வராத ரயில்

புதிய சிறுகதை

அந்த ரயில் நிலையத்திற்கு மதுரை பாசஞ்சர்  பத்தரை மணிக்கு வந்து நிற்பது வழக்கம். சின்னஞ்சிறிய ரயில் நிலையமது. ஸ்டேஷன் மாஸ்டர் அறை புறாக்கூண்டு போல இருக்கும். அருகில் சிறிய ஸ்டோர் ரூம். அதையொட்டி கல்லால் ஆன இரண்டு பெஞ்சுகள். மூன்று தூங்குமூஞ்சி மரங்கள். ஒரு தண்ணீர்தொட்டி. அதில் எப்போதும் குடிதண்ணீர் இருக்காது. சிவப்பு ஒடு வேய்ந்த கட்டிடமது.

சிவமணியை அழைத்துக் கொண்டு கிழவி அந்த ரயில் நிலையத்திற்கு வந்திருந்தாள். அவளை விட்டால் சிவமணிக்கு வேறு யார் இருக்கிறார்கள். சிவமணி அவளது உறவில்லை.  ஆனால் அவள் தான் வளர்த்து வந்தாள்.

சிவமணியின் அம்மா உயிரோடு இருந்த நாட்களில் கிழவிக்கு நிறைய நாட்கள் சோறு போட்டிருக்கிறாள். ஒரு முறை கோவில் கொடைக்கு சேலை ஒன்று வாங்கித் தந்திருக்கிறாள். நாலைந்து முறை கைச்செலவுக்கும் பணம் தந்திருக்கிறாள். அந்த நன்றிக்கு தானோ என்னவோ கிழவி சிவமணியை தானே வளர்ப்பதென முடிவு செய்து கொண்டாள்

கிழவி நினைவு தெரிந்த நாள்முதலே வீட்டுவேலைகள் தான் பார்த்து வருகிறாள். எவ்வளவு குடம் தண்ணீர் தூக்கியிருப்பாள். எவ்வளவு மாவு திரித்திருப்பாள் என கணக்கேயில்லை. அவளது கையே துடைப்பம் போலாகியிருந்தது.

சிவமணிக்கு மூன்று வயதான போது அவனது அம்மா இறந்து போனாள். சிவமணி பிறக்கும் போதே மூளை வளர்ச்சி இல்லாமல் தான் பிறந்தான். நான்கு வயது வரை அவனால் எழுந்து நிற்கமுடியவில்லை. பேச்சு வரவில்லை. வீட்டுபடிக்கட்டில் தான் எப்போதும் உட்கார்ந்திருப்பான். சிவமணியின் அப்பா அவனைக் கவனிக்கவேயில்லை.

கிழவி தான் அவன் பசியறிந்து உணவு கொடுப்பாள். குளிக்க வைப்பாள். கிழவிக்கும் ஒரு துணை வேண்டும் தானே.

சிவமணியின் அப்பா ஒரு நாள் சொல்லிக் கொள்ளாமல் கேரளா கிளம்பிப் போய்விட்டார். அவர் போனதே சிவமணிக்குத் தெரியாது. யாரோ ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு போய்விட்டார் என்றார்கள். கிழவி அன்று முழுவதும் சிவமணியின் அப்பா கெட்டவார்த்தையால் திட்டினாள்

“பெத்த பிள்ளையை விட்டுட்டு போன நீ புழுத்துபோடுவே. கைகால் விழங்காம போயிரும்“. எனப் புலம்பினாள். உண்மையில் அதைக் கேட்டு சிவமணி சிரித்தபடியே இருந்தான்.

சிவமணி எப்போதும் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பான். இரவில் கூட அவனுக்குத் தூக்கம் வராது. வானில் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்தபடியே இருப்பான். அவனுக்குத் தெரிந்தவை இரண்டே சொற்கள் தான். ஒன்று சோறு, மற்றொன்று எருமை.

வயிறு பசிக்க ஆரம்பித்துவிட்டால் வாய் ஓயாமல் சோறு சோறு என்று சொல்லிக் கொண்டேயிருப்பான். கிழவி சாப்பாடு கொண்டுவருவதற்குள் ஆயிரம் முறை சொல்லியிருப்பான். பசி அடங்கிவிட்டாலே எதிர் வீட்டில் கட்டப்பட்டிருக்கும் எருமையைப் பார்த்து ரசித்துக் கொண்டேயிருப்பான்..

