வெயில் அறிந்தவன்

புதிய குறுங்கதை.

கல்லூரி படிப்பைப் பாதியில் விட்டு அவன் ஊர் திரும்பினான். நூறுக்கும் குறைவான வீடுகளைக் கொண்ட கரிசல் கிராமமது. அவனைச் சுற்றும் ஈக்கள் கூட இனி என்ன செய்யப்போகிறாய் என்ற கேள்வியைக் கேட்டன. வேப்பஞ்செடி போல நான் இந்த மண்ணில் வேரூன்றி வளர விரும்புகிறேன் எனக்கு வேறு இடமில்லை என்றான்.

தாயும் அக்காவும் அவனை நினைத்துக் கலங்கினார்கள். விவசாயியான தந்தை தனது கோபத்தை விறகு பிளப்பதில் காட்டினார்.

அவன் தன்னை நேசிப்பவர்களை வெறுத்தான். உலர்ந்த நத்தைக்கூடினை போலத் தன்னை மாற்றிக் கொள்கிறான். கோடையின் நீண்ட பகல் தற்கொலை கயிறு போலிருக்கிறது

யாரோ வீசி எறிந்து போன காலி மதுபாட்டிலில் நிரம்புகிறது வெயில். அவன் ஆசை தீர வெயிலைக் கண்களால் குடிக்கிறான். நூற்றாண்டு பழமையான ஒயினைப் போலிருக்கிறது. அவனது உடலுக்குள் வெயில் புகுந்த பின்பு கண்கள் பிரகாசமாகின்றன. கைகால்கள் வேகம் கொள்கின்றன.

அடிவானத்தினை நோக்கி தனியே மேயும் ஆடு ஒன்று கோபமில்லாமல் சூரியனை வெறித்துப் பார்க்கிறது. இது கோடை. இது கோடை என்று கூவுகின்றன குயில்கள். உலர்ந்த மேகங்கள் விளையாட இடமில்லாத சிறுவர்களைப் போலச் சோர்ந்து நிற்கின்றன. பசித்த மலைப்பாம்பு போல வீதியில் ஊர்ந்து செல்கிறது வெயில். திண்ணைகள். கல்உரல்கள். மின்விளக்குக் கம்பங்கள் நடுங்குகின்றன. சூரியனைப் பார்த்துச் சிரிக்கிறான் கல்மண்டபத்துக் கோட்டிக்காரன். அவனது சட்டைப் பையில் பாதி உடைந்த பென்சில். கிழிந்த காகிதங்கள். செல்லாத நாணயங்கள்.

நீருக்குள் அமிழ்ந்துகிடக்கும் ஆமையைப் போல அசைவற்றிருக்கிறது அவனது ஊர். சுற்றிலும் வெயிலின் நடனம் . அது மாலையில் முடியும் வரை வீட்டின் கூரையைப் போல அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். கோடை மிகவும் நீண்டது. பிரசவித்த பெண்ணின் உடலைப் போலக் கிராமம் தளர்ந்து போயிருக்கிறது.

வீட்டோர் சாப்பிட அழைக்கும் போது, கோபத்தில் ஒலிக்கும் அவன் குரலில் வெயில் கொப்பளிக்கிறது. மாலையில் சப்தமிட்டபடியே ஆடுகள் ஊர் திரும்புகின்றன. மேற்கில் சூரியன் மறைகிறது. ஆனால் ஒளி மறையவில்லை.

தயங்கித் தயங்கி வருகிறது இரவு. கோடை காலத்து இருட்டில் பிசுபிசுப்பே கிடையாது. வீட்டில் உறங்க விருப்பமின்றித் தோட்டத்துக் கிணற்றின் படிகளில் அமர்ந்திருக்கிறான். நீர் சுவடேயில்லாத கிணறு. அண்ணாந்து வானை நோக்குகிறான். ஒளிரும் நூறு நூறு நட்சத்திரங்கள். தாங்க முடியாத அதன் பேரழகைக் கண்டு கோபமாகி அவற்றைக் கொல்ல ஆயுதம் தேடுகிறான். அவன் வீசி எறிந்த கல் ஆகாயத்தை நோக்கிப் பறந்து எங்கோ விழுகிறது. அவனது தோல்வியைக் கண்டு நட்சத்திரங்கள் சிரிக்கின்றன. அவன் கைகளால் முகத்தைப் பொத்தி அழுகிறான். அவன் படித்த கவிதைகள் மனதில் தோன்றி மறைகின்றன

0Shares
0