கேரளாவின் கோட்டயத்திலிருந்து டி.எம்.சந்திரசேகரன் என்பவர் மின்னஞ்சல் செய்திருந்தார். அது மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது. கூகுள் உதவியால் மொழியாக்கம் செய்து படித்தேன்.
மலையாளத்தில் வெளியாகியுள்ள எனது உப பாண்டவம் நாவலைப் பாராட்டி எழுதியிருந்தார்.

உப பாண்டவம் மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆறு மாதங்களில் மட்டும் ஐம்பது மின்னஞ்சல்களுக்கு மேல் வந்திருக்கும். பெரும்பான்மை மலையாளத்தில்.
தங்களின் பாராட்டினை எழுத்தாளருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்ற மலையாள வாசகர்களின் பண்பை எண்ணி வியந்து போனேன்
மகாபாரதம் மீது மலையாளிகளுக்கு உள்ள விருப்பம் ஆச்சரியமானது. மரபாகத் தொடரக்கூடியது. கேரளாவின் கலைவடிவங்களில் மகாபாரதம் முக்கிய இடம் பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் உள்ள தெருக்கூத்து தென் மாவட்டங்களில் கிடையாது. மகாபாரதம் சார்ந்த சிற்பங்கள் சில கோவில்களில் காணப்படுகின்றன. ஆனால் எங்கும் யுதிஷ்ட்ரன் சிற்பத்தைக் கண்டதில்லை. அர்ச்சுனன் சிற்பமே அதிகம் காணப்படுகிறது. பல்லவ மன்னர்கள் மகாபாரதம் மீது தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆதரவில் மகாபாரதம் சார்ந்த கலைகள் பெரிய வளர்ச்சியடைந்திருக்கிறது.

சமீபத்தில் சென்னை வந்திருந்த மாத்ருபூமி ஆசிரியர் கே.சி. நாராயணனைச் சந்தித்து உரையாடிய போது அவர் மகாபாரதம் பற்றி MAHABHARATHAM: ORU SWATHANTHRA SOFTWARE எனப் புதிய கட்டுரைத் தொகுப்பு வெளியிட்டிருப்பதாகச் சொன்னார். இப்படி மகாபாரதம் சார்ந்து புதிய புனைவுகள். கவிதைகள், ஆய்வுகள் மலையாளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
உப பாண்டவம் எனது முதல் நாவல். இந்த நாவலின் கையெழுத்துப் பிரதியோடு பல்வேறு பதிப்பகங்களில் ஏறி இறங்கிய நாட்கள் நினைவிற்கு வருகின்றன. எவரும் இதனை வெளியிட முன்வரவில்லை. கேலியும் கிண்டலும் செய்தார்கள். புறக்கணிப்பின் உச்சத்தில் நண்பர்களின் உதவியோடு நானே நாவலை வெளியிட்டேன். அப்போது விருதுநகரில் குடியிருந்தேன். என் வீட்டு முகவரிக்கு மணியார்டரில் பணம் அனுப்பி நாவலைப் பெற்றுக் கொண்டவர்கள் அதிகம். ஒரே ஆண்டில் இரண்டு பதிப்புகள் விற்பனையாகின. தமிழ் வாசகர்கள் என் நாவலின் மீது காட்டிய அன்பும் ஆதரவும் என்றும் நன்றிக்குரியது.
தற்போது உப பாண்டவம் நாவலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இன்று உப பாண்டவம் கேரள மண்ணில் வாசிக்கப்படுவதும் பாராட்டுப் பெறுவதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சிறப்பாக மொழியாக்கம் செய்த கே.எஸ்.வெங்கடாசலம். மற்றும் இதனை வெளியிட்டுள்ள DC புக்ஸ் நிறுவனத்திற்கு மனம் நிறைந்த நன்றி.