வலது கன்னம்

புதிய சிறுகதை. பிப்ரவரி 3. 2023

வீட்டுச் சாமான்கள் முழுவதையும் வேனில் ஏற்றியிருந்தார்கள். அந்த வேன் முதுகில் வீட்டை தூக்கிச் செல்லும் பெரியதொரு நத்தையைப் போலிருந்தது

ஒரு வீட்டிற்குள் இவ்வளவு பொருட்கள் எப்படியிருந்தன என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் கதிர். அவனுக்குப் பதிநான்கு வயது நடந்து கொண்டிருந்தது. ஆனால் பத்துவயது பையன் போல மெலிந்த தோற்றம் கொண்டிருந்தான். போலீஸ் கட்டிங் போல வெட்டப்பட்ட தலை. கழுத்து எலும்புகள் சற்றே துருத்திக் கொண்டிருந்தன.

முதன்முறையாக அவர்கள் வேனில் பயணம் செய்யப்போகிறார்கள் என்பது கதிருக்குக் கூடுதல் சந்தோஷமாக அளித்தது.

பொதுப்பணித்துறையில் என்ஜினியராக வேலை செய்த அவனது அப்பா எந்த ஊருக்கு டிரான்ஸ்பர் ஆனாலும் அவர் மட்டுமே சென்று தனியே வீடு எடுத்து தங்கியிருப்பதே வழக்கம். இதுவரை அப்படி ஆறேழு ஊர்களுக்கு மாறுதல் செய்திருக்கிறார்கள்.

இப்போது சாத்தூருக்கு டிரான்ஸ்பர் வந்திருந்தது. அந்தத் தகவல் வந்த நாளிலிருந்து அம்மா ஊர் மாறிப் போய்விடுவோம் என்று நச்சரிக்கத் துவங்கினாள்.

ஆரம்பத்தில் அப்பா ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் ரகுபதி மாமாவோடு ஏற்பட்ட நிலத்தகராறுக்கு பின்பு வெளியூருக்கு சென்று இருப்பது நல்லது என்ற முடிவிற்கு வந்திருந்தார்.

சாத்தூரில் வீடு தேடுவதில் இரண்டு வாரங்கள் கடந்து போயின. ஒவ்வொரு வாரம் அப்பா தென்னூர் வரும் போதும் அம்மா வீடு கிடைத்துவிட்டதா என்று ஆதங்கமாகக் கேட்பாள்.

“நல்ல வீடு அமையலை“ என்பார் அப்பா

ஆனால் ஒரு சனிக்கிழமை இரவு வீடு வந்த அப்பா சாத்தூரில் மாதா கோவிலை ஒட்டிய தெருவில் வீடு பிடித்துவிட்டதாகச் சொன்ன போது அவனால் நம்பவே முடியவில்லை.

நிஜமாகவே ஊர் மாறிப் போகப்போகிறோம்.

இதைக் கணேசனிடம் சொன்ன போது அவன் நம்பவேயில்லை. ஆனால் வாசு நம்பினான். அத்துடன் நாங்களும் சம்மர் லீவுக்குச் சாத்தூர் வர்றோம். உங்க வீட்லயே தங்கிகிடலாம்லே என்றான். அதைக் கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது.

சாத்தூர் எப்படியிருக்கும். அங்கே நீந்திக் குளிக்க ஏரி இருக்குமா. எத்தனை சினிமா தியேட்டர்கள் இருக்கும். அந்த ஊர் பள்ளிக்கூடம் மழைக்கு ஒழுகுமா. என்பதைப் பற்றியே அன்று அவர்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்..

அவர்கள் குடியிருந்த தென்னூர் கிராமத்தில் சினிமா தியேட்டர் கிடையாது. ஆனால் பெரிய ஏரி இருந்தது. அதன் கரையை ஒட்டி நிறைய மருத மரங்கள் இருந்தன. பேருந்து பிடிக்க வயல்வெளியின் ஊடாக நடந்து செல்ல வேண்டும். ஊரில் ஒரு சிவன் கோவில் இருந்தது. மாசி மாதம் நடைபெறும் திருவிழாவில் நாடகம் போடுவார்கள். கடைசி நாள் மட்டும் கோவில் முன்பு திரைகட்டி சினிமா காட்டுவார்கள்.

தென்னூரில் நூறுக்கும் குறைவான வீடுகளே இருந்தன. அதில் ஒரு வீதி முழுவதும் திண்ணை வைத்த பழங்கால வீடுகள். அவர்கள் வீட்டிலும் அப்படிப் பெரிய திண்ணை இருந்தது. எந்த வீட்டிலும் கழிப்பறைகள் கிடையாது. இப்போது தான் வீட்டின் பின்புறம் புதிதாகக் கட்டிக் கொண்டார்கள்.

