விட்டல்ராவின் கலைப் பார்வைகள்

கலை இலக்கியச் சங்கதிகள் என்ற விட்டல்ராவ் எழுதிய புத்தகத்தை வாசித்தேன். விட்டல் ராவ் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், ஓவியர். கலைவிமர்சகர்.

பெங்களூரில் வசிக்கும் விட்டல்ராவ் சென்னை ஒவியக்கல்லூரியில் பயின்றவர். உலகச் சினிமா குறித்து ஆழ்ந்து அறிந்தவர். தேர்ந்த இசை ரசிகர். வரலாற்றின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட இவர் தமிழகத்தின் கோட்டைகள் குறித்துச் சிறந்த நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

இவரது போக்கிடம், நதிமூலம் காலவெளி வண்ண முகங்கள் போன்ற நாவல்கள் தனித்துவமிக்கவை. . மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தந்த அவருக்குப் போதுமான அங்கீகாரமும் கௌரவமும் இன்றுவரை அளிக்கப்படவில்லை. சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட முக்கிய விருதுகளுக்குத் தகுதியான படைப்பாளி. நுண்கலைகள் குறித்து இவர் அளவிற்குச் சிறப்பாக எழுதியவர்கள் இல்லை.

இவரது புத்தகங்களில் வாழ்வின் சில உன்னதங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான நூல்.

சென்னை மூர் மார்க்கெட்டிலிருந்த பழைய புத்தகக் கடைகளைப் பற்றியும் அங்கே கிடைத்த அரிய ஆங்கில இதழ்கள்.புத்தகங்கள் குறித்தும் மிக அழகாக எழுதியிருக்கிறார். பழைய புத்தகக்கடைகளின் உரிமையாளர்களைப் பற்றி இவர் எழுதியிருப்பது மிகவும் உண்மை. என் அனுபவத்தில் அதை முழுமையாக அறிந்திருக்கிறேன். அவர்கள் வெறும் புத்தக வணிகம் செய்யவில்லை. அது ஒரு சேவை. தேடி வந்து புத்தகம் கேட்பவர்களுடன் அவர்கள் கொண்டுள்ள உறவும் அன்பும் நிஜமானது.

இவரைப் போலவே பழைய புத்தகக் கடைகளைத் தேடி அலைகிறவன் என்ற முறையில் இந்த நூலை அடிக்கடி எடுத்துப் படிப்பேன். சர்வதே ஆங்கில இலக்கிய இதழ்கள். டைம், லைப் இதழ்கள் என்று எவ்வளவு இதழ்களைத் தேடி வாங்கிப் படித்து பாதுகாத்து வருகிறார் என்பது வியப்பளிக்கிறது.

புத்தகங்களை எப்படிப் பைண்டிங் செய்ய வேண்டும் என்பது பற்றி இதில் ஒரு கட்டுரை உள்ளது. அது போல ஒரு கட்டுரையை இதுவரை யாரும் எழுதியதில்லை. அந்த பைண்டிரின் வாழ்க்கை முழுமையாகக் கண்ணில் தெரிகிறது. புத்தகங்களை உயிராக நேசிக்கும் ஒருவரால் தான் அப்படி எழுத முடியும். இந்த நூலிற்கு Kusumanjali Sahitya Samman விருது கிடைத்துள்ளது.

கலை இலக்கியச் சங்கதிகள் என்ற நூலினை ராஜராஜன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் 39 கட்டுரைகள் உள்ளன. எழுத்தாளர்கள் குறித்தும். ஓவியர்கள், சிற்பிகள் குறித்தும், தமிழ் அழகியல் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. இதன் வழியே குறுக்கு வெட்டில் ஐம்பது ஆண்டுகாலத் தமிழ் இலக்கிய, கலை வெளியின் செயல்பாடுகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது

இந்தத் தொகுப்பில் மூன்று கட்டுரைகள் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியவை.

1993ல் நானும் கோணங்கியும் எழுத்தாளர் நடைபாதை இதயனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரது நாவலை வாங்குவதற்காக வேலூரில் அவரது வீடு தேடி அலைந்தோம். ஒருவருக்கும் அவரைப் பற்றித் தெரியவில்லை.

