வானில் எவருமில்லை

புதிய சிறுகதை

புரவி ஆண்டு மலரில் வெளியானது

தியேட்டரில் பாதிப் படம் நடந்து கொண்டிருக்கும் போதே சித்ராவிற்குப் பசிக்க ஆரம்பித்தது. ஆனால் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

மணி எட்டைக் கடந்தவுடன் வயிறு தானே பசிக்கத் துவங்கிவிடுகிறது. ஒன்பது மணிக்குள் இரவு உணவைச் சாப்பிட்டு முடித்துவிடுவது தான் அவளது வழக்கம். ஆனால் சினிமாவிற்குப் போகும் நாட்களில் என்ன செய்வது.

இடைவேளையின் போது பாப்கார்ன் சாப்பிட்டார்கள். ஆனாலும் பசி அடங்கவில்லை. திரையில் ஒடும் காட்சிகளில் அவளது மனம் கூடவில்லை. எப்போது வீட்டிற்குப் போவோம் என்றிருந்தது.

அருகில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் தன்னை மறந்து படம் பார்த்துக் கொண்டிருந்தான். வலது பக்கம் அமர்ந்திருந்த அவளது எட்டு வயது மகள் ப்ரியாவிடம் “பசிக்கிறதா“ என்று மெதுவான குரலில் கேட்டாள். “ஆமாம்“ என அவள் தலையாட்டினாள்.

ப்ரியா பெரும்பான்மை நாட்கள் ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கிவிடுவாள். இருவர் மட்டும் எழுந்து வெளியே போய் ஏதாவது சாப்பிட்டு வரலாமா என்று நினைத்தாள். ஆனால் கார்த்திக் கோவித்துக் கொள்வான். படம் விட்டதும் வெளியே போய்ச் சாப்பிடலாம் என்று சொல்லியிருந்தான். இன்னும் படம் எவ்வளவு நேரம் ஒடும் என்று தெரியவில்லை.

பசியை அடக்கிக் கொண்டு காத்திருக்க வேண்டியது தான். திரையைப் பார்க்க பிடிக்காமல் செல்போனில் வந்திருந்த வாட்ஸ்அப் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்

அன்றைக்கு அவர்களின் திருமண நாள்.

பத்தாவது திருமண நாளை கொண்டாடுகிறார்கள்.

சித்ரா அலுவலகத்திற்கு லீவு போட்டிருந்தாள். ஆனால் கார்த்திக் அலுவலகம் போய்விட்டு மாலை வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தான். அவர்களுக்குத் திருமண நாளை எப்படிக் கொண்டாடுவது எனத் தெரியவில்லை. புத்தாடைகள் அணிந்து கொண்டு கோவிலுக்குப் போவது. அப்புறம் சினிமா. இரவு ஏதாவது ஒரு நான்வெஜ் ஹோட்டல் இப்படித் தான் இத்தனை ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறார்கள். அது சித்ராவிற்குச் சலிப்பை ஏற்படுத்தியிருந்தது.

நாமாகச் சந்தோஷத்தை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. யாராவது எதிர்பாராத மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்களா என்றாலும் நடப்பதில்லை. பிறந்தநாளை எப்படிக் கொண்டாடினார்களோ, அது போலவே தான் திருமண நாளையும் கொண்டாடுகிறோம். இதில் என்ன வேறுபாடு.

சில ஆண்டுகள் நண்பர்களை அழைத்துச் சிறிய விருந்து வைத்து பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார்கள். ஆனால் அந்தச் சந்திப்பு உண்மையாக இல்லை. பொய்யாகச் சிரித்துக் கொண்டு போலியாக நடித்துக் கொண்டு பேசும் விருந்தினர்களின் சந்திப்பாக மாறியது. அதைவிடவும் சிலரை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டோம் என்ற குற்றசாட்டு. வந்தவர்களில் சிலருக்கு சாப்பாடு பிடிக்கவில்லை என்ற குற்றசாட்டு எனத் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகவே அதையும் தவிர்த்துவிட்டார்கள்.

ஒன்பதாவது திருமண நாள் கொண்டாடத்திற்கும் பத்தாவது திருமண நாள் கொண்டாட்டத்திற்கும் ஒரு வேறுபாடுமில்லை. ஆனாலும் அதை மகிழ்ச்சியோடு அனுபவிப்பது போலக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது

அன்றைக்குக் காலையில் ப்ரியாவை ஸ்கூலுக்கு லீவு போட சொல்லி தன்னோடு வீட்டிலிருக்க வைத்தாள். அதற்குக் கார்த்திக் கோவித்துக் கொண்டான்

“அவ லீவு போட்டு வீட்ல என்ன செய்யப்போறா“

“நான் மட்டும் என்ன செய்யப்போறேன் . பரவாயில்லை இருக்கட்டும்“

“அதை தான் நானும் கேக்குறேன். நாம ஒண்ணும் சின்னபிள்ளை இல்லை சித்ரா. நீயே ஆபீஸ் போயிட்டு வரலாம். ஈவினிங் தான் வெளியே போறோமே“

“எனக்கு இன்னைக்கு ஆபீஸ் போகப் பிடிக்கலை. நான் லீவு போட்டுட்டேன்“

“அது உன் இஷ்டம். ஆனால் பாப்பா ஸ்கூலுக்குப் போகட்டும்“

“ஒரு நாள் லீவு போட்டா ஒண்ணும் ஆயிராதுப்பா“

“அப்புறம் உன் விருப்பம்“ என்றபடியே அவன் முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டான். திருமண நாள் அதுவுமாக அவனுடன் சண்டை போட சித்ரா விரும்பவில்லை.

