சீனாவின் புகழ்பெற்ற மூன்று கவிஞர்களான வாங் வெய், லி பெய், மற்றும் காவ் ஷி வாழ்வை ஒரே திரைப்படத்தில் காண முடிகிறது. 2023ல் வெளியான Chang An என்ற அனிமேஷன் திரைப்படம் சீனக் கலை மற்றும் கலாச்சாரத்தின் பொற்காலமான டாங் அரசமரபைக் கொண்டாடுகிறது. இரண்டே முக்கால் மணி நேரத் திரைப்படத்திற்குள் ஒரு நூற்றாண்டின் வாழ்வைக் காண முடிகிறது.

எட்டாம் நூற்றாண்டு சீனாவின் துல்லியமான சித்தரிப்பு. அழகிய நிலக்காட்சிகள். விழாக்கள் மற்றும் போட்டிகள். யுத்தம் நடக்கும் விதம். பழைய அரண்மனைகள். நடனப்பெண்கள், அரசியல்மோதல்கள் எனப் படம் டாங் வம்சத்தின் முக்கிய நிகழ்வுகளைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.
போர்களத்தில் எதிரியின் தாக்குதலுக்கு உள்ளாகி பின்வாங்கும் தளபதி காவ் ஷியின் பார்வையில் படம் விரிவடைகிறது.
காவ் ஷி டாங் வம்சத்தில் ஒரு முன்னணி தளபதியாகவும் கவிஞராகவும் இருந்தவர். போர்களத்தில் தோல்வியுற்று தனது வாழ்வை முடித்துக் கொள்ள முயலும் காவ்வைத் தேடி வரும் அரசப் பிரதிநிதி கவிஞர் லி பெய் பற்றி விசாரிக்கிறார்.

தனது நண்பன் லிபெய் பற்றிய கடந்த கால நினைவுகளைக் காவ் ஷி விவரிக்கத் துவங்குகிறார். அவர்களின் நட்பு துவங்கிய விதம். அரசாங்க பணியில் சேருவதற்காக மேற்கொண்ட முயற்சிகள். தனது வீரத்தை பயன்படுத்திப் படைப்பிரிவில் சேருவதற்காக முயலும் காவ் ஷியின் போராட்டம், போர்களத்தில் வெளிப்படும் காவ் ஷியின் வீரம் எனப் படம் இரண்டு நண்பர்களின் வாழ்க்கையை விரிவாகப் பேசுகிறது.
வணிகரின் மகன் என்பதால் லிபெய்யால் அரசாங்க பணியில் சேர இயலவில்லை. அன்றைய சீனாவில் செல்வம் படைத்த வணிகர் என்றாலும் சமூகத்தின் இரண்டாம் தட்டில் இருப்பவராகவே கருதப்பட்டார்கள். ஆகவே அரச பரம்பரையினருக்கு கிடைக்கும் மரியாதை கிடைக்காது. அதிகாரத்தில் இருக்கும் ஒருவரின் பரிந்துரையைப் பெறாமல் அரசாங்க வேலை கிடைக்காது. இந்த இரண்டும் இல்லாத லி பெய் அரண்மனை காவலர்களால் துரத்தியடிக்கபடுகிறார்.

லி பெய்யும் காவ் ஷியும் ஒன்றாகப் பயணம் செய்கிறார்கள். குடிக்கிறார்கள். கவிதை பாடுகிறார்கள். புகழ்பெற்ற சீனக்கவிதைகள் காட்சிகளாக மாறும் அற்புதத்தைத் திரையில் காணுகிறோம்.
ஹாலிவுட் அனிமேஷன் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது சீன அனிமேஷன். இதில் ஒவியத்திலிருப்பது போன்று வண்ணங்கள் மற்றும் சட்டகங்களை உருவாக்குகிறார்கள். சீன நிலக்காட்சி ஒவியங்கள் உயிர் பெறுவது போன்ற காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. சிறந்த இசை படத்திற்குப் பெரிதும் துணை செய்கிறது

சீனாவில் இரவு நேரத்தில் மது அருந்தும் கவிஞர்கள் மகிழ்ச்சியின் ஒரு தருணத்தைப் படம்பிடிக்க அங்கேயே ஒரு கவிதை இயற்றுவார்கள். அதைப் பரிசாக அங்கே விட்டுவிடுவார்கள். அப்படிக் கவிதைகளாகத் தொங்கும் மதுவிடுதி ஒன்று படத்தில் இடம்பெறுகிறது. மதுவிடுதியில் நிரந்தரமாக உங்கள் கவிதை இடம் பெற வேண்டும் என்றால் உயர்குடி பிறந்தவராக இருக்க வேண்டும். மற்ற கவிஞர்களுக்கு அந்த மரியாதை கிடைக்காது. அப்படி ஒரு மதுவிடுதியில் லிபெய்யின் புகழ்பெற்ற கவிதை பாடப்படுகிறது. அதனை மதுவிடுதி ஏற்கவில்லை. ஆனால் மக்கள் மனதில் அந்தக் கவிதை நிரந்தரமாகி விடுகிறது.
வாங் வெய் சிறந்த கவிஞர் மட்டுமின்றிச் சிறந்த இசைக்கலைஞரும் ஆவார். அரச குடும்பத்தினருக்காக அவர் இசை நிகழ்ச்சி நடத்தும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. அங்கே அவருக்குக் கிடைக்கும் வரவேற்பு. மற்றும் பாராட்டு அன்று அவர் பெற்றிருந்த புகழைக் காட்டுகிறது.

