கடந்த வாரத்தில் மதுரையில் இருந்தேன்
டிசம்பர் 11 மகாகவி பாரதி பிறந்த நாள் ஆகவே எட்டயபுரம் வரை சென்று வரலாமா என்றொரு எண்ணம் தோன்றியது.
ஆனால் அன்று காலையில் எழுந்தவுடன் திருவாதவூரில் உள்ள மாணிக்கவாசகர் சன்னதிக்குப் போய் வரலாம் என்று தோன்றியது.

பாரதிக்கும் மாணிக்கவாசகருக்கும் நிறைய நெருக்கம் இருப்பதாகவே உணர்கிறேன்.
எனது வீட்டில் மாணிக்கவாசகரின் திருவுருவச்சிலை வைத்திருக்கிறேன். திருவாசகம் எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். அதன் கவித்துவ மேன்மையை எண்ணி வியந்து போகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பு திருவாதவூர் போயிருக்கிறேன். மேலூரிலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அழகான சிற்றூர். அங்கே பழமையான சிவ ஆலயம் உள்ளது

பாரதி 38 வயது வாழ்ந்திருக்கிறார். மாணிக்கவாசகர் 32 ஆண்டுகளே வாழ்ந்து முக்தி அடைந்திருக்கிறார். எரிநட்சத்திரம் போன்ற வாழ்க்கை இருவருடையதும்.
மாணிக்கவாசகர் முப்பது வயதிற்குள் கவித்துவ எழுச்சியின் உச்சத்தை அடைந்திருக்கிறார். பொன்னை உருக்கியது போலத் தமிழ் மொழியை உருக்கி வார்த்திருக்கிறார். திருவாசகத்தை வாசிக்க வாசிக்க மனதில் இசை இன்பமும் இனம் புரியாத ஆனந்தமும் நிரம்புவதை உணர்ந்திருக்கிறேன்.
மாணிக்கவாசகரின் கவிமொழியானது பாதரசம் போன்றது. அது உருண்டோடிக் கொண்டேயிருக்கும் வசீகர அழகுடையது. மாணிக்கவாசகர் எளிய சொற்களைக் கொண்டு மகத்தான அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். வெல்லப்பாகு போன்று மொழியை அவரால் பதமாக மாற்றிவிட முடிந்திருக்கிறது.
பெண்கள் பூப்பந்து விளையாடுதல், ஊஞ்சலாடுதல் அம்மானை போன்றவற்றை மாதிரியாகக் கொண்டு திரு அம்மானை, திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருப்பொன்னூசல்ஆகிய திருப்பதிகங்களை மாணிக்கவாசகர் இயற்றியிருக்கிறார்.
இந்தப் பாடல்களை வாசிக்கும் போது அரூபமாகப் பெண்கள் தோன்றி ஆடுவதை நம்மால் உணர முடிகிறது.
தனது பதினாறு வயதில் மாணிக்கவாசகர் அமைச்சராகிவிடுகிறார். அந்த நாட்களில் அது இளைஞனின் வயது. முப்பத்திரெண்டு வயதிற்குள் அவர் முழு வாழ்க்கையை வாழ்ந்து கடந்திருக்கிறார். முதுமையான பாரதியை மனதில் நினைக்க முடியாதது போலத் தான் மாணிக்கவாசகரும்.

பாண்டிய மன்னருக்காக அவர் குதிரை வாங்கச் சென்று குருவிடம் அடைக்கலமான இடம் புதுக்கோட்டையை அடுத்த ஆவுடையார் கோவில். அங்கே உள்ள குதிரை சிற்பங்கள் நிகரற்றவை. ஆவுடையார் கோவில் சிற்பங்கள் பேரழகு மிக்கவை. அங்குள்ள சுவரோவியங்களும் கொடுங்கைகளும் உன்னதக் கலைப்படைப்புகளாகும்
திருவாதவூருக்குக் காலையில் சென்றபோது வாதபூரீசுவரர் கோவிலில் கூட்டமில்லை.. அங்கே மாணிக்கவாசகருக்குத் தனிச் சன்னதியிருக்கிறது. அங்கே ஒருவருமில்லை. சன்னதி மூடியிருந்தது.
மாணிக்கவாசகர் சன்னதி முன்பாக அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன். தமிழின் மகத்தான கவிஞனின் முன்பாக அமர்ந்திருப்பது மனதைச் சந்தோஷப்படுத்தியது.
மெய் தேடலின் வழியே அவர் உணர்ந்த ஞானத்தைத் தனது கவிதைகளில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். 9ம் நூற்றாண்டில் இது போன்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கேள்விகளில் சிறந்த ஒருவர் பாண்டிய மன்னரின் அமைச்சராக மாறுவது எளிய விஷயமில்லை.
குதிரை வாங்குவதற்காக மாணிக்கவாசகர் செல்லும் பயணம் மனதில் திரைப்படம் போல ஓடுகிறது. ஒட்டகங்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு படைகளும் பரிவாரங்களுடன், பல மாதங்களைக் கடந்து, திருப்பெருந்துறையென்னும், தலத்தை அடைகிறார் மாணிக்கவாசகர். அந்தக் காலத்தில் ஒட்டகங்கள் சுமை கொண்டு செல்ல மதுரையில் பயன்பட்டிருப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இன்று இரண்டு மணி நேரத்தில் போய்விடக்கூடிய ஆவுடையார் கோவிலுக்குப் போக அன்று பல நாட்கள் ஆகியிருக்கின்றன.