அவன் பைக்கை எடுக்கும் போது தயக்கத்துடன் கேட்டாள்

“ லஞ்ச்க்கு வீட்டுக்கு வந்துரலாம்லே“

“பாக்குறேன். நிறைய வேலையிருக்கு“

“நாங்க வேணும்னா.. உன் ஆபீஸ் வந்துருறோம். அப்படியே ஈசிஆர்ல போயி லஞ் சாப்பிடுவோம்“

“அது வேணாம். நான் வீட்டுக்கு வரப்பாக்குறேன்“

“இன்னைக்கு அவியல், பொறியல், கூட்டு, பச்சடி பாயாசம்னு நிறையப் பண்ண போறேன்“

“சரி வந்துருறேன். ஆனால் கொஞ்சம் லேட் ஆகும்“

“நாங்க வெயிட் பண்ணுறோம்“

கார்த்திக் புது டிரஸ் அணிந்து கொண்டு ஆபீஸ் கிளம்பிப் போன பிறகு அவளும் ப்ரியாவும் வீட்டிலிருந்தார்கள். தனது திருமண ஆல்பத்தை எடுத்துப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா. அப்போது இருந்ததை விடவும் இப்போது குண்டாகியிருக்கிறோம். திருமண நாளில் செய்து கொண்ட ஒப்பனை சரியாக இல்லை. காதோரம் முடி பறக்கிறது. அதைக் கவனிக்கவேயில்லை.

கல்யாண நாளில் அணிந்திருந்த நிறைய நகைகள் அவளது சித்தியுடையது. அதை ஒரு நாள் அணிந்து கொள்ள இரவல் தந்திருந்தாள். அந்த நகைகளைத் தானே சம்பாதித்து வாங்கிவிட வேண்டும் என்று சித்ரா ஆசைப்பட்டாள் இத்தனை வருஷத்தில் அது நடக்கவேயில்லை.

சிறுவயதில் வானிலிருந்து தேவதைகள் பூமிக்கு இறங்கி வந்து மகிழ்ச்சியான பரிசை தருவார்கள் என்று கற்பனை செய்து கொண்டிருந்தாள். திருமணமான பிறகு வானில் எவருமில்லை. நமது சந்தோஷங்களை நாமாக உருவாக்கி கொள்ள வேண்டியது தான் என்பதை உணர்ந்திருந்தாள்.

•••

ப்ரியாவும் அவளும் சூப்பர் மார்க்கெட்டிற்காக ஷேர் ஆட்டோ பிடித்துக் கிளம்பும் போது மணி பத்தரை ஆகியிருந்தது. அவர்கள் மெயின்ரோட்டில் இறங்கிக் கொண்டார்கள்,. சிக்னலைத் தாண்டி சென்றால் இடது பக்கமிருந்தது சூப்பர் மார்க்கெட். போகிற வழியில் இருந்த ஷிவானி ரெடிமேட் கடையைத் தாண்டும் போது ப்ரியாவிடம் கேட்டாள்

“நீ ஒரு புதுடிரஸ் வாங்கிடுறயா“

“எனக்கு எதுக்கும்மா“ என்றாள் ப்ரியா

“வெட்டிங்டேக்கு நாங்க மட்டும் தான் புதுசு போடணுமா“

“அப்போ புது டிரஸ் வாங்கலாமா“ என ஆசையாகக் கேட்டாள் ப்ரியா

இருவரும் ரெடிமேட் கடையினுள் நுழைந்தார்கள். ப்ரியாவிற்காகப் புது ஆடைகளைத் தேர்வு செய்வதற்குள் தனக்கு ஏதாவது புதிய புடவை கிடைக்கிறதா என்றும் சித்ரா தேடினாள். அவளுக்குப் பிடித்தமான மயில்கழுத்துக் கலரில் ஒரு புடவை கிடைத்தது. வாங்கிக் கொள்ளலாமா என்று தயக்கமாக இருந்த்து.

“வாங்கிக்கோம்மா. அப்பா ஒண்ணும் சொல்லமாட்டார்“ என்றாள் ப்ரியா

கார்த்திக்கிற்குப் போன் செய்து கேட்கலாமா என்று தோன்றியது. வெட்டிங் டேயிற்கு எனப் பட்டுபுடவை எடுத்து வைத்திருக்கிறாள். அதை விட இதைக் கட்டிக் கொள்வது அழகாகயிருக்கும் என்று தோன்றியது.

ப்ரியா வெள்ளையில் பூவேலைப்பாடுகள் செய்த எத்னிக்வேர் பார்ட்டி டிரெஸ் ஒன்றைத் தேர்வு செய்திருந்தாள்

சிறுவயதில் இப்படி எல்லாம் உடை அணிந்து கொள்ள வேண்டும் என்று சித்ரா ஆசைப்பட்டிருக்கிறாள். ஆனால் அவளது அப்பா வாங்கித் தரவேயில்லை.

“பொம்பளை பிள்ளை வெள்ளை டிரஸ் போடக்கூடாது“ என்று அப்பா கண்டிப்புடன் சொல்லிவிடுவார்.

