வான் நோக்கும் கண்கள்

புகைப்படக்கலை அறிமுகமாவதற்கு முன்னால் மன்னர்களும் பிரபுக்களும் ஓவியர்களை வரவழைத்து தனது உருவத்தை வரைந்து கொள்வதை விருப்பமாகக் கொண்டிருந்தனர். இதனால் உருவப்படம் வரையும் திறமையான ஓவியர்களுக்குப் பெரிய கிராக்கியிருந்தது. இதில் ஏராளமான பணமும் கிடைத்தது. ஆனால் உருவப்படம் வரைவதில் திறமைசாலிகளாக இருந்தவர்களில் பெரும்பான்மையினர் ஆண்கள். அதுவும் மூத்த ஓவியர்கள். அவர்களை மீறிப் புதிதாக ஒரு இளம் ஓவியருக்கு வாய்ப்புக் கிடைப்பது அபூர்வம். அதுவும் ஒரு பெண் ஓவியராக இருந்தால் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. இந்தத் தடைகளை மீறி ஓவிய உலகில் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியவர் எலிசபெத் லூயிஸ் வைஸ் லெபே என்ற பிரெஞ்சு ஓவியர்.

மேடம் விஜே லெப்ரூன் என அழைக்கப்பட்ட எலிசபெத் பதினெட்டாம் நூற்றாண்டின் முக்கிய ஓவியராக விளங்கினார். இவரது தந்தை ஒரு ஓவியர். அதுவும் உருவப்படம் வரைவதில் திறமைசாலி. ஐந்து வயது முதலே தந்தையிடம் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டார் எலிசபெத்.

தன் வாழ்நாளில் 600க்கும் மேற்பட்ட உருவப்படங்களையும் 200 நிலக்காட்சி ஓவியங்களையும் வரைந்திருக்கிறார். இதில் பாதி மன்னர்களின் உருவப்படங்கள். மற்றும் பிரபுக்கள், அமைச்சர்கள். கலைஞர்களின் உருவச்சித்திரங்களே.

பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை ஒவியக்கல்லூரிகளில் பெண்களைச் சேர்க்க அனுமதியில்லை. பெண்கள் நிர்வாணமாகப் போஸ் கொடுக்கலாம். ஆனால் அவர்கள் நிர்வாண உடல்களை வரைய அனுமதி கிடையாது. புகழ்பெற்ற ஓவியர்கள் எவரும் தனது சீடர்களாகப் பெண்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையில் தான் எலிசபெத் ஓவியராக விரும்பினார்.

அவரது காலகட்டத்தில் ஆண்களுக்கு மட்டுமே வீட்டில் ஆசிரியர்களை வைத்துப் பாடம் நடத்தும் வழக்கமிருந்தது. பெண்பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தர ஆசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள். ஆகவே பெண்களைக் கான்வென்ட் பள்ளிக்கு அனுப்பிப் பூத்தையல், சமையல் மற்றும் குடும்பத்திற்குத் தேவையான கணக்கு மற்றும் எழுத்து கொண்ட கல்வி புகட்டப்பட்டது. எலிசபெத்தும் அப்படி ஒரு கான்வென்டில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்திருக்கிறார். படிப்பை முடித்தவுடன் திருமணம் ஏற்பாடு செய்வதே அந்த நாளைய வழக்கம். ஆனால் ஓவியத்தில் ஆர்வம் கொண்ட எலிசபெத் உடனடியாகத் திருமணத்தை ஏற்கவில்லை. ஒரு நாள் அவர் தந்தையின் வண்ணங்களை எடுத்து தனது தம்பியின் உருவப்படத்தை அழகாக வரைந்து காட்டினார் எலிசபெத்.

அந்த ஓவியத்தினை கண்ட ஆர்ட் டீலர் ஒருவர் அவருக்கான புதிய வேலை ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார். பன்னிரண்டு வயதுகளிலே ஓவியம் வரைந்து சம்பாதிக்கத் துவங்கினார் எலிசபெத். அவரது நுட்பமான அவதானிப்பும், தேர்ந்த நிறத்தேர்வும் துல்லியமான தோற்ற வடிவமும் அவரைச் சிறந்த உருச்சித்திர ஓவியராக்கியது.