அப்பா பார்த்து வைத்திருந்த புதுவீட்டை தானும் பார்க்க வேண்டும் என்பதற்காக அம்மா ஒரு திங்கள்கிழமை சாத்தூர் புறப்பட்டுச் சென்றாள். அன்றைக்குப் பள்ளி என்பதால் அவனும் ரமாவும் உடன் செல்ல முடியவில்லை. ஆனால் கதிருக்கு அவர்களுடன் போக வேண்டும் ஆசையாக இருந்தது..

சாத்தூர் போன அப்பாவும் அம்மாவும்அன்றிரவு திரும்பி வரவில்லை. ஜெயந்தியக்கா வீட்டிலே ரமாவும் அவனும் தூங்கினார்கள். காலையில் அவர்கள் பள்ளிக்குக் கிளம்பி போகும் வரை அம்மா திரும்பியிருக்கவில்லை. மாலை அவர்கள் பள்ளிவிட்டு வந்தபோது அம்மா சந்தோஷமான முகத்துடன் காணப்பட்டாள்.

“மூணு ரூம்.. நல்லா பெரிய ஹால் உள்ள வீடு. ஆனா வாடகை ஜாஸ்தி“ என்றாள்

“வசதியப் பாத்தா காசு கொடுக்கணும்லே“ என்றாள் ஜெயந்தியக்கா.

“ஊர்ல வெயில் அனலாக் கொதிக்குது. ஒரே புழுதி “ என்றாள் அம்மா.

“எப்போம்மா வீடு மாறப்போறோம்“ என்று கேட்டான் கதிர்

“உங்கப்பா தான் சொல்லணும்“ என்று சலித்துக் கொண்டாள் அம்மா. அந்த வாரம் விடுமுறைக்கு வந்த அப்பா உடனே வீட்டைக் காலி செய்து போய்விடலாம் என்றார்

இரண்டு நாட்களுக்குள் வீட்டைக்காலி செய்வதற்காகப் பரபரப்பாகச் செயல்பட்டார்கள். பால்காரனின் கணக்கை அன்றே முடித்துக் கொண்டாள் அம்மா. சீட்டுப் போடும் வீட்டில் போய்த் தகவல் சொல்லிவந்தாள். வீட்டுப் பொருட்களை அடைப்பதற்காக மரப்பெட்டி வாங்கிக் கொண்டு வந்தார் அப்பா. நாலைந்து அட்டைபெட்டிகளை தவசிமாமா வீட்டில் கேட்டு வாங்கி வந்தார்கள்.

உதவிக்குச் சொக்கனை வைத்துக் கொண்டு வீட்டுப் பொருட்களைப் பெட்டியில் அடைத்தார்கள்.

அம்மாவிற்குத் தெரியாமல் கட்டிலுக்கு அடியில் சுருட்டி ஒளித்து வைத்த இருபது மார்க் வாங்கிய மேத்ஸ் பரிட்சை பேப்பரை வெளியே எடுத்து போட்டான் சொக்கன்

நல்லவேளை அதை அப்படியே அள்ளிக் கொண்டு வெளியே ஒடினான் கதிர்

“என்னடா ஆச்சு“ என்று சப்தமாகக் கேட்டாள் அம்மா

“கரப்பான்பூச்சியா இருக்கு“ என்று சொல்லி சமாளித்தான் கதிர்.

அட்டைப்பெட்டி, மரப்பெட்டி. சாக்குபை எனப் பாத்திர பண்டங்களை நிரப்பியும் தீரவில்லை. ரமா பிறந்த போது வாங்கிய பால்புட்டி, கிரேப் வாட்டர் பாட்டிலைக் கூட அம்மா பத்திரமாக வைத்திருந்தாள். காலாவதியான மாத்திரைகள். தைல பாட்டில், ஊட்டசத்து மருந்து, சந்தன மாலை, பழைய டார்ச் லைட், காலியான விக்ஸ் டப்பா, கிழிந்த துணிகள் எல்லாம் அள்ளி வீட்டின் பின்புறம் கொண்டு போய்க் குவித்தான் சொக்கன்.

பொருட்கள் எதுவுமில்லாத வீடு சத்திரம் போல விநோதமாகத் தோற்றம் அளித்தது.

••

எப்போது வேன் வரும். எப்போது சாத்தூருக்குக் கிளம்புவோம் என்ற ஆசையோடு அன்றிரவு படுத்துக்கிடந்தான் கதிர்.

வேனில் போகும்போது கணேசன் வீட்டில் நிறுத்தி டாட்டா காட்ட முடியுமா என்று தெரியவில்லை. நண்பர்களைப் பிரிந்து போவதைப் பற்றி அவனுக்கு வருத்தமில்லை. சாத்தூரில் யார் புதிய பிரெண்டாக வரப்போகிறார்கள் என்பதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.

காலை ஆறு மணிக்கு வேன் வந்து நின்றபோது அதிலிருந்து இரண்டு பேர் இறங்கி வந்தார்கள். இருவரில் நடுத்தர வயதுள்ளவர் நெற்றியில் சந்தனம் குங்கும்ம் வைத்திருந்தார்.

