வண்ணதாசனின் ஓவியங்கள்

வண்ணதாசன் சிறந்த கவிஞர் சிறுகதையாசிரியர் மட்டுமில்லை. தேர்ந்த ஒவியரும் கூட.

கதைகளிலும் கவிதைகளிலும் அவர் விவரிக்கும் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் துல்லியமும் நிகழ்விடத்தின் நிறங்களும் நுட்பங்களும் ஓவியனின் கண்களால் பார்த்து எழுதப்பட்ட சொற்சித்திரங்களே.

ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சென், மகாகவி தாகூர், விக்டர் ஹுயூகோ, ஃபெடெரிகோ கார்சியா லோர்கா ,ஹெர்மன் ஹெஸ்ஸே, சில்வியா பிளாத். குந்தர் கிராஸ் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சிறந்த ஓவியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் முழுநேரமாக ஓவியம் வரைவதை முன்னெடுக்கவில்லை. ஆனால் தனது குறிப்பேடுகளில் தான் கண்ட காட்சிகளை, தன்னைச் சுற்றிய உலகைக் கோட்டோவியமாக வரைந்திருக்கிறார்கள். தனிமையை, பிரிவைத் தைல வண்ண ஓவியங்களாக வரைந்திருக்கிறார்கள். அவை காட்சிக்கு வைக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

நான் அறிந்தவரைக் கவிஞர் தேவதச்சன் மிக அழகாகக் கோட்டோவியங்கள் வரையக்கூடியவர். கவிஞர் பிரமீள் அழகாக ஓவியம் வரையக்கூடியவர். கவிஞர் எஸ் வைத்தீஸ்வரன் முறையாக ஓவியம் பயின்றவர். கவிஞர் யூமா வாசுகி சிறந்த ஓவியர்.

வண்ணதாசன் சமீபத்தில் வரைந்த கோட்டோவியங்களை முகநூலில் பதிவிட்டு வருகிறார். அவரது தீவிர வாசகரான பாஸ்கரன் அவற்றைத் தொகுத்து எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அழுத்தமான கோடுகளில் துல்லியமாக உணர்ச்சியை வெளிக்காட்டும் முகங்கள். குறிப்பாகக் கண்களை அவர் வரைந்துள்ள விதம் அபாரமானது. மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தும் பெண் முகங்கள். வண்ணதாசன் தனித்துவமான முக அமைப்புக் கொண்டவர்களை வரைகிறார். பெரும்பாலும் நடுத்தர வயதைத் தாண்டியவர்கள் முதியவர்கள். அந்த முகங்களில் தான் வாழ்க்கையின் பிரகாசமும் துயரமும் ஒன்று போல வெளிப்படுகின்றன போலும்

ஆச்சியின் மூக்குத்தியினை, பெண்ணின் கூந்தல் மலர்களை, நெற்றிப்பொட்டினை, கழுத்து சங்கிலி, சேலை மடிப்புகளை எத்தனை அழகாக வரைந்திருக்கிறார்.

இந்த ஓவியங்களும் அவரது கவிதைகளும் வேறுவேறில்லை. ஓவியங்களை ஒரு சேரப்பார்க்கும் போது கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற வண்ணதாசனின் தலைப்பு தான் நினைவில் வந்தது.

புகைப்படங்கள் தராத நெருக்கத்தை இது போன்ற ஓவியங்கள் உருவாக்குகின்றன. இந்த ஓவியத்திலிருப்பவர் யார் என அறியாத போதும் அவர்கள் என் வீட்டைச் சேர்ந்தவர்கள். எனக்கு நெருக்கமானவர்கள் என்ற உணர்வே ஏற்படுகிறது.

இந்த ஓவியங்கள் மிகச்சிறப்பாக இருப்பதைப் பற்றி அவரிடம் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்தேன். இவற்றை பின்பு தனிநூலாகக் கொண்டு வர வேண்டும் என்று ஆசையிருப்பதாகச் சொன்னார்.

ஜப்பானில் ஜென் ஓவியங்கள் கையடக்கமான அழகான பதிப்பாக வெளியாகின்றன. அது போன்ற நேர்த்தியுடன் இந்த ஓவியங்களும் வெளியிடப்பட வேண்டும்.

எம். சுந்தரன் வரைந்த வண்ணதாசனின் ஓவியம் ஒன்றைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கோடுகளில் வண்ணதாசனின் கண்களும் முகபாவமும் வெகு நேர்த்தியாக வரையப்பட்டிருக்கும். அதில் வெளிப்படும் வண்ணதாசனின் மௌனம் வசீகரமானது.

அந்த ஓவியத்தோடு பேரன்பு தான் வண்ணதாசனின் கதையுலகத்தை இயக்கும் விசை. தெரிந்தவர் தெரியாதவர் என்று யார் மீது வேண்டுமானாலும் அது படரும். அது உண்மையான அன்பின் விதி. ஏற்கனவே மனதில் நிரம்பித் ததும்பிக் கொண்டிருக்கும் பிரியம் வழிந்து பாய ஒரு சிறு சம்பவம் போதும் என்ற குறிப்பை எழுதியிருப்பார்கள்.

இந்த ஓவியங்களும் அவரது பிரியத்தின் சாட்சியங்களே.

0Shares
0