வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை

‘வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை’ என்ற பயணியின் மொழியாக்கத்தில் வெளியான சீனக்கவிதை நூல் சமீபத்தில் வெளியான புத்தகங்களில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது, சீனாவின் மரபு இலக்கியக் கவிதைகள் நேரடியாக சீன மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருப்பது இதுவே முதல்முறை,

ஐரோப்பிய இலக்கியங்கள், ருஷ்ய இலக்கியங்கள் அறிமுகமான அளவிற்கு தமிழில் சீன இலக்கியங்கள் அறிமுகமானதில்லை, லூசுன் சிறுகதைகள், லாவோட்சூவின் தாவோ மொழியாக்கம், கன்ப்யூசியஸின் தத்துவங்கள், இளைஞன் ஏர்கையின் திருமணம். பெருஞ்சுவருக்குப் பின்னே. மிதந்திடும் சுயபிரதிமைகள் போல மிகக் குறைவான புத்தகங்களே தமிழில் வாசிக்க கிடைக்கின்றன,

நான் சீன இலக்கியங்களை வாசிப்பதில் அதிக நாட்டம் கொண்டவன், எனக்கு மிகவும் விருப்பமான கவிஞர்களான லீபெய், (Li Bai,) துபோ (Du Fu) ஆகிய இரண்டு சீனக்கவிஞர்களை தொடர்ந்து வாசித்து வருபவன், அவர்கள் கவியுலகம் குறித்து எனது கூழாங்கற்கள் பாடுகின்றன நூலில் ஒரு விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன், அது போலவே அட்சரம் இலக்கிய இதழ் நடத்திய போது சமகால சீன இலக்கியங்கள் குறித்து தனி இதழ் ஒன்றினை வெளியிட்டிருக்கிறேன்,

இந்தியாவைப் போலவே நீண்ட இலக்கியப் பராம்பரியம் உள்ள சீன இலக்கியத்தில் அதன்பழமைக்கும்  சமகால இலக்கியப் போக்கிற்கும் நடுவில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

சீனாவின் செவ்வியல் இலக்கியம் தமிழ் இலக்கியத்துடன் அதிக நெருக்கமுடையது, சங்கக் கவிதைகளைப் போலவே இவையும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையின் சந்தோஷத்தை, காதலின் துயரை, தனிமையை, பிரிவைப்பாடுகின்றன,

ருஷ்ய இலக்கியங்கள் நேரடியாக ருஷ்ய மொழியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன, அதற்காக ராதுகா பதிப்பகம் தனித்துறையை அமைத்து தமிழ், ரஷ்யன் ஆகிய இரண்டு மொழிகளும் அறிந்த சிறந்த மொழிபெயர்ப்பாளர்களை மாஸ்கோவில் பணியில் அமர்த்தி மொழியாக்கப்பணியை மேற்கொண்டார்கள், அது போலவே பிரெஞ்சில் இருந்து நேரடியாக வெ. ஸ்ரீராம் மிக முக்கியமான இலக்கியப் படைப்புகளை தமிழாக்கம் செய்திருக்கிறார். சீன இலக்கியத்தில் இது போன்ற முயற்சிகள் மிகக் குறைவாகவே நடந்திருக்கின்றன,

தற்போது வெளியாகியுள்ள பயணியின் வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை -சீனக்கவித்தொகை நூல் அந்தக் குறையைப் போக்கி செழுமையான ஒரு நேரடி மொழியாக்கப்பணியை மேற்கொண்டிருக்கிறது

சீனாவில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக பணியாற்றியவர் ஸ்ரீதரன், இவரே பயணி என்ற பெயரில் மொழியாக்கம் செய்திருக்கிறார், ஸ்ரீதரன் நவீன நாடகங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர், சென்னையில் இவரது நாடகங்களைக் கண்டிருக்கிறேன்,  விகடன் மாணவ பத்திரிக்கையாளராக இருந்தவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதியிருக்கிறார்.