கலையுலகில் அவருக்குத் துணையாக இருந்த தந்தை இறந்துவிடவே எலிசபெத் மனம் உடைந்து போனார். அவரது தாய் மறுமணம் செய்து கொண்டார். மாற்றாந் தந்தையை எலிசபெத்திற்குப் பிடிக்கவில்லை. அவரோ ஓவியம் வரைவதன் வழியே எலிசபெத்திற்குக் கிடைக்கும் பணம் முழுவதையும் தனதாக்கிக் கொண்டார்.

தானே சுயமாக ஓவியம் கற்றுக் கொண்டவர் என்பதால் எலிசபெத் தனது திறமையை மேம்படுத்திக் கொள்வதற்காக ஓவிய மேதைகளின் ஓவியங்களைக் காண ஆர்ட் கேலரி மற்றும் ம்யூசியங்களுக்குச் சென்று பார்ப்பதில் ஈடுபாடு கொண்டார் அத்தோடு. அவற்றை நகலெடுத்துப் பயிற்சி செய்வதிலும் ஈடுபட்டார். இந்தப் பயிற்சி அவருக்குக் கூடுதல் பலத்தையும் தெளிவினையும் கொடுத்தது. குறிப்பாக ரூபன்ஸின் ஒவியங்களை அவர் மிகவும் விரும்பினார். அவரது வாரிசாகவே தன்னை உணர்ந்தார்.

அந்த நாட்களில் ஓவியம் வரைந்து விற்பனை செய்வதற்கு முறையான உரிமை பெற வேண்டும். இல்லாவிட்டால் தடை செய்துவிடுவார்கள். அப்படிச் சுயமாக ஓவியம் வரைந்து வந்த எலிசபெத்தின் ஸ்டுடியோவை தடை செய்துவிட்டார்கள். அந்த நாட்களில் இரண்டே நிறுவனங்கள் தான் அதற்கான உரிமத்தைக் கொடுத்தன. அதில் ராயல் அகாதமியில் தன்னைச் சேர்க்கமாட்டார்கள் என உணர்ந்த எலிசபெத் செயிண்ட் லூக் அகாதமியில் தன்னை பதிவு செய்து கொண்டார். அவரது ஓவியங்களைப் பரிசீலனை செய்த அமைப்பு அவரை உடனடியாக அங்கீகரித்து உரிமை வழங்கியது. இதனால் அவர் தொழில்முறை ஓவியராகச் செயல்படத் துவங்கினார்

இளம்பெண் என்பதால் தான் படம் வரையும் ஆண்களின் கண்களிலிருந்து தப்புவதற்காக அவர்களின் வான் நோக்கிப் பார்ப்பது போல அமர வைத்துப் படம் வரைவது அவரது வழக்கம். ஏதோ கனவுகளுடன் இருப்பது போல உயர்த்திய பார்வை கொண்ட அவரது உருவச்சித்திரங்கள் தனித்துவமாக அறியப்பட்டன. அவரது உருவச்சித்திரங்கள் யாவிலும் கண்கள் மிகச்சிறப்பாக வரையப்பட்டிருக்கின்றன.

இவரது புகழை அறிந்த ஓவியர் மற்றும் கலை வணிகரான ஜீன்-பாப்டிஸ்ட்-பியர் லு ப்ரூன் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். எலிசபெத்திற்கு இதில் விருப்பமில்லை. ஆனால் அவரது அம்மாவின் வற்புறுத்தல் காரணமாக அவரைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து கலை உலகில் புகழ்பெறத் துவங்கினார்கள். எலிசபெத்தின் கணவர் அரச குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தவர் என்பதால் அவளைத் தேடி நிறைய வாய்ப்புகள் வந்து குவிந்தன

மன்னர் குடும்பச் சித்திரங்களை வரைந்து கொடுத்து நிறையப் பணம் சம்பாதித்தார். கண் பார்வையிலே துல்லியமாகத் தோற்றத்தைக் கணித்துவிடுவதுடன் துல்லியமாக அதைத் திரையில் வரைந்து காட்டும் திறமை கொண்டிருந்தார் எலிசபெத். இதனால் அவருக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உருவானார்கள்.

