விளையாட்டுச் சிறுவர்கள்.

1850களில் நியூயார்க் நகர வீதியில் சுற்றியலைந்த பூட் பாலிஷ் போடும் சிறார்கள், பழம் விற்பவர்கள். பேப்பர் போடுகிறவர்கள். பூ விற்பவர்கள் என்று பல்வேறுவிதமான சிறார்களை ஒவியமாக வரைந்திருக்கிறார் ஜான் ஜார்ஜ் பிரவுன்.(John George Brown)

சிறார்களை ஒவியமாக வரைந்தவர்களில் இவரே தனித்துவமானவர். குழந்தைப் பருவத்தைத் தனது ஒவியங்களுக்கான முக்கியக் கருப்பொருளாகக் கொண்டிருந்தார் பிரவுன். ஆரம்பக் காலத்தில் நடுத்தர வர்க்க குழந்தைகளை வரைந்தவர் பின்பு ஏழை, எளிய சிறார்களை அதிகம் வரைந்திருக்கிறார்.

இவரது பல முக்கிய ஒவியங்களின் ஒரிஜினல்களைக் நேரில் கண்டிருக்கிறேன்.

The Card Trick என்ற ஒவியத்தைப் பாருங்கள். சீட்டு விளையாட்டில் தந்திரம் செய்யும் ஒரு கறுப்பினச் சிறுவனும், அவனை வேடிக்கை பார்க்கும் மூன்று வெள்ளை சிறுவர்களையும் காணுகிறோம். அவர்களுக்குள் எந்த இன வேற்றுமையும் பேதமும் இல்லை. வறுமையிலும் ஆரோக்கியமாக யிருக்கிறார்கள். முகத்தில் சந்தோஷம் பொங்கி வழிகிறது. கறுப்பினச் சிறுவனின் தொப்பி கிழே கிடக்கிறது. அதை எவ்வளவு துல்லியமாக வரைந்திருக்கிறார் பாருங்கள்.

மூன்று சிறுவர்களில் ஒருவன் பூட் பாலிஸ் செய்யும் பலகையில் கையூன்றி வேடிக்கை பார்க்கிறான். மற்றவன் ஒரு காலை மடித்து அமர்ந்திருக்கிறான். அவனது மூக்குநுனியின் வளைவு எவ்வளவு அழகாக வரையப்பட்டிருக்கிறது

மூன்று சிறுவர்களின் சிரிப்பு அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. கறுப்பினச் சிறுவனின் தலைமயிர் வெட்டப்பட்ட விதம், காலணி, உடை என அவன் உருவம் மிகத் துல்லியமாக வரையப்பட்டிருக்கிறது

ஸ்டுலில் அமர்ந்திருப்பவன் பேண்டில் ஆங்காங்கே கிழிந்து போயிருக்கிறது. வறுமையோ, வீடற்ற நிலையோ அவர்கள் சந்தோஷத்திற்கு இடையூறாகயில்லை. மூன்று வெள்ளை சிறுவர்களின் கன்னக்கதுப்புகள் நேர்த்தியாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. சீட்டைப் பிடித்திருக்கும் கையின் நிலையும் விரல் எலும்புகளின் துருத்திய நிலையும் கூட அற்புதமாக வரையப்பட்டுள்ளன.

தனது தந்திரத்தின் மூலம் அந்த மூன்று சிறுவர்களை விடவும் தானே சிறந்தவன் எனக் கறுப்பினச் சிறுவன் நிரூபிக்கிறான். சாலையில் திரியும் இச்சிறுவர்களுக்கு இது போலத் தந்திரங்களும் ஏமாற்றுவழிகளுமே பிழைக்க வழி காட்டின.

1860களில் நியூயார்க் நகர வீதியில் இது போல ஏராளமான சிறுவர்கள் பிழைப்பு தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். பிக்பாக்கெட், திருட்டு, ஏமாற்று என்று பல்வேறு குற்றச் செயல்களைச் செய்தார்கள். பெரியவர்களைப் போலச் சிகரெட், சுருட்டுப் பிடிப்பது. அடிதடி சண்டை போடுவது. கத்தியைப் பயன்படுத்தி மிரட்டுவது. கூச்சலிடுவது போன்றவற்றில் ஈடுபட்டார்கள்.

