வாழ்க்கை பொன்னிறமாகயில்லை

பெங்களூருவிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோலார் தங்கவயல். KGF எனப்படும் கோலார் தங்கவயலின் வரலாற்றை விளக்கும் ஆவணப்படமான After the gold பார்த்தேன். Youtubeல் இப்படியான அபூர்வமான படங்களும் இருக்கின்றன. தேடிப்பார்க்கிறவர் குறைவு. இந்த ஆவணப்படத்தை ஜானகி நாயர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு. ஆர்.வி.ரமணி. மிக முக்கியமான ஆவணப்படமிது.

KGF திரைப்படத்தில் கோலார் தங்கவயல் அடிமைகளின் உலகமாகச் சித்தரிக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு நிஜவரலாற்றிற்கும் சம்பந்தமில்லை. அது ஒரு கற்பனைக் கதை. ஆனால் ஜானகி நாயரின் ஆவணப்படம் கோலார் தங்க வயல் எப்படி உருவானது என்பதில் துவங்கி அங்கே வேலைக்காகச் சென்ற தமிழ் மக்கள் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தார்கள். கோலாரின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு உருவானது என்பதை விரிவாக, முறையான சான்றுகளுடன் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

சுரங்கத்தினுள் செல்லும் தொழிலாளர்களுடன் கேமிரா கூடவே பயணிக்கிறது. தங்க சுரத்தினுள் அவர்கள் வேலை செய்யும் விதம். அவர்களின் குடியிருப்பு. முப்பது நாற்பது ஆண்டுகள் வேலை செய்து ஓய்வு பெற்றவர்களின் அனுபவங்கள். தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள். தலித் மக்கள் சந்தித்த சாதிக் கொடுமைகள். புத்த சங்கம் உருவான விதம். திராவிட இயக்கம் வேரூன்றியது. அங்கே நடைபெற்ற ஸ்ட்ரைக். இன்று கோலார் கைவிடப்பட்ட நிலையிலுள்ள அவலம் என ஒட்டுமொத்தமான சித்திரம் ஒன்றை ஆவணப்படம் அளிக்கிறது.

1800 ஆங்கிலேயர் கோலாரைக் கைப்பற்றிய போது பழைய மாரிக்குப்பம் பகுதி இளைஞர்களைச் சேர்த்துக்கொண்டு தங்கச்சுரங்க வேலைகளை ஆரம்பித்தார்கள். தங்கம் கிடைப்பது உறுதியானதும் சுரங்கம் தோண்டும் வேலைக்காக வட ஆற்காடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் பகுதியிலிருந்த தலித் மக்களை அழைத்துக் கொண்டு போனார்கள். தமிழகத்திலிருந்து மட்டுமின்றி ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்திலிருந்தும் பெருவாரியான மக்கள் வரவழைக்கப்பட்டார்கள். இவர்கள் சுரங்கத்திற்கு அருகிலேயே முகாம் அமைத்துத் தங்க வைத்துச் சுரங்கப்பணியில் ஈடுபத்தபட்டார்கள். பின்பு தட்டி வீடுகள் எனப்படும் சிறிய குடியிருப்புகள் உருவாகின.

கோலார் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்துகளில் இறந்தவர்கள் பற்றிய பதிவேட்டில் உள்ள தகவல்களை ஒரு காட்சியில் காட்டுகிறார்கள். கண்ணீர் வரவழைக்கும் காட்சியது. நாலாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுரங்க விபத்தில் இறந்து போயிருக்கிறார்கள். தூசியும் வெடிமருந்து புகையும் ஒன்று சேர்ந்து தொழிலாளர்களின் நுரையீரலைப் பாதித்த காரணத்தால் பலரும் காசநோய் வந்து இறந்து போயிருக்கிறார்கள்.

கொத்தடிமைகளைப் போல இவர்களைப் பிரிட்டிஷ் அரசு நடத்தியிருக்கிறது. உழைப்பிற்கு ஏற்ப ஊதியம் கேட்டுப் போராடி சங்கம் அமைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சம்பள உயர்வு பெற்றிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தோழர்களின் நேர்காணல் கோலாரின் போராட்ட வரலாற்றைச் சொல்கிறது

கோலாரில் ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ் ஆங்கிலேய நிறுவனம்தான் ஆரம்பத்தில் சுரங்கம் தோண்டத் தொடங்கியது. அடிப்படை வசதிகள் இன்றித் தொழிலாளர்கள் சுரங்க பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். சுரங்க விபத்தில் இறந்தவர்களின் முகத்தைக் கூடப் பார்க்கமுடியாது. பெட்டியில் அடைத்துக் கொண்டுவந்து புதைத்துவிடுவார்கள் என்று ஒருவர் நேர்காணலில் குறிப்பிடுகிறார்.