ஆனால் எத்னிக்வேர் பார்ட்டி டிரெஸ் அத்தனை அழகாக இருந்த்து. அதன் விலையைப் பார்த்தபோது எட்டாயிரத்து முந்நூறு ரூபாய் என்றிருந்தது. நிச்சயம் கார்த்திக் கோவித்துக் கொள்வான். ஆனாலும் ப்ரியா ஆசைப்படுகிறாள்.

ப்ரியா ஏக்கத்துடன் அம்மாவை பார்த்துக் கொண்டிருந்தாள்

“வாங்கிக்கோ“ என்றாள் சித்ரா

இருவரும் ஆளுக்கு ஒரு புது ஆடை வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்த போது அத்தனை சந்தோஷமாக இருந்தது. இப்படி யாராவது நம்மை அழைத்துக் கொண்டு போய் வேண்டியதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லமாட்டார்களா என்று மனதிற்குள் ஏக்கமாகவும் இருந்தது.

சூப்பர் மார்கெட்டில் ப்ரியா அப்பா அம்மாவிற்கு ரகசியமாகக் கொடுப்பதற்காக ஒரு சாக்லேட் பார் வாங்கி வைத்துக் கொண்டாள். பை நிறையப் பொருட்களுடன் அவர்கள் வீடு திரும்பி வரும்போது டெய்லர் கடையை ஒட்டிய ஐஸ்கிரீம் ஷாப்பில் பாதாம் ஐஸ்கிரிம் சாப்பிட்டார்கள். ப்ரியா மிகவும் சந்தோஷமாக இருந்தாள்

வீடு வந்து சேர்ந்தவுடன் சித்ரா தன்னை அறியாமல் “ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும் “என்ற அவளுக்குப் பிடித்த சினிமா பாடலை முணுமுணுத்தாள். அந்தப் பாட்டினை ப்ரியா ரசித்தபடியே சொன்னாள்

“உங்க வெட்டிங்டே அன்னைக்கு யாராவது பாட்டு பாடுனாங்களாம்மா“

“இல்லையே“

“சினிமாவுல மட்டும் பொண்ணு மாப்பிள்ளையைச் சுற்றி பாடுறாங்க“

“அது சினிமா கல்யாணம். இது நிஜக் கல்யாணம்“

“நிஜக்கல்யாணத்துல ஏன் பாட மாட்டேங்குறாங்க“

“ஆமாம். ஏன் பாடக்கூடாது. ஆனால் யாருக்கு பாடத்தெரியும்“ என்று மனதிற்குள் தோன்றியது.

சமையல் செய்ய நேரமாகிவிட்டது என்பதால் அவசரமாக அவள் சமையல் வேலையைத் துவங்கினாள். இதற்குள் ப்ரியா தனது புது டிரஸை போட்டுக் கொண்டு வந்து அவளிடம் காட்டினாள். அத்தனை அழகாக இருந்தது. தான் சிறுவயதில் இப்படித் தானே இருந்தோம் என்ற நினைப்புடன் மகளை இழுத்து அணைத்து தலையைத் தடவிக் கொடுத்தாள்.

“நான் அழகா இருக்கேனாம்மா“ என்று கேட்டாள் ப்ரியா

“ரொம்ப அழகா இருக்கே“

“எங்க கிளாஸ்ல ரீமா தான் ரொம்ப அழகு.. ஸ்கின் எல்லாம் எப்படி ஜொலிக்கும் தெரியுமா. “

“அது நேச்சரல் இல்லை பாப்பா. உன் ஸ்கின் தான் நேச்சரல்“ என்றாள் சித்ரா. அப்படிச் சொல்லித்தான் ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டும்.

ப்ரியா தனது உடையைத் தானே ரசித்தபடியே அம்மா போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டாள். பிறகு தயக்கத்துடன் கேட்டாள்

“இந்த போட்டோவை டாடிக்கு அனுப்பவா“

“வேண்டாம். சர்ப்ரைஸா இருக்கட்டும்“ என்றாள் சித்ரா

சமைக்கும் போது அவளை அறியாமல் மனதில் பாட்டு சுரந்தபடியே இருந்த்து. இத்தனை சந்தோஷமாக என்றாவது ஒரு நாள் தான் சமைக்க முடிகிறது. மற்ற நாளில் அது ஒரு வேலை. அதுவும் தவிர்க்க முடியாத வேலை.

அன்றைக்கு அவள் நிறைய உணவு வகைகளைச் சமைத்தாள். பாயாசம் தயரானதும் அவளும் ப்ரியாவும் ஆளுக்கு ஒரு டம்ளர் குடித்துக் கொண்டார்கள். டைனிங் டேபிளில் எல்லா உணவினையும் எடுத்துக் கொண்டு போய் வைத்துவிட்டு அவர்கள் கார்த்திக் வருவதற்காகக் காத்திருந்தார்கள்.

