வாழ்வின் அர்த்தம்.

ஃபிராங் காப்ரா இயக்கிய You Can’t Take It with You படம் பார்த்தேன். இப்படம் இரண்டு அகாதமி விருதுகளைப் பெற்றுள்ளது. 1938ல் வெளியான திரைப்படம்.

ஆன்டனி பி. கிர்பி என்ற வங்கி அதிபர் ஒரு குடியிருப்பை மொத்தமாக விலைக்கு வாங்கி அங்கே ஒரு தொழிற்சாலை அமைக்க முற்படுகிறார். ஆனால் வாண்டர்ஹோஃப் என்ற கிழவர் மட்டும் தனது வீட்டினை விற்க மறுக்கிறார். அந்த இடம் கிடைக்காத காரணத்தால் அந்தப் பகுதியில் தொழிற்சாலை அமைக்கமுடியவில்லை.

வாண்டர்ஹோஃப்பிடமிருந்து அந்த இடத்தை வாங்க பல்வேறு விதமாகப் பேரம் பேசுகிறார்கள். அவர் தனக்கு விற்க விருப்பமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இப்படித்துவங்கும் படம் மெல்ல வாண்டர்ஹோஃப்பின் குடும்பத்தைச் சுற்றி விரியத் துவங்குகிறது

வாண்டர்ஹோஃப் குடும்பத்தைப் போன்ற ஒன்றை யாரும் பார்த்திருக்கவே முடியாது. அந்த வீட்டில் யாரும் யாரையும் கட்டுப்படுத்துவதில்லை. அவர்களுக்கு விருப்பமான விஷயத்தில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாகப் பட்டாசு தயாரிப்பதில் ஒருவர் கவனம் செலுத்துகிறார். மகள் நடனம் கற்றுக் கொள்கிறாள். அம்மா எப்போதும் நாடகம் எழுதிக் கொண்டேயிருக்கிறாள். வாண்டர்ஹோஃப் தபால்தலைகளைச் சேகரிக்கிறார். இப்படி ஆளுக்கு ஒரு உலகம். அதற்குள் சந்தோஷமாக வாழுகிறார்கள். பாட்டும் நடனமும் என எப்போதும் அவர்கள் வாழ்க்கை உற்சாகமாக இருக்கிறது.

மற்ற குடும்பங்கள் யாவும் பணம் தேடுவதிலே வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள். விருப்பமான விஷயங்களில் ஈடுபட விடாமல் பயம் தடுக்கிறது. எங்களுக்கு எது குறித்தும் பயமில்லை. வாழ்க்கையை இனிமையாகக் கழிக்கிறோம் என்கிறார் வாண்டர்ஹோஃப். அவர்கள் வீட்டுப் பணியாளர்களும் கூடச் சுதந்திரமாகவே செயல்படுகிறார்கள். ஒருவகையில் வாண்டர்ஹோஃப் குடும்பம் முன்மாதிரியானது.

வாண்டர்ஹோஃப்பின் பேத்தி ஆலீஸ் ஸ்டெனோவாகக் கிர்பி நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அங்கே கிர்பியின் மகன் டோனி அவளைக் காதலிக்கிறான். அவளுக்கும் டேனியைப் பிடித்திருக்கிறது. ஆகவே ஒரு நாள் அவனைத் தனது வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கிறாள். டோனி அவர்கள் வீட்டிற்கு வருகை தரும் நாள் ஒரு விழா போலவே கொண்டாடப்படுகிறது. அதில் தான் எத்தனை வேடிக்கைகள்.

டோனி வருகை தரும் நாளில் வருமான வரித்துறையிலிருந்து ஒரு ஆள் வாண்டர்ஹோஃப்பை சந்திக்க வருகிறான். பல ஆண்டுகளாக அவர் வருமான வரி செலுத்துவதில்லை என்று குற்றம் சாட்டுகிறான். அதற்குத் தான் எதற்காக அரசாங்கத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் வாண்டர்ஹோஃப். அவனால் பதில் சொல்ல முடியவில்லை. திரும்பிப் போய்விடுகிறான். இந்தக் காட்சியில் வாண்டர்ஹோஃப் கேட்கும் கேள்விகள் இன்றும் சாமானிய மக்கள் மனதில் தோன்றும் கேள்விகளே.

தனது காதலைப் பற்றி ஆலீஸ் தாத்தாவிடம் சொல்லும் காட்சியில் அவர் இளவயதில் பாட்டியிடம் காதலை வெளிப்படுத்திய நிகழ்வைச் சொல்கிறார். அத்தோடு அவர்களின் திருமண வாழ்க்கை பற்றியும் இறந்து போன மனைவியின் நினைவுகள் அந்த அறையில் இன்றுமிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அந்தக் காட்சியில் வாண்டர்ஹோஃப்பின் வேடிக்கைதனம் மறைந்து உணர்ச்சிப்பூர்வமான ஆளுமை வெளிப்படுகிறது.

ஒரு நாள் வங்கிக்குச் செல்லும் வாண்டர்ஹோஃப் அங்கே பாபின்ஸ் என்ற ஒரு ஊழியரைச் சந்திக்கிறார். கணக்கு நோட்டினைச் சரி பார்க்கும் அவரிடம் இந்த வேலை செய்வதற்காகவா நீங்கள் பிறந்தீர்கள். ஏன் வாழ்நாளை இப்படி வீணடிக்கிறீர்கள் என்று கேட்கிறார் வாண்டர்ஹோஃப்.