எருமையை யாராவது அவ்வளவு ரசிப்பார்களா என்ன.

சிவமணி ரசிப்பான். அவனுக்கு எருமை உலகின் விசித்திரமான விலங்காக இருந்தது. தனக்கு ஏன் அதைப் போலக் கொம்புகள் இல்லை என்று யோசித்துக் கொண்டிருப்பான். எருமை வாயை அசைப்பதை போலத் தானும் அசைத்துக் கொண்டேயிருப்பான். எருமை எருமை என்று அதைக் கூப்பிட்டபடியே இருப்பான். கிழவி திட்டுவாள். பேசாமல் உனக்கு ஒரு எருமையைக் கட்டிவச்சிடுறேன். அது கூடவே வாழ்ந்து கோ என்பாள். சிவமணி புரிந்தவன் போலச் சிரிப்பான். இப்போது சிவமணினுக்குப் பதினைந்து வயது நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் ஐந்து வயது சிறுவன் போலவே இருந்தான். கிழவியைத் தவிர வேறு யார் எதைக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டான்

சில நாட்கள் கிழவி தான் இறந்து போய்விட்டாள் அவனை யார் கவனித்துக் கொள்வார்கள் என்று நினைத்து கவலை கொள்ளுவாள். சில நேரம் அவனை எங்காவது கொண்டு போய்விட்டுவிடலாமா என்று கூட யோசிப்பாள். ஆனால் அவள் மனது ஏன் உனக்கு ஈனப்பத்தி என்று கேட்கும்.

சிவமணியைப் போன்றவர்களை உலகம் வாழ விடாதே. கையும் காலும் திடமாக உள்ளவர்களையே உலகம் பாடாய்ப் படுத்துகிறது. இதில் சிவமணியை யார் கவனித்துக் கொள்வார்கள். யார் வேளை தவறாமல் உணவு தருவார்கள். கிழவி கரையாளர் வீட்டில் இப்போதும் வேலை செய்து வந்தாள் ஆகவே அவளால் சாப்பாடு போட முடிந்தது. அவள் முடங்கிவிட்டால் யார் வேளை வேளைக்குச் சிவமணிக்கு சோறு போட்டுக் காப்பாற்றுவார்கள்

இந்தக் கவலை கிழவிக்கு நெடுநாட்களாக இருந்தது. சில நாள் கனவில் அப்படியான காட்சிகள் கூட வந்து போயிருக்கிறது. அன்றைக்கெல்லாம் அவள் மனநிம்மதியற்று அவனைக் கட்டிக் கொண்டு அழுவாள்.

ஒருநாள் அவர்கள் ஊருக்குத் தடுப்பூசி போட வந்திருந்த ஆள் சொன்னான்

“சிவமணியைப் போன்றவர்களைப் பராமரிக்க மதுரையில் ஒரு ஹோம் இருக்கிறது. அங்கே கொண்டு போய் ஒப்படைத்துவிடு. அவர்கள் வைத்துக் காப்பாற்றுவார்கள். காசு பணம் எதுவும் தரத்தேவையில்லை“

“சோறு போடுவார்களா“ எனக்கேட்டாள் கிழவி

“மூணு வேளை வயிறுமுட்ட சோறு போடுவார்கள். வைத்தியம் செய்வார்கள் ஆனா அந்த ஹோமை விட்டு வெளிய போக விடமாட்டாங்க. ஆனா அநாதையா இருக்கணும்.“

சிவமணினுக்கு அப்பா இருக்கிறார். ஆனால் அவர் தான் கைவிட்டுவிட்டாரே , கிழவி அவன் அநாதை தான் என்று சொன்னாள்

“நாகமலை கிட்ட அந்த ஹோம் இருக்கு. கொண்டுபோய்ச் சேர்த்துட்டு வந்துரு “என்றான் தடுப்பூசி போடுகிறவன்