குரு உபதேசம் பெற்ற மாணிக்கவாசகர் துறவு கோலம் பூண்டுவிடுகிறார். திருவாதவூர் ஆலய முகப்பில் இந்தக் கோலம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நரியைப் பரியாக்கியது வியப்பூட்டும் செயல். இரவில் மீண்டும் பரிகள் நரியாகி ஊளையிட்டு மறையும் காட்சி பிரம்மாண்டமாகக் கண்ணில் தெரிகிறது. பரிமேலழகர் என்ற சொல்லே எவ்வளவு கவித்துவமாக இருக்கிறது. துடைத்து எடுத்த தங்கக் காசை பார்ப்பது போல அந்தப் பெயரை சொல்லிக் கொண்டேயிருந்தேன்.
மாணிக்கவாசகரைத் தண்டிக்கும் மன்னர் அவரைச் சுடு வெயிலில் நிறுத்துகிறான். அப்படியானால் அந்த வெயிலின் உக்கிரம் எப்படியிருந்திருக்கும் என நினைத்துப் பாருங்கள்.
அந்தக் காலத்தில் நிலப்பத்திரம் எழுதும் போது இதில் உள்ளபடி நடக்காவிட்டால் சித்திரை மாசம் அக்னி நட்சத்திர வெயிலில் நடக்கச் சம்மதிக்கிறேன் என்று எழுதி கையெழுத்துப் போடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு நிகரானது தான் மாணிக்கவாசகருக்கு அளிக்கப்பட்ட தண்டனை.
வைகையில் வெள்ளம் வந்தபோது இறைவனே பிட்டுக்கு மண் சுமந்த கதை இன்றும் மதுரையில் புட்டுத்திருவிழாவாக நடைபெறுகிறது. மதுரை இப்படித் தொன்மங்களின் நிலமாக இருக்கிறது
என் வீட்டில் சிறுவயதிலிருந்து திருவாசகம் பாடப்படுவதைக் கேட்டிருக்கிறேன் .நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று எனது தாத்தா பாடும் போது அவரது கண்கள் கசிந்து வழிவதைக் கண்டிருக்கிறேன். ஒரு பாடலுக்காக ஏன் இப்படிக் கண்ணீர் வடிக்கிறார் என்று தோன்றும்.
ஆனால் மாணிக்கவாசகரின் சன்னதியிலிருந்த போது அந்த அனுபவத்தின் உண்மையை என்றால் நன்றாக உணர முடிந்தது.
2005ல் நானும் ஒளிப்பதிவாளர் ஜீவாவும் பாண்டிச்சேரி விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஒரு நாளில் இரவு இசைஞானி இளையராஜாவின் திருவாசகத்தை விடியும் வரை கேட்டுக் கொண்டேயிருந்தோம்.
அன்று அடைந்த உணர்வெழுச்சியை விவரிக்க முடியாது. பனிக்கட்டி கரைந்து உருகியோடுவது போன்ற அனுபவமாக இருந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சில சிவன் கோவில்களில் ஓதுவார்கள் பண்ணோடு பாடி திருவாசகம் கேட்டிருக்கிறேன். அந்தக் குரல்கள் இன்றில்லை. கோவில் சார்ந்த இசை மெல்ல மறைந்துவிட்டது.

