வாழ்வின் தேவை

சிறுகதை

குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகத் தான் ஸ்வேதா அம்மாவை வரவழைத்திருந்தாள்.

இரண்டாவது பிரசவத்தின் போது சிக்கலாகிவிட்டது. நிறையக் குருதிப்போக்கு. அறுவைசிகிச்சை. அவளை இரண்டுமாதகாலம் படுக்கையில் கிடத்திவிட்டது. இதற்கு மேல் லீவு போட முடியாது என்ற சூழலில் அலுவலகம் போய்வரத்துவங்கினாள்.

அப்பா இருக்கும்வரை அம்மா தனியே பயணம் செய்ததேயில்லை. ஆனால் இப்போதெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் ஏற்றிவிட்டால் தானே பெங்களூர் வந்துவிடுகிறாள். கன்னடம் தெரியாத போதும் அவளாக ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்துவிடுகிறாள். இந்த முறை அப்படித்தான் வந்து சேர்ந்தாள். அம்மா குழந்தையைக் கவனித்துக் கொள்வதால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடிந்தது. வாரம் மூன்று நாள் மட்டுமே அலுவலகம் போய் வந்தாள்.

அவளுக்கும் சந்திரனுக்கும் ஒரே அலுவலகம். கம்பெனி பேருந்து அவர்கள் அபார்ட்மெண்ட் வாசலில் வந்து பிக்கப் பண்ணிக் கொள்ளும். ஆபீஸ் முடிந்து வீடு வர ஏழு மணியாகிவிடும். அம்மா அவளை வளர்த்துப் போலவே அக்கறையாகத் தன் பேத்தியையும் வளர்த்தாள். பேரன் கவினைக் கவனித்துக் கொள்வது தான் அவளுக்குப் பெரிய வேலையாக இருந்தது. அவன் பள்ளிவிட்டு வரும்வரை அவளால் வீட்டை சமாளித்துக் கொண்டுவிட முடியும். ஆனால் கவின் வீடு வந்தவுடன் என்ன செய்வான் என்றே தெரியாது.

இரண்டு நாட்கள் முன்பு கைக்குழந்தையின் வாயில் ஸ்பூன் நிறையச் சீனியைக் கொண்டு போய்த் திணித்துக் கொண்டிருந்தான். அழுகையை நிறுத்துவதற்கு அவன் கண்டுபிடித்த உபாயமது. அதுவும் சீனியை கண்டதும் அழுகையை நிறுத்தியிருக்கிறது. நல்லவேளை அம்மா கவனித்து ஸ்பூனை பிடுங்கிப் போட்டாள்.

இன்னொரு நாள் குழந்தையின் தொட்டிலில் எறும்பு வருகிறது என்று ஹிட் ஸ்பிரேயை கொண்டு போய்க் குழந்தை மீதெல்லாம் அடித்து வைத்திருந்தான். அவனைச் சமாளிப்பது தான் அம்மாவிற்குப் பெரிய வேலையாக இருந்தது. கவின் அம்மாவைப் பெயர் சொல்லி ஏய் வள்ளி என்று அதிகாரமாகத் தான் கூப்பிடுகிறான். அவன் பின்னால் ஒடி ஒடியோடி அம்மா ஒய்நது போயிருந்தாள். ஆனால் அவள் எதையும் முணுமுணுப்பதில்லை. குறை சொல்வதில்லை.

அப்பா இறந்த பிறகு அம்மா ஒரு ஆளாக ஏன் ஊரில் இருக்க வேண்டும் என்று ஸ்வேதா தன்னுடன் இருக்கட்டும் என்று அழைத்தாள்.

