வடக்கன் வீரகதா

ஒரு வடக்கன் வீரகதா படம் பார்த்தேன். முன்னதாக நான்கு முறை பார்த்திருந்த போதும் படம் சுவாரஸ்யமாகவே இருந்தது. சில படங்கள் காலத்தை வென்று ஒளிரக்கூடியவை. அதில் ஒன்று ஒரு வடக்கன் வீர கதா.

கதை 16 ஆம் நூற்றாண்டின் வடக்குக் கேரளாவில் நடக்கிறது. சதியன் சந்து என்று அறியப்படும் சந்துவின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி அவன் தரப்பு நியாயங்கள் எம்.டி.வாசுதேவன் நாயர் மிக அழகாகச் சித்தரித்திருக்கிறார். வரலாற்றில் ஒருவன் துரோகியாகச் சித்தரிக்கப்படுவதற்கு இப்படியும் காரணமிருக்கலாம் என்பது சுவாரஸ்யமான கோணம்..

இருட்டறையில் கையில் விளக்குடன் இருவர் நடந்து செல்லும் காட்சியில் தான் படம் துவங்குகிறது. அவர்கள் மூடிக்கிடந்த நிலவறையின் கதவைத் திறந்து உள்ளே இருந்த பழைய ஆயுதங்களையும் ஏடுகளையும் எடுக்கிறார்கள். இந்தப்படம் என்ன செய்கிறதோ அது தான் படத்தின் துவக்க காட்சியின் சாரமாக உள்ளது.

ஒரு பக்கம் ஆயுதங்களை மீட்டு களரியின் கடந்தகாலப் பெருமைமிக்க நாயகர்களை. அவர்களின் வீரத்தைப் படம் வெளிப்படுத்துகிறது. இன்னொரு பக்கம் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

களரி பற்றிய காட்சிகள் படம் முழுவதுமே துல்லியமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படத்தின் கலை இயக்குநர் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி. சிறந்த கலையமைப்பு மற்றும் உடைக்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றார்.

ஒரு முறை அவருடன் டெல்லியில் சில நாட்கள் இருந்தேன். நானும் அவரும் டெல்லியிலுள்ள பல்வேறு ஆர்ட்கேலரிகளுக்குச் சென்றோம். ஓவியர்களைச் சந்தித்து உரையாடினோம். அந்த நாட்களில் வடக்கன் வீரகதாவை எப்படிக் குறைந்த செலவில் கலையமைப்புச் செய்தார் என்பதைக் கிருஷ்ணமூர்த்தி விரிவாகக் கூறினார்.

இந்திய சினிமாவில் கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தியின் பங்களிப்பு தனித்துவமானது. கதை நடக்கும் கால கட்டத்திற்கு ஏற்ற வீடுகள். மற்றும் களரி மையத்தை உருவாக்கியதில் அவர் சிறப்பாகப் பங்களித்துள்ளார். அது போலவே அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த உடையமைப்பு. விளக்குகள் ஆயுதங்கள் என்று அவர் எடுத்துள்ள சிரத்தையும் துல்லியமும் வியப்பளிக்கிறது.

இந்தப் படம் மம்முட்டியின் திரை வரலாற்றில் மிகவும் விசேசமானது. அவர் ஏற்று நடித்த சதியன் சந்து எதிர்மறையாக மக்கள் மனதில் பதிந்து போனவன். ஆனால் மம்முட்டி தனது நடிப்பால் சந்துவின் மீது எந்தத் தவறுமில்லை. படம் முழுவதும் சதி செய்பவர்கள் பெண்களே என்று புரியவைக்கிறார்.

குறிப்பாக உண்ணியாச்சா கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மாதவி சிறப்பாக நடித்திருக்கிறார்.

வரலாற்றில் உண்ணியாச்சா ஒரு வீரமங்கை. அவள் சிறுவயதிலிருந்த தந்தையிடம் களரிப் பயிற்சி எடுத்தவள். அவளைத்தான் சந்து திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. ஆனால் ஜாதகத் தோஷம் என்று சொல்லி திருமணத்தை நிறுத்திவிடுகிறார்கள். உண்மையில் இந்தக் கதை சந்துவிற்கும் உண்ணியாச்சாவிற்குமான உறவின் சிக்கலே. அவள் தான் சதியின் முக்கியக் காரணமாக இருக்கிறாள். அவளது பிள்ளை தான் முடிவில் சந்துவைக் கொல்கிறான்

அங்கம் எனப்படும் துவந்த யுத்தம் களரி மரபில் முக்கியமானது. இதில் நேருக்கு நேராகச் சண்டையிட்டுக் கொள்வார்கள். இதில் ஒருவர் தான் உயிரோடு மிஞ்சுவார். வடக்கன் வீரகதாவில் அங்கம் இருவரின் சொந்தப்பகைக்காக நடத்தப்படுகிறது. அங்கம் செய்பவருக்குப் பொற்காசுகள் தரப்படுகின்றன.

