வெயிலின் சங்கீதம்

சஞ்சாரம் – எஸ்.ராமகிருஷ்ணன். நாவல் குறித்த வாசிப்பனுபவம்

சுயாந்தன் (Suyaanthan Ratneswaran )·

**

நாதஸ்வர இசையினையும் அதனை வாசிக்கும் கலைஞர்கள் பற்றியதுமான அற்புதமான  ஒரு நாவல் “சஞ்சாரம்”. கி.ராவுக்கு பின்னர் தமிழில் நாதஸ்வரம் பற்றி அதிகம் எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்றே நினைக்கிறேன்.  இந்த நாவலை வாசித்து விட்டுக் கோயில்களில் நாயனம் வாசிக்கும் ஒரு வித்துவானிடம் உங்கள் கலையைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் நானூறு பக்கத்தில் பெருங்கதை ஒன்றை எழுதியுள்ளார். அதில்  அசுரவாத்தியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்று இந்த நாவலில் இருந்த நாதஸ்வரம் பற்றிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டபோது அவர் ஒற்றை வார்த்தையில் கூறினார் இதனை ராஜவாத்தியம் என்று நாம் கூறுவோம். நாயனம் வாசிப்பது எல்லோராலும் முடியாது. அதற்கு மூச்சுப்பயிற்சியுடன் ரசனையும் அதிகம் இருக்க வேண்டும் என்றார். அதுதான் உண்மை. இந்நாவலும் அதனையே விரிவாகக் குறிப்பிடுகின்றது.

இந்நாவலை வாசித்ததில் இருந்து எதிரில் நாயனம் வாசிக்கும் அனைவரையும் பக்கிரி என்றும், ரத்தினம் என்றும் காணமுடிகிறது. இந்நாவலின் பிரதான கதாபாத்திரங்கள் இவர்கள்தான். தமிழ்ச்சமூகத்தின் இசையில் சினிமாப்பாடல்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும் மிகச்சிறந்த தமிழ் இசையமைப்பாளர்கள் சினிமாப்பாடல்களின் துணுக்குகளில் நாதஸ்வரத்தின் ஒலியைச் சேர்த்துள்ளனர். துரதிருஷ்டவசமாக எனக்கு நாதஸ்வர இசை என்பது அறிமுகமானது காருகுறிச்சியார் மூலமோ ராஜரத்தினம்பிள்ளை மூலமாகவோ அல்ல. சினிமா இசையமைப்பாளர்களின் பாடல்கள் மூலமாகவே. இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் அவர்களின் இருபது வரையான பாடல்களில் நாதஸ்வர துணுக்குகள் இடைச்சேர்க்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் அவ்வளவு பிரமாதமானவை. அந்தத் துண்டுகளை ஒன்றாக்கி அடிக்கடி கேட்பதுண்டு. நேர்த்தியான மல்லாரி, திரிபுடைதாளங்களுக்கு இது  ஈடாகாது என்றாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்கிறது. என் தொலைபேசியின் அழைப்பிசையாக நாதஸ்வர இசையே உள்ளது.

00

இந்நாவலின் கதையமைப்பு பல கிளைக்கதைகளால் விரவிக்காணப்படுகிறது. அவை அனைத்தும் நாயனம் மற்றும் கரிசல் நிலங்களின் வாழ்வைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. சாதிய மனோபாவங்கள் அத்தியாயம் தோறும் குறிப்பிடப்படுகிறது. “மனிதர்களே ஊரைவிட்டுப் போய்விட்ட பிறகு கடவுளை கவனித்துக்கொள்ள யாருக்கு நேரமிருக்கிறது” போன்ற வசனங்கள் கரிசல் நிலத்தின் வீழ்ச்சியையும் நகர வாழ்வின் பிடிமானத்தையும் காட்டுகின்றது. பக்கிரி-ரத்தினம் என்ற இரண்டு கதாபாத்திரங்களையும் அவர்களின் நினைவோடைகளையும், கதையாசிரியரின் மேதமைகளையும் கொண்டு இந்நாவல் மிகமிகச் சிறப்பாக நகர்ந்து செல்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ் இலக்கியத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இந்நாவலை எழுதியுள்ளார்.

