அனைவருக்கும் இனிய புத்தக தின நாள் வாழ்த்துகள்
புத்தக வாசிப்பு குறித்த கவனமும் செயல்பாடுகளும் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்ச் சூழலில் தீவிரமாக நடந்து வருகின்றன.
வாசகசாலை போன்ற அமைப்புகள் இதற்கு முக்கியக் காரணம். அவர்களுக்கு இந்தத் தருணத்தில் எனது மனம் நிரம்பிய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்திலுள்ள மாவட்ட நூலகங்கள் அத்தனையிலும் வாசகர்கள் சந்திப்பு நடைபெறுகிறது என்பது மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தி. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்று புத்தக வாசிப்பு ஒரு இயக்கமாகச் செயல்படவில்லை.
புத்தகங்களை அறிமுகம் செய்து பேசுகிறவர்களில் எண்பது சதவீதம் இளைஞர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. வாசிப்பு பரவலாகிக் கொண்டு வருகிறது என்றாலும் வாசிப்பின் தரமும் ஆழமும் குறைந்து கொண்டு வருகிறது என்பதே உண்மை.
ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும் என்று நானே பத்துக்கும் மேற்பட்ட முறை உரையாற்றியிருக்கிறேன். ஒவ்வொரு முறை இத் தலைப்பில் பேச முற்படும் போதும் படித்தவர்கள் முன்னிலையில் புத்தகம் படிக்கச் சொல்லி வலியுறுத்த வேண்டியுள்ளதே என்ற குற்றவுணர்வு ஏற்படும். ஆனால் திரும்பத் திரும்பச் சொல்லிப் பேசி உத்வேகப்படுத்தாவிட்டால் புத்தக வாசிப்பு மீது இளையோருக்கு நாட்டம் உருவாகாது என்று சுயசமாதானம் செய்து கொள்வேன்.
கோடை விடுமுறை துவங்கிவிட்டது. பள்ளிக்கூடத்தின் கெடுபிடிகளிலிருந்து சிறார்கள் விடுபட்டிருப்பார்கள். இந்தத் தருணத்தில் அவர்களுக்கு விருப்பமான கதைகள். பாடல்கள். காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கித் தந்து படிக்க வைக்கலாம். அல்லது சேர்ந்து படிக்கலாம். குறைந்தபட்சம் அவர்களை நூலகங்களுக்கு, அல்லது புத்தகக் கடைகள். கண்காட்சிகளுக்கு அழைத்துப் போய்த் தேவையான புத்தகங்களை வாங்கித் தரலாம்.
புத்தக வாசிப்பு தொடர்பாகத் தமிழில் நூல்கள் இல்லை. ஆங்கிலத்தில் விதவிதமாக வெளியாகின்றன. வாசிப்பின் சிறப்பு பற்றி எழுதுகிறவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் ஆல்பர்டோ மேங்குல் .
இவர் அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், அதன் தேசிய நூலகத்தின் இயக்குநராக பணியாற்றியவர். புத்தக வாசிப்பு தொடர்பாக இவர் எழுதிய A History of Reading, A Reading Diary, A Reader on Reading, The Library at Night The Traveler, the Tower, and the Worm: the Reader as Metaphor, Packing My Library, The city of words, The Dictionary of Imaginary Places போன்ற புத்தகங்கள் சிறப்பானவை.