இல்லைடா.. நான் ஊர்லயே இருக்கேன். அந்த வீடு தான் எனக்குச் சௌகரியப்படும். உங்க அப்பா இல்லாட்டி என்ன. பக்கத்தில் இருக்கிற ஆட்கள் எல்லாம் நல்லபாத்துகிட தானே செய்றாங்க. மாடி வீட்ல இருக்கிறவங்க கூட அம்மா. அம்மானு அப்படிப் பாசமா இருக்காங்க. உங்க அப்பாவோட பென்ஷன் வருது. அது போதும்

அப்பா கூட்டிப் போன ஊர்களுக்கு மட்டும் தான் அம்மா போயிருக்கிறாள். அவளாகக் கடைக்குப் போய் ஒரு புடவை எடுத்துக் கொண்டு வந்தது கிடையாது. அதிகபட்சம் அவள் செய்யும் விஷயம் கோவிலுக்குப் போய்வருவது. அதுவும் விசேச நாட்களில் மட்டும் தான். மற்றபடி சாப்பாட்டில் கூட அவளுக்கு ஆர்வமில்லை. எதற்கும் காசு செலவழிக்கவே மாட்டாள். அப்பா அலுவலக வேலையாகச் சென்னை போயிருந்த போது ஒரேயொரு முறை அவளது பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுடன் பேசியிருக்கிறாள். மற்றபடி வீடு தான் அவளது உலகம்.

பெங்களுரில் திருமணம் செய்து கொடுத்து ஸ்வேதா வந்தபிறகு எத்தனையோ முறை அப்பாவும் அம்மாவும் வந்து போயிருக்கிறார்கள். ஒருமுறை கூட அம்மா வெளியே எங்கேயும் போனதேயில்லை. அவர்கள் சினிமாவிற்குப் போகும் நாட்களில் கூட அம்மா வீட்டில் தானிருப்பாள். அப்பா அப்படியில்லை. பெங்களூருக்கு வரும் நாளில் தினமும் லைப்ரரி, ஷாப்பிங் மால். கோவில். நாடகம் என்று நிறைய வெளியே போய் வருவார்.

அம்மாவிற்கு என்ன பிடிக்கும் என்று ஸ்வேதாவிற்கு இன்றுவரை தெரியாது. ஸ்வேதா திருமணமாகி வந்த பிறகு சந்திரனின் காரை ஒட்டுவதற்குப் பழகிக் கொண்டாள். போர்டு பிகோ காரது சில நாட்கள் இருவரும் காரிலே அலுவலகம் போய் வருவார்கள். சில தடவைகள் தனியாகவும் அவள் காரில் கடைகளுக்கோ மருத்துவமனைக்கோ போய் வருவாள். பிரசவத்திற்குப் பிறகு அவள் காரை வெளியே எடுக்கவேயில்லை. சில தடவை சந்திரன் எடுத்துப் போய் வந்திருந்தான். மற்றநேரங்களில் அது அபார்ட்மெண்ட் பார்க்கிங்கில் தான் நின்றிருந்தது.

ஒரு நாள் அம்மா தயங்கிய குரலில் கேட்டாள்

“அந்த கார் ஏன்டீ சும்மாவே நிக்குது. வித்துறலாமே“

“எப்போவாது வெளியே போகணும்னு நினைச்சா.. என்ன செய்றது. அவரு தான் ஒட்டுறாரே“

“மதியமா அந்தக் காரை துடைத்து வச்சேன். தொடுறதுக்கே கூச்சமா இருந்துச்சி. “

“கே பிளாக்கில இருக்கிற கேசவ்வோட அம்மா கார் ஒட்டுவாங்க. பாத்து இருக்கேல்ல.. அது ஒண்ணும் பெரிய விஷயமில்லேம்மா “என்றாள் ஸ்வேதா

“நான் வேணும்னா கார் ஒட்ட கத்துகிடவா “என்று கேட்டாள் அம்மா

அம்மா இதுவரை அப்படி எதையும் அவளிடம் கேட்டதேயில்லை. அதைக்கேட்டபோது ஸ்வேதாவிற்குச் சிரிப்பாகத் தான் வந்தது. ஆனால் அதைக்காட்டிக் கொள்ளாமல் சொன்னாள்

“நீயா.. கார் ஒட்டவா. எதுக்கும்மா“

“நான் கார் ஒட்ட கத்துகிட்டா.. ஸ்கூல் விட்டு வந்தவுடன் கவினைக் கூட்டிகிட்டு பார்க் வரைக்குப் போயிட்டு வரலாம். ஜங்ஷன் வரை போய்க் காய்கறி பழம் வாங்கிட்டு வரலாம். “