ராபர்ட்சன்பேட், ஆண்டர்சன்பேட் என்ற ஆங்கிலேய அதிகாரிகளின் பெயரால் அங்கே குடியிருப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. வெள்ளைக்கார அதிகாரிகளுக்கான கோல்ஃப் கோர்ஸ், டென்னிஸ் கோர்ட், கிளப், பார்கள் மற்றும் மாளிகைகள் உருவாக்கப்பட்டன. அவர்களின் வழிபாட்டிற்காகத் தேவாலயம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது

இன்னொரு புறம் சாதிக் கொடுமையால் அவதிப்பட்ட மக்களை மீட்கப் பௌத்த சங்கம் இயங்கியிருக்கிறது. இவர்கள் உதவியால் அயோத்திதாசர் கொண்டு வந்த தமிழன் இதழ் பற்றியும் அதில் வெளியான கட்டுரைகள் குறித்தும் ஆவணப்படம் விரிவாக விளக்குகிறது

1929 வரை சுரங்கத் தொழிலாளர்களுக்குப் பொழுது போக்கு வசதிகள் எதுவும் கிடையாது. ஆனால் வெள்ளைக்காரர்கள் தங்களுக்கான கிளப்பில் உல்லாசமாகக் குடித்து நடனமாடிக் கொண்டிருந்தார்கள். இந்தநிலையில் மக்கள் தலைவர் பூசாமி முயற்சியால், 1930 இல் நியூ இம்பீரியல் ஹாலை ஆங்கிலேயர்களிடமிருந்து குத்தகைக்கு எடுத்துத் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. குத்தகையை நீடிக்க ஆங்கிலேய நிர்வாகம் மறுத்த காரணத்தால் அங்கே ஜுபிலி ஹால்’ என்ற புதிய திரையரங்கே கட்டியிருக்கிறார்கள். நந்தனார் திரைப்படம் தலித் மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது. அதைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என மக்கள் போராடி அந்தப் படத்தைத் திரையிடாமல் தடுத்திருக்கிறார்கள். அதைப் பற்றிய பதிவும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

கோவிந்தன் என்ற தொழிற்சங்க தலைவரின் மகள் காலப்போக்கில் கோலார் எவ்வாறு மாறிவிட்டது என்பதை பற்றி அழகாக பேசியிருக்கிறார். கோலாரில் தனது தந்தை இன்றும் எவ்வளவு நேசிக்கப்படுகிறார், நினைவுகூரப்படுகிறார் என்பதைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருக்கிறார் பேசுகிறார்கே.ஜி.எஃப் இல் முதல் இடதுசாரி தொழிற்சங்கத்தை ஏற்பாடு செய்வதில் கோவிந்தன் முக்கிய பங்கு வகித்தார். அதைத் தொடர்ந்து. தொழிற்சங்கங்களை ஒழுங்கமைக்கத் தொடங்கிய முதல் இளம் தலைவர் வாசன் ஆவார், பின்னர் அவருடன் கோவிந்தன் மற்றும் எம். சி. நரசிம்மன் ஆகியோர் இணைந்து செயல்பட்டார்கள். அவர்கள் சிவப்பு முக்கோணம் என்று அடையாளப்படுத்தபட்டார்கள். இவர்களின் முயற்சியால் தான் சுரங்கத் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் உரிமைகளையும் கிடைத்தன.வருங்கால வைப்பு நிதி, டிஏ மற்றும் பிற போன்ற சலுகைகளுக்கான கோரிக்கையை வலியுறுத்தி கேஜிஎஃப் வரலாற்றில் 78 நாட்கள் நீண்ட வேலைநிறுத்தம் நடைபெற்றது.

கோலாரிலுள்ள கல்வி நிறுவனங்கள். வழிபாட்டு ஸ்தலங்கள். கல்லூரியில் படிப்பவர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்த கவலைகள், மார்வாடிகள் எப்படிக் கோலாருக்கு வந்தார்கள். வட்டிக்கடைகள். வணிக நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின. இந்திய அரசு இந்தச் சுரங்கத்தை ஏற்று நடத்தத் துவங்கிய பிறகு உருவான மாற்றங்கள். எனக் கோலார் தங்கவயலின் அகபுற விஷயங்களை அழுத்தமாகப் படம் பதிவு செய்திருக்கிறது.

தங்கம் எடுப்பதற்கான தயாரிப்புச் செலவினங்கள் அதிகமான காரணத்தாலும் 2001ல் சுரங்கத்தில் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. 140 ஆண்டுக்கால சுரங்கப்பணி அத்தோடு முடிவிற்கு வந்தது.

இன்று மலைமலையாகக் குவித்துக் கிடக்கும் குப்பைகளுக்குள் நிலக்கரி தேடிப் பொறுக்குகிறார்கள். மணல்துகளில் கலந்துள்ள தங்கத்தை அலசி எடுக்கிறார்கள். சுரங்கம் மூடப்பட்ட காரணத்தால் பெருவாரியான தமிழர்கள் பிழைப்பைத் தேடி பெங்களூருக்குக் குடிபெயர்ந்தார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோலார் தங்கவயல் டவுன்ஷிப்பிற்குப் போயிருந்தேன். இன்றைய அதன் வாழ்க்கை கடந்தகாலத்திலிருந்து மாறுபட்டது. கோலார் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களைப் படித்திருக்கிறேன். அதில் கிடைக்காத அனுபவம் இந்த ஆவணப்படத்தில் கிடைக்கிறது. அந்த வகையில் இந்த ஆவணப்படம் கோலார் குறித்த ஒட்டுமொத்தமான ஒரு பார்வையை உருவாக்கிவிடுகிறது என்பேன்.

என் நண்பர் வேலூர் லிங்கம் கோலாரில் வசித்தவர். தன் பால்ய நாட்களைக் கோலாரில் கழித்தவர். அது குறித்து நிறையச் சொல்லியிருக்கிறார். இந்த ஆவணப்படம் பார்த்த போது அவர் தனது கோலார் வாழ்க்கை நினைவுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது.

•••

0Shares
0