விடுதலை என்பது வேறு

இடக்கை நாவல் குறித்த வாசிப்பு அனுபவம்

சபரிராஜ் பேச்சிமுத்து

ஒளரங்கசீப்பின் இறுதிநாளில் தொடங்குகிறது நாவல். அதனைத் தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்படுகிறார்கள். ஒருவர் ஒளரங்கசீப்பின் விசுவாசி. அரசியல் கைதி. கைதான உடனே விசாரணை என்கிற தண்டனை தொடங்குகிறது. இன்னொருவர் சாமானியன். தாழ்த்தப்பட்டவர். காத்திருப்பு என்கிற தண்டனை தொடர்கிறது. இந்த இழையில் இருந்து இந்தியாவின் கடந்த காலத்தின், நிகழ்காலத்தின் நீதியை, நீதிமுறையை விசாரணை செய்கிறது இந்த நாவல்.

மரணம் பற்றிய பயம். அதிகாரத்தின் கருணையற்ற இரும்பு கை. முட்டாள்களின் அரசாட்சி. நீதிக்காகக் காத்திருத்தல். எந்த அரசாட்சியிலும் பெண்களின் நிலை. பசி. ஆட்சியாளர்களுடைய கவிதை பற்றிய பயங்கள். அரசியலில் வியாபாரம். வியாபாரிகளின் அரசியல். காதல். சாதியத்தின் கொடூரங்கள். அன்பிற்காக ஏங்கும் மனித மனங்கள் மற்றும் அதனுடைய இருள் எனப் பல தளங்களில் இந்த நாவல் விரிந்து பரந்து செல்கிறது.

பொதுவாக எஸ்.ரா அவர்களுடைய எழுத்தில் திருடர்கள், பெண்கள், குழந்தைகளின் உலகங்கள் கவித்துவமாக வெளிப்படும் அதுவும் மாய யதார்த்த களம் என்பது அவருக்குச் சொந்த மைதானத்தில் சிக்ஸர் அடிப்பது போன்றது.

பள்ளி காலங்களில் முகலாய வரலாற்றைப் படித்த போது, அதில் ஒளரங்கசீப் மட்டும் தனித்துத் தெரிந்தார். அரசு பணத்தைக் கட்டிடம் காட்டுகிறேன் என்று வீணாக்காமல். போதை எடுத்துக் கொள்ளாமல். தன் தேவைக்குக் குல்லா தைய்த்து, குரான் படி எடுத்த, இளமையில் தன்னுடைய அப்பாவாலும் முதுமையில் தன்னுடைய மகனாலும் வீழ்த்த முடியாத ஒரு ‘டேவிட் பில்லா’ என்கிற படிமத்துடனேயே இத்தனை நாள் என் மனதில் இருந்த ஒளரங்கசீப்பின் முதுமையை முற்றிலும் வேறு கோணத்தில் எழுதியுள்ளார் ஆசிரியர்.

உதாரணமாக, தன்னுடைய இறுதிக் காலத்தில் மரணம் பற்றிய பயம் தன்னைச் சூழ்ந்திருக்கும் போதிலும் ஒளரங்கசீப் மனதில் நினைத்துக் கொள்வார்.

‘மரணத்தின் காலடி ஓசைகள் கேட்கிறது. ஆனாலும், அது என் அறைக்குள் வர என் அனுமதி கேட்டு காத்திருக்கிறது.” இந்த ஒருவரி ஒளரங்கசீப் என்ற மனிதனின் கதாபாத்திரத்தை அவனது மொத்த வாழ்க்கையை விவரிக்கிறது.

ஒரு புத்தகத்தில் ஏதேனும் சில வரிகள் அருமையாக இருந்தால், அதனை அடிக்கோடிட்டுப் படிப்பது வழக்கம். என் பிரதியில் முதல் அத்தியாயம் முழுக்கவே இப்போது அப்படி அடிக்கோடிடப்பட்டுள்ளன. இந்த முதல் அத்தியாயத்தை மட்டுமே தனியாகப் பிரித்து ஒரு சிறுகதையாக வெளியிடலாம்.

