வீடு திரும்பிய நாட்கள்

ரஷ்ய இயக்குநர் பாவெல் லுங்கின் இயக்கிய இஸ்ரேலியத் திரைப்படம் Esau. பைபிள் கதை ஒன்றின் நவீன வடிவமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலிய எழுத்தாளர் மீர் ஷாலேவின் நாவலை மையமாகக் கொண்ட இந்தப்படம் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேரும் போது என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது

“அன்றிலிருந்து இன்றுவரை மகிழ்ச்சியும் துரோகமும் ஒன்றுபோலவே இருக்கிறது“ என்று படத்தின் ஒரு காட்சியில் ஏசா குறிப்பிடுகிறார். அது தான் படத்தின் மையப்புள்ளி

குடும்ப உறவில் ஏற்பட்ட விரிசலும் கசப்புணர்வும் காலம் மாறினாலும் விலகிப்போய்விடுவதில்லை. . மீண்டும் ஒன்றிணையும் போது கடந்தகாலத்தின் கசப்புகள் மேலெழுந்து வரவே ஆரம்பிக்கின்றன. விட்டுக்கொடுத்துப் போவது கடந்தகாலத்தை மறந்துவிடுவது என்பது எளிதாகயில்லை. உலகோடு சமரசம் செய்து கொள்ளும் பலரும் குடும்பத்தினருடன் சமாதானம் செய்து கொள்வதில்லை.

வீட்டை விட்டு வெளியேறிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏசா ஊர் திரும்புகிறார். ஒரு தொலைபேசி அழைப்பு அவரை மறுபடி அழைத்து வருகிறது.

ஏசாவிற்கும் அவரது தந்தைக்குமான உறவு மாறவேயில்லை. நோயுற்ற அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள விரும்புகிறார் ஏசா. உண்மையில் அவரது கடைசி நாட்களில் உறுதுணையாக இருக்க விரும்புகிறார்.

ஆனால் குடும்பச் சூழல் அதற்கு உகந்ததாக இல்லை. புதிய பிரச்சனைகள் அவரால் உருவாக ஆரம்பிக்கின்றன

தந்தை தான் ஏசாவையும் ஜேக்கப்பையும் இணைக்கும் பாலம். பேக்கரி ஒன்றை நடத்தும் ஜேக்கப் கடின உழைப்பாளி. அவன் மனைவியை மிகவும் நேசிக்கிறான். அவளோ அதைப் புரிந்து கொள்ளவேயில்லை. மகள் தந்தையின் பேச்சைக் கேட்பதில்லை. தனக்கென யாருமில்லை என்றே ஜேக்கப் நினைக்கிறான். அவனது கோபம் அங்கிருந்தே பிறக்கிறது

இந்தச் சூழலில் தான் ஏசாவின் வருகை நிகழுகிறது.

படத்தின் துவக்காட்சி அபாரமானது. மாபெரும் ஆலயமணி ஒன்றைச் செய்து வண்டியில் ஏற்றி ஜெருசலம் நோக்கிக் கொண்டு செல்கிறார்கள். அந்த மணி தேவாலயத்தில் ஒப்படைக்கப்படுகிறது. அந்த மணியை செய்த ரஷ்ய கிறிஸ்தவர் வாழ்க்கையில் திடீரென விநோத நோய்க்குறி ஏற்படுகிறது. இதனால் அவரால் நடக்க முடியவில்லை. அவர் முடங்கிப்போகிறார். அதிலிருந்து விடுபட அவர் யூத சமயத்திற்கு மதம் மாறுகிறார். அவரது வம்சாவழியில் தான் ஏசாவின் தந்தை வருகிறார். இந்தத் துவக்கப்புள்ளி தான் கதையின் ஆதார சரடு. புதிய நம்பிக்கைக்கும் பழைய நம்பிக்கைகளுக்கும் இடையிலான போராட்டமாகவே இந்தப் படத்தைக் கருதலாம்.