“அங்க சிவமணியை அடிப்பாங்களா“ எனக்கேட்டாள் கிழவி

“முரண்டுபிடிச்சா அடிக்க அடிக்கதான் செய்வாங்க. இவனை மாதிரி பசங்களுக்கு வலி தெரியாது.. ஒரு நாள் நான் அங்கே போனப்போ ஒரு பையனை முதுகு தோல் உரியுற வரைக்கும் அடிச்சாங்க. அவன் எந்நேரமும் முண்டகட்டையா திரிவானாம். அதுக்குத் தான் அந்த அடி“

`பாவம். அவனுக்குத் தன்னுசார் இருக்காதில்லே“ என்றாள் கிழவி

“அதுக்காக இப்படிக் குஞ்சாமணியை ஆட்டிகிட்டு இருந்தா பாத்துகிட்டு இருப்பாங்களா“.

“சிவமணியை அடிச்சா. அவன் ரொம்பச் சப்தம் போடுவான். அடக்க முடியாது“

“அதை எல்லாம் அவங்களே பாத்துகிடுவாங்க. நீ ஏன் கவலைப்படுறே“

“அந்த பிள்ளைக்கு என்ன விட்டா யாரு இருக்கா“

“ஊரான் பிள்ளையை எத்தனை நாளுக்கு உன்னாலே வச்சி பாக்க முடியும்“

“அப்படி சொல்லாதே. சிவமணி என் பேரன் தான்.“

“இந்த மாதிரி பையனுக்கு எல்லாம் ரெகுலரா வைத்தியம் பாக்கணும். இல்லே ரொம்ப மோசமாகி போயிடுவாங்க. கைகால் கூட வராமல் போயிடும்“.

“சிவமணி அப்படி ஒண்ணும் ஆகமாட்டான்“. என்றாள் கிழவி

“நீ யோசிக்காமல் காப்பகத்தில் கொண்டு போய் விட்ரு. நீ செத்துட்டா. ஊர்க்காரர்கள் இவனைப் பாடப்படுத்தி எடுத்துருவாங்க. அப்போ உதவிக்கு யாரும் இருக்கமாட்டாங்க பாத்துக்கோ“

“நாகமலையில் எங்க இருக்கு“ எனக்கேட்டாள் கிழவி

“அட்ரஸ் எழுதி தர்றேன்“ என ஒரு துண்டு காகிதத்தில் எழுதிக் கொடுத்தான் அந்த ஆள்.

கிழவி அதை வாங்கி வைத்துக் கொண்டாள். ஆனால் சிவமணியை அங்கே சேர்ப்பதில் அவளுக்குத் தயக்கமேயிருந்தது.

ஆனால் அதை விட்டால் வேறு வழியில்லை என்றும் கிழவிக்குத் தோன்றியது தன் காலம் முடிவதற்குள் அதைச் செய்து விட வேண்டும் என்று முடிவுசெய்து கொண்டாள். சிவமணிக்குத் தன்னைக் கிழவி இப்படி ஒரு காப்பகத்தில் கொண்டு போய்விடப்போகிறாள் என்று தெரியாது. அவன் எப்போதும் போலவே எருமை எருமை என்று கத்திக் கொண்டேயிருந்தான்

கிழவி சிவமணியை மதுரைக்கு அழைத்துப் போவதற்காகப் பணம் சேர்க்க ஆரம்பித்தாள். அவள் ஒருமுறை கூட மதுரைக்குப் போனதேயில்ல்லை.

கிழவி டவுனுக்குப் போவதை பற்றிப் பயம் ஒன்றுமில்லை. ஆனால் எங்கே காப்பகத்தில் சிவமணியைக் கொண்டு போய்விட்டு வந்தவுடன் அவன் கிழவியைப் பார்க்க வேண்டி அழுது கூப்பாடு போட்டால் என்ன செய்வது. அல்லது காப்பகத்தில் சிவமணினுக்குச் சாப்பாடு போடாமல் விட்டுவிட்டால் என்ன ஆவது. இப்படித் தான் கவலைகள் அவளுக்குள் முளைத்திருந்தன

இதைப்பற்றி யாருடனும் கலந்து பேசவும் அவளால் முடியவில்லை. இரவில் சிவமணி இருட்டில் உட்கார்ந்தபடியே எருமை எருமை என்று சொல்லிக் கொண்டேயிருப்பதைக் காணும் போது இந்த அப்பாவி பிள்ளையை ஏன் கொண்டு போய்க் காப்பகத்தில் விட வேண்டும் என்று ஆதங்கமாக இருக்கும். ஏன் இந்த உலகம் சிலரை இப்படிக் கைவிட்டுவிடுகிறது. யாரையும் சாராமல் ஒரு மரம் கூட வாழ்ந்துவிட முடிகிறது ஆனால் மனிதனால் அப்படி வாழ முடியாது.