வீடற்ற இவர்களின் உலகம் துயரமானது. பிரச்சனைகளால் நிரம்பியது. 1850களில் வசித்த Horatio Alger என்ற அமெரிக்க எழுத்தாளர் நியூயார்க் நகரின் சாலைக் காட்சிகளைத் தனது படைப்பில் விரிவாகச் சித்தரித்திருக்கிறார்.

ஏழைச் சிறுவர்களின் ஒரே பொழுதுபோக்கு சீட்டு விளையாட்டு மட்டுமே. அவர்கள் நாள் முழுவதும் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள் என்கிறார் அல்கெர்.

ஜார்ஜ் பிரவுன் வரைந்த இன்னொரு ஒவியத்தில் இரண்டு சிறுவர்கள் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முகத்தில் வெளிப்படும் லயிப்பு அந்த ஆட்டத்தில் அவர்கள் எவ்வளவு முழ்கியிருந்தார்கள் என்பதை அடையாளப்படுத்துகிறது.

எது சிறுவர்களின் உலகை இத்தனை உற்சாகமாக்குகிறது. அவர்கள் கடந்த காலத்தினைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எதிர்காலத்தைக் கண்டு பயப்படுவதில்லை. இன்றைய நாளே அவர்களின் உலகம். அதிலும் பசியே அவர்களை உந்திச் செல்கிறது. விளையாட்டுதனமாகவே உலகை எதிர்கொள்கிறார்கள். பெரியவர்களின் செய்கைகளே சிறுவர்களின் இயல்பை தீர்மானிக்கின்றன. முதன்முறையாகச் சிகரெட் பிடிக்கும் சிறுவனை ஒவியம் வரைந்திருக்கிறார் பிரவுன். அதில் அவன் புகையை ஊதும் விதம் பாருங்கள். பெரியவரை அப்படியே நகலாகப் பிரதிபலிக்கிறான்.

சிறுவர்களின் உலகில் நடக்கும் சண்டைகள். கோபதாபங்கள் புகை போல மறைந்து போய்விடக் கூடியவை. கள்ளமற்ற அவர்களின் சிரிப்பும், உற்சாகமும், துடிப்பான செயல்பாடுகளுமே பால்யத்தின் மறக்கமுடியாத நினைவுகள்.

கூடிக் கதைபேசும் நான்கு சிறுவர்களைப் பற்றிய இன்னொரு ஒவியத்தில் ஒருவன் தன்னை மறந்து கதை சொல்கிறான். கேட்கும் சிறுவர்களும் தன்னை மறந்திருக்கிறார்கள்.

சிறுவர்கள் பேசிக் கொள்ளும் கதைகள் ஏன் எப்போதுமே விந்தையாக இருக்கின்றன. காரணம் உலகம் அப்படியானதாக இல்லை, அதைத் தங்கள் கற்பனையிலே உருவாக்க விரும்புகிறார்கள். பூ விற்கும் சிறுமி ஒருத்தியிடம் தங்கள் வீரத்தைக் காட்டும் மூன்று சிறுவர்களிடம் வெளிப்படுவது தாங்கள் சிறுவர்களில்லை. பெரியவர்கள் என்ற திமிரே. அந்த அப்பாவி சிறுமி செய்வதறியாமல் விழிக்கிறாள்.

பிரவுனின் இரண்டு ஒவியத்திலும் சீட்டுவிளையாட்டினை விடவும் அந்தச் சிறுவர்கள் அணிந்திருக்கும் உடை, அவர்களின் காலணிகள். அமர்ந்துள்ள விதம். அவர்களின் வெளிப்படும் பெரியவர்களின் பாதிப்பு இவையே அந்தக் காலத்தின் சாட்சியமாக உள்ளன.

சிறுமிகள் ஒன்றாக அமர்ந்து ஆப்பிள் சாப்பிடும் ஒவியமான The Cider Mill சித்தரிப்பது சிறுவர்களின் பசியைப் பற்றி மட்டுமில்லை. இயற்கையிலிருந்து பிரிக்கமுடியாத அவர்களின் இயல்பையும் தான்.