அவர் அப்பாவிடம் “சாமானை மூட்டைகட்டி ஏத்திவிடுறதுக்கு ஆளை வரச்சொல்லியிருக்கேன். இப்போ வந்துருவாங்க“ என்றார்

காலியாக இருந்த வீட்டை அவரும் அப்பாவும் சுற்றிப் பார்த்தார்கள்.

“இது உங்க சொந்த வீடா“ என்று கேட்டார் சந்தனம் வைத்தவர்

“பூர்வீக வீடு.. தாத்தா காலத்துல கட்டினது.. “

“கவர்மெண்ட் வேலைன்னாலே இப்படிக் மூட்டை முடிச்சை கட்டிகிட்டு ஒட வேண்டிய தான்“

“மூணு வருஷத்துக்கு ஒரு ஊருக்குப் போயி தானே ஆகணும்“

“நம்ம ஊர் சௌகரியம் எந்த ஊர்லயும் கிடைக்காது. நம்ம ஊர் தண்ணி அப்படி.. “ என்றார் சந்தனம் வைத்தவர்

அப்பா தலையாட்டிக் கொண்டார்

இரண்டு பைக் அவர்கள் வீட்டை நோக்கி வந்து நின்றது. நான்கு பேர் இறங்கி வீட்டிற்குள் வந்தார்கள். அவர்களே பொருட்களை வேனில் ஏற்றினார்கள். பக்கத்துவீட்டுக் கிணற்றினை ஒட்டி சென்று கொண்டிருந்த பூனை நின்று அவர்கள் வீடு காலி செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தது .அந்தப் பூனை நிறைய முறை அவர்கள் வீட்டில் திருடி சாப்பிட்டிருக்கிறது. கதிர் அந்தப்பூனையை அடிக்கத் துரத்தியிருக்கிறான். இன்றைக்கு அந்த வெறுப்பில் தானே என்னவோ ஏளனமாகப் பார்த்தபடியே வாலை ஆட்டியபடி நின்றிருந்தது.

பிரம்பு நாற்காலியை கடைசியாக ஏற்ற வேண்டும் என்றும் அதில் தான் உட்கார்ந்து வரப்போவதாகச் சொன்னார் அப்பா

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீங்க முன்னாடி வந்துருங்க “என்றாள் அம்மா

“வண்டி வேகத்துல ஏதாவது ரோட்டில விழுந்துட்டா தெரியாமப் போயிடும். நான் பாத்துகிடுறேன், நீயும் பிள்ளைகளும் முன்னாடி உட்கார்ந்து கோங்க“. என்றார் அப்பா

“சாத்தூர் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும்“ என்று கேட்டாள் அம்மா

“நாலு மணியாகிடும்கா“ என்றான் டிரைவர்.

“அப்போ வழியில நிறுத்தி சாப்பிட்டுகிடுவோம்“ என்றார் அப்பா

அம்மா சாமி படங்களை மட்டும் ஒரு மஞ்சள் பையில் போட்டு தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டாள். வேனில் பொருட்களை அடைத்து ஏற்றியிருந்தார்கள்.

அம்மா பக்கத்து வீட்டில் உள்ள ஜெயந்தியக்காவிடம் தபால் வந்தால் வாங்கி வைக்கும்படி சொல்வதற்காகச் சென்றாள். அப்பா ஒட்டடை அடிக்கும் குச்சி வேனை விட்டு நீட்டிக் கொண்டிருப்பதை உள்ளே திணிக்க முயன்று கொண்டிருந்தார்.

தேவையில்லாத பொருட்கள் என்று ஒதுக்கியதில் கதிரின் தலையணையும் குப்பை மேட்டில் கிடைந்தது. அதை எடுத்துக் கொள்ளலாமா என்று நினைத்தான். ஆனால் அம்மா திட்டுவாள் எனப் பயமாக இருந்தது

தலையணை கிழிந்து பஞ்சு துருத்திக் கொண்டிருந்தது. தலையணை உறையிலிருந்த நிலாவும் இரண்டு கிளிகளும் நிறம் மங்கிப்போயிருந்தன. அந்தத் தலையணையில் முகம் புதைத்து எத்தனையோ கனவு கண்டிருக்கிறான். காய்ச்சலின் போது அழுதிருக்கிறான். நள்ளிரவில் விழிப்பு வந்து காரணமில்லாத பயம் பற்றிக் கொள்ளும் போது அந்தக் கிளிகள் மீது முகத்தைப் புதைத்துக் கொண்டு தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டியிருக்கிறான்.