சந்து நிகரற்ற வீரனாக இருந்த போதும் அன்பிற்காக ஏங்குகிறான். ஒரு காட்சியில் அவன் சிறுவயதில் உண்ணியாச்சாவிற்கு அணிவித்த நகை இருக்கிறதா எனத் தொட்டுப்பார்க்கிறான். அங்கத்தில் ஆரோமலுக்குத் துணையாக அவன் சண்டையிட்டால் உண்ணியாச்சா கிடைப்பாள் என்று நம்புகிறான்.

வடக்கன் வீரகதாவின் திரைக்கதைக்காக எம்.டி.வாசுதேவன் நாயர் தேசிய விருது பெற்றார்.

சந்துவினை சவாலுக்கு அழைக்கும் இளைஞர்கள் முன்பாக அவன் தனது கடந்தகாலத்தை விவரிக்கிறான். பிளாஷ்பேக் மூலமே கதை விரிகிறது. ஏன் சந்து தன் தரப்பு நியாயங்களைச் சொல்ல விரும்புகிறான் என்பதே திரைக்கதையின் மையம்.

அரோமலுக்கும் சந்துவிற்குமான பகையும் போட்டியும் மகாபாரதத்தை நினைவுபடுத்துகிறது. சந்து கர்ணன் போலவே தோன்றுகிறான். வடக்கன் வீரகதாவினுள் மகாபாரதம் மறைந்திருப்பதாகவே உணர முடிகிறது.

அரிங்கோடர் சந்துவை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார். அதிலும் சந்து ஆரோமலுக்குத் துணையாக அங்கத்தில் கலந்து கொள்ளப்போவதாகச் சொல்லும் போது அதை அவர் ஏற்றுக் கொண்டு பேசும் காட்சி முக்கியமானது.

அரிங்கோடரின் சகோதரியும் சதி செய்கிறாள். அதுவும் சந்துவின் மீதான காதலே காரணமாக இருக்கிறது.

தனது மரணத்தருவாயில் ஆரோமல் சந்துவை சதிகாரன் என்கிறான். அந்தப் பெயர் வரலாற்றில் நிலைபெற்றுவிட்டது.

ஏன் எம்.டி. வாசுதேவன் நாயர் இது போன்ற வரலாற்றில் எதிர்மறையாகக் கருதப்பட்ட ஒருவரைப் பற்றிய கதையைத் தனது திரைப்படத்திற்குத் தேர்வு செய்தார். காரணம் கர்ணனின் சாயல் கொண்டவனாகச் சந்து காணப்படுகிறான். அத்துடன் நிச்சயம் இந்தப்படத்தின் உருவாக்கத்திற்கும் அகிரா குரசேவாவின் செவன் சாமுராயிற்கும் தொடர்பிருக்கக் கூடும். குரசேவோ சாமுராய்களின் வாழ்க்கையை முற்றிலும் புதிய கோணத்தில் சித்தரித்திருந்தார். அதற்கு நிகரான களரிப் பயிற்சியை முதன்மையாக்கி இந்தக் கதையை எம்.டி. தேர்வு செய்திருக்கக் கூடும்

ஒரு வடக்கன் வீரகதாவின் திரைக்கதை தமிழில் வெளியாகியிருக்கிறது. ஆனால் திரைக்கதையை மட்டும் நாம் வாசித்துப் பார்த்தால் படம் தரும் உணர்வினை புரிந்து கொள்ள முடியாது. இசையும் ஒளிப்பதிவும் நடிப்பும் சண்டையும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும் ஒன்று சேர்ந்தே இந்தப் படத்தை இன்றும் புதியதாக வைத்திருக்கிறது. இதற்கு இயக்குநர் ஹரிஹரன் மிகுந்த பாராட்டிற்குரியவர்.

**

0Shares
0