வான்கோவின் இரவு

People use art to explain each other their feelings –  Leo Tolstoy.

எனக்கு வான்கோவின் ஒவியங்களை மிகவும் பிடிக்கும், நவீன ஒவியத்தின் தனிப்பெரும் கலைஞன் வான்கோ, அவரது  புகழ்பெற்ற ஒவியமான நட்சத்திரங்களோடான இரவு என்ற ஒவியத்தைப் பாருங்கள்

தைல வண்ணத்தில் 29 x 36  அளவில் வரையப்பட்ட ஒவியமது ,இன்று நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் உள்ளது

1889ம் ஆண்டு இந்த ஒவியத்தை வரையும் போது வான்கோ சென்ட் ரெமி என்ற இடத்தில் உள்ள மனநலக் காப்பகம் ஒன்றில் தங்கி சிகிட்சை பெற்றார், தீவிரமான மனக்குழப்பங்களும் சஞ்சலங்களும் கடுமையான தனிமையும் மிக்க நாட்கள் அவை, இந்த ஒவியத்தை தனது படுக்கை அறையின்  ஜன்னல் வழியாகப் பார்த்து வரைந்தார் என்கிறார்கள், ஆனால் ஒவியத்தில் நாம் காண்பது அவரது நினைவில் எரிந்து கொண்டேயிருக்கும் இரவு ஒன்றின் மிச்சமே.

ஒவியத்தைப் பார்க்கும் போது நமக்கு முதலில் தோன்றுவது மயக்கமூட்டும் எவ்வளவு அற்புதமான இரவு என்பதே,

வான்கோ காட்டும் நட்சத்திரங்கள் நிரம்பிய இரவு எப்படியிருக்கிறது, ஒவியத்தில் முதலில் நம்மை ஈர்ப்பது அதன் விசித்திரம், குறிப்பாக நட்சத்திரங்களும் வானமும் பிரதானமாகி அதன் அடியில் ஊர் சிறியதாக மங்கியிருப்பது,

அடுத்தது ஒவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள. மஞ்சளும் அடர்நீலமும் கொண்ட வண்ணத்தேர்வு. ஆரஞ்சுவண்ணம் பொங்கிவழியும் பிறைநிலவு மற்றும் இரவின் ஏகாந்தமான அழகு, அதனடியில் அமைதியாக உறங்கும் வீடுகளும். தனித்த தேவாலயமும். வான் உயரம் பெரியதாகி உள்ள சைப்ரஸ் செடியும் இயற்கையின் மர்மம் கலையாத வசீகரமுமே,

பார்வையாளனைக் கூடவே அழைத்து செல்லும் அக இயக்கம் இந்த ஒவியத்தினுள் உள்ளது, உற்றுப் பாருங்கள். ஒரு அலை நம்மை இழுத்துப் போவது போல நட்சத்திரங்களின் வழியே நிலவைப் பார்த்து அதிலிருந்து கீழ் இறங்கி நகர்ந்து கிராமத்தின்  மீது ஒரு பறவை போல நாம் பறந்து போக முடிகிறது இல்லையா, அது தான் இதன் தனித்துவம்.

குழந்தைப் பருவத்தில் பின்னிரவு எப்படியிருக்கும் நாம் கொண்ட ஏக்கத்தின் புறவடிவம் போலவே இந்த ஒவியம் இருக்கிறது

இவ்வளவு அழகான நட்சத்திரங்களும் அடர்ந்த இருளும் கொண்ட இரவு  தனித்து ஒளிர்வுடன் பேரழகாக உலகை மாற்றிருப்பது அறியாது நாம் உறங்கி கொண்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறதா,

வான்கோவின் தூரிகை சாமுராயின் கத்தியைப் போல பயன்படுத்தப்பட்டிருக்கிறது, எவ்வளவு வலிமையான தீட்டல்கள். துடிப்பான, சீற்றமான வர்ணங்கள்

எனக்கு இந்த ஒவியத்தைப் பார்க்கும் போதெல்லாம் விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டது என்ற புத்தரின் மொழி தான் நினைவிற்கு வருகிறது இது நட்சத்திரங்களுடனான இரவைப்பற்றிய ஒவியமில்லை தனிமையின் முடிவில்லாத இரவைப்பற்றியது,

பின்னிரவில் உலகின் வனப்பை ரசித்துக் கொண்டு உறங்கும் மனிதர்களை, எரியும் நிலவை. துடித்து வீழும் நட்சத்திரங்களை பார்த்து கொண்டிருப்பவன் யார்,