அதெல்லாம் சரிப்படாது என்று தான் சொல்ல நினைத்தாள். ஆனால் அதற்கு மாறாக “ஏற்பாடு பண்ணுறேன். இப்போ எல்லாம் பெண்ணுகளே டிரைவிங் கத்து தர்றாங்க.. ஸ்டீபன்கிட்ட சொன்னா விசாரிச்சி சொல்வான்“

ஸ்டீபன் அவர்களுக்குத் தெரிந்த எலக்ட்ரீசன். எல்லா விஷயங்களுக்கும் அவனிடம் தான் கேட்பார்கள். அவனுக்குப் பெங்களுரில் தெரியாத இடமேயில்லை.ஆட்களேயில்லை

இரண்டு நாட்களின் பின்பு ஸ்டீபன் வந்திருந்தான்

“எட்டாவது செக்டார்ல ஒரு டிரைவிங் ஸ்கூல் இருக்கு. லேடி தான் டிரைனிங் தர்றாங். அங்கே பேசிட்டேன். திங்கட்கிழமை காலையில வரச்சொல்லிட்டாங்க“

அதைக்கேட்டவுடன் அம்மாவின் முகத்தில் மெல்லிய பயம் வந்து போனது. அதை மறைத்துக் கொண்டபடியே கேட்டாள்

“எவ்வளவு நாள் கத்துகிடணும். நான் சைக்கிள் கூட ஒட்டக்கத்துகிட்டதில்லை“

“தினம் ஐந்து கிலோ மீட்டர். ஒரு மணி நேரம்“ என்றான் ஸ்டீபன்.

அதைக்கேட்டு சந்திரன் சிரித்தான்

“ஏன் ஸ்வேதா இந்த வீண் வேலை. ஏதாவது ஆகிடப்போகுது. வயசானவங்க உங்க அம்மா“ என்றான்

ஸ்வேதா அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை

முதல்நாள் அம்மா புறப்பட்டுப் போன போது சாமி கும்பிட்டுக் கொண்டாள். திரும்பி வந்த போது என்ன நடந்தது என்று சொல்லிக் கொள்ளவேயில்லை. ஆனால் அவளது கைகள் நடுங்கிக் கொண்டேயிருந்தன.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அம்மாவே சொன்னாள்

“ரோட்டில காரை ஒட்டுறது லேசில்லே.. அது ஒரு பக்கமா இழுத்துகிட்டு போகுது. அந்தப் பொண்ணு வேற கன்னடத்தில் ஏதோ சொல்றா. ஒரு எழவும் புரியலை. “

ஸ்வேதா சிரித்தாள். நம்பிக்கை தரும்படியாகப் பேசினாள். அம்மா அதன்பிறகு தனது கார் ஒட்டும் பயிற்சியைப் பற்றி எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஸ்டீபன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான்

அவன் உற்சாகமான சொன்னான்

“ஸ்வேதாக்கா.. உங்க அம்மா சூப்பரா கார் ஒட்டுறாங்க. நானே கண்ணாலே பார்த்தேன். டிரைவிங் ஸ்கூல்ல எல்லோரும் ஹேப்பி. “

நிஜமாகவா எனக்கேட்டபோது அம்மா வெட்கப்பட்டாள். அப்படி வெட்கப்பட்டு அவளைக்கண்டதேயில்லை. கார் ஒட்ட ஆரம்பித்த பிறகு அம்மாவிடம் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தன. தலையைக் கவிழ்ந்து கொண்டே எப்போதும் நடக்கும் அவள் இப்போது தலை நிமிர்ந்தபடியே நடக்க ஆரம்பித்தாள். வீட்டில் இருக்கும் நேரங்களில் மாடி ஜன்னல் வழியாகச் சாலையைப் பார்த்துக் கொண்டேயிருப்பாள்.

என்ன கார்கள் சாலையில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அவள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. ஒரு நாள் அவர்கள் காரை வெளியே எடுத்து அவளாகவே ஒட்டிக் கொண்டு ஜங்ஷன் வரை போய் வந்தாள். அன்று அம்மா முகத்திலிருந்த சந்தோஷம் அவளது வாழ்நாளில் கண்டறியாதது.

அம்மா கார் ஒட்டக்கற்றுக் கொண்டதை அபார்ட்மெண்டே வியந்து பேசியது. அம்மா அதைப் பெரிய சாதனையாக நினைக்கவில்லை. ஆனால் தான் அவர்கள் நினைத்தது போல உதவாக்கரை கிழவியில்லை என்று அடையாளம் காட்டிவிட்டவள் போலிருந்தது அவளது செய்கை.