ஒருமுறை கல்பனா சித்தியும் அவளது பிள்ளைகளும் இரவில் வந்து சேர்ந்த போது சித்திக்காக அம்மா அவனது தலையணை தான் பிடுங்கிக் கொண்டாள். கதிர் தலையணை தனக்கு வேண்டும் என்று கேட்டுப் பிடிவாதம் செய்து அடிவாங்கினான். சித்தி அவனது அழுகையைக் கண்டும் தலையணையை விட்டுத் தரவில்லை

வேண்டாத பாய். தலையணை, வளைந்து போன கரண்டிகள். அலுமினிய மக்கு, சிவப்பு பிளாஸ்டிக் வாளி, முருகன் படம் போட்ட காலண்டர். ரப்பர் செருப்புகள். சுருங்கிப் போன ஸ்வெட்டர், எனச் சிறிய குவியல் குப்பைமேட்டில் இருந்தது.

கதிர் காலியாக இருந்த வீட்டிற்குள் ஒரு முறை நடந்தான். குளியலறைக் கதவை தள்ளி குழாய் மூடியிருக்கிறதா என்று பார்த்தான். திறந்துவிட்டால் என்ன. இனிமேல் நம் வீடா என்ன. யார் நம்மைத் திட்டப்போகிறார்கள் என்ற நினைப்போடு தண்ணீர் குழாயை திறந்துவிட்டான். ஆனால் தண்ணீர் வரவில்லை. தேய்ந்து போன சோப்புத் துண்டுகள் தரையில் கிடந்தன. அவற்றைக் காலால் எத்திவிட்டான்.

பிரம்பு நாற்காலியைக் கயிறு கொண்டு இறுக்கக் கட்டினார்கள். அப்பா அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்மா காலியாக இருந்த வீட்டைப் பூட்டி சாவியை ஜெயந்தியக்காவிடம் கொடுத்துவிட்டு வடிவேல் வந்து வாங்கிடுவான் என்றாள்.

வேனில் ஏறிக் கொண்டபோது தங்கள் வீட்டை திரும்பிப் பார்த்தான் கதிர். மனதில் என்றோ ஒரு நாள் ரோட்டில் செத்துகிடந்த காகம் ஒன்றின் நினைவு வந்து போனது.

••

வேன் ஊரைக்கடந்து பிரதான சாலைக்கு ஏறும்வரை அம்மா ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அப்பா டிரான்சிஸ்டர் ரேடியோவில் ஏதோ பாடலை ஒலிக்கவிட்டபடியே பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

ஹைவேயில் அவர்கள் வேன் செல்லும் போது கதிருக்கு அளவில்லாத சந்தோஷமாக இருந்தது. தங்களைக் கடந்து செல்லும் பேருந்துகள். கார்கள் லாரிகளை எண்ணிக் கொண்டே வந்தான்.

அம்மாவின் முகத்தில் ஏதோ யோசனை. கலக்கம். தன் கவலைகளைக் காட்டிக் கொள்ளாமல் மறைத்திருந்தாள்

வேன் டிரைவருடன் ஏதோ பேசிக் கொண்டே வந்தாள் ரமா.

வழியில் ஒரு இடத்தில் நிறுத்தி அவர்கள் தேநீர் குடித்தார்கள். இனிப்பு வடையும் உளுந்தவடையும் சாப்பிட்டான் கதிர். எவ்வளவு பெரிய வடை என்று ஆச்சரியமாக இருந்தது. வெயிலேறிய சாலையில் வேன் செல்ல ஆரம்பித்தது. பின்னால் ஒடிக்கொண்டிருக்கும் புளியமரங்களையும் தூரத்து ஆடுகளையும் பார்த்தபடியே வந்தான் கதிர்.

பெயர் அறியாத ஊர்களைக் கடந்து சென்றது வேன்.

அவர்கள் சாத்தூருக்கு வந்து சேர்ந்த போது மணி ஐந்தாகியிருந்தது. சோர்ந்தும் களைத்தும் போயிருந்தார்கள். அவர்கள் வீடு இருந்த மாதா கோவில் தெருவின் முனையில் சினிமா போஸ்டர் ஒன்று பெரியதாகக் கண்ணில்பட்டது.

பக்கத்தில் ஏதாவது சினிமா தியேட்டர் தெரிகிறதா என்று எட்டிப்பார்த்தான். எதுவும் கண்ணில்படவில்லை

பச்சை நிற கேட் போட்ட வீட்டின் முன்பாக வேனை நிறுத்திவிட்டுச் சாமான்களை இறக்கி வைப்பதற்காக அப்பா ஆட்களைக் கூட்டிவரப் போனார்.

அவரது அலுவலக ப்யூன் காளிமுத்து மற்றும் மூன்று பேர் வந்திருந்தார்கள். அவர்கள் பண்டபாத்திரங்களை புது வீட்டில் இறக்கி வைக்க உதவி செய்தார்கள். பக்கத்திலுள்ள பரோட்டா கடையில் தேவையான இரவு உணவை வாங்கிக் கொள்வோம் என்றார் அப்பா,

அன்றிரவு அப்பாவோடு பரோட்டா கடையைக் காணுவதற்காகச் சென்றான். பெரிய கல்லில் எண்ணெயில் பரோட்டா பொறித்துக் கொண்டிருந்தார்கள். வட்டமலர் போல பார்க்கவே அழகாக இருந்தது. பரோட்டாவும் வழியலும் அம்மாவிற்கு இட்லியும் வாங்கி வந்தாரகள். அவ்வளவு ருசியான பரோட்டாவை அதற்கு முன்பு அவன் சாப்பிட்டதேயில்லை. அந்தப் பரோட்டாவிற்காகவே சாத்தூரில் குடியிருக்கலாம் என்று தோன்றியது.