திருவாதவூர் கோவிலில் காலை முதலே திருவாசகம் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. கோவிலுக்குள் வந்து போகிறவர்கள் உதடுகளில் அந்தப் பாடல் முணுமுணுக்கப்படுகிறது. அவர்களில் எத்தனை பேர் மாணிக்கவாசகரை நினைவு கொள்வார்கள் என்று தெரியவில்லை
நான் அன்று மாணிக்கவாசகரின் முன் அமர்ந்த தருணத்தில் மழையில் நனைவது போன்ற மகிழ்வுணர்வை அடைந்தேன். ஸ்ரீவில்லிப்புத்தூருக்குச் சென்று ஆண்டாளை காணும் போது இத்தகைய பரவசத்தை அடைந்திருக்கிறேன்.
மதுரையை நோக்கி கார் திரும்பும் போது மனதில் திருவாசகமே ஒலித்தது
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
கவிஞர் தேவதச்சனை அலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவர் இந்த வரிகளை நினைவு கொண்டு போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே என்று கடவுளை வரையறை செய்வது புதுமையானது. இந்த உணர்தல் எளிதானதில்லை. என்று மாணிக்கவாசகரின் பாடல்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
தாயுமானவர். வள்ளலார் இருவருக்கும் மாணிக்கவாசகரே முன்னோடி என்றார்
Gateless Gate என்று ஜென் விவரிப்பதும் போக்கும் வரவும் இலாப் புண்ணியனே என்பதும் வேறு வேறில்லை என்பதைப் பற்றி பேசிக் கொண்டோம்.
உரையாடல் கோவிலில் திருமுறைகள் பாடும் ஓதுவார்கள் பற்றித் திரும்பியது.
கோவிலில் எரியும் சுடர் போன்றதே ஓதுவார்களின் குரல். மனம் கரைந்து அவர்கள் திருமுறைகள் பாடுவதைக் கேட்கும் போது புகை போல நாம் எடையற்றுப் போய்விடுகிறோம் என்றேன்
ஏழு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் உலகம் முழுவதும் இது போன்ற தீவிரமான மெய் தேடல் நடந்திருக்கிறது. பேரொளி வானில் தெரிவது போல எல்லாத் தேசங்களிலும் இது போன்ற கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்பதை பற்றி பேசிக் கொண்டோம்.
அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது நரியை பரியாக்கிய திருவிளையாடல் பற்றிய ஞானக்கூத்தனின் கவிதை நினைவில் வந்து போனது
விட்டுப்போன நரி
குதிரையாகாமல்
விட்டுப்
போனதில் ஒருவன் சாமீ
குதிரையாகாமல்
விட்டுப்
போனதில் ஒருவன் சாமீ
மேற்படிக்
குரலைக் கேட்டார்
மாதொரு
பாகர். குற்றம்
ஏற்பட
வியந்தார். தேவி
ஏளனம்
செய்தாள் சற்று
“வாதவூரடிகட்காக
நரிகளைத் தேர்ந்த போது
நீதியோ என்னை மட்டும்
விலக்கியச் செய்கை சாமீ!”
திருவருட்
திட்டம் பொய்த்த
தற்கொரு
ஊளைச் சான்றாம்
நரி எதிர்
உதித்துக் கீற்று
நிலாத் திகழ்
ஈசர் சொன்னார்:
நரிகளைப் பரிகளாக்கும்
திருவிளையாடல் முற்றும்
விடுபட்ட பேரை நாங்கள்
கவனிக்க மாட்டோம் போய்வா
மாணிக்கவாசகரின் காலத்திலிருந்து இன்றைய நவீன கவிதை எப்படி வளர்ந்திருக்கிறது என்பதற்கு ஞானக்கூத்தனின் கவிதையே சாட்சி. இதில் விடுபட்டுப் போன நரியின் குரல் கேட்கிறது. அது தான் நவீன வாழ்வின் அடையாளம்.
நரியைப் பரியாக்கிய அற்புத நிகழ்வில் மதுரைக்கு வந்த நரிகள் இரவில் மீண்டும் குதிரை உருவம் கலைத்து நரியாகும் போது அதற்குக் குதிரையாக இருந்ததன் நினைவுகள் இருக்காதா. ஒருவேளை அப்படிக் குதிரை நினைவுகளுடன் இருந்தால் அது. இரட்டை உயிரினமில்லையா
மதுரையில் இன்றும் நரியைப் பரியாக்கும் விளையாட்டு முடியவேயில்லை.
சமயம் சார்ந்த கவிதைகளை வாசிப்பதை இன்றைய இளம் கவிஞர்கள் தேவையற்றதாக நினைக்கிறார்கள். உண்மையில் மாணிக்கவாசகரிடம் வெளிப்படும் சொல்லாட்சியும் கவித்துவ எழுச்சியும் இசையும் இளங்கவிஞன் முனைந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றே.
சுடரில் நேற்றைய சுடர் இன்றைய சுடர் என்ற பேதம் கிடையாது. நெருப்பிற்குக் கடந்த காலமில்லை.
மாணிக்கவாசகரும் அப்படியொரு அழியாச்சுடரே
•••