வீட்டிற்குள்ளிருந்து சில குரல்கள்

(சொல்வனம் இணையஇதழ் எழுத்தாளர் அம்பை அவர்களைக் கொண்டாடும் விதமாக சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. மிகச்சிறப்பான முறையில் அம்பையின் படைப்புலகம் பற்றிய கட்டுரைகளுடன், நேர்காணலுடன் இதழ் தயாரிக்கபட்டுள்ளது. அந்த இதழில் வெளியான எனது கட்டுரை.)

அம்பையின் கதையொன்றில் பன்றி பேசுகிறது. அதுவும் கறாரான தொனியில் மனிதர்கள் தங்களைக் குரூரமாகக் கொல்வதையும், விலங்குகளைக் கொண்டு நீதிக்கதைகள் சொல்ல வைக்கும் அபத்தத்தையும் பற்றி பன்றி கண்டிப்புடன் பேசுகிறது.

அது ஒரு பெண்பன்றி. இருபது குட்டிகள் போட்ட பன்றி. சாக்கடையில் வசிக்கிறது.

பாரதியார் தனது சுயசரிதையில் அருந்தவப்பன்றி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அது சாபத்தால் பன்றியாக மாறிய முனிவனின் கதை. முனிவன் ஒரு சாபத்தால் பன்றி வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து அதுவே மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறான். அந்த வாழ்வை அருந்தவப் பன்றி என்று தன் வாழ்வோடு சுட்டிக்காட்டுகிறார் பாரதி.

ஓல்ட் மேஜர் எனும் பன்றியைப் பற்றி ஜார்ஜ் ஆர்வல் தனது விலங்குப் பண்ணை நாவலில் குறிப்பிடுகிறார். அது புதிய ஒரு சமுதாயம் பற்றிய சிந்தனையை உருவாக்க உரை நிகழ்த்தும் பன்றி. கிழட்டு ஆண் பன்றி. குறியீடாகவே அதை ஆர்வல் பயன்படுத்துகிறார்.

பன்றி ஒரு இழிபிறவி என்ற எண்ணம் காலம் காலமாக இருந்து வருகிறது. அது வெறும் கற்பிதம். எல்லா உயிர்களையும் போலத் தான் பன்றியும். உண்ணப்படும் விலங்குகள் எதுவும் சம்மதம் பெற்றுச் சாத்வீகமாகக் கொல்லப்படுவதில்லை தானே.

பன்றியைப் பற்றி நிறையக் கதைகள் எழுதப்பட்டுள்ளன. அவன் காட்டை வென்றான் என்ற தெலுங்கு நாவலை வாசித்துப் பாருங்கள். அது பன்றிக்கும் ஒரு மனிதனுக்குமான உறவை அற்புதமாகப் பேசுகிறது. கேசவரெட்டி மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார்.

சலவான் என்றொரு தமிழ் நாவல் வெளியாகியுள்ளது. பாண்டிய கண்ணன் எழுதிய அந்நாவல் பன்றி வளர்ப்பவர்கள் அதை எத்தனைச் செல்லமாக அழைக்கிறார்கள். வளர்க்கிறார்கள் என்பதைப் பற்றியது.

ஒரு கட்டுக்கதை என்ற சிறுகதையில் மட்டுமின்றி காட்டில் ஒரு மான் கதையிலும் பன்றி இடம்பெறுகிறது.

காட்டில் ஒரு மான் கதை தங்கம் என்ற பூப்பு எய்தாத பெண்ணின் வாழ்க்கையைப் பற்றியது. தங்கம் அத்தை கதைகள் சொல்லக்கூடியவள். அத்தை பூக்கவே இல்லை ஆனால் அவள் கைபட்டால் மாட்டுக்குப் பால் சுரந்தது. அவள் நட்ட விதைகள் முளைவிட்டன. அவளுடைய கை ராசியானது என்கிறாள் அம்மா