மனிதனின் சிறப்பு என்பது அவன் வாசிக்கத் தெரிந்த விலங்கு என்பதே. எல்லாவற்றிலும் கதை இருக்கிறது. நம் வாழ்க்கையைப் பற்றி நாம் கதைகள் வழியாகவே தெரிந்து கொள்ள முற்படுகிறோம். கடந்தகாலத்தை. நம்மைச் சுற்றிய சமூகத்தை, எதிர்கால உலகத்தை என எல்லாவற்றையும் புத்தகங்கள் வழியாகவே அறிந்து கொள்கிறோம். அறிவை பரவலாக்கியதில் புத்தகங்களுக்குப் பெரிய பங்கிருக்கிறது. சொற்களின் வழியே உலகை அணுகுவது பிடித்தமான விஷயம். நினைவாற்றல் மறைந்துவிடும் என்றால் பொருட்களுக்கு நாம் சூட்டிய பெயர்கள் யாவும் மறைந்து போய்விடும். குழப்பம் மட்டுமே மிஞ்சும். அப்படித்தான் மார்க்வெஸின் நாவலில் நடைபெறுகிறது. பெயர்களை மீட்பதற்காக ஒவ்வொரு பொருளின் மீது அதன் பெயர் ஒட்டிவைக்கபடுகிறது. சொற்களைக் கொண்டு தான் உலகை வெல்ல முடியும். சொல்வழியாகவே உறவுகள் மேம்பட முடியும். சொல் தான் உலகை அணுகுவதற்கும் பகிர்வதற்குமான எளிய சாதனம். என்கிறார் ஆல்பர்டோ மேங்குல்.
ஹுலியோ கோர்தஸார் கதை ஒன்றில் ஒரு வீட்டிற்குள் நுழையும் அரூப உயிரினம் ஒன்று அங்குள்ள ஒவ்வொரு அறையாக கைப்பற்றி வீட்டில் வசிப்பவர்களை வெளியே துரத்திவிடும். அது போலவே தன் வீட்டிற்கு வந்து சேரும் புத்தகங்கள் தன் மொத்த வீட்டையும் ஆக்ரமித்து கொண்டு வருகின்றன.. ஒரு நாள் அவை தன்னையே வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு வீடு முழுவதையும் தன்வசப்படுத்திக் கொண்டுவிடும் என்று வேடிக்கையாக சொல்கிறார் மேங்குல்
நூலகத்தின் முக்கியத்துவம் பற்றி வியந்து வியந்து இவர் எழுதிய The Library at Night படித்துப்பாருங்கள் ஒரு மனிதர் நூலகத்தினுள் ஆழ்ந்து போயிருக்கிறார். நூலகத்தை உள்வாங்கியிருக்கிறார் என்பது புரியும்.
சிறுவயதில் கையில் ஒரு கதைப்புத்தகத்தை வைத்திருந்த போது அடைந்த சந்தோஷம் அளவில்லாதது. பாடப்புத்தகங்கள் ஒரு போதும் அந்த மகிழ்ச்சியைத் தந்ததில்லை. புத்தகங்களிலிருந்து விந்தை உலகம் கண்முன்னே விரிந்த போது காண் உலகைப் போலவே கற்பனையுலகம் ஒன்றும் இருப்பதை உணர்ந்தேன். அந்தப்பரவசம் வாசிப்பால் மட்டுமே சாத்தியமானது.
கதையில் கண்டறிந்த பறக்கும் கம்பளம் என்பது வெறும் விந்தையில்லை. அது பேரனுபவம். வீட்டின் போர்வையை விரித்துப் பறந்து செல்ல எத்தனையோ நாள் முயன்றிருக்கிறேன். வாசிப்பு ஒருவனை விந்தைகளை நோக்கி நகரச்செய்கிறது. பெரிய உலகைக் கண்ட பயம் கொள்ள வேண்டாம் என்று வழிகாட்டுகிறது.. சொற்கள் தான் உண்மையான பறக்கும் கம்பளம் அதைக் கொண்டு எந்த உலகை நோக்கியும் பயணிக்க முடியும் என்று கற்றுத்தந்தது புத்தகங்களே.
ஆல்பெர்டோ மேங்குலைப் பிடித்திருப்பதற்கு இன்னொரு காரணம் ஆலீஸின் அற்புத உலகம் நூலே அவரையும் வாசிப்பை நோக்கி நகரச்செய்திருக்கிறது. நானும் பள்ளி நாட்களில் ஆலீஸைப் பலமுறை படித்துக் கிறங்கியிருக்கிறேன். பின்பு அதை எளிமையாக மொழியாக்கமும் செய்திருக்கிறேன். முயலைப் பின்தொடர்ந்து ஒடும் ஆலீஸைப் போல நானும் அவள் பின்னாலே ஒடிக் கொண்டிருந்தேன். இன்றைக்கும் அந்த ஒட்டம் நிற்கவில்லை என்பது தான் உண்மை.