சாத்தூர் பெரிய நகரில்லை. ஆனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு அது தான் பட்டணம். ஆகவே நிறைய சிறுவணிகர்கள் வந்து போனார்கள். பேருந்து நிலைய வாசலில் கூடை கூடையாக வெள்ளரிக்காயும் கொய்யாபழமும் விற்பனை செய்யப்பட்டன. ஒரு நாள் பனம்பழம் விற்கும் கிழவர் ஒருவரைக் கூடப் பார்த்தான்.

புதுவீட்டில் பொருட்களை எடுத்து அடுக்கி ஒழுங்கு செய்வதற்கு மூன்று நாட்கள் ஆனது. அப்படியும் நிறைய பிளாஸ்டிக் பொருட்களை வைக்க இடமில்லை. ப்யூன் காளிமுத்துவிற்கு அவற்றைத் தூக்கி கொடுத்தார் அப்பா.

கதிரை எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியிலும் ரமாவை எத்தல் ஹார்விபள்ளிக்கூடத்திலுமாகச் சேர்த்தார்கள். பள்ளிக்கூடத்தில் சேர்ந்த நாள் அன்றே விக்டருடன் நண்பனாகிவிட்டான்.

முதல் நாள் பள்ளிவிட்டு திரும்பும் போது விக்டர் அவனை அழைத்துக் கொண்டு போய் கிருஷ்ணா ஐஸ்பேக்டரியில் பால் ஐஸ் வாங்கிக் கொடுத்தான். அவன் இரண்டு ஐஸ் வாங்கிக் கொண்டான்

“டெய்லி ரெண்டு பால் ஐஸ் தின்பேன்“ என்று எச்சில் ஒழுகச் சொன்னான் விக்டர்

கதிருக்கு பால் ஐஸ் சுவை பிடித்திருந்தது. இதெல்லாம் தென்னூரில் கிடையாது என்றும் தோணியது.

அடுத்த பத்துநாட்களுக்குள் கதிருக்கு சாத்தூரை ரொம்பவும் பிடித்துப் போனது.. காண்டிராக்டர் காரில் விருதுநகருக்குப் போய்ப் புதுப்படம் பார்த்து வந்தார்கள். கோவில்பட்டி திலகராஜ் ஜவுளிக்கடையில் புதிய உடைகள் வாங்கினார்கள். அம்மாவிற்கு இரண்டு புதிய தோழிகள் உருவானார்கள். ரமாவிற்குத் தான் யாரையும் பிடிக்கவில்லை.

“இந்த ஊரு நல்லாவேயில்லை. பேசாம நம்ம ஊருக்கே போயிருவோம்மா “என்று சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

கதிர் சனி ஞாயிறு இரண்டு நாளும் தெருத்தெருவாகச் சுற்றியலைந்தான். ஊரிலிருந்த இரண்டு சினிமா தியேட்டரிலும் சினிமா பார்த்தான். காமிக்ஸ் புத்தகங்களை வாடகைக்கு விடுவதற்கென்றே ஒரு பெட்டிக்கடை இருந்த்து. அங்கே நாலணா கொடுத்தால் காமிக்ஸ் புக் படிக்கத் தருவார்கள். பெஞ்சிலே உட்கார்ந்து படிக்க வேண்டும். அப்படி நிறையக் காமிக்ஸ் புத்தகங்களைப் படித்தான்.

மூன்று மாத காலத்திற்குள் முழுமையான சாத்தூர்காரன் போலாகியிருந்தான் கதிர். கருப்பையா நாடார் கடையில் கிடைக்கும் ஸ்பெஷல் பரோட்டா கறி சால்னா ருசி அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது. சில நாட்கள் இருக்கன்குடி ரோட்டில் பருத்திப்பால் குடித்தான். தியேட்டரில் முட்டை போண்டாவை ஆசையாக வாங்கி சாப்பிட்டான். பவண்டோ குடித்தான்.

அப்பா அடிக்கடி சண்முக நாடார் கடையில் காரசேவும் கருப்பட்டி மிட்டாயும் வாங்கி வருவார். சோறுக்கு தொட்டுக் கொள்ளக் காரசேவு சுவையாக இருக்கும்

சில நேரம் தனியே ரயில் நிலையம் வரை சென்று தெற்கிலிருந்து வரும் ரயில்களை வேடிக்கை பார்த்து வருவான். ஒரு நாள் தேரடி முன்னால் தன்னைத்தானே சவுக்கடித்துக் கொள்ளும் ஒரு ஆளை பார்த்தான். அந்தச் சவுக்கு அவனைப் பயமுறுத்தியது.