அவனது மனதின் கதி என்னவாகயிருக்கிறது,

மனிதர்களின் தீராத்துயரம் தனிமை தானா-

ஏனோ இந்த ஒவியம் தனிமையின் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன்

ஒவியத்தில் பதினோறு நட்சத்திரங்கள் இருக்கின்றன, இவை ஒன்று போல மற்றொன்று இல்லை, அதன் இயக்கம் ஒரு சீற்றமிக்க அலைபோலிருக்கிறது, நட்சத்திரங்கள் என்றதும் ஐந்து முனைகள் கொண்ட பொது வடிவம் தான் நமக்கு நினைவிற்கு வரும், அதை இந்த ஒவியம் கலைத்துப் போடுகிறது, இதில் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு நெருப்புக் கோளம் போலிருக்கிறது, அவை உலகைக் காணவந்த யாத்ரீகர்களைப் போலவே அலைகின்றன, அடர்ந்த நீலநிறத்தில் மஞ்சள் பூக்களை போல அந்த நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன, நட்சத்திரங்கள் எவ்வளவு தான் விஞ்ஞானப்பூர்வமாக விளக்கப்பட்டாலும் இன்றும் மர்மமாகவே இருக்கின்றன, அதிலும் பின்னிரவில் காணும் நட்சத்திரங்கள் நம்மோடு பேசுவதாகவே உணர்கிறேன்

வான்கோவின இரவு மிகப் புராதனமானது, எல்லையற்றது, அடர்த்தியானது, நட்சத்திரங்களின் இயக்கத்தை அப்படியே தன்வசப்படுத்தியது போல உள்ளது வான்கோவின் தீட்டல், நட்சத்திரங்களை விட நான் பெரியவன் என்பது போல ஆரஞசு நிறத்தில் ஒளிரும் பிறை நிலா காணப்படுகிறது,

வான்கோவின் குழப்பமான மனது நிலவின் மீதும் படர்ந்திருக்கிறது, இந்த ஒவியத்தில் உள்ள நிலவு அபூர்வமானது, நடுக்கமும் பதற்றமும் கொண்ட மனநிலையில் இருந்து ஒவியம் உருவாகி இருக்கிறது என்பதற்கு இது சாட்சி போலிருக்கிறது

நிலவு சூரியனைப் போலவே இருக்கிறது, அதன் ஒளிர்தலைக் காணும் போது இத்தனை வலிமையான நில்வை நாம் கண்டதேயில்லை என்று தோன்றச் செய்கிறது, நட்சத்திரங்களும் நிலவும் கொண்ட வானம் மயக்கமூட்டுகிறது,

வானில் சுருள் சுருளாக மேகம் சுழன்றிருக்கிறது, பின்னரவுக் காற்றின் வேகம் தான் அதுவோ, மஞ்சளும் மெல்லிய நீலமும் கொண்ட ஆறு ஒடுவது போல அந்தவெளிச்சம் உள்ளது, அது தான் எவ்வளவு அற்புதம், தண்ணீரைப்போல மிருதுவான. வலிமையான ஒட்டம் கொண்ட இரவு இல்லையா

இந்த அழகின் உன்மத்தம் அறியாது ஊர் உறங்கி கொண்டிருக்கிறது, வீடுகளில் வெளிச்சமில்லை, இரவின் வெளிச்சம் மட்டுமே மிச்சமாக இருக்கிறது, தேவாலயம் கூட அமைதியாக . உயரமாக அதே நேரம் ஊரில் உள்ள வீடுகளை விட பெரியதாக. ஏதோ ஒரு அடையாளச் சின்னம் போலக் காணப்படுகிறது, மலையின் மேடுகள் மங்கலாகத் தெரிகின்றன, என்றோ  கனவில் கண்ட காட்சி நனவாகியிருப்பது போலக் காணப்படுகிறது

ஊர் சரிந்து கிடப்பது போல தோற்றம் தருகிறது, உறங்கும் ஊர்களை நான்  கண்டிருக்கிறேன், எல்லா ஊர்களும் இரவில் அதிசயமான அழகை கொண்டுவிடுகின்றன,  எளிய வீடுகளின் கூரைகள் அங்கு வசிப்பவர்களின் நிலையை சொல்கின்றது, அது ஒரு சிறிய ஊர் அவ்வளவே, இயற்கையின் முன்னால் மனிதன் உருவாக்கியது வெறும் மயக்கம் மட்டுமே என்பது போலிருக்கிறது இந்தக் காட்சி

இடதுபக்கம் சைப்ரஸ் மிகப்பெரியதாக வான் உயரம் வளர்ந்து காணப்படுகிறது, சைப்ரஸ் மரணசடங்கில் இட்ம் பெறும் தாவரம், அது அழுத்திக் கொண்டிருக்கும் மரணபயத்தின் அடையாளம் தானா, அல்லது நாம் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி போன சைப்ரஸ் புதர்கள் நமது அகசிக்கலின் அடையாளமாக உள்ளதா,