இந்நாவலில் இடம்பெறும் மாலிக் கபூர் – லட்சய்யா பற்றிய அரட்டானம் என்ற அத்தியாயம் அபாரமான கதைசொல்லல் என்றே கருதலாம். தன்னாசி கதையும் அவ்வாறான ஒன்றே.

துயரத்தின் இசை. மறக்கப்பட்ட சந்தோசத்தின் இசை. ரகசியத்தின் இசை. இச்சைகளின் இசை. நிராசையின் இசை. வெயிலின் சங்கீதம் என்று பலவாறாக கரிசல் மக்கள் நாதஸ்வர இசையை உணர்ந்து கொள்கின்றனர். நாதஸ்வரம் கரிசலின் ஆன்மாவை விழிப்படையச் செய்யும் வாத்தியம். இதைக் கேட்பதன் வழியாக அவன் மண்ணின் இரகசியத்தை அறிந்து கொள்கிறான்.

வாயில் வெற்றிலை போடுவதற்குமுன் எப்படி அதனை தயார் செய்வது என்று சுந்தரநயினார் கதாபாத்திரம் மூலம் மிக அழகான சித்திரம் ஒன்றை எஸ்.ரா தந்துள்ளார்.

டிஎன் ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், குழிக்கரை பிச்சையா, நல்லடை சண்முகசுந்தரம்,வல்லம் தெட்சிணாமூர்த்தி என்று பெரும்புகழ்பூத்த நாதஸ்வர கலைஞர்களின் குறிப்புகளும் பல அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ளது.

மல்லாரி வாசிப்பதை காணொளிகளில் கண்டிருக்கிறேன். ஆனால் அது இரண்டு நாதஸ்வரங்கள், ஒரு ஒத்து, நான்கு தவில்கள்   என்று பரந்துபட்ட ஒரு கலையம்சம் என்று இந்நாவலில் தரப்பட்ட விளக்கத்தைக் கொண்டே அறிந்துகொள்ள முடிந்தது.

இந்நாவலின் அத்தியாயங்கள் ஊர்ப்பெயர்களைக் கொண்டே நகர்கிறது. நாதஸ்வரக் கலைஞர்களாக இதில் காட்டப்படும் பக்கிரி-இரத்தினம் இருவரும் ஊர் ஊராகச் சென்று நாயனம் வாசித்து பிழைப்பு நடாத்துபவர்கள் என்பதைவிட, தனிப்பட்ட விதத்தில் தேசாந்திரியான எஸ்.ரா அவர்களுக்கு இந்நாவலை ஒரு பயணப்பிரேமையுடன் அமைப்பதில் அலாதி பிரியம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

தத்தகாரம், தன்னகாரம், துத்தகாரம், அகாரம், வழுக்கு, அசைவு, பிர்கா, விரலடி என்று எட்டுவகையான பயிற்சிகள் நாதஸ்வரத்திலுள்ளன. நாதஸ்வரத்தின் சொரூபத்தை அறிவதற்கு நம் கற்பனைகள் மூலம் ஒவ்வொரு ராகமாக “சஞ்சாரம்”  செய்ய வேண்டும். அந்த சஞ்சாரம் வாசிப்பவனுக்கும் சரி அதனை ரசிப்பவனுக்கும் சரி பொதுவானதே.  

இந்நாவல் மூலமாக மிகச்சிறந்த எழுத்தை வாசித்துள்ளேன் என்றும் மிக உயரிய விடயங்களை அறிந்துள்ளேன் என்றும் சில தருணங்களில் உணர முடிகிறது.

2018 சாகித்திய அகாடமி விருது இந்நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசாந்திரி பதிப்பகத்தால் இந்நாவல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 360 பக்கங்கள்.

0Shares
0