சீன மொழியைக் கற்றுக் கொண்டு அதன் செவ்வியல் கவிதைகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் Shi Jing [Book of Odes] எனும் கவித்தொகையின் தேர்ந்தெடுத்த பாடல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார், இந்த மொழிபெயர்ப்பின் சரளமும் கவித்துவமும் அவர் எந்த அளவு சீனமொழியில் தோய்ந்து போயிருக்கிறார் என்பதை சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன

சீனாவின் முதல் நூல் என்று கருதப்படும் Shi Jing [Book of Odes] இரண்டாயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு முற்பட்டது, இதனை மொழியாக்கம் செய்வது பெரிய சவால், இதற்கு மொழியறிவு மட்டும் போதாது, சீனாவின் பண்பாடு குறித்தும்,  கவிதை மரபுகள் குறித்தும் ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் தேவை, அதே நேரம் இவற்றை மூலத்தின் சுவை மாறாமல் தமிழாக்கம் செய்வதற்கு தமிழில் தேர்ந்த கவித்துவமும் அவசியம்,

பயணி இந்த மூன்றிலும் தேர்ந்தவராக இருக்கிறார், அவரது தமிழ் மொழியாக்கத்தில் சீனக்கவிதைகளை வாசிக்கையில் அதன் தனித்துவத்தையும் உணர முடிகிறது, தமிழ்படுத்தும் போது எவ்வளவு கவனமாக சொற்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது, உணர்ச்சி வெளிப்பாடு எவ்வளவு நுண்மையாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது

இந்த நூலின் இன்னொரு சிறப்பு இக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு குறித்த பயணியின் கட்டுரையும், தமிழ்மரபின் பார்வையில் சீனக்கவிதைகளை ஆராயும் மதிவாணனின் சிறந்த கட்டுரையும், சீனமரபு இலக்கியம் குறித்த ஆ. இரா, வேங்கடாசலபதியின் அறிமுக கட்டுரையுமாகும், இவை சீனக்கவிதைகள் குறித்த சரியான அறிமுகத்தையும் முக்கியத்துவத்தையும் வாசகனுக்கு அடையாளம் காட்டுவிடுகின்றன,

மதிவாணன் கட்டுரையில் ஒரு முக்கியமான செய்தியை குறிப்பிடுகிறார், பழந்தமிழ் கவிதைகளில் இயற்கையை இயற்கைக்காகவே பாடும்பாடல் எதுவுமில்லை, அதில் தலைவன் தலைவி ஆகியோரின் உணர்ச்சிநிலைகள் ஏற்றித் தான் பாடப்படுகின்றன, ஆனால் சீனக்கவிதைகளில் இயற்கை அதன் இயல்பில், எந்த உணர்ச்சிகளையும் ஏற்றப்படாமல் எழுதப்படுவதும் ஒரு தனிமரபாகயிருக்கிறது என்று தாழ்நிலத்தின் நெல்லிமரம் என்ற பாடலை குறிப்பிடுகிறார்,  இது முக்கியமான ஒன்று, இயற்கையை நாம் எவ்வாறு அணுகுகிறோம், சீனக்கவிதைகள் எவ்வாறு அணுகுகிறது என்பதில் உள்ள நுட்பமான வேறுபாடு சுட்டிக்காட்டப்படுகிறது

இந்த நூலைப்பற்றி குறிப்பிடும் பயணி, Shi Jing -Book of Ode நூலில் நாட்டுப் பாடல்கள், விழாப் பாடல்கள், வேண்டுதல் பாடல்கள் என 305 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன தமிழின் சங்க இலக்கியத்துக்கும் சீனாவின் “ஷிழ் சிங்’குக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. சங்கப் பாடல்கள் எந்த காலத்தில் எழுதப்பட்டன, எவ்வாறு இவை தேர்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டன என்பதற்குச் சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதைப் போலவே “ஷிழ் சிங்’ கவிதைகளும் எப்போது எழுதப்பட்டன, தொகுக்கப்பட்டன என்பது துல்லியமாகத் தெரியாது.

