புதிய சிறுகதை
சாலை ஓவியன் இறந்து கிடந்தான். அருகில் அவன் வரைந்த யானை ஒவியமிருந்தது. ஒவியனுக்கு நாற்பது வயதிருக்ககூடும். கோரையான தாடி. கழுத்துவரை நீண்ட தலைமயிர்.. அழுக்கடைந்து போன காக்கி பேண்டும், கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்த அவன் விழுந்துகிடந்த நிலை சாலையில் அவனே ஒவியமாகக் கிடப்பது போலிருந்தது.
பரபரப்பான மாநகரின் காலை நேரத்தில் அவனைக் கவனிக்க யாருமில்லை. பள்ளிச்சிறுவர்களில் இருவர் இறந்தவனின் அருகே குனிந்து பார்த்துவிட்டு செத்துப்போயிட்டான் என்று பேசிக் கொண்டார்கள். இறந்தவனை என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு பையன் தான் சவைத்துக் கொண்டிருந்த பபிள்கம்மை வாயிலிருந்து வெளியே எடுத்து இறந்தவனின் மீது ஒட்டினான்.
மற்ற சிறுவன் இறந்தவன் வரைவதற்காக வைத்த கலர் சாக்பீஸ்களில் ஒன்றை எடுத்து டவுசர் பையில் போட்டுக் கொண்டான். எதற்காகவும் இறந்தவன் கோவித்துக் கொள்ள முடியாதே என்பது போலிருந்தது அவர்களின் செய்கை.
அநேகமாக ஒவியன் இறந்தது விடிகாலையாக இருக்கக் கூடும். அவன் எப்போதும் பின்னிரவில் தான் ஓவியம் வரைவான். அதுவும் சாலையில் தபால்பெட்டி இருந்த இடத்தை ஒட்டி படம் வரைவதற்கான சட்டகம் போல ஒரு இடத்தைத் தேர்வு செய்து வைத்திருந்தான். பெரும்பாலும் இயற்கை காட்சிகளையே அவன் வரைவதுண்டு. வண்ணசாக்பீஸ் கொண்டு வரைந்த ஒவியம் என்றாலும் புகைப்படத்தை விடத் துல்லியமாக இருக்கும்.

சிலர் அவசரமாகக் கடந்து செல்லும் போது ஓவியத்தை மிதித்துப் போவதும் உண்டு. அவர்களைக் கோவித்துக் கொள்ள மாட்டான்.
டெலிபோன் அலுவலகத்தில் வேலை செய்யும் சரளா என்ற கண்ணாடி அணிந்த பெண் மட்டும் அன்றாடம் அவன் வரையும் ஓவியங்களை நின்று ரசித்துப் பார்த்துவிட்டு சில்லறைக்குப் பதிலாக ஒரு சாக்லேட்டை வைத்துவிட்டுச் செல்வாள்.
ஓவியன் அந்தச் சாக்லேட்டை சாலையின் எதிர்புறத்தில் இருந்த பிளாட்பாரத்தில் வசித்த ஒரு சிறுமியிடம் கொடுப்பதற்காக அழைப்பான்.
மீனா என்ற அந்தச் சிறுமிக்கு பத்து வயதிருக்கும். கூழாங்கற்கள் போல வாளிப்பான கண்கள். வட்டமுகம். ரெட்டைச்சடை போட்டிருப்பாள். அவளது அப்பாவும் அம்மாவும் அதே சாலையில் பிச்சை எடுக்கிறவர்கள். சில நேரம் மீனாவும் சாலையில் நிற்கும் கார்களின் கதவை தட்டி கையேந்துவாள். அவர்கள் பிளாட்பாரத்திலே வசித்தார்கள்.
ஒரு மரப்பெட்டி. பத்து பனிரெண்டு அலுமினிய பாத்திரங்கள். கிழிந்து போன கம்பளி. இரண்டு போர்வைகள். யாரோ வீசி எறிந்த ஒரு தலையணை. சிவப்பு நிற பிளாஸ்டிக் வாளி. பிளாஸ்டிக் டம்ளர். ஒரு மண்ணெண்ணெய் பம்பிங் ஸ்டவ். சினிமா போஸ்டர் ஒட்டிய தட்டி. இவ்வளவு தான் அவர்கள் வசிப்பிடம்.
மீனா ஒருத்தி தான் ஓவியனை மாமா என்று அழைப்பாள்
அவன் தரும் சாக்லேட்டை சுவைத்தபடி எதையாவது பேசிக் கொண்டிருப்பாள்.