இரண்டுமாதகாலத்தில் அம்மா கார் ஒட்டுவதற்கு நன்றாகத் தேர்ந்திருந்தாள். குறிப்பாகக் காரை ரிவர்ச் எடுப்பதிலும் பார்க்கிங்கில் சரியாகக் கொண்டுபோய்விடுவதிலும் தேர்ந்திருந்தாள். இப்படி எல்லாம் அம்மாவிடம் திறமையிருக்கும் என்று அப்பா ஏன் கண்டுகொள்ளவேயில்லை..

அப்பாவிற்குப் பைக் ஒட்டுவதற்குக் கூடத் தெரியாது. தன் வாழ்நாளில் வாடகை காரில் அம்மாவை நாலைந்து முறை அழைத்துக் கொண்டு போய் வந்திருப்பார். அதுவும் திருமண வீடு. கோவிலுக்கு. ரயிலில் பயணிப்பது என்றால் கூடப் பாதுகாப்பாக இரண்டு மணி நேரம் முன்னாடி போய்விடக்கூடியவர் அப்பா. அம்மாவும் அப்படித்தான் இருந்தாள். ஆனால் திடீரெனக் கார் ஒட்ட வேண்டும் என்ற ஆசை கிளைத்து அம்மா மாறியிருந்தாள்

அம்மாவிற்குத் தற்காலிக லைசன்ஸ் விண்ணப்பிக்க டிரைவிங் ஸ்கூலே உதவி செய்தது. அம்மாவின் பெயருக்கு தற்காலிக லைசன்ஸ் வந்த அன்று அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அறுபத்திரெண்டாவது வயதில் அம்மா கார் ஒட்டக்கற்றுக் கொண்டுவிட்டாள். ஒருவேளை இது போல விமானம் ஒட்டுவதற்குப் பயிற்சி கொடுத்தால் அதையும் எளிதாகக் கற்றுக் கொண்டு இருப்பாள் போலும்

ஸ்வேதாவும் பிள்ளைகளும் ஒரு நாள் அம்மாவை கார் ஒட்டச்சொல்லி ஷாப்பிங் மாலுக்குப் போய் வந்தார்கள். பல வருஷங்கள் கார் ஒட்டியவள் போலத் தடுமாற்றமேயின்றி அம்மா காரை ஒட்டினாள். ஸ்வேதாவிற்கே ஆச்சரியமாக இருந்தது. அவளுக்கே நெருக்கடியான நேரங்களில் கார் ஒட்டுவது சிரமமாக இருக்கும். அம்மா எந்த நெருக்கடியிலும் அவசரம் காட்டவில்லை. முந்திப்போகப் பிரயத்தனப்படவில்லை. சாலைவிதிகளை முறையாகப் பின்பற்றுகிறவள் போலச் சரியான இடைவெளி கொடுத்து தன் காரை நிறுத்தினாள்.

அன்று ஷாப்பிங் மாலில் அம்மா முதன்முறையாக அவர்களுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டாள். அன்றிரவு சந்திரன் இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டுச் சொன்னான்

“அப்போ அடுத்தவாரம் மைசூர் போயிட்டு வருவோம். அதான் உங்க அம்மா கார் ஒட்டுவாங்களே“

அதைக்கேட்டு அம்மா சிரித்தாள். அவர்கள் ஆசைப்பட்டது போலவே மைசூர் வரை ஒற்றை ஆளாகக் கார் ஒட்டிக் கொண்டு வந்தாள். குறிப்பாக ஆள் அற்ற நெடுஞ்சாலைகளில் அவள் காரின் வேகத்தை அதிகரிப்பதும் ஒற்றைக் கையால் ஸ்டியரிங்கை திருப்புவதும் சந்திரனுக்கே பார்க்க வியப்பாக இருந்தது.

