புத்தக வெளியீடுகள், கண்காட்சி என்று டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் பரபரப்பாக ஒடியாடியதில் இருந்து விடுபட்டு சில நாட்களாக கன்யாகுமரி மற்றும் திற்பரப்பு அருவி என்று ஒய்வில் இருந்தேன், எவ்வளவோ முறை கன்யாகுமரிக்கு வந்திருந்த போதும் அது புதியதாகவே இருக்கிறது, அறையின் ஜன்னலைத் திறந்தால் கடல்.
பின்னிரவில் கடற்கரையில் சுற்றி அலைந்தேன், கடல்காற்றைப் போல உன்னதமானது உலகில் வேறில்லை, கடல் மீது நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன, பனியோடு கூடிய இரவு
கடலின் நீல மயக்கம் மனதைப் பெரிதும் சாந்தம் கொள்ளச் செய்தது,
•••
நேற்று கோவில்பட்டி சென்று தேவதச்சனோடு நாள் முழுவதுமிருந்தேன், தமிழ்நாட்டில் சமகால கவிதைகள். நாவல். சிறுகதை. குறித்து இத்தனை தீவிரமாக அசலாக உரையாடக்கூடிய இன்னொருவர் கிடையாது, நாவல் குறித்த அவரது பார்வைகள் வியப்பளிக்க்கூடியவை, அவரது புதிய கவிதைகள் மாறுபட்ட கவித்துவமொழியோடு மிகப்பெரிய சாதனையை ஏற்படுத்தியிருக்கின்றன, எனது இலக்கிய ஆசான்களில் அவர் முக்கியமானவர், அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன், நேற்றும் கூட ஏதேதோ பேசினோம் ஒரு ஆண்டிற்கு உட்கார்ந்து யோசிக்கும் அளவிற்கு புதிய புதிய விசயங்களை அடையாளம் காட்டிப் பேசினார் தேவதச்சன்
•••
இந்த ஒரு வாரத்தில் மூன்றுமுறை Emir Kusturicaவின் Arizona Dream படத்தை பார்த்துவிட்டேன், முன்பு ஒரு முறை பார்த்த போது அது என்னை வசீகரிக்கவில்லை இப்போது மறுபடி பார்க்கையில் அது தரும் கிளர்ச்சி தனித்துவமாக இருந்தது,
மிக அருமையான படமது, தடுமாற்றமிக்க மனதும் கற்பனையுமாக சுற்றித்திரியும் இளமைபருவத்தைப் பற்றியது, 1993ம் ஆண்டு வெளியாகி இருக்கிறது, ஐரோப்பாவெங்கும் இந்தப் படத்தை இளைஞர்கள் தங்களது வேதப்புத்தகம் என்று கொண்டாடியிருக்கிறார்கள், கவித்துவமும் காட்சிப்படிமங்களும் இடைவிடாத பகடியும். மிகை கற்பனையும் என்று படம் மாறுபட்டதொரு கதைக்களத்தை கொண்டது, செர்பியாவை சேர்ந்த எமிர் கஸ்துரிகா சமகால இயக்குனர்களில் முக்கியமானவர். இவ்ரது திரைப்படங்களே ஐரோப்பிய இளைஞர்களின் விருப்ப்பட்டியலில் என்றும் முதலிட்ம் பெற்றிருக்கிறது, இவரது படங்கள் பின்நவீனத்துவ நாவல்கள் போல பன்முகமும் பல்குரலும் கொண்டவை.
செகாவ் துவஙகி போர்ஹே வரையான இலக்கியவாதிகள். வான்கோ. டாவின்சி போன்ற ஒவியர்க்ள். துரித இசைக் கலைஞர்கள் என்று ஒவ்வொருபடத்திலும் இசை ஒவியம் இலக்கியம் தத்துவம் என்று கூட்டுகலையாகவே உருவாக்கபடுகின்றது, நம் காலத்தின் புதிய சினிமா அடையாளம் இதுவே
அரிசோனா ட்ரீம்ஸ் அவசியம் காணவேண்டிய படம்
••
The Social Network படம் எனக்குப் பிடித்திருந்த்து, பேஸ்புக்கை உருவாக்கியவரின் கதை தான் என்றாலும் ஒரு புதிய எண்ணம் எப்படி செயலாகிறது, அதற்கான போராட்டம் மற்றும் எண்ணம் நம்மை வாழ்வில் உயர்த்தும் அதே நிமிசம் எவ்வளவு எதிர்ப்பு துரோக்ங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை நுட்பமாகக் காட்டியிருக்கிறார்கள், இசையும் துரித வேகமான காட்சிகளும் இன்றைய கணிணி உலகின் புதிய சாத்தியங்களும் என படம் வித்தியாசமாக இருக்கிறது
••
The King’s Speech பார்த்தேன், பொதுவாக பிரிட்டீஷ் படங்களில் இன்றும் மேடை நாடகத்தின் சாயல் அதிகமாக இருக்கும், குறிப்பாக காட்சிபடுத்துதலில் செவ்வியல் சினிமாவை மீறாத திரைக்கதை அமைப்பு கொண்டிருக்கும், குடும்பம் என்ற அமைப்பின் சிக்க்ல்கள். தவிப்புகள் இன்றைக்கும் இங்கிலாந்தின் வெற்றிகரமான திரைப்படங்களாக உள்ளன, ஆண்டிற்கு ஒரு அரசகுடும்பத்தை பற்றிய படம் வருவது ஒரு சம்பிரதாயம் போலிருக்கிறது, அந்த வரிசையில் வந்துள்ள படமிது, இது வழக்கமான அரசகுடும்ப படம் போல அலங்கார ஆடை அணிவகுப்பு படமில்லை, ஆறாம் ஜார்ஜ் மன்னரின் திக்குவாய் பிரச்சனைப் பற்றியது, அதை சரிசெய்யவருபவருக்கும் மன்னருக்குமான நட்பு மற்றும் அவரது கடந்தகாலத்தை சுற்றியே நிகழ்கிறது, மெலோடிராமா வகையைச் சேர்ந்த்து, பழைய படம் ஒன்றினை மறுபடி பார்த்தது போலவே இருக்கிறது