யோசித்து யோசித்துக் களைந்துப் போய் முடிவில் ஞாயிற்றுகிழமை காலை சிவமணியைக் கூட்டிக் கொண்டு காப்பகத்தில் விட்டுவிடுவது என்று முடிவு செய்து கொண்டாள். சிவமணி எப்போதும் ஒரே காக்கி நிற டிராயரையும் ஆரஞ்சு வண்ண முண்டா பனியனையும் தான் அணிந்திருப்பான். வாயில் எச்சில் ஒழுகிக் கொண்டேயிருக்கும். இந்தக் கோலத்தில் அவனை ரயிலில் கூட்டிக் கொண்டு போக முடியாது என்று போஸ்ட்மாஸ்டர் வீட்டில் கேட்டு பழைய டிராயர் சட்டை இரண்டினை வாங்கி வந்திருந்தாள். அந்தச் சட்டையும் டிராயரும் சிவமணினுக்கு மிகவும் பெரியதாக இருந்தது. அதனால் என்ன. உடலை மறைத்தால் போதும் தானே.

சிவமணி ஆசையாக அந்த உடைகளை அணிந்து கொண்டான். கிழவி அவனிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. வெயிலுக்கு முன்னால் நடந்து ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விட வேண்டும் என்று நினைத்தாள். சிவமணி மிக மெதுவாகவே நடப்பான். சில இடங்களில் அப்படியே தரையில் உட்கார்ந்து கொண்டுவிடுவான். ஆகவே அவனை அழைத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷன் போக ஒரு மணி நேரத்திற்கும் மேலானது.

சிவமணி ரயில்வே ஸ்டேஷனை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்

கிழவி அவனிடம் ரயிலில் போகிறோம் என்று சொன்னாள்

சிவமணினுக்கு ஒன்றும் புரியாத போதும் உதடு விரிய சிரித்தான். கிழவியும் அவனும் கல்லால் ஆன பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள்.

நீண்ட நேரம் அவர்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்தார்கள். துணிமூட்டைகளுடன் ஒரு ஆள் அவர்கள் அருகில் உட்கார்ந்திருந்தான். இரும்பு கம்பத்தைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தான் சிவமணி.

ரயில் எப்போது வரும் என்று தெரியவில்லை. டிக்கெட் எங்கே எடுக்க வேண்டும். சிவமணினுக்கு ரயிலில் டிக்கெட் உண்டா எதுவும் புரியவில்லை. அவள் டிக்கெட் கவுண்டர் மூடியிருப்பதைக் கண்டாள். ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் நிழல் போல அவர் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஒருமுறை அந்த அறை வாசலில் போய் நின்று ரயில் எப்போது வரும் எனக்கேட்டாள்

அவர் பதில்சொல்லவில்லை. ஆனால் பரபரப்பாக ஏதோ வேலையில் இருந்தாள்

கிழவி திரும்பவும் சிவமணி இருந்த பெஞ்சிற்கு வந்து உட்கார்ந்து கொண்டாள்

சிவமணி வெயிலைப் பார்த்தபடியே “எருமை எருமை“ என்று கத்திக் கொண்டிருந்தான்

இங்கே எங்கே எருமையிருக்கிறது. எல்லாப் பொருளும் அவனுக்கு எருமை தானா

சிவமணியும் அவளும் வெயிலுக்குள்ளாகவே காத்துகிடந்தார்கள். கிழவி ரயில்வே தண்டவாளத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தண்டவாளத்தின் மீது வெயில் நடந்து சென்று கொண்டிருந்தது.