மைசூர் சாலையில் இருந்த ஒரு மோட்டலில் அவர்கள் காரை நிறுத்திச் சாப்பிட்டார்கள். அப்போது ஒரு வாடகைகாரோட்டி அம்மாவிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தான். அம்மா அவனுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தாள்

தன் அம்மா தானா அது என்று வியப்பாக இருந்தது. என்ன பேசினாள் என்று கேட்டுக் கொள்ளவில்லை. பகலில் மட்டுமின்றி இரவில் கார் ஒட்டும் போதும் அவளிடம் பதற்றம் காணப்படவேயில்லை.

வீடு திரும்பி வந்த போது ஸ்வேதா சொன்னாள்

“நீ கார் ஒட்டுறதை பார்க்க அப்பா இருந்திருக்கணும். “

“அவர் இருந்திருந்தா என்னாலே கார் ஒட்ட கத்துகிட்டு இருந்திருக்க முடியாதுடீ“ என்றாள்

அது உண்மை. அவரது பேச்சில் தைரியம் போயிருக்கும். சந்தர்ப்பம் கிடைக்காமல் தான் அம்மா இத்தனை ஆண்டுகளாக முடங்கியிருந்திருக்கிறாள்

அதன்பிறகு அதிகாலையில் அம்மா காரை வெளியே எடுத்துக் கொண்டு கலையாத இருளில் வெளியே போய் வருவதையும் திரும்பி வரும்போதெல்லாம் பிரெஷ்ஷாக உள்ள பழங்கள் காய்கறிகள் வாங்கி வருவதையும் ஸ்வேதாகக் கவனித்துக் கொண்டாள். நாள் முழுவதும் அவளது குழந்தையைக் கவனித்துக் கொண்டாலும் அதிகாலை நேரம் கார் ஒட்டுவது அம்மாவிற்கு மிகுந்த புத்துணர்வும் நம்பிக்கையும் தந்திருந்தது. அதுவரை அம்மா சாப்பிட்டுவந்த பிரஷர் மாத்திரைகளை நிறுத்திக் கொண்டுவிட்டாள். டிவியில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட அவள் கார்களை உன்னிப்பாகக் கவனிப்பதை ஸ்வேதா கண்டாள்.

ஆறுமாதங்களுக்குப் பிறகு அம்மா ஊருக்குக் கிளம்புகிறேன் என்றாள். ஆம்னி பஸ்ஸில் டிக்கெட் போட்டுவந்தான் சந்திரன். அவளைப் பேருந்தில் ஏற்றிவிடச் சந்திரன் உடன் போயிருந்தான். அப்போதும் அம்மா தான் காரை ஒட்டிக் கொண்டு போனாள். அவளது பேருந்து வரும்வரை அம்மா ஒரு வார்த்தை பேசவில்லை. கிளம்பும் போது சந்திரன் சொன்னான்

“உடம்பை பாத்துக்கோங்க. அடுத்த முறை நீங்க கார்லயே ஊருக்குப் போகலாம். “

“நிஜமாவா“ எனக்கேட்டாள் அம்மா. அப்படிக் கேட்டபோது அவளது முகத்தில் விவரிக்கமுடியாத சந்தோஷம் பெருகியிருந்தது. சந்திரன் அதை உறுதி செய்பவன் போலச் சொன்னான்

“ஸ்ரீவில்லிபுத்தூர் வரை தனியா காரை ஒட்டிக்கொண்டு உங்களாலே போக முடியும் தானே. “

அதைக்கேட்டபோது அம்மா பலமாகத் தலையாட்டினாள்.

சந்திரன் வீட்டிற்குத் திரும்பி வந்து சொன்னான்

“உங்க அம்மாவை என்னாலே புரிஞ்சிகிடவே முடியலை. நானே இதுவரைக்குக் கார்ல ஊர்வரைக்குப் போயிட்டு வந்ததில்லை. டென் அவர்ஸ் டிராவல். ஆனா நான் ஒட்டுகிட்டுபோயிடுவேனு தலையாட்டுறாங்க“

அதை இப்பவே செய்து இருக்கலாம்லே என்பது போல ஆதங்கமாகப் பார்த்தாள் ஸ்வேதா. இதற்காகவே அம்மாவை உடனே பெங்களூருக்குத் திரும்ப வரவழைக்க வேண்டும் போலிருந்தது. அத்தோடு அப்பாவின் மீது அவளுக்குப் பெருத்த கோபமும் உருவாகியிருந்தது

••

0Shares
0