தொடர்ந்து போரில் ஈடுபடும் காவ் ஷி தான் ஒராண்டாகக் கவிதை எதையும் எழுதவில்லை என்று கவலைப்படுகிறார். திருமணத்தின் வழியாகத் தனக்கு உயர்குடி அந்தஸ்து கிடைக்க்கூடும் என்பதால் அரச பரம்பரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை லிபெய் திருமணம் செய்து கொள்ள முயலுகிறார். அதைக் காவ் ஷி ஏற்கவில்லை. திருமணத்தின் பின்பு லி பெய் அவமானங்களைச் சந்திக்கிறார். அந்தக் குடும்பம் அவரை வெளியேற்றுகிறது. அரண்மனையிலிருந்து கவிதை பாட அழைப்பு கிடைத்தும் அவரது சுதந்திரமனப்பான்மை காரணமாகத் துரத்தப்படுகிறார். வாழ்வில் பொருளாதார ரீதியாக அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவர் ஒரு போதும் கவிதையை விற்பனைப் பொருளாகக் கருதவில்லை. முடிவில் ஒரு தாவோயிஸ்ட் ஞானியாக மாறுகிறார்.
லிபெய்யின் வாரிசாகக் கருதப்படும் கவிஞர் டு ஃபூ இதில் சிறுவனாக வருகிறார். அவர் காவ் ஷியோடு கவிதை பேசுகிறார்.
லி பெய் உடனான காவ் ஷியின் உறவு இணைந்தும் முரண்பட்டும் செல்கிறது. தலைமைத்துவத்திற்கான காவோவின் நேர்மையான அணுகுமுறை வேறு. லியின் கவலையற்ற, கலகத்தனமான இயல்பு வேறு. எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் அவர்கள் ஆழமான நட்பினைக் கொண்டிருக்கிறார்கள்.
இறுதிப் போரின் முடிவில் வெற்றியை அடைந்த, காவோ ஷி தனது ஈட்டியை கீழே போட்டுவிட்டு தனது கவிதைகளுடன் தலைநகருக்குத் திரும்புகிறார். அங்கே தனது கவிதைகளை அவர் வாசிப்பதை ஒரு சிறுவன் கேட்டுக் கொண்டிருக்கிறான். கவிதையின் இடம் என்றும் நிரந்தரமானது என்பதைப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது.

லிபெய்யின் கவிதைகளை நீங்கள் வாசித்திருந்தால் அந்தக் கவிதைகள் எந்தச் சூழலில் எப்படி எழுதப்பட்டன என்பதை இந்தப் படத்தின் வழியே அறிந்து கொள்ள முடியும். ஒரு வேளை அவரது கவிதைகள் உங்களுக்கு அறிமுகமாகவில்லை என்றாலும் படத்தின் வழியே அவரது கவிதைகளையும் கவிதை எழுதும் தருணங்களையும் அறிந்து கொள்வீர்கள்.
அனிமேஷன் திரைப்படம் என்ற அளவில் இப்படம் கவிஞர்களின் வாழ்க்கையைக் குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே காட்சிப்படுத்துகிறது. அதுவும் போர்களச் சூழலுக்கு நடுவே கதை நடக்கிறது என்பதால் லி பெய்யின் வாழ்வு படத்தில் மிகவும் சுருக்கமாகச் சித்தரிக்கபட்டுள்ளது.
லி பெய்யின் வரலாற்றை The Banished Immortal: A Life of Li Bai எனச் சீன எழுத்தாளர் Ha Jin தனி நூலாக எழுதியிருக்கிறார். அதில் விரிவான தகவல்கள், உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
சீனாவில் இந்தப் படத்தைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் திரையிடுகிறார்கள். தங்கள் பாடத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கியக் கவிஞர்களின் வாழ்க்கையை மாணவர்கள் அனிமேஷன் படமாகப் பார்த்து ரசிக்கிறார்கள். தங்கள் வரலாற்றையும் இலக்கியத்தையும் சீனத் திரையுலகம் எளிதாக அடுத்தத் தலைமுறையிடம் கொண்டு சேர்க்கிறது.
மிக அழகான இந்த அனிமேஷன் திரைப்படத்தை LOVE LETTER TO GOLDEN AGE OF POETRY என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அது உண்மையே.