எப்படியோ சைப்ரஸ் நம் பார்வையை மறைக்கிறது, பொதுவாக பார்வையாளர்கள் ஒவியத்தின் இடது பக்க மூலையில் தான் அதிக கவனம் தருவார்கள் ஆகவே அங்கே சைப்ரஸ் வரையப்பட்டிருக்கிறது என்று ஒரு விமர்சகர் எழுதியிருக்கிறார், அது உண்மை தானோ,

சைப்ரஸ அன்று வான்கோ இருந்த மனநிலையே, அது தடுமாற்றமும் பயமும் தீர்க்கமுடியாத கோபமும் தீவிரமான படைப்பாற்றலும் கொண்ட மனநிலையின் அடையாளம், அது வளர்ந்து பெரிதாகி நிற்கிறது, வான்கோ மனநலக்காப்பகத்தில் இருக்கிறார் என்பதைத்  தான் அது அடையாளப்படுத்துகிறதா,

இன்னொரு பக்கம் வானம் அப்படியே தரை இறங்கி பூமியின் மீது ஒய்வு கொள்ளப்போகிறதோ எனும்படியாக அதன் சரிவுநிலை காணப்படுகிறது, ஒவியமெங்கும் உணர்ச்சிவேகம் பீறிடுகிறது, நாம் காணமறந்த இரவுகளை. நமது தனிமையை. நமது அகத்துயரை. அடக்கி வைக்கப்பட்ட படைப்பு ஆற்றலை. இயற்கையின் முன்பான நமது எத்தனிப்பை, யாவும் அடங்கிய சாந்தத்தை இந்த ஒவியம் அடையாளம் காட்டுகிறது,

வான்கோ இந்த  ஒவியத்தின் வழியே இரவு குறித்த புதிய பிரக்ஞையை உருவாக்குகிறார், இரவு உறங்குவதற்கான ஒன்று மட்டுமில்லை, அது ஒரு அக நிலை,  இரவில் எல்லாப் பொருட்களும் வசீகரமாகிவிடுகின்றன, இயக்கமின்மையால் உலகம் ஒரு தனித்த அழகு பெறுகிறது, மனிதர்கள் இல்லாத உலகம் அமைதியானது, அது ஒரு கனவைப் போலிருக்கிறது, ஆனால் அதன் தோற்றத்திற்கு அப்பால்  உள்ளார்ந்த கொந்தளிப்பும் பீறிடலும் உள்ளது, அது மனித உத்வேகம், எதையும் செய்துவிடமுடியும் என்ற உறுதியான பற்று  மற்றும் நம்பிக்கை

தனித்திருத்தல் என்பது சதா மனிதனை வாட்டிக் கொண்டேயிருக்கிறது, படைப்பு மனநிலையின் தீவிரம் கொண்ட ஒரு கலைஞனை உலகம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கும் போது அவனது மனம் கொள்ளும் பரிதவிப்பும் போராட்டமும் தான் இங்கே இரவாக விரிந்திருக்கிறது,

இம்பிரஷனிச ஒவிய வகை போல இருந்தாலும் வான்கோ தீட்டும் முறை தனித்துவமாக இருக்கிறது, உன்மத்தம் பிடித்த தீட்டல்க்ள் அவை, வான்கோ நிறங்களைப் பயன்படுத்துவதில் தனித்துவம் கொண்டவர், அவரைப்போல மஞ்சள் மற்றும் நீலத்தை பயன்படுத்தியவர் யாருமில்லை, தன்னுடைய மன உணர்ச்சியின் தீவிரத்தினை வர்ணங்களில் கோடுகளில் காட்டுகிறார், காளை சண்டை வீரனின் சீற்றம் வான்கோவிடம் உண்டு,

ஒளியை வான்கோ பயன்படுத்தும் முறையைப் பாருங்கள். வானவெடிகளில் காணப்படுவது போல வெளிச்சம் சீறுகிறது,  அது இயற்கையில் உருவான வெளிச்சம், அது கதகதப்பு போலவும் இருக்கிறது, வேகம் அதன் எதிர்நிலையான நிதானம். ஆவேசம் அதன் எதிர்நிலையான சாந்தம். இருள் மற்றும் வெளிச்சம். மேல் செல்லுதல் மற்றும் கிழே இறங்குதல். உறக்கம் விழிப்பு என்ற இந்த ஒவியத்திற்குள் தான் எத்தனை எதிர்நிலைகள்

வசிப்பிடத்தை விட  இயற்கை வலிமையானதாக இருக்கிறது, அது விழிப்புணர்வின் அடையாளம் போலவே இருக்கிறது, ஒரு கொதிநிலையின் வெளிப்பாடு போலவே ஒவியம் முழுவதும் ஆவேசம் நிரம்பியிருக்கிறது, அது இரவின் இயல்பு மட்டுமில்லை, ஒவியனின் இயல்பும் அது தான்,