கன்ஃபூஷியஸ் இந்த நூலை அடிக்கடி மேற்கோள் காட்டியிருக்கிறார் என்பதோடு, இப்பாடல்களைப் படிக்காமல் இருப்பது எதையும் பார்க்காமல் சுவரின் பக்கம் திரும்பி நின்று கொண்டிருப்பது போன்றது என்றும் கூறுகிறார்

“வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை’ நூலில் 34 பாடல்களே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் கவித்துவத் தெறிப்புகள் வாசகனை கிறங்கச் செய்கின்றன

பாடல் எண் 26ல் ஒரு பெண்ணின் மன உளைச்சல்கள் கவிதையாக மாறியிருக்கின்றன, இதில் ஒரு வரி இடம் பெற்றுள்ளது

கண்ணாடியில்லையே எனது மனம்

காண்பதையெல்லாம் செரித்துவிட

இந்த ஒற்றை வரி மனதில் ஒயாத ரீங்காரம் போலாகி பல்வேறு ஒப்புமைகளை, உணர்ச்சிகளை, நினைவுகளை மோதச்செய்கிறது,

பயணி இப் பாடல்களை சீனாவில் இருந்து மொழியாக்கம் செய்யும் போது எவ்வளவு நேர்த்தியாக தமிழாக்கம் செய்திருக்கிறார் என்பதற்கு இதன் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தால் புரிகிறது, தமிழாக்கத்தின் போது இது செவ்விலக்கிய கவிதையின் சாயலில் இருக்க வேண்டும் என்பதற்காகவே பழமையான சொற்களைத் தேர்வு செய்திருக்கிறார், ஆங்கில மொழிபெயர்ப்பில் காணப்படும் கவிதையில் இது ஒரு மரபுக்கவிதை என்ற தொனியை உணர முடிவதில்லை, தமிழ்பாடலில் நாம் கேட்கும் ஒசையானது சங்க கவிதைகளின் தொடர்ச்சி போலவே இதை அடையாளப்படுத்துகின்றன

சீனக்கவிதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும் போது நிறைய சிக்கல்களை எதிர்கொள்கின்றன, அது மொழியாக்கம் தொடர்பானது மட்டுமில்லை பண்பாடு தொடர்பானது என்பதை கவிஞர் எஸ்ராபவுண்ட் தனது மொழியாக்கத்தின் போது  விளக்கியிருக்கிறார்,

There are the sun and moon ,

How is it that the former has become small , and not the latter ?

The sorrow cleaves to my heart ,

Like an unwashed dress .

Silently I think of my case ,

But I cannot spread my wings and fly away .

**

கதிர்கள் சாய்ந்து நிலவெழுந்தாலும்

தேய்ந்த அவைதாம் திரும்பி வராதோ

எந்தன் மனதில் சோகம் தோன்றும்

அலசா அழுக்குத் துணியா ஆகும்

எனக்குள்  இதையே சிந்தித்திருக்கிறேன்

எழும்பிப் பறந்திட இயலாதிருக்கிறேன்

இரண்டையும் வாசிக்கையில் தமிழ் மொழியாக்கம இக்கவிதை பழமையான ஒன்று என்பதை வாசிக்க துவங்கியதுமே புரிய வைத்துவிடுகிறது, அதே நேரம் உணர்ச்சிகள் வெகு துல்லியமாக, ஆழமாக வெளிப்படுத்தப் படுகின்றன என்பதையும் வாசகனால் நன்றாக உணர முடிகிறது

காதல்பாடல்கள் மட்டுமில்லாது கொடும்பஞ்சம் பற்றிய ஒரு பாடலையும் இதில் பயணி தமிழாக்கம் செய்திருக்கிறார், அக்கவிதை நமது தாதுவருஷப்பஞ்சக்கும்மியை போன்றே இருக்கிறது,

பயணியின் தேர்ந்த மொழியாக்கம் சீனகவித்தொகையின் அசலான ருசியை நமக்கு அறிமுகம் செய்கிறது, தமிழின் குறுந்தொகைப் பாடல்களை வாசிக்கும் போது கிடைக்கும் மனக்கிளர்ச்சியும் சந்தோஷமும் இந்த மொழியாக்கத்திலும் கிடைக்கிறது, அதற்காகப் பயணி மிகுந்த பாராட்டிற்குரியவர், இந்த நூலின் வடிவமைப்பு தனித்துப் பாராட்ட வேண்டிய ஒன்று.

•••

வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை

சீனாவின் சங்க இலக்கியம்/அறிமுகமும் நேரடித்தமிழாக்கமும்

பயணி

காலச்சுவடு பதிப்பகம்

விலை ரூ 140.

0Shares
0