பொதுவாகப் பூப்பு எய்யாத பெண்களைச் சுபகாரியங்கள் செய்ய விடமாட்டார்கள். ஆனால் தங்கம் அத்தை மாறுபட்டவள். அவள் ஒரு நாள் குழந்தைகளுக்கு ஒரு மானின் கதையைச் சொல்கிறாள். அக்கதையில், பழகிய காட்டிலிருந்து வழி தப்பிய மான் அறியாத காட்டிற்குப் போய்விடுகிறது. மெல்ல புதிய காடு அதற்குப் பழக்கமாகிறது. அந்தக் காடு அதற்குப் பிடித்துப் போகிறது. புதுக்காட்டின் ரகசியங்கள் அதற்குப் புரிந்துவிடவே அங்கேயே வசிக்க ஆரம்பிக்கிறது. கதை சொல்லி முடித்தவுடன் அத்தை அழுகிறாள். அது மானின் கதை மட்டுமில்லை என்பது கேட்பவர்களுக்குப் புரியும் தானே.

இக்கதையிலும் பன்றியைப் பற்றி ஒரு வரி வருகிறது. அது பழகிய காட்டில் ஓடுகிற பன்றியை அடிப்பதைப் பற்றியது. புதிய காட்டில் அப்படியான பன்றி எதுவும் மானின் கண்ணில் படவில்லை.

கட்டுக்கதை என்ற சிறுகதையில் வரும் பெண் பன்றி தானே முன்வந்து பேசமுற்படுகிறது. உரையாட முற்படுவதற்குக் காரணம் பொழுது போகாமல் திண்டாடுவதாகச் சொல்கிறது.

ஞானியைப் போலப் பேசத் துவங்குகிறது அந்தப் பெண் பன்றி. அதாவது தான் மௌனமாகப் பேசுவதாகச் சொல்கிறது. அதைக் கேட்டதும் கதை சொல்லி, ஆணவப் பன்றிகளுக்கு அடுத்தபடி என்னால் பொறுக்க முடியாதது வேதாந்தப் பன்றிகள் என்கிறார்.

பன்றியைக் கதை சொல்லிக்குப் பிடிக்கவேயில்லை. வேண்டாவெறுப்புடன் தான் உரையாடுகிறார்.

பன்றி கட்டிடத்தின் வாயிற்கதவு பற்றிப் பேச முற்படுகிறது. அந்த வாயிற்கதவில் சதுர அளவு இடமிருக்கிறது. கொல்வதற்குத் துரத்தப்படும் பன்றி அதன் வழியாகவே தப்பியோடுகிறது.

அந்தப் பன்றியிடம் ”சாவைப்பற்றி என்ன நினைக்கிறாய்?” எனக் கேட்கிறாள் கதை சொல்லி.

”நீளமாய், உருண்டையாய் இருப்பது. இரும்பாலோ, மரத்தாலோ ஆனது. இரும்பானால் ஆசனத்திலிருந்து வாய்வரை செருகப்படும் சாவு. மரமானால் அடிச்சாவு. செருகுச் சாவு, அடிச்சாவு, இயந்திரச்சாவு என்று பிரித்துத் தேர்ந்தெடுக்கும் சலுகை வேண்டும் என்று போராடலாம். பன்றிகளிடம் ஒற்றுமை இல்லை. என்கிறது பெண் பன்றி.

கதையின் முடிவில் பெண் பன்றி கொல்லப்படுவதற்காகத் துரத்தப்படுகிறது. அப்போது அந்த பெண்ணிடம் ”தயவுசெய்து சாவைப்பற்றிய ஏதாவது அரிய உண்மையைச் சொல்லிவிட்டுப் போவேன் என்று எதிர்பார்க்காதே. ஒன்றுதான் என்னால் சொல்ல முடியும். நாம் சாகிறோம்.” என்கிறது. கொல்லத்துரத்தும் கழி பன்றியை மட்டுமில்லை, பெண்ணை நோக்கியுமே நீட்டப்படுகிறது.