அவரது காலத்தின் முன்னணி ஓவியர்களைப் போல நான்கு மடங்கு அதிகம் ஊதியம் பெற்றார் எலிசபெத். அது ஓவியர்களிடம் பொறாமையை ஏற்படுத்தியது. வசதியான வாழ்க்கை. ஏராளமான வேலைகள் எனப் பரபரப்பாக இருந்தார் எலிசபெத்

இந்நிலையில் கணவருடன் இணைந்து நெதர்லாந்திற்குப் பயணம் செய்து ஒவியக்கூடங்களைப் பார்வையிட்டார். முக்கிய ஓவியர்களைச் சந்தித்து உரையாடினார். ஓவிய உலகில் ஒரு இளம்பெண் இத்தனை புகழ் பெற்று வருகிறாளே எனப் பலரும் வியந்தார்கள். எலிசபெத்திற்கு முதல் குழந்தை பிறந்தது. ஜூலி என்று பெயரிடப்பட்ட அந்த மகளை மிகவும் ஆசையாக வளர்த்தார் எலிசபெத்

1787 ஆம் ஆண்டில், மகள் ஜூலியுடன் (1787) தன்னுடைய சுய உருவப்படம் ஒன்றை வரைந்து காட்சிக்கு வைத்தார். அது பெரிய வரவேற்பினைப் பெற்றது.

இதற்கிடையில் பிரான்சின் மகாராணி மேரி அன்டோனெட் மற்றும் அவரது குழந்தைகள் ஓவியம் வரைவதற்காக எலிசபெத் அழைக்கப்பட்டார். ராணி தன்னிடம் காட்டிய அன்பும் நட்பும் மறக்க முடியாதது. ஒரு போதும் அவர் தன்னைக் கோவித்துக் கொள்ளவில்லை. காக்க வைக்கவில்லை. தனக்காக நேரம் ஒதுக்கிச் சிறப்பாக ஒத்துழைப்புச் செய்தார். கலைஞர்களை மதிக்கும் அவரது மனது தன்னை மிகவும் கவர்ந்துவிட்டது என்று எலிசபெத் தனது குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார்.

ராணி மற்றும் அவரது குடும்பத்தினரின் 30க்கும் மேற்பட்ட உருவப்படங்களை எலிசபெத் வரைந்திருக்கிறார் அதில் ஒன்றே மேரி அன்டோனெட்டின் அதிகாரப்பூர்வ உருவப்படமாக அங்கீகரிக்கப்பட்டது.

தனது குழந்தைகளுடன் மேரி அமர்ந்திருக்கும் காட்சியில் அவர் ஒரு மஸ்லின் உடை அணிந்திருக்கிறார். அவரது ஓவியத்தின் பின்புலத்தில் பெரிய நகைப்பெட்டி காணப்படுகிறது. வைர வைடூரியங்களை விடவும் குழந்தைகள் முக்கியமானவர்கள் என்பதைக் குறிக்கும் விதமாக மகாராணி குழந்தைகளை அணைத்தபடியே இருப்பது போல ஓவியம் வரைந்திருந்தார் எலிசபெத். ஓவியத்தின் வலதுபுறத்தில் ஒரு வெறும் தொட்டில் காட்டப்படுகிறது. காரணம் அது மகாராணி சமீபத்தில் ஒரு குழந்தையை இழந்ததைக் குறிக்கிறது, பிரான்சின் மகாராணி என்பதைவிடவும் ஒரு தாயாக மேரி-அன்டோனெட்டின் பங்கை மேலும் வலியுறுத்துவது போல அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது.

அவர் வரைந்த ஓவியம் ஒன்றில் ராணி பருத்தி உடையில் இருப்பது போல வரைந்திருக்கிறார். அது அரண்மனையில் கடுமையான சர்ச்சையை உருவாக்கியது. அந்த ஒவியத்தை அழித்துவிட வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் எலிசபெத் அதை ஏற்கவில்லை

மகாராணியின் அன்புக்குப் பாத்திரமானதால் அவரை ராயல் அகாதமியின் நிதி நல்கை பெறுபவர்களில் ஒருவராக அறிவித்தார் மகாராணி. அதை அகாதமி உறுப்பினர்கள் ஏற்கவில்லை. ஆனால் அரசரின் வற்புறுத்தல் காரணமாக ஏற்றுக் கொண்டார்கள். இரண்டு ஆண்டுகள் அவர் நிதிநல்கையைப் பெற்றுக் கொண்டு ஓவியங்கள் வரைந்தார். ஆனால் அவர் வரைந்த ஓவியங்களை ராயல் அகாதமி தனது பெருமைக்குரியதாகக் கருதவில்லை என்று கூறி நிராகரிப்பு செய்தது.