நேராக ஒரு விஷயத்தைச் சொல்வதை விட ஆசிரியர் தன் கதையில் ஒன்றை ஒளித்து வைத்து அதனை வாசகன் கண்டடைவது என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு. அப்படி இந்தக் கதையில் எஸ்.ரா பல விஷயங்களை ஒளித்து வைத்திருக்கிறார்.

நாவலின் ஒரு அத்தியாயத்தில் ஒரு கதை சொல்லி புராணக் கதை ஒன்றை சொல்கிறார். அதில் ஒரு புழு நீதி கேட்டுச் செல்கிறது. ஒரு தேரோட்டிக்குத் தண்டனை தரப்படுகிறது. புழு சொல்கிறது, குற்றம் செய்தவள் ராணி அவளைத் தண்டிக்க வேண்டும். அரசு புழுவை வெளியேற்றுகிறது. பின்னர் அந்தப் புழு கடவுளை நீதி கேட்க அழைத்து வருகிறது. பின்னர் ராணி குற்றவாளி எனத் தீர்ப்பு வந்த பிறகு புழு அவளை மன்னித்து விடுகிறது.

இந்தக் கதையைக் கதைசொல்லி சொல்லி முடித்ததும். விசாரணைக் கைதிகள் தனக்கு ஒருநாள் நீதி கிடைக்கும் என்ற செய்தியை எடுத்துக் கொள்கிறார்கள். நீதி கிடைக்க வேண்டுமானால் இறைவனே நேரில் வர வேண்டும் என்கிற செய்தியை கதாநாயகன் எடுத்துக்கொள்கிறான். மன்னிப்பே பெரிய தண்டனை என்பதனை வாசகன் கொள்கிறான்.

அதையும் தாண்டி, அடுத்த அத்தியாயத்தில் சிறையில் ஒரு பெண் சொல்கிறாள். அவளுடைய கணவன் கொஞ்ச நாள் முன்பு மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தான் என்று. அவன் ஒரு தேரோட்டி. மேலே சொன்ன கதையில் புழு, ராணி, கடவுள் என்ற பலரும் தங்கள் வேலையை முடித்துக் கிளம்பிய போதும், “எதற்கு நான் தண்டிக்கப்பட்டேன்?” என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல் நின்று கொண்டிருந்த தேரோட்டியின் பிம்பம் இந்த அத்தியாயத்திற்கு வருகிறது.

இன்னும் சில அத்தியாயங்கள் தாண்டி ஒருவனின் பிணம் ஆற்றில் மிதந்து வருகிறது. அவன் ஒரு பிரபுவின் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தவன். அவன் யார் எப்படி இறந்தான் என்கிற விசாரணை நடக்கிறது. அதைப் படிக்கப் படிக்க ‘ஆந்தோன் செகாவ்’ வின் ‘பச்சோந்தி’ என்கிற சிறுகதை நியாபகம் வந்தது.

ஆக, நீதி என்பது புராண காலத்திலும், ஒளரங்கசீப் காலத்திலும், ஆந்தோன் செகாவ் காலத்திலும், இன்றைக்கும் எளியவர்களை நசுக்குவதையே செய்து வருகிறது. இன்றும் சஞ்சய் தத்கள் வெளியிலேயும் ஏழு தமிழர்கள் உள்ளேயும் இருப்பதைக் காணலாம்.

