விழித்திரு

குடிப்பதற்கு ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் ஒருவனின் இரவு வாழ்க்கையை விவரிக்கிறது ஜாக்தே ரஹோ.

1956ல் வெளியான இந்தி திரைப்படம். எழுத்தாளர் கே.ஏ. அப்பாஸின் கதை. சோம்பு மித்ரா இயக்கியுள்ளார், ஒற்றை வரிக் கதையைக் கொண்டு மிகச் சிறப்பான படத்தை ராஜ்கபூர் எடுத்திருக்கிறார்.

கல்கத்தாவின் ஒரு இரவில் படம் தொடங்குகிறது

ஏழை விவசாயியான ராஜ்கபூர் வேலை தேடி நகரத்திற்கு வருகிறார். கிராமவாசியான அவருக்குப் பெயர் கிடையாது. அவர் ஒரு அடையாளம் மட்டுமே. அவரது தோற்றத்தைக் கண்டு பலரும் துரத்துகிறார்கள். காவலர் அவரைத் திருடன் என நினைத்து எச்சரிக்கை செய்கிறார். பசியில் வாடி அலையும் அவர் தாகத்தில் எங்காவது தண்ணீர் கிடைக்கிறதா எனத் தேடுகிறார். அவ்வளவு பெரிய நகரில் எங்கும் குடிநீர் கிடைக்கவில்லை. தெருக்குழாயில் காற்று தான் வருகிறது.

தண்ணீர் கிடைக்ககூடும் எனக் குடியிருப்பு ஒன்றில் ரகசியமாக நுழைந்துவிடுகிறார். குழாயில் தண்ணீர் குடிக்க முயலும் போது அவரைத் திருடன் என நினைத்துக் காவலாளி கூக்குரல் எழுப்புகிறான்.பயந்து தப்பியோடுகிறார் அவரைக் குடியிருப்புவாசிகள் துரத்துகிறார்கள். யாரைத் துரத்துகிறோம் எனத் தெரியாமல் அவர்கள் ஆவேசமாகக் கையில் தடியோடு வரும்காட்சி வேடிக்கையானது. இந்தத் திடீர் திருடன் பிரச்சனையால் ரகசியமாகச் சந்திக்கத் திட்டமிட்ட காதல்ஜோடி பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள்.

கிராமவாசி ஒரு வீட்டின் சமையலறையில் ஒளிந்து கொள்கிறார். சில நிகழ்வுகளைச் சந்திக்கிறார். வேறு ஒரு வீட்டில் குடிகாரக் கணவனால் தினமும் துன்புறுத்தப்படும் ஒரு பெண்ணைச் சந்திக்கிறார், அது போலவே மோசடி செய்ய நினைக்கும் பொய்யர்கள். பித்தலாட்ட பேர்வழிகள் எனப் பலரையும் காணுகிறார் அந்தக் குடியிருப்பினுள் இரவு முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

சினிமாவிற்குத் தேவை பெரிய கதையில்லை.சிறிய கதைக்கரு. அதன் இணைப்பாக விரியும் நிகழ்வுகள். காட்சிகளின் நம்பகத்தன்மை. மற்றும் சீரான வளர்ச்சி. இவற்றைச் சரியாகப் பின்னிவிட்டால் நல்ல திரைக்கதை வந்துவிடும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம்.

நகரத்தில் இரவு காவலாளிகள் தெருவில் வலம் வரும்போது ‘ ஜாக்தே ரஹோ, ஜாக்தே ரஹோ!’ என்று சப்தம் எழுப்புகிறார்கள். நம்மைச் சுற்றி நடப்பதைப் பற்றி எதுவும் அறியாமல தூங்கிவிட்டால் நாம் ஏமாற்றப்பட்டு விடுவோம். இது ஏமாற்றுதனங்கள் நிறைந்த நகரம் என நினைவுபடுத்துவது போலிருக்கிறது அந்த எச்சரிக்கை ஒலி

இரவெல்லாம் தாகம் தீராமல் தவித்த விவசாயி அதிகாலையில் ஒரு இளம்பெண் கோவிலில் பாடுவதைக் காணுகிறார். அந்தப் பெண் கிராமவாசிக்குக் குடிக்கத் தண்ணீர் குடிப்பதுடன் படம் நிறைவு பெறுகிறது.

படத்தின் ஒளிப்பதிவும் இசையும் சிறப்பானது. குறிப்பாக விடிகாலை வெளிச்சத்தில் அந்தப் பெண் பாடும் பாடல் காட்சி மறக்கமுடியாதது.

இந்தக் கதையில் வரும் குடிநீருக்கு பதிலாக ஒரு மனிதன் இரவு உறங்குவதற்கு நகரில் இடம் தேடினால் இதே நிகழ்ச்சிகளைத் தான் சந்திக்க வேண்டியது வரும். அந்த வகையில் இப்படம் இன்றும் பொருத்தமாக இருக்கிறது.

ஜாக்தே ரஹோ.திரைப்படம் சோவியத் யூனியனில் சப்டைட்டிலுடன் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இப்படத்தின் நல்ல பிரதி youtubeல் காணக்கிடைக்கிறது.

0Shares
0