பக்கத்து வீட்டிலிருந்த கோமதியக்காவும் அம்மாவும் மிக நெருக்கமானார்கள். கோமதியக்கா வீட்டில் செய்யும் நண்டும் கறியும் முட்டை மசாலாவும் தவறாமல் அவர்களுக்கு வந்து சேர்ந்தன. இந்த ஊரிலே இருந்துவிட வேண்டும். அப்பாவிற்கு டிரான்ஸ்பரே வரக்கூடாது என்று நினைத்தான் கதிர்.

••

கதிரின் பள்ளிக்குச் செல்லும் வழியில் மாவுமில்லை ஒட்டி சக்தி காபி பார் இருந்தது. அதன் வாசலில் மரபெஞ்சும் நாலைந்து பிளாஸ்டிக் நாற்காலிகளும் போட்டிருப்பார்கள். அந்தக் கடையில் உள்ள அலுமினிய தட்டில் எத்தனை சமோசா, வடை இருக்கிறது என்று எண்ணுவது விக்டரின் வழக்கம். முதல்நாளை விட எத்தனை வடை அதிகமாகியிருக்கிறது அல்லது குறைத்திருக்கிறது என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டே பள்ளிக்கூடம் செல்வார்கள்.

அன்றைக்கு அப்படி விக்டர் எண்ணிக் கணக்குச் சொன்னபோது“ நீ தப்பாச் சொல்றே“ என்றார் கதிர்

“அப்போ நீயே எண்ணி கரெக்டா சொல்லு“ என்றான் விக்டர்

எத்தனை சமோசா இருக்கிறது என எக்கிப் பார்க்கும் போது அவனது கைபட்டு தட்டு சரிந்து விழுந்த்து. ‘

தட்டிலிருந்த சமோசா வடை அத்தனையும் மண்ணில் சிதறியது. அதிர்ச்சியில் உறைந்து போனான் கதிர்..

“ஒடுறா கதிர்“ என்று கத்தினான் விக்டர்

ஆனால் ஒடாமல் கிழே விழுந்தவற்றைக் குனித்து எடுத்துத் தட்டில் போட முயன்றான் கதிர்.

கடைக்காரர் கோபத்துடன் அவனது சட்டையைப் பிடித்து உலுக்கியதோடு வலது கன்னத்தில் ஒங்கி அடித்தார். கண்ணில் பூச்சி பறந்தது. காதில் உய்ங் என ரீங்காரம் கேட்டது.

இதுவரை அவனை யாரும் அப்படி அடித்ததேயில்லை. வலியில் கண்ணீர் பீறிட்டது. அத்தோடு தரையில் கிடந்த சமோசாக்களைப் பார்த்தபடியே “தெரியாமல் செய்துட்டேன் அண்ணாச்சி“ என்றான் கதிர்

“உங்க விளையாட்டு மசிருக்கு என் கடை தான் கிடைச்சதா.. உன் வீடு எங்கடா இருக்கு.. “ என்று கேட்டார் டீக்கடைக்காரர்.

“ நம்ம ஊருக்குப் புதுசா குடி வந்துருக்காங்க அண்ணாச்சி. “ என்று போட்டுக் கொடுத்தான் விக்டர்

டீக்கடை அண்ணாச்சி மோசமான வசை ஒன்றை உதிர்த்தபடியே கதிரின் ஸ்கூல் பையைப் பிடுங்கிக் கொண்டு “போ. போயி உங்கப்பனை கூட்டிகிட்டு வா“ என்று மீண்டும் பிடறியில் அடித்து அனுப்பி வைத்தார்.

தன்னுடைய ஊரில் யாரும் ஒருமுறை கூட இப்படி அடித்ததில்லை. மோசமாகத் திட்டியதில்லை. கதிருக்கு நடுக்கமாக வந்தது. பள்ளி மாணவர்கள் நேரமாகிவிட்டதால் வேகமாக அவனைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். கால்களில் பலமில்லாமல் போய்விட்டது போல நடுக்கமாக இருந்தது

விக்டர் அவனைப் பார்த்து நாக்கை துருத்தி வக்கணை காட்டியபடியே பள்ளியை நோக்கி நடந்தான்.

••

அப்பாவின் பொதுப்பணித்துறை அலுவலக வாசலில் போய் நின்ற போது கதிருக்குப் பயமாக இருந்தது. ஒருவேளை அப்பாவும் அடிப்பாரோ.

அவன் தயங்கி நிற்பதைக் கண்ட ப்யூன் காளிமுத்து “உள்ளே வா“ என்று அப்பாவின் இருக்கையை நோக்கி அழைத்துக் கொண்டு போனார்

அப்பாவிடம் நடந்தவற்றைத் திக்கித் தடுமாறிச் சொன்னான் கதிர்.