ஒரே புத்தகம் ஒவ்வொரு வயதில் வாசிக்கும் போதும் வேறாகிவிடுகிறது. புத்தகங்கள் நம் கூடவே வளருகின்ற போலும். அப்படி வளராத புத்தகங்கள் நம்மை விட்டு விலகிப்போய்விடுகின்றன. சிறார்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்களில் எனக்கு விருப்பமானது ஹெய்டி. அதை இப்போது படிக்கும் போது சிறார்களின் புத்தகமாகயில்லை. அன்பிற்காக ஏங்கும் குழந்தையின் தவிப்பை வெளிப்படுத்தும் காவியமாகவே உள்ளது. ஹெய்டி தமிழில் வெளியாகியிருக்கிறது. சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். பனிமலையில் உள்ள தாத்தா வீட்டிற்குச் செல்லும் ஹெய்டியின் சந்தோஷத்தை நீங்களே உணருவீர்கள்.
நூலகங்களே நமது அறியாமையை அடையாளம் காட்டின. நூலகங்களே நம் அந்தரங்கத்தை அறியச்செய்தன. நூலகங்களே பரந்த உலகை நோக்கி நம்மை அழைத்துப் போயின. நூலகங்களே பிறர் துயருக்காக நம்மை கண்ணீர் சிந்தச் செய்தன. புத்தகங்கள் சூழ இருப்பது என்பது ஒராயிரம் அறிவாளிகள். அனுபவசாலிகள் சூழ வாழ்வதாகும்.
நமக்கு வயதாவது போலப் புத்தகங்களில் உள்ள கதாபாத்திரங்களுக்கும் வயசாகிவிடும் என்று சிறுவயதில் நினைத்திருக்கிறேன். பின்னாளில் படித்தால் வயதான ஆலீஸ் கதையில் வருவாள் என்று நினைத்திருந்தேன். ஆனால் எத்தனை நூறு ஆண்டுகள் கடந்து போனாலும் கதையில் வரும் ஆலீஸ் அப்படியே இருப்பாள் என்பது சந்தோஷமாக இருந்தது. கதை மனிதர்களை நித்தியமானவர்கள் ஆக்குகிறது.
கிரேக்கக் கதை ஒன்றில் மனிதர்களை நித்தியமாக்கும் நதி ஒன்றைத் தேடி ஒருவன் பயணிப்பான். அதைப் படிக்கும் போது புத்தகம் தானே நித்தியமான நதி என்று தோன்றியது.
படித்த புத்தகங்களில் சிலவற்றை விருப்பமாக மறுவாசிப்பு செய்யும் போது சொந்த ஊரில் உள்ள சொந்த வீட்டிற்குத் திரும்பிப் போவது போலவே இருக்கிறது. தெரிந்த கதை என்று சலிக்கவேயில்லை. வாக்கியங்களின் இடைவெளிகளுக்குள் சொல்லப்படாத விஷயங்கள் புலப்படத்துவங்குகின்றன. முக்கியமற்றவை என வாழ்க்கை ஒதுக்கி வைக்கும் எல்லாமும் கதைகளில் முக்கியமாகிவிடுகின்றன. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக் கொண்டு திரிவதைப் போல எனது பால்யம் முழுவதும் ஏதாவது ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டே அலைந்தேன். இந்த உலகில் வசிக்காத கதாபாத்திரங்கள். கற்பனையான பறவைகள். மிருகங்கள் ஜீவராசிகள். ஊர்கள் நிலப்பரப்புகள் எனப் புத்தகம் வழியாக எவ்வளவோ விந்தைகளைப் பெற்றிருக்கிறேன்.
கொலம்பஸ். வாஸ்கோடகாமா, கேப்டன் குக் மட்டும் முன் அறியாத தேசம் தேடிச் சென்ற பயணியில்லை.
வாசகனும் ஒரு தீராப்பயணியே.
அவனும் புத்தகங்களின் வழியே புதிய தேசங்களை. புதிய மனிதர்களை, புதிய வாழ்க்கையைக் கண்டுபிடிக்கவே செய்கிறான்.
••
23.04.2019