நட்சத்திரங்கள் எப்போதுமே நாம் அடைய முடியாத கனவின் மிச்சம் போலவே இருக்கின்றன ஆகவே வான்கோவின் ஆசைகள் தான் நட்சத்திரமாக ஒளிர்கிறதா- குழந்தைகள் இரவைக் காணும் போது ஏற்படும் வியப்பும் லயப்பும் இந்த ஒவியத்தில் பூரணமாக காணப்படுகிறது, பார்வையாளனும் அதையே உணர்கிறான் என்பது எவ்வளவு  பெரிய சாதனை,

ஒரு பாம்பு நட்சத்திரங்களை விழுங்க வருவது போலவும் அதிலிருந்து தப்பி போவது போலவுமான இயக்கம் இந்த ஒவியத்தில் உள்ளது என்கிறார் கவிஞர் ஆன் செக்டான், அது நிஜம் என்றே தோன்றுகிறது

சுருள் போல சுழித்துச் செல்லும் இரவின் வேகம் தான் ஒவியத்தின் பிரதானப் புள்ளி, அதன் சமநிலை போல அடியில் இயக்கமில்லாத வீடுகள், வானம் ஒரு கதியிலும் பூமி ஒருகதியிலுமாக இருக்கிறது, சீரற்ற தன்மையை சமப்படுத்துவது போல சீரான லயம் கொண்ட ஒழுங்கமைவு உள்ளது, எந்தப் புள்ளியில் இருந்து பார்த்தாலும் இதன் இயக்கம் சீராக இருக்கிறது, நெருப்பின் தழல் போன்ற சீற்றம் ஒவியம் முழுவதிலும் காணப்படுகிறது,  இதை வரைந்தவர்   பூமிக்கும் வானத்திற்கும் இடையில் மிதந்து கொண்டு வரைந்திருக்கிறாரோ எனும்படியாக உள்ளது

சைப்ரஸ் இலைகள்  பச்சைநிறத்தில் மங்கிபோயிருக்கின்றன, நிசப்தம் பூத்திருக்கிறது. குழப்பமுற்ற மனது விசித்திரங்களை உருவாக்கிக் கொள்ள முற்படுகிறது, அதன் விளைவு காட்சிகள் உருமாற ஆரம்பிக்கின்றன

பார்க்க் பார்க்க நாம் அறியாமல் இரவின் உள்ளே கரைந்துபோக ஆரம்பிக்கிறோம், இரவு ஒரு புகை போல பரவுகிறது, ஒரு நறுமணம் போல நம்மைக் கவர்ந்து இழுக்கிறது, கதகதப்பு போல நம்மை அரவணைத்து கொள்கிறது,

ரகசியமில்லாத இரவு என்று ஒன்று இருக்கிறதா என்ன.

இரவு கண்ட காட்சிகளில் பாதி கூட பகல் அறிந்த்தில்லை தானே,

இரவின் முன்னே மனிதர்கள் தங்களது வேசங்களை கலைந்துவிடுகிறார்கள்,

பகலின் ஆடும் நாடகத்தின் வலியை இரவால் துடைத்துக் கொள்கிறார்கள்,

இரவில் மனதின் இயக்கத்திற்கு தன்னை முழுமையாக ஒப்ப்படைத்து கொள்கிறார்கள்,

வார்த்தைகள் மறைந்து போய் உலகம் கொள்ளும் மௌனமே இரவு,

இரவிற்கு ஆயிரம் கண்கள் என்கிறார் ஷேக்ஸ்பியர், மிக உண்மையான வரியது.

வான்கோ இந்த ஒரு ஒவியத்தின் வழியே பல்லாயிரம் மனிதர்க்ள் கடந்து வந்த எண்ணிக்கையற்ற இரவுகளை நினைவுபடுத்துகிறார்,

எல்லாக்காலத்திலும் விழித்திருக்கும் ஒருவன் தனது தனிமையைக் கடந்து செல்ல இரவிடம் தஞ்சம் அடையவே செய்வான் என்பதை நினைவூட்டுகிறது,

I dream of painting and then I paint my dream.  என்கிறார் வான்கோ, இரவைப்பற்றிய அவரது ஒவியமும் அத்தகையதே

நட்சத்திரங்கள் நிரம்பிய இரவு வான்கோவின் தன்னிகரில்லாத ஒவியச்சாதனை, ஒவியர்கள் உலகின் மர்மத்தைப் புரிந்து கொள்ள வழிகாட்டுகிறார்கள் என்பதற்கான சாட்சி இதுவே.

••

0Shares
0