••

பன்றியைப் பற்றிய பழைய நீதிக்கதைகளைப் போலவே எழுதப்பட்ட நவீனக் கதையிது. இதில் வரும் பன்றியும் ஒரு குறியீடே. இந்தப் பன்றி தன் வாழ்க்கை அவலத்தைப் பற்றிப் பெரிதாக எதையும் சொல்லிக் கொள்வதில்லை. ஆனால் சாவைப் பற்றிப் பேசுகிறது. குறிப்பாக அடித்துக் கொல்லப்படும் தனது நிலையைப் பற்றிச் சொல்கிறது, தப்பியோடும் வாசலைப் பற்றிப் பேசுகிறது. சாவிலிருந்து ரத்தத்தைப் பிரிக்க முடியாது என்பதை அழுத்தமாகப் பேசுகிறது.

சாக்கடையில் உழன்ற போதும் அது பதினாலு குட்டிகளைப் பெற்றிருக்கிறது. பாலூட்டிப் பராமரிக்கிறது. ஆண் பன்றியை பற்றி அது எதையும் பேசவில்லை.

இந்தக் கதையில் வரும் பெண் பன்றியும் காட்டில் ஒரு மான் கதையில் வரும் மானும் இருவேறு நிலைகள். . மானுக்குப் பதிலாக அத்தை ஒரு பன்றியை பற்றிய கதை சொல்லியிருந்தால் என்னவாகியிருக்கும். அல்லது ஒரு மான் தன் சாவைப் பற்றி சம்பாஷிக்க விரும்புவதாகக் கட்டுக்கதையை உருவாக்கி இருந்தால் எப்படியிருந்திருக்கும்.

மானுக்கும் பன்றிக்கும் தான் வேட்டையாடப்படப் போகிறோம் என்பது புரியத்தானே செய்கிறது. இரண்டும் உணவிற்காகவே கொல்லப்படுகின்றன. பன்றி வேட்டை குரூரமாக நிகழ்கிறது. மான் வேட்டை துரத்தப்பட்டு ஒற்றை அம்பால் அல்லது ஒரு துப்பாக்கிக் குண்டால் முடிந்து போகிறது.

பொதுப்புத்தியில் மானும் பன்றியும் வேறுவேறானவை. மான் புனிதமானது. பன்றி அருவருப்பானது. மான் சாது. அப்பாவி. பன்றி மூர்க்கமானது. அம்பை கதையில் இந்த எதிர்நிலையில்லை. இரண்டும் ஒடுக்குமுறையின் அடையாளமாகவே சுட்டப்படுகிறது. தன்னிலை உணர்தலே பன்றிக்கும் மானுக்குமான பொதுவிஷயமாக நடக்கிறது.

அம்பையின் கதைகளில் காடு ஒரு முக்கியப் படிமமாகத் தொடர்ந்து வருகிறது. அடவி என்றொரு சிறுகதையில் செந்திரு என்ற பெண் காட்டைத் தேடிக் கொண்டு போகிறாள். கதையின் இடைவெட்டாகச் சீதை காட்டிற்குப் போன நிகழ்வு வந்து போகிறது. காட்டில் ஒரு மானிலும் காடு மாயவுலகமாக சித்தரிக்கபடுகிறது

அன்றாட வாழ்விலிருந்து விடுபடுவதுதான் காட்டிற்குள் போவதன் நோக்கமா. இந்திய மரபில் ஒருவர் காடு நோக்கிப் போவது துறவுக்கும் வேட்டைக்கும் மட்டுமே. இந்த இரண்டு காரணங்களுக்காகவும் அம்பையின் கதையில் வரும் பெண்கள் காட்டை நோக்கிப் போவதில்லை.

