எஸ்.ராமகிருஷ்ணனின் ‘மண்டியிடுங்கள் தந்தையே’ 248 பக்கங்கள் தான். புத்தாண்டு முதல் நாள் இரவு வாசிக்கத் துவங்கி, நேற்றிரவு முடித்தேன். வழக்கத்தை விட வேகம் குறைவாக அமைந்த வாசிப்பு. ஒரு குறிப்பிட்ட நாளில் வெறும் பதினாறு பக்கங்களே வாசித்திருக்கும் படி, அன்றாடத்தின் பாரம் என் மேல் சரிந்திருந்தது.
அன்றாடம் புது வருடம் பழைய வருடம் எல்லாம் பார்ப்பதில்லையே.ஆனால் கடந்த நான்கு நாட்களும் அதன் பக்கங்களின் வரிகளாகவே இருந்தேன். ஒரு சிறிய வெளிச்சமும் சிறிய துக்கமும் சதா என் மேல் அச்சடிக்கப் பட்டிருந்தது.
இதற்கு முன்னால் பெரும்படவம் ஸ்ரீதரனின் ‘ ஒரு சங்கீர்த்தனம் போல’ என்ற நாவலை சிற்பி பாலசுப்ரமணியம் ‘ ஒரு சங்கீதம் போல’ என்று மொழியாக்கியிருந்தார். பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் வாசித்தது இப்போதும் நினைவில் இருக்கிறது.
அது தாஸ்தாவெஸ்கி, அன்னாவின் கதை. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் டால்ஸ்டாய் , அக்ஸின்யா இருவரின் கதை. சோபியாவின் ஊடாகவும் இது அக்ஸின்யாவையே வரைகிறது. ஒரு வினோதப் புள்ளியில் அதன் ரேகைகள் கதிர் பிரிந்து அக்ஸின்யாவிடமிருந்து விலகி அது டால்ஸ்டாய் திமோஃபியின் மேல் குவிமையம் கொண்டு விடுகிறது. எந்த ஒளி குவிகிறதோ அது எப்போதும் தீப் பற்றுகிறதாகவும் வைரம் போல் அறுக்கிறதாகவும் தானே மாறிவிடுகிறது.
அக்ஸின்யாவின் புதை மேட்டில் மஞ்சள் மலர்களை வைக்கிற டால்ஸ்டாய் ஆகவும், அதில் ஒன்றை எடுத்து நெஞ்சோடு அணைத்தபடி பண்ணையை நோக்கி நடக்கும் திமோஃபி ஆகவும் நான் இருக்கிறேன்.
எனக்கும் இப்போது ஒரு சோபியா இருக்கிறாள். ஒரு அக்ஸின்யா இருக்கிறாள். எவர் எவர் இருப்பதும் தவிர்க்க முடியாததாகவே இந்த வாழ்விருக்கிறது.
சிலசமயம் நிமிர்ந்து நிற்கும்படியும், வேறு சில சமயங்களில் மண்டியிடும்படியாகவும்.