அப்பா அவன் கன்னத்தில் பதிந்த தடத்தைப் பார்த்தபடியே “அந்த டீக்கடை எங்கேயிருக்கு“ என்று கேட்டார்

“ஸ்கூல் பக்கத்துல “

அப்பா காளிமுத்துவை உடன் அழைத்துக் கொண்டு “ஜீப்பில் போகலாம்“ என்றார்

அப்பாவின் அலுவல ஜீப்பில் இதுவரை கதிர் போனதேயில்லை. அவர்கள் ஜீப்பில் சென்று டீக்கடை வாசலில் இறங்கினார்கள்.

அப்பா தன்னுடைய பர்ஸிலிருந்து நூறு ரூபாயை எடுத்து கடைக்காரன் முன்னால் நீட்டியபடியே சொன்னார்

“இந்தாய்யா உன் காசு.. இதுக்காக என் பையனை அடிப்பியா“

“தட்டில இருந்த வடையைத் தட்டிவிட்டா பாத்துட்டு சும்மாவா இருக்க முடியும்“ என்று கோபமாகக் கேட்டார் அண்ணாச்சி

“அதுக்குக் கைநீட்டி அடிக்கச் சொல்லுதா“

“ ஆமா அடிச்சேன். அதுக்கு என்ன இப்போ, பெரிய மயிரு மாதிரி சப்தம் போடுறே.. “

“உன்மேலே போலீஸ்ல கேஸ் கொடுத்து உள்ளே தூக்கி வைக்க முடியும் பாத்துக்கோ“ என்றார் அப்பா

“ வச்சி பாரு.. அப்புறம் தெரியும் நான் யாருனு.. பிழைக்க வந்த நாயி.. என்கிட்டயே முறைக்குறயா.. போடா வெண்ணெய் உன்னாலே என்ன செய்ய முடியுமோ செய்யுடா “

என அப்பாவை அந்த ஆள் மிகவும் கேவலமாகப் பேசிக் கொண்டிருந்தார்

அப்பாவிற்குப் பதிலுக்குச் சண்டை போடத்தெரியவில்லை. அவருக்குக் கெட்டவார்த்தைகள் பேசத்தெரியவில்லை. காளிமுத்து இடையிட்டு பேசி சண்டையை நிறுத்தினார்.அப்பாவின் ஜீப்பிலே அவர்கள் வீடு திரும்பினார்கள்.

நடந்தவற்றைக் கேட்டு அம்மா அழுதாள். கதிரை அருகில் அழைத்துக் கன்னத்தைத் தடவிக் கொடுத்தாள் அம்மா. ஏனோ அவனது அப்பா டீக்கடைகாரர் மீது போலீஸில் புகார் தரவில்லை.

அதன்பிந்திய நாட்களில் அந்தவழியே பள்ளிக்கூடம் போகவே கதிருக்குப் பயமாக இருந்த்து. அடுத்தச் சில நாட்களில் அவனுக்கு ஊர் சுத்தமாகப் பிடிக்காமல் போனது.

இந்த ஊர் தன்னுடையதில்லை. இது அப்பாவின் வேலைக்கான ஊர். அவனுக்கென்று இந்த ஊரில் எதுவுமில்லை. எதற்காக இந்த ஊருக்கு வந்தோம். தென்னூருக்கே போய்விடலாமே என்று நினைத்து வருத்தப்பட்டான்.

அதன்பிறகு பள்ளியிலும் வீதியிலும் யாரோடும் பேசாமலும் பழகாமலும் ஒதுங்கி இருக்க ஆரம்பித்தான். படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

ரமாவைப் போலவே அவனும் “நம்ம ஊருக்குப் போயிரலாம்மா“ என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தான்

இவர்களின் குரலைக் கேட்டுக் கேட்டு அம்மாவும் ஒரு நாள் சொல்ல ஆரம்பித்தாள்

“பிள்ளைகளுக்கு இந்த ஊர் பிடிக்கலை. நாம தென்னூருக்கே திரும்பி போயிரலாங்க“

“மூணு வருஷதுக்கு எங்கேயும் போக முடியாது. என்ன நடந்தாலும் இங்கே தான் இருக்கணும்“ என்றார் அப்பா

“உங்களுக்கு என்ன பகல்ல ஆபீஸ் போனா ராத்திரி தான் வர்றீங்க. நானும் பிள்ளைகளும் தான் கிடந்து அவதிப்படுறோம்“

“நீ தானே ஊரு மாறணும். வீடு மாறணும்னு புலம்பிகிட்டு இருந்தே“

“அது நான் செய்த தப்பு“ என்று அம்மா விம்மினாள்.

சாத்தூரை விட்டு போகமுடியாது என்ற நிஜம் அவர்கள் வேதனையை அதிகப்படுத்தியது. உப்பில்லாத சாப்பாட்டைப் பிடிக்காமல் சாப்பிடுவது போல இருந்தது அவர்களின் வாழ்க்கை.