காடு இயற்கையின் குறியீடு. காடு அரவணைத்துக் கொள்கிறது. காடு புதுவகைச் சுதந்திரம் ஒன்றைத் தருகிறது. அதன் பொருட்டுத் தானோ இவர்கள் காட்டை நோக்கிப் போகிறார்கள்

காட்டிலே ஒரு மான் கதையும் அம்மா ஒரு கொலை செய்தாள் கதையும் ஒரே நிகழ்வின் இருநிலைகளைப் பேசுகின்றன. அம்மா ஒரு கொலை செய்தாள் கதையில் பூப்பு எய்திய பெண் அதை எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியாமல் பரிதவிக்கிறாள். அம்மா தன்னை ஆற்றுப்படுத்துவாள் எனக் காத்திருக்கிறாள். ஆனால் ஊரிலிருந்து வந்த அம்மாவோ இந்த இழவுக்கு என்னடீ அவசரம், இதுவேற இனிமே ஒரு பாரம் என்று குற்றம் சாட்டுகிறாள். ஈரமில்லாத சொற்கள் பட்டாக் கத்தியாய் அவளுக்குள் சொருகுகின்றன எனக் கதை முடிகிறது.

பூப்பு எய்திய சிறுமியும் பூப்பு எய்யாத அத்தையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தானே.

அம்மாவின் பிரச்சனை பூப்பு எய்தியது அல்ல. இப்போது என்ன அவசரம் என்பதே.

அம்மாவைக் கொலை செய்யத்தூண்டுவதும் அத்தையின் பூப்பு எய்யாத வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதும் புறஉலகின் நெருக்கடிகளே. அதை எதிர்கொள்ளக் கதைகளைத் துணைக்கு வைத்துக் கொள்கிறாள் அத்தை. அம்மா ஒரு கொலை செய்தாள் கதையில் வரும் இளம்பெண் எதிர்காலத்தில் கதை சொல்வதை நோக்கி சென்றிருப்பாள்.

அம்பையின் கதையில் இரண்டு வகைப் பெண்கள் இடம்பெறுகிறார்கள். ஒருவர் படித்த, அறிவாளியான, சுயசிந்தனையுள்ள. பெண். மற்றவர் வீடே உலகம் எனச் சமையல் அறைக்குள் முடங்கிய, பண்பாட்டிற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்ட, பேசத்தெரியாத, படிக்கத் தெரியாத, நிறையப் பிள்ளைகள் பெற்றுக் கொண்ட சராசரி மனுஷி.

படித்த பெண் நிறையக் கேள்வி கேட்கிறாள். ஒடுக்குமுறையைச் சுட்டிக்காட்டுகிறாள். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என ஆதங்கப்படுகிறாள். ஆனால் இத்தனை கேள்விகளுக்குப் பதிலாக ஊருக்கு கிளம்பும் போது பயணத்தில் பசி ஆற்றிக் கொள்ள தோசை கட்டித் தருகிறாள் வீட்டில் முடங்கிய பெண். இது தான் அவளது தீர்வு.

அம்பை தன் கதைகளின் வழியே பெண்களுடன் தான் அதிகம் உரையாடுகிறார். அவர்களை தங்கள் வாழ்க்கை ஏன் இத்தனை சிக்கலாக உள்ளது என்பதைப் பற்றி யோசிக்கத் தூண்டுகிறார். பண்பாட்டின் பெயரால் எப்படி எல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்துகிறார்.

அவரது கதையில் வரும் ஆண்கள் உரத்து பேசுவதில்லை. பண்பாடு, விழுமியங்கள் பற்றிப் பெரிதாக விவாதிப்பதில்லை. சுகபோகிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

அம்மா ஒரு கொலை செய்தாளில் வரும் அம்மாவும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை கதையில் வரும் ஜீஜியும் வெறும் கதாபாத்திரங்களில்லை. அவர்கள் பிரதிநிதிகள். இன்றும் அவர்களின் பிம்பம் அப்படியே வேறு பெயர்களில் தொடரவே செய்கிறது.

இந்தப் பெண்கள் தங்களின் அக புற நெருக்கடிகளை அறிந்தும் அறியாமலும் குடும்பத்திற்குள்ளாகவே இருக்கிறார்கள். அதை விட்டு வெளியேறுவதில்லை.