இந்தியாவின் எமர்ஜென்சி காலத்தில் சிறு சிறு வழக்குகளில் உள்ளே சென்றவர்கள் விசாரணைக்கே அழைக்கப்படாமல் பல நாள் சிறையில் இருந்தனர். அதைப் போலவே இந்த நாவலிலும் காலா என்றழைக்கப்பட்ட திறந்தவெளி சிறையில் பல விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டனர். குற்றங்களில் சாதி இல்லை என்பதால் அனைத்து சாதியினரும் உள்ளே இருந்தனர். ஆனால், குற்றவாளிகளுக்குச் சாதி உண்டு என்பதால் அங்கேயும் தீண்டாமை கொடுமை இருந்தது. அங்கே கொண்டு வரப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களும் கழிவுகளை அகற்றும் வேலைகளைத் தான் செய்தனர், சாதிய கொடுமைகளுக்கு ஆட்பட்டனர். இது அப்படியே மனதிற்குள் ஒரு பிரிட்டிஷ் இந்தியாவை வரைகிறது. மொத்த இந்தியாவும் அடிமை அதிலும் சிலர் இந்தியர்களுக்கு அடிமை. கீழே இருந்தவனுக்குச் சமூக விடுதலையைக் கொடுக்காமல் எப்படிப் பிரிட்டிஷ்காரர்களிடம் இவர்கள் அரசியல் விடுதலையைக் கேட்டார்கள் என்பது புரியவில்லை. தாழ்த்தப்பட்டவனுக்குச் சிறையும் விடுதலையும் ஒன்று தானே. பின்னர். எதற்கு அவன் விடுதலை கேட்க வேண்டும்?

இந்தக் கதையின் நாயகன் ஒளரங்கசீப் அல்ல. மொத்தக் கொடுமைகளையும் அனுபவித்த சாமானியன் தூமகேது தான் இந்தக் கதையின் நாயகன். அவன் இந்தப் பக்கங்களில் ஏதோ ஒரு பக்கத்தில் காணாமல் போய் விடுகிறான். இந்திய மக்கள் கடலில் எங்குக் கரைந்து போனான் என்று தேடிக் கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு கலவரத்தில் கையில் கத்தியுடன் நிற்கிறான். கொஞ்ச நேரம் கழித்துப் பல்லாயிரம் மைல் தூரம் கடந்த ஆற்றில் பிணமாக வருகிறான். அவனைப் புதைத்து விட்டு வீட்டிற்குப் போனால் அங்கே எடுபுடி வேலை செய்துகொண்டிருக்கிறான். பின்னர் ஒரு விபச்சார விடுதியில் விளக்குத் தூக்குகிறான். இது என்ன இப்படிக் கதையில் சுற்றிக் கொண்டிருக்கிறானே என்று நினைக்கும் போது தான் தெரிகிறது. இது ஒரு தூமகேதுவின் கதை அல்ல. இந்நாட்டில் உள்ள அனைத்து சாமானியனும் தூமகேது தான்.

இதற்கெல்லாம் முடிவாக இறுதியில் தூக்குக் கயிற்றை விற்றுக் கொண்டு வருகிறான். மிக முக்கியமான ஒரு செய்தியை சொல்கிறான். ‘தப்பித்தல் என்பது வேறு விடுதலை என்பது வேறு’ இது புறத்திற்கு மட்டுமல்ல அகத்திற்கும் சேர்த்தே சொல்லி நகர்கிறான்.

அடையாளம் துறத்தல் தான் எவ்வளவு ஆனந்தமானது என்பதற்கு இந்த நாவலில் ஒரு அருமையான காட்சி வருகிறது. ஒளரங்கசீப் ஒருநாள் மாறுவேடத்தில் நகர்வலம் வருகிறார் அப்போது ஒருவர் அவரை ஒருவர் “சகோதரா!” என்று அழைக்கிறார். அதுவரை அவரை யாரும் அப்படி அழைத்தது இல்லை. இதை நான் வேறு கோணத்தில் பார்க்கிறேன்.

உண்மையில் மனிதர்கள் அனைவரும் விக்ரமன் படத்தில் வருவது போன்ற அன்பானவர்கள் தான். எந்தத் தயக்கமும் இன்றிப் புதிதாக யார் அறிமுகம் ஆனாலும் அவரைப் பெரும்பாலனோர் சகோதரனாகவே பார்க்கிறோம். அவனது அடையாளம் தெரியும் வரை. அவனது மதம், மொழி, சாதி தெரிந்தவுடனே தான் அவன் நண்பனாகவோ எதிரியாகவோ ஆள்பவனாகவோ அல்லது அடிமையாகவோ மாறி விடுகிறான்.