புதுச்சேலையை இப்போதே கட்டிப் பார்த்துவிடலாம் என்று நினைத்த சித்ரா படுக்கை அறைக்குச் சென்று மயில்கழுத்து நீலத்திலுள்ள சேலையைக் கட்டிக் கொண்டு வெளியே வந்தபோது ப்ரியா வியப்புடன் அவளைப் பார்த்தபடியே சொன்னாள்

“சூப்பரா இருக்கும்மா“

“அம்மா அழகா இருக்கேனா“

“ரொம்ப அழகா இருக்கே“ என்றபடியே அருகில் வந்து புடவை தொட்டு தடவினாள் ப்ரியா

அவர்கள் புது டிரஸ் அணிந்து கொண்டு காத்திருந்தார்கள். மணி இரண்டினை தாண்டியும் கார்த்திக் வரவில்லை. சித்ரா அவனுக்குப் போன் செய்தாள். போனை எடுக்கவில்லை. அவர்களால் பசியைப் பொறுக்க முடியவில்லை. சாப்பிட்டுவிடலாமா என்று கூட நினைத்தார்கள். இரண்டரை மணிக்கு கார்த்திக் வந்த போது அவள் கோபத்தைக் காட்டிக் கொள்ளவில்லை

“சாரி சித்ரா. ஆபீஸ்ல பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ட்ரீட் கொடுக்கச் சொல்லிட்டாங்க. புகாரி போயிட்டோம்“

“பரவாயில்லை. அதைப் போன் பண்ணி சொல்லியிருக்கலாம்லே“

“நான் பிரியாணி கொஞ்சம் தான் சாப்பிட்டேன். வீட்ல சாப்பிடணும்லே“ என்று பொய்யான புன்னகையுடன் சொன்னான்

அவர்கள் ஒன்றாகச் சாப்பிட்டார்கள். விதவிதமான உணவு வகைகளைப் பற்றி அவன் எதுவும் சொல்லவில்லை. நீண்டநேரம் பசித்துச் சாப்பிட்ட காரணத்தால் அவளுக்கும் சாப்பாடு பிடிக்கவில்லை. பாயாசத்தைக் கண்ணாடி கிண்ணம் ஒன்றில் எடுத்துக் கொண்டு டிவி முன்பாகப் போய் உட்கார்ந்தபடியே கார்த்திக் கேட்டான்

“பாப்பா புது டிரஸ் போட்டிருக்கா. இது எப்போ வாங்கினது“

“மார்னிங் தான். நானும் அம்மாவும் வாங்கினோம். அம்மா கட்டியிருக்கிறதும் புதுச் சேலை தான்“ என்றாள் ப்ரியா

“ஏன் பாப்பா வொயிட் டிரஸ் வாங்கிருக்கே. இது உடனே அழுக்காகிடும்“

தன் அப்பா பேசுவது போலவே அவளுக்குக் கேட்டது. ஆத்திரத்தை மறைத்துக் கொண்டு சொன்னாள்

“அழுக்கானா துவைச்சிகிடலாம்“

“உனக்கு எதுக்குப் புது டிரஸ். அதான் பட்டுபுடவை வாங்கியிருக்கியே“ என்றான் கார்த்திக்

“இந்த கலர் என்கிட்ட இல்லை“ என்றாள்

நல்லவேளையாக அவன் ப்ரியா டிரஸ் எவ்வளவு விலை என்று கேட்கவில்லை.

“நான் திரும்ப ஆபீஸ் போகணும். நீங்க ஆறுமணிக்கு நேரா ஷாப்பிங் மால் வந்துடுங்க.. “

“அப்போ கோவில்“

“அது இன்னொரு நாள் போகலாம். இன்னைக்கு நேரமில்லை. “

அலுவலகத்திலிருந்து போன் வந்தவுடன் கார்த்திக் கிளம்பினான். அணிந்திருந்த புது டிரஸை கழட்டி வைத்துவிட்டு இருவரும் மாற்று உடைகளை அணிந்து கொண்டார்கள். ப்ரியா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். சித்ரா படுக்கை அறைக்குச் சென்று உறங்கிவிட்டாள். மாலை ஐந்து மணிக்கு தான் எழுந்து கொண்டாள்.

அன்றைக்கு அதியமாகப் பகலில் அவளுக்குக் கனவு வந்தது. அதிலும் அவள் புத்தாடை அணிந்திருந்தாள். தலைசீவி பட்டுப்புடவையைக் கட்டிக் கொண்டு அவள் கிளம்பியபோது ப்ரியா தயாராகி நின்றிருந்தாள். அவர்களாக ஒரு ஆட்டோ பிடித்து ஷாப்பிங் மாலுக்குச் சென்றார்கள்

ஷாப்பிங் மாலில் அதிகக் கூட்டமில்லை. ஒவ்வொரு கடையாக வேடிக்கை பார்த்தபடியே எஸ்கலேட்டரில் ஏறி திரையரங்கு இருந்த நான்காவது தளத்தை அடைந்தார்கள். கார்த்திக் வரும்வரை அங்கே காத்திருந்தார்கள். அவர்களைப் போல அன்று திருமண நாளை கொண்டாடும் யாராவது வருவார்களா என்று மனதிற்குள் ஆசையாக இருந்தது. ஆங்கிலப்படம் விட்டு நிறைய இளைஞர்கள் வெளியே வந்தார்கள்.

