வான்கோவின் காலணிகள்

ஓவியர்கள் Still Life சித்திரங்களாகப் பழங்களையும் மலர்களையும் வரைவதே வழக்கம். ஆனால் ஓவிய மேதை வின்சென்ட் வான்கோ காலணிகளை வரைந்திருக்கிறார். அதுவும் விவசாயிகள், உழைப்பாளர்கள் அணியும் காலணிகளை வரைந்திருக்கிறார். இது ஒரு தனித்துவமான அடையாளம்.

அந்தக் காலணிகள் அவர்களின் துயர வாழ்க்கையின் குறியீடாக உள்ளன.

பாரீஸின் பழைய பொருட்கள் விற்கும் சந்தையில் இந்தக் காலணிகளை வாங்கி வந்து மழைக்கால நடைப்பயணத்தில் தானே அணிந்து சேற்றிலும் சகதியிலும் நடந்து திரிந்து பின்பே அதை ஓவியமாக்கினார் என்கிறார்கள்.

1886 முதல் 1888 வரை வான்கோ பாரீஸில் வசித்து வந்தார். இந்த நேரத்தில்தான் அவர் பல Still Life ஓவியங்களை உருவாக்கினார்; அவை பெரிதும் மீன் அல்லது பழங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள். அபூர்வமாக கைவிடப்பட்ட காலணிகளின் தோற்றத்தை அவர் ஓவியமாக வரைந்தார்.

1886 ஆம் ஆண்டில் A Pair of Shoes என்ற ஓவியத்தை வரைந்தார் இந்த ஓவியம் குறித்து 1930களில் மார்ட்டின் ஹைடெகர் எழுதிய “கலைப் படைப்பின் தோற்றம்” என்ற கட்டுரையில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது

தோலில் செய்யப்பட்ட இந்தக் தேய்ந்த காலணிகள் அதை அணிந்திருந்த மனிதன் மாறுபட்ட நிலப்பரப்பில் நடந்து சென்றதையும், பிரகாசமான நீலவானின் கீழே வேலை செய்ததையும், கடினமான உழைப்பின் பின்பு களைத்துப் போய் வீடு திரும்பியதையும் நினைவூட்டுகின்றன.

போர்வீரர்களின் காலணிகளை அதிகாரத்தின் குறியீடாக நாம் கருதுகிறோம். அதன் எதிர்நிலை போன்றதே விவசாயி காலணி. அவை கடின உழைப்பின், நிராகரிப்பட்ட மனிதனின் நிலையை அடையாளப்படுத்தும் பொருளாகும்.

வான்கோவின் புகழ்பெற்ற ஓவியமான Potato Eatersல் ஏழைக்குடும்பத்தின் உணவுக் காட்சி இடம்பெறுகிறது. அந்த ஓவியத்தில் எவரது கால்களும் காட்டப்படுவதில்லை. ஒருவேளை அது போன்ற ஏழைக்குடும்பத்தின் காலணிகளைப் பின்னாளில் தனியாக வரைந்தாரோ என்னவோ

இந்த இரண்டு காலணிகளும் ஒரே ஜோடியில்லை. இவை தனித்தனியானவை. இரண்டும் இடது பாதத்திற்காகச் செய்யப்பட்ட காலணிகளாகத் தோன்றுவதைக் கவனியுங்கள். ஒன்று உழைப்பாளரின் காலணி போலவும் மற்றொன்று வசதியானவரின் காலணி போலவும் தோற்றத்தில் தெரிகின்றன என்ற ஒரு விமர்சனமும் இந்த ஓவியத்திற்கு உண்டு.

இது ஒரு பெண் அணிந்திருந்த காலணி. அவள் மருத்துவப்பணிகள் மேற்கொள்ளும் செவிலியாக இருந்திருக்கக்கூடும்  என்கிறார் பேராசிரியர் வின்சென்ட் மார்க்

அவரது மற்ற ஓவியங்களைப் போலவே, வான்கோவின் காலணி ஓவியத்திலும் அடர்த்தியான வண்ணப்பூச்சே காணப்படுகிறது. ஒளி மற்றும் வண்ண வேறுபாடு தனித்துவமாகவுள்ளது. வான்கோவின் தூரிகை இந்த ஓவியத்திற்கு ஒரு சுவாரஸ்யமான தன்மையை உருவாக்குகிறது, காலணிகளின் கடினத்தன்மை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டவை என்பது போல உணர்வை வெளிப்படுத்துகிறது. பார்வையாளர்கள் இந்த ஜோடி காலணிகளைப் பார்க்கும்போது,அதை அணிந்திருந்த மனிதன் நிச்சயம் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவனாகவே இருப்பான் என்பதை உணர்த்துகிறது. இந்தக் காலணிகளைப் போலவே வான்கோவின் வாழ்க்கை நிலையும் இருந்தது. அதன் வெளிப்பாடே இந்த ஓவியம் என்று சொல்வாரும் உண்டு.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்த பிரெஞ்சு சமுதாயத்தில் ஏழைகள் விவசாயிகளின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை அறிந்து கொள்ளும் போது தான் இந்த ஓவியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்கிறார் வீலர்.

தனது சகோதரன் தியோவிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்த ஒவியம் பற்றி வான்கோ குறிப்பிடுகிறார். வான்கோ தனது சகோதரனுக்கு எழுதிய கடிதங்கள் மிகச்சிறந்தவை.  அவசியம் வாசிக்கப்பட வேண்டியவை.

••

••

0Shares
0