**
டேனி போயலின் 127 Hours படம் பார்த்தேன், மிகவும் சலிப்படைய செய்தது , செயற்கைதனமான உணர்ச்சிகள். மற்றும் மரபான ஹாலிவுட் பரபரப்புக் காட்சிகள் தாண்டி பாறையில் சிக்கி தனது கரத்தை தானே துண்டித்துக் கொள்ளும் ஒரு மனிதனின் வேதனையை நிஜமாகப் பதிவு செய்யவில்லை
அவரது முந்தைய படமான ஸ்லம் டாக் மில்லினியர் ஒரு மலினமாக இந்திப்படம் போல இருந்த்து, இது அதைவிடக் குப்பை என்றே சொல்வேன், இவரை விட பலமடங்கு சிறந்த இயக்குனர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்
ரஹ்மானின் பின்னணி இசையிலும் பிரமாதமில்லை, ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே அவரது தனித்துவம் புலப்படுகிறது, மற்றபடி அவரது இன்னொரு படம் அவ்வளவே
••
ஆன்டன் செகாவ் பற்றிய எனது உரை நடந்த கூட்டத்திற்கு அரங்கு நிரம்பிய பார்வையாளர்கள். அதன் முந்திய நாள் சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் ரஷ்யாவின் உல்ரிஷ் நகர மேயர் இலியானா எனது செகாவின் மீது பனி பெய்கிறது புத்தகத்தை வெளியிட்டுப் பேசினார், அதில் ஜெயகாந்தன் கலந்து கொண்டு செகாவ் பற்றிய எனது நூலைப்பற்றிப் பேசியது நெகிழ்வாக இருந்தது
இதே நிகழ்வில் கவிஞர் தமிழச்சி தஙகபாண்டியன் கலந்து கொண்டு செகாவ் மீது பனிபொழிகிறது புத்தகம் குறித்து சிறப்பான உரை நிகழ்த்தினார், அன்றும் நான் செகாவ் பற்றிப் பேசினேன்
அதன் பிறகு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 21ம் தேதி மாலை ஒரு மணி நேரம் ஆன்டன் செகாவ் பற்றி மிக விரிவான உரையாற்றினேன் அது விரைவில் முழுமையான காணொளியாக யூடியூப்பில் வெளியிடப்பட உள்ளது
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் போல ஒரு வார காலம் தொடர்ச்சியாக தினம் ஒரு உலக இலக்கியம் என்ற தலைப்பில் ஷேகஸ்பியரின் மேக்பெத். ஹோமரின் ஒடிசி. ரிச்சர்ட் பர்டனின் ஆயிரத்தோரு அராபிய இரவுகள், தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும். டால்ஸ்டாயின் அன்னா கரீனனா. வாத்ஸாயனரின் காமசூத்ரா. கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டுகாலத் தனிமை ஆகிய 7 புத்தகங்கள் குறித்து ஒரு மணிநேர உரை நிகழ்த்த இருக்கிறேன்,
இடம் மற்றும் நாள் அறிவிக்கிறேன்.
•••
இணையத்தில் அவ்வப்போது பார்த்த சில முக்கியமான குறும்படங்கள் மற்றும் நேர்காணல்களின் இணைப்பு
The Beauty of Pixar
https://www.youtube.com/watch?v=9T8koHsigiM
Pixar Short: Day & Night – An Inside Look
https://www.youtube.com/watch?v=Ko-27mN7Z2Y
The Life and Death of a Pumpkin
https://www.youtube.com/watch?v=Q-1aui-wluE
Two Solutions For One Problem – Abbas Kiarostami
https://www.youtube.com/watch?v=lRfbq0ikK_E
MY FIRST CRUSH
https://www.youtube.com/watch?v=a6FQTgCogOM
The Inception of Movie Editing: The Art of D.W. Griffith
https://www.youtube.com/watch?v=ExLNbJs46jc
Kafka’s A Country Doctor
https://www.youtube.com/watch?v=_XpvlrOcEcM
Franz Kafka – Metamorphosis
https://www.youtube.com/watch?v=0O1azwOUY3g
THE DOOR
https://www.youtube.com/watch?v=m7eBpdOLRLw
Interview to Hayao Miyazaki
https://www.youtube.com/watch?v=zJLBED-6M8I
**