வீடு தந்த நெருக்கடி காரணமாகவோ என்னவோ அப்பா காண்டிராக்டர்களுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார் அவரது பையில் ஆயிரக்கணக்கில் லஞ்சப் பணம் புழங்க ஆரம்பித்தது.

காண்டிராக்டர்கள் செலவில் லாட்ஜில் ரூம்போட்டு குடித்தார். போதையில் சில்லறை விஷயங்களுக்குக் கூடச் சண்டை போட்டார். ஊரை பழிவாங்குவதற்காக அப்படிச் செய்கிறாரோ என்று கதிருக்குத் தோன்றியது.

அன்றாடம் அலுவலகம் விட்டதும் காண்டிராக்டர் நடராஜனின் காரில் கோவில்பட்டி சென்று குடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புவார். ஞாயிற்றுகிழமைகளில் கூடிக் குடிப்பதற்காக அவரை மதுரை அழைத்துப் போகத் துவங்கினார்கள். பல நாட்கள் போதையில் தடுமாறியபடி அப்பா வாசற்கதவை ஒங்கி தட்டும் சப்தம் உறக்கத்தினுள் அவனுக்குக் கேட்டிருக்கிறது. அது ஒரு மிருகத்தின் காலடி ஒசை போலவே தோன்றியது,

குடிப்பழக்கம் காரணமாக அப்பாவின் உடல் நிலை சீர்கெட ஆரம்பித்தது. . படுக்கையிலே மஞ்சளாக வாந்தி எடுத்தார். அதில் ரத்தம் கசிந்திருந்தது. அம்மா அதைக் கண்டு பயந்து போனாள்.

அவர் மீது யாரோ லஞ்சபுகார் அனுப்பியிருக்கிறார்கள், அவரை விசாரணை செய்யப்போகிறார்கள் என்று ஒரு நாள் அப்பா போதையில் புலம்பியதை கேட்டு அம்மா அதிர்ந்து போனாள்.

எதற்காக இந்த ஊருக்கு வந்தோம் ஏன் இத்தனை பிரச்சனை ஏற்படுத்திக் கொண்டோம் என்று அம்மா புலம்பினாள். அந்த வாரம் வெள்ளிகிழமை இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வேண்டுதல் செய்து மாவிளக்கு எடுத்தாள். ஆனாலும் அப்பா மாறவேயில்லை.

ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் திருவாரூரிலிருந்து அருணா சித்தி அவர்களைக் காண சாத்தூர் வந்திருந்தார். அவர் அம்மாவின் ஒரே தங்கை. பள்ளி ஆசிரியராக வேலை செய்கிறார்.

“எதுக்குக்கா இப்படிச் சொந்தபந்தம் இல்லாத ஊர்ல கிடந்து அவதிப்படுறே. அத்தான் போக்கும் சரியில்லைன்னு சொல்றாங்க “

“எல்லாம் என் தலையெழுத்து“ என்றாள் அம்மா

“கதிரு ஆளே மெலிஞ்சி அடையாளம் தெரியலை.. அவனை வேணும்னா நான் கூட்டிகிட்டு போயி படிக்க வைக்கட்டும்மா“. என்றாள் அருணா சித்தி

“அவனையே கேளு“ என்றாள் அம்மா

“கதிரு என் கூட வந்துருறயா“

“இல்லை சித்தி. நான் இங்கே தான் இருப்பேன். வேணும்னா எங்கப்பாவை உங்க கூடக் கூட்டிகிட்டு போயிருங்க… நாங்க நிம்மதியா இருப்போம்“. என்றான் கதிர்.

“பெரிய மனுசனாட்டம என்ன பேச்சுப் பேசுறான் பாத்தியாக்கா“ என்றாள் அருணா சித்தி

அவன் பேசியதிலுள்ள உண்மையை ஆமோதிப்பவள் போல அம்மா சொன்னாள்

“அவன் ஒண்ணும் சின்னபுள்ளை இல்லை. நல்லது கெட்டது எல்லாம் தெரியும்“

அதை ஏற்பது போலக் கதிர் சொன்னான்

“இந்த வீட்ல நடக்குறது எல்லாம் உங்களுக்குத் தெரியாது சித்தி. எனக்கு இதை எல்லாம் பாத்துப் பழகிருச்சி. “

“நீ பேசலைடா. இந்த ஊரு உன்னை இப்படிப் பேச வைக்குது“ என்றாள் சித்தி

அவள் சொன்னது உண்மை என்று கதிர் உணர்ந்த போதும் அதை ஏற்பது போலத் தலையாட்டவில்லை. சித்தி கிளம்பும் வரை எதையும் காட்டிக் கொள்ளக்கூடாது என்பது போலப் பாவனையாக நடிக்கத் துவங்கியிருந்தான்.

••••

0Shares
0