இதில் பிஷாடன் என்கிற ஒரு அரசன் வருகிறார். இன்று மீம்களில் வரும் அரசியல்வாதிகளுடன் கொஞ்சம் சேடிஸம் சேர்த்தால் வரக்கூடிய உருவம் தான் பிஷாடன். “ஒரு அரசனுக்குத் தன் மக்களைத் தன் நாட்டை அழிக்கக் கூட உரிமையில்லையா?” எனக் கேட்பவன். வரலாறு நெடுக கொடுங்கோலர்களுக்கு என்ன நடந்ததோ அதே முடிவு பிஷாடனுக்கும் வருகிறது.

இந்த நாவலில் அரசியல், நீதி, கொடுங்கோண்மை என்று பேசப்பட்ட புற விஷயங்களைப் போலவே மனித உணர்வுகளையும் மிக அழகாகக் கையாண்டுள்ளார்.

கணவனுக்கு உடல் சுகம் தர முடியாத மண்ணாலான பெண் தன் உடலைக் கரைத்து மதுவாக மாற்றிக் கணவனுக்குத் தருகிறாள். அவன் குடிக்கிறான், நண்பர்களுக்கும் கொடுக்கிறான். மதுவின் வெறி அதிகமாக அதிகமாக அவளை மொத்தமாகக் கரைத்து குடித்து விடுகிறான். இப்போது அவனிடம் கிணறு நிறைய மது இருக்கிறது. ஆனால், மனைவி இல்லை .குற்றவுணர்வு அதிகமாக இப்போது கிணற்றை மூடிவிட்டு ஒரு மதுபானக்கடைக்குப் போய்க் குடிக்கிறான்.

ஏதாவது ஒன்றை அடைய நினைக்கிறோம். அதை அடைய வேண்டும் என்ற வெறியில் அறத்தை கவனிக்காமல் எப்படியாவது அடைந்து விடுகிறோம். பின்னர் முழுவெற்றியை ருசிக்க முடியாமல் குற்றவுணர்வில் தவிக்கிறோம். ஆனால், அதே குற்றவுணர்விலேயே அதனை அனுபவிக்கவும் தொடங்குகிறோம்.

ஊரின் மிக அழகான விலைமகள். அந்த ஊரின் அத்தனை பெரிய மனிதர்களையும் பார்த்தவள் ஒரு ஓவியன் மீது காதல் கொள்கிறாள். அப்படியென்றால் காதல் என்பது காமம் கடந்ததா? ஆனால், அவன் தன் தோழியின் காதலன். அப்படியென்றால் காதலில் துரோகம் சரியா? அந்த ஓவியன் அவளை ஒரு வியாபாரியிடம் விற்று விட்டுச் செல்கிறான். இப்போது எது காதல்?. ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொண்டாலும் இவர்களைத் தான் இந்தச் சமூகத்தில் பிழைக்கத் தெரிந்தவர்கள் என்கிறோம்.

அந்தத் தோழி இப்போது தற்கொலை செய்து கொள்கிறாள். தன்னைச் சார்ந்தவர்கள் தனக்குத் துரோகம் செய்யும் போது, அவர்களைத் தண்டிக்க முடியாத போது வெள்ளந்திகளின் மனம் தங்களையே தண்டித்துக் கொள்கிறது.

“அள்ளிக் கொள்ளுங்கள்” என்று வாசகன் முன்பு ஒரு பெரும் கடலை விரித்து வைத்துள்ளார் ஆசிரியர். இதனை எழுதிய எஸ்.ரா அவர்களுக்கு அவருடைய இடது கையில் முத்தங்கள்.

,

0Shares
0