நீண்ட காத்திருப்பின் பிறகு ஸ்டேஷன் மாஸ்டர்வெளியே வந்து சொன்னார்

“ மதுரை பாசஞ்சர்  இன்னைக்கு வராது“

கிழவிக்குப் புரியவில்லை. “ என்ன ஆச்சு“ என்று கேட்டாள்

“பாம்பன்ல தண்டவாளம் ரிப்பேராம். … போயிட்டு நாளைக்கு வா“ என்றார் ஸ்டேஷன் மாஸ்டர்

சிவமணியைக் காப்பகத்தில் கொண்டுபோய்விடுவது கடவுளுக்கே பிடிக்கவில்லையே. இல்லாவிட்டால் ஏன் இப்படி ரயிலை தடுத்து நிறுத்தியிருப்பார். கிழவி சிவமணியிடம் வீட்டுக்குப் போகலாம் என்று அழைத்தாள்

அவன் “எருமை எருமை“ என்று சொல்லியபடியே பறந்து கொண்டிருக்கும் தட்டான்பூச்சிகளைக் காட்டினான்

“நாம வீட்டுக்கு போவோம் “என்றாள் கிழவி. அவன் தலையாட்டினான்

தான் உயிரோடு இருக்கும் வரை சிவமணியைக் காப்பாற்றுவோம். செத்துப்போய்விட்டால் பின்பு அவன் விதி. நாம் எதற்காக அவனைக் கொண்டுபோய் எங்கோ ஒரு இடத்தில் விட வேண்டும். அங்கே அடிவாங்கி அழுது கொண்டு ஏன் வாழ வேண்டும். நடக்கப்போவதை பற்றிக் கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது. தன்ன போல வேறு ஒருவர் அவனைக் கவனிக்கக் கிடைக்காமலா போய்விடுவார்.

கிழவி ரயில் வராமல் போனது நல்லதற்கே என்று நினைத்துக் கொண்டாள்.

“வீட்டுக்குப் போவோம்“ என்றாள் கிழவி

“ரயில் வரலை“ என்று கேட்டான் சிவமணி

“ரயில் வேண்டாம்“ என்றாள் கிழவி

“ரயிலை யாராவது தின்னுட்டாங்களா“ எனக்கேட்டான் சிவமணி

“ஆமாம்“ என்று தலையாட்டினாள் கிழவி

அவர்கள் ஸ்டேஷனை விட்டு நடக்க ஆரம்பித்தார்கள். கிழவியால் வெயிலை தாங்க முடியவில்லை.

புழுதி பறக்கும் சாலையில் திடீரென ஒரு இடத்தில் சிவமணி உட்கார்ந்து கொண்டான். அவனை எழுந்திருக்கச் சொல்லி திட்டினாள் கிழவி. சிவமணி சோறு சோறு என்று சப்தமிட்டான்

“வீட்டுக்கு வா சோறு போடுறேன்“ என்றாள் கிழவி

அவன் கேட்டுக்கொள்ளவில்லை. அவனை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் கிழவி “எருமை எருமை எருமை“ என்று சொல்லத்துவங்கினாள்

கிழவி இப்படிச் சொல்வதைக் கேட்டு சிவமணி சிரித்தான். கிழவி கண்ணீர் வழிய அவன் சிரிப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்

“நீயும் உட்காரு“ என்று தரையைக் காட்டினான்

வெயிலில் கிழவியும் உட்கார்ந்து கொண்டாள். இருவரும் இரண்டு சிறுவர்களைப் போல மாறி மாறி எருமை சோறு எருமை சோறு என்று விளையாடிக் கொண்டிருந்தார்கள்

சைக்கிளில் போய்க் கொண்டிருந்த தபால்காரன் அவர்களைப் பார்த்துக் கேட்டான்

“மழையா பெஞ்சிகிட்டுஇருக்கு“

சிவமணி அவனைப் பார்த்துச் சொன்னான்

“எருமை. எருமை“.

கிழவி அதைக்கேட்டுச் சப்தமாகச் சிரித்தாள். பிறகு அவளும் சேர்ந்து “எருமை எருமை“ என்று சப்தமிட்டாள்.

••

0Shares
0