பிரெஞ்சுப் புரட்சியின் காரணமாக மன்னராட்சி அகற்றப்பட்டது. இதனால் தனக்கும் ஆபத்து நேரிடக்கூடும் என நினைத்த எலிசபெத் தனது மகளுடன் நாட்டை விட்டு வெளியேறினார். பன்னிரண்டு ஆண்டுகள் அவர் வேறு தேசங்களில் வாழ்ந்தார்.

இத்தாலி, ஜெர்மன். ரஷ்யா என அவர் சுற்றியலைந்தார். அந்தக் கால கட்டத்தில் நிறைய நிலக்காட்சி ஓவியங்களை வரைந்திருக்கிறார். ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அழகில் மயங்கி அவர் வரைந்த நிலக்காட்சி ஓவியங்கள் அற்புதமானவை.

முடிவில்லாத பயணத்தின் இடையிலும் அவர் வரைந்த ஓவியங்களின் எண்ணிக்கை வியப்பூட்டக்கூடியது.

உருவச்சித்திரத்தை வரையும் போது அவர் ஆடைகளை மிகத் துல்லியமாக, பேரழகுடன் வரைந்தார். அது பெண்ணால் மட்டுமே வரையக்கூடிய பாணி என்று தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார். .

ஆடையின் நிறங்களைத் தேர்வு செய்வதில் துவங்கி அதன் மடிப்புகளை வரைவது வரை மிகவும் கவனமாக இருப்பேன். இதற்கு எனது மாடல்கள் பெரும் ஒத்துழைப்புத் தந்தார்கள். அவர்களின் நம்பிக்கையைப் பெறுவது முக்கியமான வேலை. பகட்டான ஆடம்பரத்திற்கு மாற்றாக இயல்பான அழகினை உருவாக்க முயன்றேன். இது ரபேல் மற்றும் டொமினிச்சினோவின் ஓவிய முறைகளைப் பின்பற்றி உருவாக்கிக் கொண்ட பாணியாகும். என்றும் குறிப்பிடுகிறார்

1786 ஆம் ஆண்டில், ராணியை ஓவியம் வரைந்தபோது அவருடைய தலைமுடியை நெற்றியின் முன்விழும்படி செய்யுமாறு கெஞ்சினேன். அதைக் கேட்ட ராணி “எனது பெரிய நெற்றியை மறைக்க நான் இதை ஏற்றுக்கொண்டேன் என்று மக்கள் சொல்வதை நான் விரும்பவில்லை என்று மறுத்தார்

மகாராணி மேரி அன்டோனெட் நல்ல உயரமும் கட்டான உடலும் கொண்டிருந்தார். அவரது கைகள் மிக அழகாக இருந்தன. அவரது கால்கள் நடனமங்கையின் கால்களைப் போலிருந்தன. அவளது தலையலங்காரம் பகட்டாகயில்லை. ஆனால் கம்பீரமாக இருந்தது. அவளது முகத்தின் இனிமை தனியே ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவரது கண்கள் பெரிதாக இல்லை; நிறத்தில் அவை கிட்டத்தட்ட நீல நிறத்திலிருந்தன, அவை ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் கனிவாகவும் இருந்தன. அவளுடைய மூக்கு மெல்லியதாகவும் அழகாகவும் இருந்தது, உதடுகள் தடிமனாக இருந்தபோதிலும் அவளுடைய வாய்ப் பெரிதாக இல்லை. ஆனால் அவளுடைய முகத்தைப் பற்றி மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் அவளுடைய நிறத்தின் அற்புதம். அவரைப் போன்ற புத்திசாலித்தனமான ஒருவரைப் பார்த்ததில்லை, புத்திசாலித்தனமான வார்த்தை, ஏனென்றால் அவளுடைய சருமம் அத்தனை மிருதுவாக இருந்தது. அதன் ஒளிர்வை வரைவதற்கு என்னிடம் வண்ணங்கள் இல்லை, அவளது உடலின் மென்மையான நிறம் என்னை மயக்கியது. அப்படி ஒரு பெண்ணை அதுவரை நான் கண்டதேயில்லை என்கிறார் எலிசபெத்

ஒன்பது அடி உயரமுள்ள அந்தப் பெரிய உருவப்படம் கம்பீரமாக இருந்தது.. ராணி அணிந்துள்ள ஆடம்பரமான சிவப்பு கவுன் அவரது அதிகாரத்தின் குறீயிடாக உள்ளது. ஹால் ஆஃப் மிரர்ஸை ஒட்டிய ஒரு அறையில் அவள் தனது குழந்தைகளால் சூழப்பட்டிருக்கிறாள்., அவள் மடியில் வைத்திருக்கும் மகள் தாயை ஏறிட்டு அழகாகப் பார்க்கிறாள். இந்த ஓவியத்தில் கன்னிமேரியின் சாயல் எழுகிறது.