பாபின்ஸ் தான் பொம்மைகள் செய்யும் கலைஞன். ஆனால் அதை வைத்துக் கொண்டு வாழ முடியாதே எனத் தான் செய்து வைத்திருந்த முயல் பொம்மையைக் காட்டுகிறார். வாழ்வதற்கு நான் வழிகாட்டுகிறேன் என அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போகிறார் வாண்டர்ஹோஃப். அவரது வீட்டில் இருக்கும் சிலரும் இப்படி முன்னால் வந்து சேர்ந்தவர்களே என்பது பின்பு தான் தெரிய வருகிறது.

டோனி சாதாரணக் குடும்பத்துப் பெண்ணான ஆலீஸைக் காதலிப்பது அவனது பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் டோனியின் கட்டாயத்தில் ஒரு நாள் ஆலீஸ் வீட்டிற்கு விருந்திற்குப் போகிறார்கள். அன்று நடக்கும் குழப்படிகள் தான் உச்சபட்ச காமெடி. குழப்பமான நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்கின்றன.

வீட்டில் பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக வாண்டர்ஹோஃப்பை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள். நீதிபதி அது தவறான செயல் என்று அபராதம் விதிக்கிறார். அந்த அபராத தொகையை ஊர்மக்களே ஒன்று கூடிக் கட்டிவிடுகிறார்கள். ஒரு மனிதரை இத்தனை பேர் நேசிப்பதை நீதிபதி வியப்போடு பார்க்கிறார். அந்த நீதி விசாரணையின் போது ஆலீஸ் கிர்பி தன் வீட்டிற்கு வந்த போது நடந்த உண்மைகளை வெளிப்படுத்துகிறாள். இதனால் கிர்பி குடும்பத்தில் பெரும் குழப்பம் உருவாகிறது. பத்திரிக்கைகளில் டோனியின் காதல்பற்றிய செய்தி பரபரப்பாக வெளியிடப்படுகிறது.

டோனியின் காதல் நிறைவேறியதா, வாண்டர்ஹோஃப் அந்த இடத்திலிருந்து காலி செய்து போனாரா என்பதே படத்தின் மீதக்கதை.

வாண்டர்ஹோஃப் குடும்பம் மறக்கமுடியாதது. எது அவர்களை இவ்வளவு சந்தோஷமாக வைத்திருக்கிறது. பரஸ்பரம் ஒருவர் மற்றவரைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் விருப்பமான விஷயங்களைச் செய்யும் படி அனுமதிக்கிறார்கள். கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழுகிறார்கள். அந்த வீட்டிற்கு நடனம் கற்றுத்தர வரும் ரஷ்யன் எப்போதும் சரியாகச் சாப்பாட்டு நேரத்தில் தான் வருகிறார். சாப்பிடுவதே அவரது குறிக்கோள். இது போல அந்த வீட்டில் ஒரு காக்கையை வளர்க்கிறார்கள். அது பணியாளர்களுக்கு உதவி செய்கிறது.

இன்னொரு காட்சியில் வாண்டர்ஹோஃப்பிடம் அண்டை அயலில் வசிப்பவர்கள் தாங்கள் காலி செய்யப்படப் போவதாகக் கவலைப்படுகிறார்கள். தனது வீடு விற்கப்படும் வரை அவர்களைக் காலி செய்ய மாட்டார்கள். உறுதியாக இருங்கள். நான் ஒரு போதும் வீட்டினை விற்க மாட்டேன் என்கிறார். அந்தப் பகுதி மக்களுடன் அவர் எவ்வளவு நட்பாக இருக்கிறார் என்பதற்கு அது ஒரு உதாரணம்.

இது போலவே நீதி விசாரணையின் போது கூட வாண்டர்ஹோஃ ப் பயப்படுவதேயில்லை. தன் நிலைப்பாட்டினை வெளிப்படையாகவே சொல்கிறார். இதில் ஆச்சரியம் அவருக்கு விதிக்கப்பட்ட அபாரதத் தொகையை மக்களிடம் வசூலிக்கும் போது நீதிபதியும் தன் பங்கினை கொடுக்கிறார். நல்ல மனிதனால் மட்டுமே இப்படி அன்பைச் சம்பாதிக்க முடியும்.

மேடை நாடகமாக நிகழ்த்தப்பட்டு வெற்றி பெற்ற இதைக் கொலம்பியா பிக்சர்ஸ் படமாக்கி மாபெரும் வெற்றியடைந்தார்கள். சிறந்த இயக்கத்திற்காகப் பிராங் காப்ரா ஆஸ்கார் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

கறுப்பு வெள்ளை திரைப்படங்கள் கதையை அழுத்தமாகச் சொல்வதில் தான் கவனம் செலுத்தின. அத்தோடு பொருத்தமான நடிகர்கள். சிறந்த இசை இரண்டும் படத்தின் ஆதாரமாக இருந்தன. ஸ்டுடியோவினுள்ளே எடுக்கப்பட்ட போதும் இது போன்ற படங்கள் தரும் நெருக்கத்தை இன்று வெளியாகும் பிரம்மாண்டமான படங்கள் தருவதில்லை என்பதே நிஜம்.

••

0Shares
0