அதன் பிறகு சென்னை பழைய புத்தகக் கடைகளில் அந்த நாவலைத் தேடி அலைந்திருக்கிறோம். இன்று வரை கண்ணில் படவேயில்லை. இந்தத் தொகுப்பில் விட்டல்ராவ் நடைபாதை இதயனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவருடன் விட்டல்ராவிற்கு ஏற்பட்ட நட்பினையும் நினைவு கூர்ந்திருக்கிறார். மிக நல்ல கட்டுரை

நடைபாதை என்ற நாவலை எழுதி விகடன் போட்டியில் முதல்பரிசு பெற்றவர் இதயன். இந்த நாவல் மும்பையில் சாலையோர கடைகள் நடத்தும் தமிழர்களின் வாழ்க்கையை விவரிக்கக்கூடியது.

இதயனின் இயற்பெயர் குப்புசாமி. வேலூர் பெரிய அல்லாபுரத்தில் வசித்திருக்கிறார். கையில் காசில்லாமல் பிழைப்பு தேடி மும்பை சென்றவர் அங்கே சந்தித்த நடைபாதை வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த நாவலை எழுதியிருக்கிறார். சில ஆண்டுகள் இதயனும் நடைபாதைக் கடை நடத்தியிருக்கிறார். இனக்கலவரத்தில் இந்தக் கடை சூறையாடப்பட்டிருக்கிறது.

பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியை மையாக வைத்துக் கிராண்ட் ரோடு என்ற நாவலும் எழுதியிருக்கிறார். இசையிலும் வாசிப்பிலும் தீவிர நாட்டம் கொண்டிருந்தார் இதயன். அவரது சேமிப்பில் மிகச்சிறந்த இசைத்தட்டுகள் இருந்ததாக விட்டல்ராவ் எழுதுகிறார். ஆழ்வார்பேட்டை நியூ மைசூர் கபே மாடியில் ஒரு அறை எடுத்துத் தங்கி வாழ்ந்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாதவர்.

ஆரம்பக் காலத்தில் தன் எழுத்து அங்கீகரிக்கப்படவில்லை என்று புதுச் சவரப்பிளேடு ஒன்றால் தனது குரல்வளையை இதயன் அறுத்துக் கொண்டார். ரத்தம் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் காப்பாற்றப்பட்டார் என்று விட்டல்ராவ் குறிப்பிடுகிறார். அதிர்ச்சியான விஷயம். புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளனின் துயரை இதை விட வலியோடு சொல்ல முடியாது.

அசோகமித்ரனின் அபுனைவுகள் என்ற கட்டுரையில் அசோகமித்ரனிடம் வெளிப்படும் கேலி மற்றும் தீவிரத்தன்மை, நேர்மை, பொறுப்புணர்வு பற்றி விட்டல்ராவ் மிகச்சரியாக எழுதியிருக்கிறார். அசோகமித்திரனின் ஆங்கிலக் கட்டுரைகளைக் குறிப்பிட்டு எழுதியிருப்பது சிறப்பு.

கோவிந்தன்டே விலாசம் என்ற கட்டுரையில் சென்னையில் வசித்த மலையாள இலக்கிய ஆளுமை எம். கோவிந்தன் பற்றியும் அவருடன் தனக்கு ஏற்பட்ட நட்பினையும் பதிவுசெய்திருக்கிறார் கோவிந்தன் சமீக்ஷா இதழ் கொண்டுவந்த விதம், மற்றும் கலை இலக்கியம் குறித்த அவரது பார்வைகள், கோவிந்தனின் மகன் மணவேந்திர நாத் எடுத்த படம் பற்றியும் குறிப்பிடுகிறார். இந்தக் கட்டுரையில் எம். கோவிந்தன் மாரியப்பன் என்றொரு சிறுகதையைத் தமிழில் எழுதியிருக்கிறார். அது இதுவரை கிடைக்கவில்லை என்ற தகவலைப் பதிவு செய்திருக்கிறார்.

விட்டல்ராவ் தேர்ந்த சொற்களைக் கொண்டு சரளமாக நடையில் கட்டுரைகள் எழுதுகிறார். ஒரு கட்டுரைக்குள் எவ்வளவு அபூர்வமான தகவல்கள். நுட்பமான விஷயங்கள் என்று வியப்பாகயிருக்கிறது

மா.அரங்கநாதன் பற்றிய கட்டுரையில் அவரது கதைகள் அசலாகத் தமிழில் சிந்திக்கப்பட்டுத் தமிழின் கவிதை உரைநடை மரபில் எழுதப்பட்டிருக்கிறது , கெட்டிக்காரத்தனமற்ற சிந்தனாபூர்வ அறிவார்த்த வெளியிலிருந்து தோன்றுபவை அரங்கநாதனின் கதைகள் என்கிறார்.

இது விட்டல்ராவின் படைப்புக்களுக்கும் பொருந்தக்கூடியதே

••

0Shares
0