருந்தது. ஊரிலிருந்த பணக்கார முதலாளி எவரிடமும் ரெயின்கோட் கிடையாது. ஆகவே அவர்கள் அதைக் கண்டு எரிச்சல் பட்டார்கள்.

அதன் பிறகான நாட்களில் லேசான தூறல் விழும் போது கூடச் சோளக்கொல்லை பொம்மை போலப் பொருத்தமில்லாத ரெயின்கோட்டை அணிந்தபடி திரவியத்தின் அம்மா நடமாடிக் கொண்டிருப்பார். ஒரு ரெயின்கோட் அவர்களை வசதியானவர்கள் போல உணர வைத்துக் கொண்டிருந்தது.

பொங்கல்விடுமுறைக்குச் செல்லச்சாமி ஊருக்கு வந்த போது அவர் வாக்களித்தது போலத் திரவியத்திற்கு ஒரு ரெயின்கோட் வாங்கிவரவில்லை. அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மைதானத்தில் இதைச் சொல்லிச் சொல்லி மாணவர்கள் கேலி செய்தார்கள். திரவியம் தான் பெரிய ஆள் ஆனதும் ராணுவத்திற்குப் போய் வேலைக்குச் சேர்ந்து கொண்டு ரெயின்கோட் வாங்குவேன் என்றான். தனது ஏமாற்றத்தை மறைத்து அவனால் அவ்வளவு தான் சொல்ல முடிந்தது.

திரவியத்தின் வீட்டிலிருந்த ரெயின்கோட்டை யார் கிழித்தது என்று தெரியவில்லை. கோடை மழை பெய்த நாளில் கிழிந்த மழைக்கோட்டை கொம்பில் இழுத்தபடி எருமை மாடு கண்மாய் கரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. ஊரில் ரெயின்கோட் அணிந்த முதல் எருமை அது தான். அந்தப் பெருமையைப் பெரிதாக நினைக்காமல் அது நடந்து சென்றது.

மறுநாள் அவர்கள் கண்மாயில் மிதந்து கொண்டிருந்த கிழிந்த ரெயின்கோட்டை பார்த்தார்கள். யாரோ விநோதமான மனிதன் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது. ஒரு தட்டான் கிழிந்த கையின் மீது அமர்ந்திருந்தது.

தட்டான் தூக்கிட்டு போகப்போகுது டோய் என்று கத்தினான் ஒருவன். டெல்லிக்கா என்று கேட்டான் இன்னொரு சிறுவன். சம்பத் அதைக் கேட்டுச் சிரித்தான். அவன் கண்முன்னே காற்று ரெயின்கோட்டை புரட்டி விளையாடிக் கொண்டிருந்தது.

0Shares
0