கார்த்திக் அலுவலகத்தைவிட்டு கிளம்பி விட்டானா என்று கேட்பதற்காகப் போன் செய்தாள். அவன் போனை எடுக்கவில்லை. அகன்ற திரையில் ஒடிக் கொண்டிருந்த விளம்பரங்களைப் பார்த்தபடியே அவர்கள் நின்றிருந்தார்கள்

“இதை மாதிரி நாமலும் ஒரு கார் வாங்கணும்மா“ என்றாள் ப்ரியா

“அந்த காரோட விலை நாற்பது லட்சம்“ என்றாள் சித்ரா

“அப்போ வேற கார் வாங்குவோம்“ என்றாள் ப்ரியா

“முதல்ல வீடு வாங்கணும். அப்புறம் தான் கார்“

“இதை நீயும் சொல்லிகிட்டே இருக்கே. ஆனா நடக்கவே நடக்கலை. “

“வீடு வாங்கணும்னா. மினிமம் அறுபது எழுபது லட்சம் வேணும்“ என்று பெருமூச்சுடன் சொன்னாள் சித்ரா

இளஞ்சிவப்பில் லினன் சட்டை அணிந்த ஒரு இளைஞன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைச் சித்ரா உணர்ந்தாள். தன்னை அவன் ரசிக்கிறான் என்றே தோன்றியது. நல்லவேளை அதை ப்ரியா கவனிக்கவில்லை. அந்த இளைஞனை தேடி ஜீன்ஸ் பிளாக் டாப் அணிந்த ஒரு இளம்பெண் வந்தாள். இருவரும் கைகோர்த்தபடியே நான்காவது திரைஅரங்கினுள் நுழைந்தார்கள். இப்படிப் பொது இடத்தில் இதுவரை அவள் கார்த்திக்கோடு கைகோர்த்து நடந்த்தில்லை. இதெல்லாம் ஒரு ஆசையா என்று தோன்றியது.

கார்த்திக் வந்து சேர்ந்த போது மணி ஆறு நாற்பதாகியிருந்த்து.

“படம் ஏழு மணிக்கு தான்“

“அப்போ லேட்டா வந்துருப்போம்ல“

“நான் கவனிக்கலே. உள்ளே வரும்போது தான் பார்த்தேன்“

அவர்கள் சினிமா தியேட்டர் உள்ளே நுழைந்தார்கள். கார்த்திக் போனில் யாருடனோ பேசிக் கொண்டே நடந்து வந்தான்.

••

படம் முடிந்து வெளியே வந்தபோது பத்துமணியாகியிருந்த்து.

“செகண்ட் ப்ளோர்ல ஒரு ஹோட்டல் இருக்கு. அங்கேயே சாப்பிடலாம் “என்றாள் சித்ரா

“அது காசு பிடுங்குற ஹோட்டல். சிக்கன் சூப் நானூறு ரூபாய். தெண்டம். சாப்பாடும் நல்லா இருக்காது. நாம புதுசா திறந்திருக்கிற ரெட்சில்லீஸ் போவோம். “

“அது எங்க இருக்கு“

“மே போட்டு பாத்துகிடுவோம்“.

“இப்பவே மணி பத்து“ என்றாள் சித்ரா

“பக்கத்துல தான் இருக்கு. போயிடலாம்“ என்றான் கார்த்திக்

அவர்கள் பைக்கில் கிளம்பினார்கள். மேப்பில் காட்டிய இடத்தில் ஹோட்டல் இல்லை. சுற்றி அலைந்து இரண்டு தெருவின் பின்னால் இருந்த ஹோட்டலை கண்டுபிடித்தார்கள். சிறிய இடம். அதிகக் கூட்டமிருந்தது. காத்திருந்து அவர்கள் இடம்பிடித்தார்கள்

ப்ரியா அசதியான முகத்துடன் “தூக்கம் வருதும்மா“ என்றாள்

“உனக்கு பிடிச்ச வீச்சுப் பரோட்டா சாப்பிடு“ என்றான் கார்த்திக்

ப்ரியா தலையாட்டிக் கொண்டாள். அவர்கள் ஆர்டர் செய்த உணவை தயார் செய்து கொண்டு வருவதற்கு அரைமணி நேரமாகியது. உணவில் ஒரே காரம். அவளால் சாப்பிட முடியவில்லை. கார்த்திக் கொத்து பரோட்டாவை ருசித்துச் சாப்பிட்டான். ப்ரியா தூக்க கலக்கத்தில் பரோட்டாவை கொறித்தாள். மீதமான உணவை பார்சல் பண்ணி வாங்கிக் கொண்டு அவர்கள் வீடு நோக்கி கிளம்பும் போது பதினோறு மணியைத் தாண்டியிருந்த்து

அவர்கள் குடியிருந்த வீடு ஜாபர்கான் பேட்டையினுள் இருந்தது. வழியில் நிறையத் தெரு நாய்கள். அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கக் கார்த்திற்கு விருப்பமில்லை. உள்ளோடியிருந்தாலும் அங்கே தான் தனி வீடு வாடகைக்குக் கிடைத்தது. கூவத்தை ஒட்டிச் செல்லும் பாதையது. நிறையக் கொசுகள். அவர்கள் குடியிருந்தது இரண்டு படுக்கைகள் உள்ள வீடு.

அந்த வீதியில் இருந்த எவருடனும் அவர்களுக்குப் பழக்கமில்லை. பைக் இருப்பதால் தேவையானதை மெயின் ரோட்டில் போய் வாங்கிக் கொள்ளலாம். நிறைய ஷேர் ஆட்டோ உள்ளது. சித்ரா தினமும் ஷேர் ஆட்டோவில் தான் அலுவலகம் போய் வந்தாள்.