“ஏன் மாமா தரையில படம் வரையுறே. பேப்பர்ல வரையலாம்லே“ என்று மீனா கேட்டிருக்கிறாள்
“எனக்கு பேப்பர்ல வரைய பிடிக்காது. இந்த வெயில் மாதிரி நானும் தரையில வரைவேன். இதுக்கு ஒண்ணும் விலை கிடையாது “ என்பான் ஓவியன்
“நீங்க ஏன் படம் வரைஞ்சிகிட்டே இருக்கீங்க. வேற வேலை பாக்கலாம்லே“ என்பாள் சிறுமி
“இதான் என் வேலை. சின்னவயசில சுவத்துல கிறுக்கிட்டு இருந்தப்ப பிடிச்ச கிறுக்கு. விட மாட்டேங்குது. நீயும் படம் வரைந்து பாக்குறயா. நான் கத்து தர்றேன்“
“வேணாம் மாமா. அப்பா அடிப்பாரு.. நான் படிச்சி வேலைக்குப் போய் நிறையச் சம்பாதிக்கப் போறேன்“
“அது சரி,, படம் வரைந்தா சம்பாதிக்க முடியாதுல்லே. ஆனா சந்தோஷமா இருக்க முடியும்“
“ நீங்க எப்பவும் இதே அழுக்குச் சட்டை பேண்ட் போட்டுகிட்டு இருக்கீங்க. நீங்க குளிக்கவே மாட்டீங்களா “
“இப்படியிருக்கிறது தான் எனக்குப் பிடிச்சிருக்கு.. நானும் குளிப்பேன். ஆனா.. நடுராத்திரில. அந்தா இருக்கே.. அந்தப் பார்க். அதோட கேட்டை தாண்டி குதிச்சி. தண்ணிகுழாயை திருக்கிவிட்டு ரப்பர் டியூப் வழியா அடிக்கிற தண்ணிய உடம்புல அடிச்சி ஜாலியா குளிப்பேன். “
“அய்யே.. அது செடிக்கு தண்ணிவிடுற பைப்பு. “
“நானும் செடி தான். செடி பூ பூக்குறது மாதிரி தான் படம் வரையுறது“
“சோப்பு போட மாட்டீங்களா“
“மண்ணு தான் என் சோப்பு. “
“உங்க ஊரு எது மாமா“
“மறந்து போச்சி.. “
“உங்க அப்பா அம்மா எல்லாம் எங்கே இருக்காங்க“
“வானத்துல“ என்று ஆகாசத்தை நோக்கி கைகாட்டுவான்
“நீங்க நிறையப் பீடி குடிக்கிறீங்க. உங்க கிட்ட வந்தா பீடி வாடை அடிக்குது“
“என் கோபத்தை எல்லாம் பீடி புகை வழியா வெளியே விடுறேன்.. அதெல்லாம் உனக்குப் புரியாது“
“எங்க அம்மாவுக்கு உங்களைப் பிடிக்காது. உங்க கூடப் பேசுனா திட்டும்“
“என்னை எனக்கே பிடிக்காது. நானே என்னைத் திட்டிகிடுவேன். “
அதைக்கேட்டு சிறுமி சிரித்தாள்.
ஓவியன் அவள் சிரிப்பதை ரசித்தபடியே சொல்வான்.
“நீ சிரிக்குறப்போ உன் கண்ணு எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா“
“அதை நான் பாக்க முடியாதுல்லே“
“எவ்வளவு அழகா சொல்லிட்டே. நம்ம கண்ணாலே நம்மை அழகை பாத்துகிட முடியாதுல்லே“
“ஆனா கண்ணாடி பாத்தா தெரியும்லே“
“கண்ணாடி பொய் சொல்லும். உன் வலது கையை ஆட்டு கண்ணாடில இடது கையா தெரியும்“
“ஆனா முகம் அப்படி மாறாதுல்லே“
“முகம் நடிக்கும் பாப்பா.. அதுவும் கண்ணாடி முன்னாடி நிக்கும் போது முகம் பாசாங்கு பண்ணும். தூங்கும் போது தான் முகம் நிஜமா இருக்கும். யாரும் தான் தூங்குறதை தானே பாக்க முடியாதுல்லே“
“நீங்க பேசுறது ஒண்ணுமே புரியலை“
“உனக்கு நான் வரையுற படம் பிடிக்குமா“
“ரொம்பப் பிடிக்கும். அன்னைக்கு ஒரு யானை வரைந்தீங்களே. நிஜமா யானை படுத்துகிடக்கிறது மாதிரி இருந்துச்சி“
“அப்படியா. நீ அந்த யானை மேல ஏறி உட்காந்துகிட வேண்டியது தானே“
“அது நிஜ யானை இல்லையே“
“நீ தானே சொன்னே நிஜ யானை மாதிரி இருக்குனு“
“அது படம் தானே மாமா. அதுல எப்படி ஏறி உட்கார முடியும்“
“அப்போ நாளைக்கு அந்த யானை மேல நீ உட்கார்ந்து இருக்கிற மாதிரி வரைந்திருறேன். “.