அம்பையின் கதை மொழியும் கதையைக் கட்டமைக்கும் விதமும் தமிழ்ச் சிறுகதைகளுக்கு மிகவும் புதியது. அதன் காரணமாகவே அவர் ஆழ்ந்து வாசிக்கப்பட்டார். இன்றும் கொண்டாடப்படுகிறார்.

பெண் எழுத்தாளர்களில் பலரும் சுயஅனுபவங்களை முதன்மைப்படுத்திக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். அதுவும் துயர அனுபவங்களை அதிகம் எழுதியிருக்கிறார்கள்.

அம்பை சுய அனுபவத்திலிருந்து சிறுதுளிகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறார். வாழ்வனுபவத்தைக் கேள்வி கேட்கிறார். சிந்தனையும் அனுபவமும் கலந்தவொரு கதைவெளியை உருவாக்குகிறார். வீடு உண்மையில் இதமானது தானா என்ற கேள்வியை எழுப்புகிறார். கண்ணீர் சிந்தியபடியிருக்கும் பெண் கதாபாத்திரங்களை அவர் உருவாக்குவதில்லை என்பதே அவரது தனிச்சிறப்பு.

சிறகுகள் முறியும் தொகுப்பிலிருந்து, சமீபத்திய அவரது சிறுகதைகள் வரை வாசிக்கும் போது அம்பையின் கதையுலகம் மெல்ல விரிவு கொள்வதையும் தேசம் தாண்டி கதைகள் நிகழ்வதையும் காணமுடிகிறது. பயணம் ஒரு முக்கிய அங்கமாகக் அவரது கதைகளில் இடம் பெறுகிறது. ஊர் விட்டு ஊர் போவது மட்டுமின்றித் தேசம் விட்டும் கதை செல்கிறது. பர்மிங்ஹாமில் வாழும் சிலி நாட்டு அகதிப் பெண்ணின் கதையும் இந்தியப் பெண்ணின் கதையும் வேறுவேறானதில்லை தானே.

நவீன வாழ்க்கை பெண்களின் சிந்தனையை, வாழ்க்கை முறையைப் பெரிதும் மாற்றியிருக்கிறது. கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருக்கிறது. ஆனால் பண்பாட்டுத் தளத்தில் இந்த மாற்றங்கள் குறைவாகவே காணப்படுகிறது. மதம் ஆண்களை விடவும் பெண்களையே மையமாக் கொண்டிருக்கிறது. பெண்களை ஒடுக்குமுறை செய்வதில் மதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாகப் பெண்ணைப் புனிதப்படுத்துதலை சமயங்களே முன்னெடுக்கின்றன. தீட்டினை முன்வைத்துப் பெண்ணை விலக்குவது மதமே. மதம் குறித்த பெண்களின் எதிர்வினையும் உரையாடுதலும் குறைவாகவே உள்ளன.

பெண்களின் பிரச்சனைகளாக அறியப்படுவை உண்மையில் சமூகத்தின் பிரச்சனைகள். அவை பெண்களின் மீது திணிக்கப்பட்டிருக்கின்றன. அவை பொதுபுத்தி உருவாக்கி வைத்த கற்பிதங்கள். அவற்றை ஏற்றுக் கொண்டு அதற்குள் வாழ்ந்து கொண்டிருப்பது பெண்களின் இயலாமை. இதற்குக் காரணமாக உள்ள சமூக அமைப்பை, ஒழுக்க விதிகளை, மதிப்பீடுகளைக் கேள்வி கேட்பதும் விவாதிப்பதுமே அம்பை கதைகளின் தனிச்சிறப்பு.

அம்பை கதைகளில் வரும் கேலியும் கிண்டலும் வாசிக்கும் போது சிரிப்பை வரவழைத்தாலும் படித்து முடித்தவுடன் குற்றவுணர்வை ஏற்படுத்தவே செய்கிறது. அது தான் இலக்கியவாதியாக அவர் அடைந்த வெற்றி என்பேன்.

••

நன்றி

https://solvanam.com/

0Shares
0