திரும்பி வர லேட்டாகும் என்று அவள் முன்யோசனையாக வெளியே இருந்த லைட்டை போட்டுவந்திருந்தாள். அந்த வெளிச்சம் தெருவில் நுழையும் போது தனியே தெரிந்தது.

பைக்கை நிறுத்திவிட்டு கார்த்திக் முன்கேட்டை தள்ளியபடி “சாவியைக் கொடு “என்றான்

அவள் தனது ஹேண்ட்பாக்கினுள் கையை விட்டு தேடினாள். சாவி அகப்படவில்லை.

“சாவி எங்கே“ என்று எரிச்சலுடன் கேட்டான்

ஹேண்ட்பேக்கை முழுவதும் திறந்து தேடினாள். சாவியைக் காணவில்லை. சைடு ஜிப், உள்ஜிப் எனத் தேடினாள். எங்கும் சாவியில்லை

“சாவியைக் காணோம்“ என்று தயங்கியபடியே சொன்னாள்

“இண்டர்வல்ல நீ தானே பாப்கார்ன் வாங்கினே. அப்போ ஹேண்ட் பேக்ல இருந்து தானே பணம் எடுத்துருப்பே“

“அது சைடு ஜிப்ல பணம் வச்சிருந்தேன்“ என்றாள்

“அப்போ சாவி எங்கே“

“தெரியலை“ என்று தலைகுனிந்தபடியே சொன்னாள்

“சினிமா தியேட்டர்ல விழுந்திருக்குமா“ என்று கோபத்துடன் கேட்டான் கார்த்திக்

“இருக்கலாம்“ என்று தலையாட்டினாள்

“நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன். நீங்க வெயிட் பண்ணுங்க“ என்று அவளை முறைத்தபடியே சொன்னான்

“நீ சாவியை எடுக்கவேயில்லைம்மா. சாவி கீ ஸ்டாண்ட்ல இருந்ததைப் பார்த்தேன்“ என்றாள் ப்ரியா

“அப்பவே சொல்ல வேண்டியது தானே“ என ப்ரியாவை கோவித்தாள் சித்ரா

“நீ கிளம்பும் போது எடுத்துக்கிடுவேனு நினைச்சேன்“ என்றாள் ப்ரியா

“சாவியை வெளியே எடுக்காமல் கதவை பூட்டியிருக்கிறோம் என்பது சித்ராவிற்கு உறைந்தது. அந்தப் பூட்டிற்குச் சிறிய சாவி தரப்பட்டிருந்தது. அது நவீனமான பூட்டு. பழைய காலத்துச் சாவிகள் போலப் பெரியதாக இருந்தால் மறக்கவே மறக்காது. அம்மா தன் இடுப்பில் வீட்டுசாவியைச் சொருகியிருப்பாள். இந்தப் பூட்டுக்கு வேறு சாவி கிடையாது. கார்த்திக் இன்னொரு சாவி வைத்திருந்தான். அதை அலுவலகத்தில் தொலைத்துவிட்டான்.

“வீட்டுச்சாவி உள்ளே தான் இருக்கு“ என்று மெதுவான குரலில் சொன்னாள் சித்ரா

“இப்போ உள்ளே எப்படிப் போறது“ என்று கோபமாகக் கேட்டான் கார்த்திக்

“யாரையாவது ஹெல்ப்க்கு கூப்பிடுவமா“ என்று கேட்டாள் சித்ரா

“இப்போ மணி என்ன தெரியுமா. 11.30. இந்நேரம் யாரை கூப்பிடுறது“

“நான் வேணும்னா.. நித்துவை கேட்கட்டும்மா“ என்றாள்

“கேட்டுத்தொலை. நான் மெயின்ரோடு வரைக்கும் போயிட்டு வர்றேன்“

என்று பைக்கை கிளம்பிச் சென்றான்

பூட்டப்பட்ட வீட்டின் முன்னால் நின்றபடியே அவளது தோழி நித்யாவிற்குப் போன் செய்தாள். அவள் பாதித் தூக்கத்தில் கண் விழித்தபடியே “என்னடி யாருக்காது உடம்பு முடியலையா“ என்று கேட்டாள்

“வீட்டு சாவியை உள்ளே வச்சி பூட்டிட்டேன். என்ன பண்ணுறதுனு தெரியலை“

“நீ பேசமா. இங்கே வந்துடு.. காலைல பாத்துகிடுவோம்“

“யாராவது பூட்டு திறக்கிறவங்க கிடைப்பாங்களா“

“இந்நேரம் யார் வருவா“

“ஏதாவது போன் நம்பர் இருந்தா குடு. கேட்டு பாக்குறேன்“

“அதெல்லாம் வேணாம். நீங்க கிளம்பி என் வீட்டுக்கு வந்துடுங்க“

“பாக்குறேன்“ என்றபடியே போனை துண்டித்தாள்

வெளியே எவ்வளவு நேரம் நிற்பது. இந்த வீதியில் ஒரு வீட்டில் கூடத் திண்ணை கிடையாது. படிக்கட்டுகள் கிடையாது. இரும்பு கேட்டுகளைத் தவிர வேறு எதுவும் கண்ணில் படவில்லை. ஒரு பழைய நாற்காலியை வெளியே போட்டு வைத்திருக்கக் கூடாதா. இது போன்ற நேரத்தில் உட்காரலாமே என்று தோன்றியது

ப்ரியா தூக்கத்தை அடக்க முடியாமல் கேட்டாள்

“இப்போ என்னம்மா செய்றது“

அவளை எங்க படுக்கச் சொல்வது. அந்த வீதி திடீரெனஅவளை அச்சுறுத்துவதாக மாறியது.