அமெரிக்காவில் வசிக்கும் ஏசா நாற்பது வயதானவர். சமையற்கலையைப் பற்றிப் புத்தகம் எழுதிப் புகழ்பெற்றவர். ஒரு நாள் அவருக்குச் சொந்த ஊரிலிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது. நோய்வாய்ப்பட்ட தன் தந்தையைக் கவனித்துக் கொள்வதற்காகப் பூர்வீகமான இஸ்ரேலிலுள்ள தனது பராம்பரிய வீட்டிற்குத் திரும்புகிறார்.

அவர்களின் குடும்பம் நீண்டகாலமாக ஒரு பேக்கரியை நடத்துகிறது. அந்தப் பேக்கரியை தற்போது நடத்தி வருபவன் ஏசாவின் தம்பி ஜேக்கப், அவனுக்கும் ஏசாவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர்கள் நீண்டகாலம் பிரிந்து வாழுகிறார்கள்.

ஏசா வருகை தந்தது ஜேக்கப்பிற்குப் பிடிக்கவில்லை. ஏசாவை பொறுப்பற்றவன் என்றே கருதுகிறான். ஆனால் ஜேக்கப்பின் மகள் ஏசாவை வரவேற்கிறாள். நட்போடு பழகுகிறாள்.

நீண்டகாலத்தின் பின்பு தன் மகன் தன்னைத் தேடி வந்துள்ளதை நினைத்து ஆபிரகாம் சந்தோஷம் கொள்கிறார்.

ஜேக்கப்பின் மனைவி லேயா நோயாளியாகப் பல காலமாக ஒரு அறையில் முடங்கிக் கிடக்கிறாள். அவளைக் குளிக்க வைப்பது முதல் உணவு ஊட்டுவது வரை அத்தனையும் ஜேக்கப் கவனித்துக் கொள்கிறான். அவள் இந்த நிலைக்கு ஆனதற்கு ஜேக்கப் காரணம் என்று மகள் நினைக்கிறாள்.

பேக்கரியில் உள்ள பணிகளுக்கு ஏசா உதவி செய்ய முயல்கிறான். அதை ஜேக்கப் விரும்பாமல் சண்டையிடுகிறான். எவ்வளவு முயன்றும் அவனை ஏசாவால் சமாதானம் செய்ய இயலவில்லை.

இவர்களுக்குள் என்ன பிரச்சனை. ஏன் இப்படிச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்பதைப் பிளாஷ்பேக் காட்சிகள் விவரிக்கின்றன.

தனது கடந்தகால வாழ்க்கையை ஏசா ஒரு புத்தகமாக எழுதத்துவங்குகிறான். அது தான் பிளாஷ்பேக் காட்சியாக விரிவு கொள்கிறது.

மிகுந்த கவித்துவமாகப் படமாக்கபட்ட பிளாஷ்பே காட்சிகள். சிறுவயதில் ஒரே மூக்குக் கண்ணாடியை ஜேக்கப் ஏசா இருவரும் மாறி மாறி அணிந்து கொள்ள வேண்டிய சூழல். ஒருவரையொருவர் அனுசரித்துத் தான் வாழ வேண்டும். இந்தச் சூழலில் அழகியான லியாவை சந்திக்கிறார்கள். அவளுடன் பழகுவதில் அவர்களுக்குள் போட்டி நடக்கிறது.

ஏசாவுடன் லியா நெருங்கிப் பழகுகிறாள். இது ஜேக்கப்பிற்குப் பிடிக்கவில்லை. அவன் ஆத்திரமடைகிறான். லியாவிற்கு உதவிகள் செய்கிறான் ஏசா. அவளுடன் சைக்கிளில் சுற்றுகிறான். அவர்களுக்குள் காதல் வளர ஆரம்பிக்கிறது. ஏசாவை விடவும் ஜேக்கப் ரொட்டி சுடுவதில் திறமையானவன். ஏசாவோ படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருக்கிறான்.

