Van Gogh: Of Wheat Fields and Clouded Skies என்ற ஆவணப்படம் நெதர்லாந்திலுள்ள வான்கோ அருங்காட்சியகத்தைப் பற்றியது. அத்துடன் தன் வாழ்நாள் முழுவதும் வின்சென்ட் வான்கோவின் ஓவியங்களைத் தேடிச் சேகரித்து அவற்றைப் பாதுகாக்க ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கிய ஹெலன் க்ரோல்லர்-முல்லரைப் பற்றியது. இந்த ஆவணப்படத்தை ஜியோவானி பிஸ்காக்லியா இயக்கியுள்ளார்.

நெதர்லாந்தின் கிழக்கில் ஓட்டர்லோ எனுமிடத்தில் பரந்த இயற்கை வெளியின் நடுவே இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கே வான்கோவின் ஓவியங்கள் மட்டுமின்றிப் பிகாசோ, மாண்ட்ரியன் உள்ளிட்ட முக்கிய ஓவியர்களின் படைப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஹெலன் க்ரோல்லர்-அருங்காட்சியகம் 1938 இல் திறக்கப்பட்டது


ஹெலன் மிகப்பெரிய வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். டச்சு தொழிலதிபர் அன்டன் க்ரோல்லரை மணந்திருந்தார். ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்து வந்த ஹெலன் 1911ம் ஆண்டு ஒரு அறுவை சிகிச்சையின் போது மரணத்தைத் தொட்டுத் திரும்பினார். தனது மறுவாழ்வினை அர்த்தப்படுத்திக் கொள்ளக் கலையின் மீது நாட்டம் கொள்ளத் துவங்கினார்.
1912 ம் ஆண்டுப் பாரீஸிற்குச் சென்ற ஹெலன் க்ரோல்லர் வான்கோவின் ஓவியங்கள் உள்ளிட்ட பதினைந்து ஓவியங்களை விலைக்கு வாங்கினார். அப்படித் துவங்கிய அவரது கலைசேமிப்புக் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்தது. அதனைப் பொதுமக்கள் பார்வைக்காகக் கண்காட்சியாகவும் வைத்திருக்கிறார். இன்று ஹெலனின் சேகரிப்பில் வான்கோவின் 300க்கும் மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் சித்திரங்கள் இருக்கின்றன. மிகுந்த அழகோடு அவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

வின்சென்ட் வான்கோவினைத் தன்னைப் போலவே அன்பினையும் முழுநம்பிக்கையைத் தேடும் ஆன்மாவாக ஹெலன் உணர்ந்திருக்கிறார்.. வான்கோவின் ஓவியங்களில் ஆன்மீக தரிசனத்தைப் பெற்றிருக்கிறார்.
இந்த அருங்காட்சியகத்தில் ஹெலனின் கடிதங்களைப் பாதுகாத்து வருகிறார்கள். அதில் அவரது ரகசியக் காதல் மற்றும் கலையின் மீதான ஆழ்ந்த புரிதல் வெளிப்படுகிறது. முதல் உலகப்போரின் காரணமாக அவரது குடும்பம் பொருளாதார வீழ்ச்சியை அடைந்தது. ஆகவே அவர் கனவு கண்டது போல பிரம்மாண்டமாக அருங்காட்சியகத்தை உருவாக்க முடியவில்லை. ஆனாலும் விடாத மனவுறுதியோடு இதனை கட்டி முடித்து 1938ல் திறந்திருக்கிறார்.
பாரீஸிலிருந்து புரோவென்ஸ் வரை வான்கோ வாழ்ந்த இடங்களில் படம் பிடித்துள்ளார்கள். அத்துடன் அவரது ஓவிய உலகில் இடம்பெற்ற மனிதர்களையும் அவர்களுடன் வான்கோவிற்கு இருந்த நெருக்கத்தையும் விவரிக்கிறார்கள்.
வான்கோ மனநலசிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் மாதிரிவடிவம் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருக்கிறது. அங்கே இருந்த நாட்களில் வான்கோ வரைந்த ஒவியங்களையும் அதன் தனித்துவத்தையும் ஆவணப்படத்தில் விவரிக்கிறார்கள்.
நகரவாழ்வின் பரபரப்புகளைத் தாண்டி இயற்கையான சூழலில் மிகுந்த கலைநேர்த்தியுடன் வான்கோவின் ஓவியங்களைக் காட்சிப்படுத்தியுள்ளது முக்கியமானது.
இதே நிலக்காட்சியும் சூரியனும் வான்வெளியும் சூரியகாந்திப்பூக்களும் தான் வான்கோவை வரையச் செய்தார்கள். அதே சூழலைப் பார்வையாளர்களும் பெற வேண்டும் என்ற நோக்கில் தனது அருங்காட்சியகத்தை ஹெலன் உருவாக்கியிருக்கிறார்.
மேகமூட்டமான வானத்தின் கீழ் கோதுமை வயல் என்ற வான்கோவின் புகழ்பெற்ற ஓவியத்தில் வெளிப்படுவது அவரது மனத்துயரே. சோகம் மற்றும் மனச்சோர்வின் அடையாளமாகவே மேகமூட்டமான வானம் சித்தரிக்கப்படுகிறது.
பரந்து விரிந்திருந்த கோதுமை வயல்களால் வான்கோ கவரப்பட்டார். இந்தக் காலகட்டத்தில் தானிய வயல்களைப் பலமுறை வரைந்திருக்கிறார். அவரது சகோதரர் தியோவிற்கு எழுதிய கடிதங்களிலிருந்து தனது சிக்கலான மனவுணர்வுகளை ஒவியத்தில் வெளிப்படுத்த முயன்றார் என்பது தெளிவாகிறது.
கொந்தளிப்பான மனநிலையை மட்டுமின்றி ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாட்டினையும் வான்கோவின் ஒவியத்தில் காணமுடிகிறது. அதை ஹெலன் பூரணமாக உணர்ந்திருக்கிறார். ஆகவே தான் தனது அருங்காட்சியகத்தினை வான்கோவிற்கான ஆலயம் என்று குறிப்பிடுகிறார். அது பொருத்தமானதே.
‘