ஓவியர் ரூபன்ஸின் தலைசிறந்த படைப்புகளைக் காண எலிசபெத் ஃப்ளாண்டர்ஸுக்குத் சென்றார். பிளெமிஷ் தேவாலயங்களிலிருந்த ஓவியங்களை ரசித்துப் பார்த்தார். ரூபன்ஸ் ஓவியத்தில் வருவது போலவே தலையில் ஒரு வைக்கோல் தொப்பி, ஒரு இறகு, மற்றும் காட்டுப் பூக்களின் மாலையை வைத்துக் கொண்டு காட்சி அளித்தார் ரூபன்ஸின் ஓவியங்களில் இருந்து தான் நிறையக் கற்றுக் கொண்டதாகக் கூறும் எலிசபெத் முகபாவங்களை வரைவதிலும். மலர்களை வரைவதிலும் அவரது பாணியை அப்படியே தான் பின்பற்றியதாகக் கூறுகிறார்

இங்கிலாந்தின் அரச குடும்பத்தினரை ஓவியம் வரைவதற்காக எலிசபெத் அழைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அங்கே வசிக்கத் திட்டமிட்டிருந்தார் ஆனால் ஓவியர்களுக்குள் இருந்த போட்டி பொறாமை மற்றும் அவர்கள் செய்த சதிவேலைகள் காரணமாக இங்கிலாந்தை விட்டு அகன்று பாரீஸ் திரும்பினார்

அவரது ஆசை மகள் ஜுலி தன் விருப்பம் போலத் திரிந்து வேசையாகி உடல் நலிவுற்று மேகநோய் தாக்கி மரணப்படுக்கையில் கிடக்கிறாள் என்று அறிய வந்தபோது எலிசபெத் துடித்துப் போனார்.

மகளைக் காணுவதற்காக அவள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றார். மகளை வளர்ப்பதில் தான் பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்தார். மகள் மரணப்படுக்கையில் தாயைக் கண்டபோதும் அவளுடன் மனம் விட்டுப் பேசவில்லை. அவள் புகழ்பெற்ற ஓவியரின் மகளாக இருப்பதற்காக வருந்துகிறேன் என்று சொன்னாள். அது எலிசபெத்தை ஆழமாகக் காயப்படுத்தியது. மகளின் மரணமும் அதைத் தொடர்ந்த வெறுமையும் எலிசபெத்தை முடக்கியது

சில ஆண்டுகள் அவர் ஓவிய உலகை விட்டு ஒதுங்கி வாழ்ந்தார். பின்பு கவிதை மற்றும் இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டு கலைஞர்களுடன் நெருங்கிப் பழகினார். நிறைய வாசித்தார்.தனது சுயசரிதையை எழுதினார். மூன்று தொகுதிகளாக அவை வெளியாகின.

லேடி ஹாமில்ட்டனை வரைந்த அவரது ஓவியம் அவருக்குப் புதிய பணிகளை ஏற்படுத்தித் தந்தது . அந்த ஓவியம் அவளது தனித்துவமிக்க அடையாளமாகவே மாறியது

பொதுவாகப் பெண்கள் கையில் பெரிய புத்தகம் ஒன்றை வைத்திருப்பது போலவே உருவச்சித்திரம் வரைவது மரபாக இருந்தது. அதை எலிசபெத் விரும்பவில்லை. அவரது ஓவியங்களில் பெண்கள் வெறும் அழகுப் பதுமையாகச் சித்தரிக்கப்படவில்லை.