உதவிக்கு என்று யாரை அழைப்பது. யார் வந்தும் என்ன செய்து விட முடியும். பேசாமல் நித்யா வீட்டிற்குப் போய் இரவு தங்கிக் கொள்ளலாமா

கார்த்திக் பைக்கில் திரும்பி வந்த போது முகம் இறுகிப்போயிருந்த்து.

“பூட்டு திறக்க ஒரு ஆளை வரச்சொல்லியிருக்கேன். ஆயிரம் ரூபாய்க் கேட்கிறான். “

அவர்கள் வீட்டின் முன்பு காத்திருந்தார்கள். வீதியின் கடைசியில் இருந்த தெருவிளக்குப் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் அதை நோக்கி சித்ரா நடந்தாள். படுத்துகிடந்த தெரு நாய் ஒன்று தலையைத் தூக்கி பார்த்துவிட்டு குலைக்கவில்லை

ஐம்பது வயதுள்ள ஒரு ஆள் பைக்கில் வந்திருந்தார். அவரது பையில் நிறைய விதமான சாவிக் கொத்துகள். அவர் கார்த்திக்கிடம் செல்போனிலுள்ள டார்ச்லைட்டை அடிக்கும்படி சொன்னார்

கார்த்திக் செல்போனில் இருந்து வெளிச்சத்தைக் கதவை நோக்கி திருப்பினான்.

மாறிமாறி சாவிகள் போட்டும் கதவைத் திறக்க முடியவில்லை

“இது ஒரிஜினல் சாவி போட்டா மட்டும் தான் திறக்கும் சார். இந்தப் பூட்டு விலை அதிகம். கம்பெனில கேட்டா தான் டூப்ளிக்கேட் சாவி கிடைக்கும்“

“இப்போ என்ன செய்றது“

“யாராவது கார்பெண்டரை கூப்பிட்டு பாருங்க. கதவை உடைச்சி திறந்து தருவாங்க“

“இது வாடகை வீடுங்க. கதவை உடைச்சா என்ன ஆகுறது“ என்றான் கார்த்திக்

“வேற வழியில்லை சார். என்கிட்ட இருக்கிற சாவி எதுவும் செட் ஆகலை“.

“உங்களை விட்டா வேற வழியில்லை. எப்படியாவது திறந்து குடுத்துருங்க“

“பாவம் உங்க வொய்ப். பொண்ணு வேற இப்படி நின்னுகிட்டு இருக்காங்க. நான் வீட்ல போயி வேற சாவி இருக்கானு பாத்துட்டு வர்றேன். “

“நான் கூட வரட்டும்மா“

“வேணாம் சார். பொம்பளை புள்ளை தனியா இருட்டுல எப்படி இருப்பாங்க. நான் வந்துடுறேன்“

என்று அந்த ஆள் பைக்கில் கிளம்பிப் போனார். சித்ராவிற்குத் தான் ஏன் இவ்வளவு மறதியாக நடந்து கொண்டோம் என்று குற்றவுணர்வு மேலோங்கியது

“நாம நித்துவீட்டுக்கு போய் நைட் தங்கிகிடுவமா“ என்று தயங்கி தயங்கி கேட்டாள்

“அந்த ஆள் வந்து பூட்டை திறக்க முடியலைன்னா. போவோம்“ என்றான் கார்த்திக்

வீட்டுச்சாவியைத் தொலைத்துவிடுவோம் என்ற பயமில்லாத பெண் எவருமிருக்க முடியாது. யார் சாவியைத் தொலைத்துவிட்டாலும் தப்பு அவள் மேல் தான் வந்து விழும். கார்த்திக் மாலை வீட்டிற்கு வந்திருந்தால் நிச்சயம் இப்படி நடந்திருக்காது. ஆனால் அதைச் சொன்னால் கோவித்துக் கொள்வான்.

பிடிக்காத சினிமா, பிடிக்காத ஹோட்டல். இத்துடன் இப்படிச் சாவியில்லாமல் வெளியே நிற்பது என்பது அவளுக்குத் தாங்க முடியாத எரிச்சலை உருவாக்கியது. அடுக்குமாடிக் குடியிருப்பில் இப்படிப் பிரச்சனை வராது. வந்தாலும் உதவிக்கு வாட்ச்மேனை கூப்பிடலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

அவர்கள் மூவரும் வீட்டின் வெளியே நின்றிருந்தார்கள். ப்ரியா பைக் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். நித்யா போன் செய்து அவள் கிளம்பி வருகிறாளா என்று கேட்டாள்

“தெரியலை. பூட்டுதிறக்கிறவர் அவர் வீட்டுக்குப் போய் வேறு சாவி கொண்டுட்டு வரப்போயிருக்கார்“

“நான் வேணும்னா கார்த்திக் கிட்ட பேசவா“

“வேணாம். இப்போ இருக்கக் கோபத்துல உன் மேல வள்ளுனு விழுவார்“

“எப்போ வேணும்னாலும் நீ கிளம்பி வந்துரு“.. என்றபடியே நித்யா போனை துண்டித்தாள்.