“வேணாம் மாமா. அம்மா திட்டும்“
“ஆமா.. போறவர்ற ஆட்கள் உன் முகத்தை மிதிச்சிருவாங்க “
“ஏன் எப்பவும் யானையா வரயுறீங்க“
“யானையோட அழகை பாத்துகிட்டே இருக்கலாம்.. நீ காட்டுக்குள்ளே போயிருக்கியா.. “
“இல்லே“
“நிஜயானை அங்கே தான் இருக்கு“
“ஏன் கோவில்ல யானை இருக்கே“
“அது சங்கிலி போட்ட யானை. காட்டுல இருக்கிற யானை தான் நிஜ யானை“
“அதை நான் பாக்கணும்“
“நான் உன்னை அழைச்சிட்டுப் போய்க் காட்டுறேன்“
“காட்டுக்குள்ளே போனா பயமா இருக்காதா“
“ஒரு பயமும் இருக்காது. மனுசங்க தான் எப்போ என்ன செய்வாங்கன்னு தெரியாது. மிருகம் அப்படியில்லே. “
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சிறுமியின் அம்மா பிளாஸ்டிக் குடம் ஒன்றில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்துவிட்டாள்.. அம்மாவைப் பார்த்த மறுநிமிஷம் மீனா பேச்சை துண்டித்துவிட்டு ஒடிப் போனாள்.
மீனாவின் அம்மா ஓவியனை முறைத்தபடி சப்தமாகச் சொன்னாள்
“ஒரு நா இல்லே ஒரு நா நீ என் கையாலே செருப்படி வாங்க போற பாரு…“
ஓவியன் சிரித்துக் கொண்டே “நல்லா இரு“ என அவளை வாழ்த்தினாள். காரணமேயில்லாமல் அவளுக்கு ஒவியனைப் பிடிக்கவில்லை. அது போல அவள் எவ்வளவு கோவித்துக் கொண்டாலும் ஒவியனுக்குக் கோபம் வருவதேயில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு நாள் பிளாட்பாரத்தில் வசித்த மீனாவின் குடும்பம் இடத்தைக் காலி செய்து போயிருந்தார்கள். மீனா அவனிடம் சொல்லிக் கொண்டு போகவில்லை. அது வருத்தமாக இருந்தது. எங்கே போயிருப்பார்கள். ஊரைவிட்டே போய்விட்டார்களா. அந்தச் சிறுமியை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். மீனாவின் விளையாட்டு பேச்சு மனதில் நிழலாடியபடி இருந்தது.
அதன்பிறகு அவனது ஒவியத்திற்குப் பரிசாகக் கிடைக்கும் சாக்லேட்டினை சாலையில் வீசி எறிந்துவிடுவான். யாருக்கும் கொடுக்கக் கூடாது. எந்த உறவும் உருவாகக் கூடாது. என்பதில் கவனமாக இருந்தான்.
அந்த ஓவியனை தேடி யாரும் வருவதில்லை. இவ்வளவு பெரிய நகரில் அவனைத் தெரிந்தவர் என யாருமில்லை.
தனக்குக் கிடைக்கும் சில்லறைகளை வைத்து அவன் வண்ணசாக்பீஸ்கள் வாங்குவான். அருகிலுள்ள கையேந்தி உணவகத்தில் சாப்பிடுவான். அபூர்வமாகச் சில நாட்கள் யாராவது அவனுக்குப் பணம் தருவதுண்டு. அப்படி ஒரு வெள்ளைக்காரன் அவன் வரைந்த ஓவியத்தைப் புகைப்படம் எடுப்பதற்காக நூறு ரூபாய் கொடுத்தான்.
அந்த நூறு ரூபாயில் ஒரு பலூன் பாக்கெட் வாங்கி நாள் முழுவதும் ஒவ்வொரு பலூனாக ஊதி வானில் பறக்கவிட்டுக் கொண்டேயிருந்தான். அதில் ஒரு ஆனந்தம். பரவசம்.
நாள் முழுவதும் தான் வரைந்த ஓவியத்தின் அருகில் அவன் உட்கார்ந்திருப்பான். மதிய நேரம் ஓவியத்தின் அருகிலே சுருண்டு படுத்துக் கொள்வான். எப்போதாவது காவலர்கள் அவனைக் கோவித்துக் கொண்டு திட்டுவார்கள்.