ஏசாவின் காதல் நிறைவேறவில்லை. அதற்குக் காரணம் ஜேக்கப். அவள் லியாவை ஏசாவிடமிருந்து பறித்துக் கொள்கிறான். ஏசாவின் நிறைவேறாத காதல் அவனை வேதனைப்படுத்துகிறது. வீட்டைவிட்டு வெளியேறி அவன் அமெரிக்கா செல்கிறான்.

அதன் பிறகு ஊரை மறந்து தன்னை ஒரு எழுத்தாளராக மாற்றிக் கொள்கிறான். அப்போதும் குடும்பத் தொழிலான ரொட்டி தயாரிப்பது பற்றியே புத்தகங்கள் எழுதுகிறான். புகழ்பெறுகிறான்.

கடந்த காலத்தின் வடுக்களுடன் நிகழ்காலத்தினை எதிர்கொள்கிறான் ஏசா. தன் தந்தையின் பிடிவாதம் மற்றும் கோபம் காரணமாகவே தாய் முடங்கிக்கிடக்கிறாள் என நினைக்கும் ஜேக்கப்பின் மகள் தந்தைக்கு எதிராக, அவருக்குப் பிடிக்காத வேலைகளைச் செய்கிறாள். முகத்திற்கு எதிராக வாதிடுகிறாள்.

அவள் எடுக்கும் புகைப்படங்களை ஜேக்கப் வெறுக்கிறான். ஆனால் ஏசா அவளைப் பாராட்டி உற்சாகப்படுத்துகிறார். அவளுக்குத் தேவையான உதவிகள் செய்கிறார். அவளது புகைப்படக்கண்காட்சிக்குச் செல்கிறான். இது ஜேக்கப்பை மேலும் கோபம் கொள்ளச் செய்கிறது

தன் மகளிடம் ஜேக்கப் கோபமாக நடந்து கொள்ளும் காட்சியில் அவனது இயலாமையும் அன்பும் ஒரு சேர வெளிப்படுகிறது.

லேயாவைத் திருமணம் செய்து கொண்டு இப்படி நோயாளியாக முடக்கி வைத்திருப்பதை ஏசாவால் தாங்க முடியவில்லை. ஒருநாள் அவள் அறைக்குள் சென்று அவளுக்குத் தேவையான உதவிகள் செய்கிறான். அதை ஜேக்கப்பால் ஏற்க முடியவில்லை.

தன் குடும்ப வரலாற்றை ஏசா புத்தகமாக எழுதுவதை ஜேக்கப் வெறுக்கிறான். ரகசியமாக எழுதப்பட்ட காகிதங்களைத் தேடி வாசிக்கிறான். ஆத்திரமடைகிறான். சகோதரர்களுக்குள் ஏற்பட்ட இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது.

புரிந்து கொள்ளப்படாத அன்பு தான் அவர்களை இப்படி நடக்கச் செய்கிறது. மீண்டும் அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படவே ஏசா புறப்படத் தயாராகிறான். ஆனால் முடிவு எதிர்பாராதவிதமாக நடக்கிறது.

பிரெட் கெலமனின் ஒளிப்பதிவு அபாரமானது. பேக்கரிக்குள் நடக்கும் காட்சிகளில் ஒளியமைப்பு ரெம்பிராண்டின் ஒவியங்களில் வெளிப்படுவது போல அத்தனை கச்சிதம்.

எல்லாக் குடும்பத்திலும் இப்படி வெளிக்காட்டிக் கொள்ளமுடியாத வடுக்களும் கசப்பான நினைவுகளும் இருக்கின்றன. சகோதரர்கள் இரத்தத்தால் பிணைக்கப்பட்ட போதும் நடைமுறை வாழ்க்கையால் பிரித்து வைக்கப்படவே செய்கிறார்கள். அடுத்த தலைமுறை தலையெடுத்த போதும் கடந்தகால நிகழ்வுகளிலிருந்து பெற்றோர்கள் வெளியே வருவதேயில்லை.

குடும்ப உறவின் சிக்கல்களை மிகவும் நுட்பமாகச் சித்தரித்துள்ள விதம் இந்தப் படத்தைத் தனித்துவமாக்குகிறது.

••

0Shares
0