ஊரிலிருக்கும் அம்மாவிற்குப் போன் பண்ணி பேச வேண்டும் போலிருந்தது. இந்நேரம் போன் வந்தால் அம்மா பதறிவிடுவாள். அதுவும் இது போன்ற நெருக்கடி என்றால் அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியாது. ஆனால் அவள் தானே கார்த்திகை திருமணம் செய்து கொள்ளச் செய்தவள். அவளுக்குப் போன் செய்தால் என்ன என்று தோன்றியது.

பூட்டு திறக்கிறவர் வரவேயில்லை. கார்த்திக் அவரது போன் நம்பரை திரும்பத் திரும்ப அழைத்தபடியே இருந்தான். அவர் போனை எடுக்கவில்லை. இவ்வளவு பெரிய மாநகரில் உதவி செய்ய ஆளே இல்லை. அந்த வீடு திறக்கமுடியாத குகையைப் போலாகியிருந்தது. எரிச்சலில் அவனும் தெருமுனை வரை நடந்து வந்தான்

பூட்டு திறக்கிறவர் திரும்பி வந்தபோது அவரது பைக்கில் இன்னொரு ஆளும் உடனிருந்தான் .அவர்கள் ஒன்றாகப் பூட்டினை திறக்க முயன்றார்கள். உடன் வந்திருந்த இளைஞன் தன்னிடமிருந்த சாவியை உரசி உரசி பூட்டினுள் நுழைத்தான். கதவில் காதை வைத்து ஒசையைக் கேட்டான். நீண்ட போராட்டத்தின் பிறகு கதவு திறந்து கொண்டது.

ப்ரியா அவசரமாகப் பாத்ரூமை நோக்கி ஒடினாள். கார்த்திக் அவருக்குப் பணம்கொடுத்து விட்டு நன்றி சொன்னான்

சித்ரா வீட்டினுள் நுழைந்தவுடன் கீஸ்டேண்டில் இருந்த சாவியைப் பார்த்தாள். சிறிய யானை பொம்மையுடன் அந்தச் சாவி ஆடிக் கொண்டிருந்தது. அதைக் கையில் எடுத்துக் காட்டியபோது பூட்டுத் திறப்பவர் சொன்னார்

“மறதி யாருக்கும் வர்றதுதானம்மா. பகலா இருந்தா இவ்வளவு நேரம் வெயிட் பண்ண வேண்டியிருக்காது. உங்களுக்காக நான் சைதாப்பேட்டை வரைக்குப் போயி இவனைக் கூட்டிட்டு வந்தேன். இப்ப வர்ற பூட்டு எல்லாம் நமக்குத் தெரியாது. அதெல்லாம் இவனுக்குத் தான் அத்துபடி“

சித்ரா அந்த இளைஞனுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாள்

“பரவாயில்லைக்கா. சார் பணம் குடுத்துட்டார்“ என்றான் இளைஞன்

“எங்களுக்காக இந்நேரம் வந்தீங்களே அதுக்குத் தான் இந்தப் பணம்“ என்றாள் சித்ரா

“இந்த சாவியை டூப்ளிகேட்டா வச்சிக்கோங்க“ என்று தான் செய்த சாவியை அவளிடமே கொடுத்தான்.

அவர்கள் கிளம்பிப் போன பிறகு கதவை மூடுவதா இல்லை அப்படியே திறந்து வைத்திருப்பதா என்று தெரியாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவளுக்கு அழுகை முட்டியது. ஆனால் திருமண நாளின் போது யாராவது அழுவார்களா என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள். கார்த்திக் உடை மாற்றிவிட்டு படுக்கைக்குப் போயிருந்தான்

திறந்துகிடந்த கதவை தாண்டி வீதிக்கு வந்தாள் சித்ரா. மணி இரண்டினைக் கடந்திருந்தது. இந்த நேரத்தில் ஒரு நாளும் தெருவினைக் கண்டதில்லை. அலாதியான தெருவிளக்கின் ஒளியும் அடைத்து சாத்திய வீடுகளின் அமைதியும் விரிந்த அந்தத் தெரு ஏதோ ஒவியம் ஒன்றிலிருந்து உயிர்பெற்று வந்துவிட்டது போலிருந்தது.

ஹோட்டலில் சரியாகச் சாப்பிடாமல் வந்ததால் பசி எடுப்பதாகத் தோன்றியது. பிரிட்ஜிலிருந்து தோசை மாவை எடுத்துத் தோசை சுட்டு சாப்பிடலாமா என்று நினைத்தாள். பின்பு தன்னைத் தானே தண்டித்துக் கொள்ளச் சாப்பிடாமல் விட வேண்டியது தான் என்று அவளுக்குத் தோன்றியது.

அதுவரை நடந்த களேபரம் யாவையும் மறந்து அவள் கதவைப் பூட்டினாள். இன்னும் நாலு மணி நேரத்தில் மறுநாள் துவங்கிவிடும். சமைக்க வேண்டும். ப்ரியாவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஆபீஸிற்குக் கிளம்பி ஒட வேண்டும் என்பது ஆயாசமாக இருந்தது.

திருமண நாளும் அதுவுமாக அவர்கள் ஜோடியாகப் புத்தாடையில் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளவில்லையே என்று படுக்கைக்குப் போன போது தோன்றியது

அது மட்டும் தான் குறைச்சல் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்

•••

0Shares
0