“படம் தானே சார் வரையுறேன்“ என்று சொல்வான்
“ரோட்டுல ஏன்டா படம் வரையுறே“. என்று காவலர் திட்டுவார்
“ரோட்டை அழகாக்குறேன் சார்.. அது தப்பா“
“தப்பில்லை. தொந்தரவு.. ஆள் நடக்கவே ரோடு பத்தமாட்டேங்குது“
“ஒரு நாளைக்கு இந்த ஊருக்கு லட்சம் பேரு புதுசா வர்றாங்களாம்“
“இந்த கணக்கை எல்லாம் கேட்டனா.. உன்னை மாதிரி வெட்டிபயகளுக்கு இந்த ஊர்ல என்ன வேலை,. நீயெல்லாம் எங்காவது காடு கரைனு போயி இருக்கலாம்லே“
“இவ்வளவு பெரிய ஊர்ல நான் ஒரு எறும்பு. என்னாலே எந்தத் தொந்தரவும் வராது சார்“
“உனக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சில்லறை கிடைக்குது“.
“பத்து இருபது.. கிடைக்கும். சில நாள் எதுவும் கிடைக்காமலும் போகும்“
“படம் வரையுறேனு சொல்லிட்டுக் கஞ்சா பொட்டலம் விக்கிற பய தானேடா நீ.. “
“அதெல்லாம் கிடையாது சார்.. நான் பீடி மட்டும் தான் பிடிப்பேன்“
“அதான் கெட்டவாடை அடிக்குதே.. இதை நீ சொல்லணுமாக்கும்“ என்றார் காவலர்
அதைக்கேட்டு ஒவியன் சிரித்தான். காவலர்களுக்கு அவனை நன்றாகத் தெரியும். ஆனாலும் இப்படியான கோபம். சண்டைகள் வருவதுண்டு.
••
இறந்துகிடந்த ஒவியனின் அருகே ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வீசி சென்றான் ஒருவன். இதுவரை அவனது ஒவியங்களின் மீது தான் சில்லறைகள் சிதறிகிடக்கும். இன்றைக்கு அவனைச் சுற்றிலும் கிடந்தன.
ஒவியத்திலிருந்த யானையின் மீது சூரிய வெளிச்சம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சாலையில் இருந்த இன்னொரு பிச்சைக்காரன் இறந்தவனைச் சுற்றிகிடந்த நாணயங்களைச் சேகரித்துத் தனதாக்கிக் கொண்டான். யார் காவலர்களிடம் தகவல் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் காவலர் வந்தபோது வெயிலேறியிருந்தது. அவனது உடலை காவலர் புரட்டிப்பார்த்தார். ஒவியனின் விரல்நகத்தில் சாக்பீஸ் துகள் ஒட்டியிருந்தது. பாதிக்கனவில் இறந்தவன் போல அவனது முகத்தில் சாந்தம். காவலர் அந்த ஓவியனின் உடலை பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.
எப்போதும் அவன் ஓவியத்தை ரசிப்பதற்காக வரும் டெலிபோன் ஊழியரான சரளா அன்றைக்கும் வந்திருந்தாள். அவளால் ஓவியன் இறந்து போனதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன்னை மீறி கசியும் கண்களைத் துடைத்தபடியே அவள் காவலரிடம் கிரேட் ஆர்டிஸ்ட் என்றாள்
“இந்த ஆளுக்குச் சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களா.. எந்த ஊருனு ஏதாவது தெரியுமா“ எனக் காவலர் கேட்டார்
“எனக்கு தெரியலை சார். எனக்கு இவர் வரையுற படம் பிடிக்கும்.. நான் அவரோட ஒரு வார்த்தை கூடப் பேசுனதில்லை.. “
“நீங்க எங்க வேலை பாக்குறீங்க“
அவள் எதிரே தெரியும் டெலிபோன் அலுவலகத்தைக் கையைக் காட்டினாள்
பிறகு அவர் கேட்காமலே சொன்னாள்
“ ஏதாவது பார்ம்லே கையெழுத்து போடணும்னா. நான் போடுறேன் சார்.. ரிலேடிவ்னு என் பெயரை போட்டுக்கோங்க “
“உங்க போன் நம்பர் சொல்லுங்க“
அவள் தனது அலைபேசி எண்ணை சொல்லிக் கொண்டிருந்தாள். சாலையில் வரையப்பட்டிருந்த யானையின் கண்கள் அவளேயே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. இறந்த உடலை ஏற்றிச் செல்வதற்கான வாகனம் வந்து நின்றது. ரப்பர் செருப்பு அணிந்த ஊழியர்கள் யானை ஒவியத்தை அழித்து நடந்தபடியே ஓவியனின் விறைத்த உடலைத் தூக்கி வேனில் ஏற்றினார்கள். பாதி அழிந்த யானையின் தோற்றம் நீருக்குள் அமிழ்ந்த யானையை நினைவூட்டியது.
••