மன்னர் குடும்பத்தினரை ஓவியம் வரைவதில் உள்ள சிக்கல் அவர்கள் விரும்பும் நேரம் மட்டுமே படம் வரைய முடியும். அவர்களுக்கு உத்தரவிட முடியாது. அவர்கள் விரும்பும் படி தான் அமர்ந்திருப்பார்கள். பெரும்பான்மை அரசர்களின் உடல் பருமனாக இருக்கும். முகம் பருத்துவீங்கிப் போயிருக்கும். அவற்றை அழகான உடற்கட்டு இருப்பது போல வரைய வேண்டும். ஆடைகள் நகைகள் எனப் பகட்டாக அலங்காரம் செய்து கொண்டிருப்பார்கள். தேவையற்ற அலங்காரத்தை அகற்றச் செய்ய வேண்டும். பாதி வரைந்து கொண்டிருக்கும் போது மன்னருக்குக் கோபம் வந்துவிடும். அவர் மனம் அறிந்து நடக்க வேண்டும். ஒரு அமைச்சரின் படத்தை அவள் வரைந்த போது தனது கால்கள் குட்டையாக வரையப்பட்டிருப்பதாக அந்த அமைச்சர் அவள் மீது கோபம் கொண்டு அவளைச் சிறைக்கு அனுப்பப் போவதாக மிரட்டினார். இன்னொரு ஓவியத்தில் மகாராணி பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார். இது அவமானப்படுத்தும் செயல் எனப் புகார் சொன்னார்கள். மன்னரின் இரட்டை குழந்தைகளை அவள் ஓவியமாக வரைந்த போது அந்தக் குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சியில்லை என்ற விமர்சனம் உருவானது. இத்தனை தடைகளைத் தாண்டி அவள் சிறந்த ஓவியராகப் பெயர் எடுத்தார். தன் காலகட்டத்தின் அத்தனை பெரிய மனிதர்களையும் வரைந்திருக்கிறாள். ராணியின் விருப்பத்திற்குரிய உருவப்படக் கலைஞராக இருந்திருக்கிறார்.

ஒரு பெண்ணாக அவர் ஓவிய உலகில் சந்தித்த தடைகள் பிரச்சனை ஏராளம். ஆனால் அவற்றைத் தனது ஒவியத்திறமையால் வென்று காட்டியதுடன் தனித்துவமிக்கக் கலைஞராகப் பெயர்பெற்றிருக்கிறார்.

எலிசபெத்தின் ஓவியங்களை இன்று நாம் காணும்போது அந்த உருவங்களின் கண்களும் உதடுகளும் உயிர்ப்புடன் இருப்பதை உணருகிறோம். உடைகளை அத்தனை நேர்த்தியாகத் துல்லியமாக வரைந்திருப்பதைக் கண்டுவியக்கிறோம். நிழலும் ஒளியும் மாயத்தன்மையை உருவாக்குவதைக் கண்டு பிரமிக்கிறோம். அரச குடும்பத்து மனிதர்கள் என்ற போதும் அவர்கள் மனதிலுள்ள கவலையை ,தனிமையை, வெளிப்படுத்த முடியாத வேதனையை அந்த ஓவியத்தில் பதிவு செய்திருப்பதைக் காணுகிறோம். உருவத்தை மட்டுமின்றி ஆன்மாவையும் எலிசபெத் ஆழ்ந்து உணர்ந்து வரைந்திருக்கிறார்

தனது சுய உருவ ஓவியத்தில் எலிசபெத் கண்களில் கனவு மிதக்கிறது. அவள் உறுதியாக, நம்பிக்கையுடன் தோற்றம் தருகிறாள். அந்தக் கண்கள் நம்மை நேராக எதிர்கொள்கின்றன. நம்மிடம் எதையோ சொல்வது போலிருக்கின்றன.

காலத்தால் நமது உடல் அழகு பறித்துக் கொள்ளப்படும் என்ற போதும் அதை அழியாத சித்திரமாக மாற்றிப் பாதுகாத்துக் கொள்ளவே மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள். மன்னர்களின் அதிகாரம் இன்று பறிபோய்விட்டது. அவர்களின் உருவச்சித்திரங்கள் காலத்தின் அடையாளமாக மிச்சமிருக்கின்றன.

எலிசபெத் ஒரு நூற்றாண்டின் கொந்தளிப்பான நிகழ்வுகளுக்குச் சாட்சியமாக இருந்திருக்கிறார். வெளியுலகம் அறியாமல் அரண்மனைக்குள் வாழ்ந்து மடிந்த அரச குடும்பத்துப் பெண்களின் அந்தரங்கங்களை அறிந்திருக்கிறார். தன் அழகைப் பிறர் பாராட்ட வேண்டும் என்ற ஆசை மன்னர் முதல் சாமானிய மனிதர் வரை இருப்பதை உணர்ந்திருக்கிறார். வண்ணங்களை அவர் உபயோகித்துள்ள விதமும் நேர்த்தியும் நிகரற்ற கலைப்படைப்புகளை உருவாக்கியவராக அவரைக் கொண்டாடச் செய்கின்றன

••

0Shares
0