அந்த ஒவியத்தில் ஆப்பிள் பழச்சாறு தயாரிக்கும் ஆலையின் முன்னால் உள்ள மரப்பலகையில் அந்தச் சிறுமிகள் ஏறி அமர்ந்திருக்கிறார்கள். நேர்த்தியான உடை. தலை சீவிவிடப்பட்டுள்ள பாங்கு. முறையான காலணிகள் என அந்தச் சிறுமிகள் நாகரீகமாகத் தோன்றுகிறார்கள். ஆனால் அவர்களின் கண்கள் பரிதாபமாகயிருக்கின்றன. ஏக்கத்துடனே அவர்கள் பழத்தை உண்ணுகிறார்கள். அவர்கள் முகத்தில் படரும் மென்னொளியும் பின்புலத்தில் பீறிடும் வெளிச்சமும் ஒவியத்தை மிகச்சிறந்த ஒன்றாக்குகிறது.

வளர்ப்பு நாயைக் கொஞ்சி விளையாடும் சிறுவன், மற்ற சிறுவர்களை அடித்துத் துன்புறுத்தும் முரட்டு சிறுவன், முதற்சிகரெட்டை பிடிக்கும் சிறுவன், தெருவில் அணிவகுத்து நிற்கும் சிறார்கள். தெருச்சண்டை, பூ விற்கும் சிறுமி என அவரது பல்வேறு ஒவியங்களில் சிறுவர்களின் உலகம் முழுமையாகச் சித்தரிக்கபட்டுள்ளது.

ஜான் ஜார்ஜ் பிரவுன் வரைந்த ஒவியத்தில் இருந்த சிறுவர்களில் பலர் பின்னாளில் படித்துப் பெரிய வேலைகளுக்குச் சென்றிருக்கிறார்கள். வசதியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். இந்த தெருச்சிறார்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் எனத் தான் கவலை கொண்டதாகவே ஜான் ஜார்ஜ் பிரவுன் தனது குறிப்பு ஒன்றில் கூறுகிறார்

ஜான் ஜார்ஜ் பிரவுன் இங்கிலாந்தின் டர்ஹாமில் பிறந்தார். வறுமையான குடும்பம். ஒவியம் கற்றுக் கொள்ள முடியாத குடும்பச் சூழல். ஆகவே கண்ணாடி தொழிற்சாலையில் கண்ணாடி கோப்பை தயாரிக்கும் வேலை செய்தபடியே இரவில் ஒவியம் கற்றுக் கொண்டார். 1853 இல் நியூயார்க் நகரத்திற்குச் சென்றார். அங்கேயும் கண்ணாடி கட்டராகவே வேலை செய்தார். 1855 இல் அவர் புரூக்ளின் கிளாஸ் கம்பெனியில் பணியாற்றினார். அங்கே அவரது முதலாளியின் மகளைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதன்பின்பே அவர் முழுநேர ஒவியராக உருவாக முடிந்தது.

பால்யத்தில் தான் அனுபவித்த பசியை, நெருக்கடியை, சிரமங்களை தனது ஒவியத்தில் துல்லியமாக வரைந்திருக்கிறார். ஜார்ஜ் பிரவுனின் ஒவியத்தில் சிறுவர்களின் உலகம் மிக யதார்த்தமாக, உண்மையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆரம்பக் காலத்தில் வறுமையில் உழன்ற ஜார்ஜ் பிரவுன் பின்னாளில் தனது ஒவியங்களின் விற்பனை மூலம் பெரும் பொருள் ஈட்டினார். அந்த நாட்களில் ஆண்டிற்கு நாற்பதாயிரம் டாலர் சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அமெரிக்க வாழ்க்கை ஒவியத்தில் எவ்வாறு சித்தரிக்கபட்டுள்ளது என்ற ஆய்வு நூலில் ஜார்ஜ் பிரவுன் வரைந்த ஒவியங்களையே முக்கிய ஆவணமாகக் கருதுகிறார்கள்.

உடைந்த கண்ணாடியின் சில்லுகளில் ஒரே உருவம் பல உருவமாகப் பிரதிபலிப்பதைப் போலத் தனது வறுமையை, துயரமான பால்ய நினைவுகளைப் பல்வேறு சிறார்களின் வழியே  ஒவியமாக பதிவு செய்திருக்கிறார் ஜார்ஜ் பிரவுன். அதுவே கலைஞனால் செய்ய முடிந்த வழி..

0Shares
0