கதே எழுதிய The Sorrows of Young Werther நாவலை மறுபடி வாசித்தேன். Stanley Corngold மொழியாக்கம் செய்த புதிய பதிப்பு. அதன் தலைப்பு The Sufferings of Young Werther என மாற்றப்பட்டிருக்கிறது. எனக்கு The Sorrows of Young Werther தலைப்பே பிடித்துள்ளது.

கல்லூரி நாட்களில் இந்த நாவலை முதன்முறையாகப் படித்தபோது ஏற்பட்ட சிலிர்ப்பு, மயக்கம் இன்றைக்கு துளியும் மாறவில்லை. கதே என்றைக்குமானவர். அவரது நாவல் உலகெங்கும் காதலர்களால் கொண்டாடப்படுகிறது.
ஒருவகையில் வெர்தர் நாம் அறிந்துள்ள தேவதாஸ் போன்றவன் ஆனால் வெர்தரிடம் காணப்படும் கலையின் மீதான தீவிரம். உயர் சிந்தனை, துல்லியமாகத் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறை தேவதாஸிடம் கிடையாது. மதுவிற்குப் பதிலாகக் காதலின் துயர நினைவுகளைப் பருகுகிறான் வெர்தர்.

அவனது காதலி சார்லெட் எனும் லோதே வேறு ஒருவனுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவள். அது தெரிந்தே வெர்தர் காதலிக்கிறான். உலகின் காரணங்கள் எதையும் அவன் மனம் ஏற்க மறுக்கிறது. அவள் சொல்லும் காரணங்களை, தயக்கங்களைக் கூட வெர்தர் ஏற்றுக் கொள்வதில்லை. காதலுக்காக மட்டுமே அவன் வாழுகிறான். காதலின் துன்பத்தைப் பேசும் இந்த நாவலின் ஊடாக ஹோமரும் கவிதையின் சிறப்புகளும் எடுத்துப் பேசப்படுகின்றன. நாவலில் வெர்தர் கதே பிறந்த அதே நாளில் பிறக்கிறான் கதே போலவே ஓவியனாக இருக்கிறான்.
கதேகாலத்தில் நாவல் என்பது ஒருவரின் ரகசியமான வாழ்க்கையை விவரிப்பதாகக் கருதப்பட்டது. இங்கிலாந்தில் வெளியான நாவல்களில் கதாபாத்திரத்தின் வாழ்க்கை வரலாறு என்பது போலவே தலைப்பு வைக்கப்பட்டிருக்கும். அந்த மரபின் காரணமாகவே என்னவோ நாவலுக்கு இது போன்ற தலைப்பு வைத்திருக்கிறார். இளம் வெர்தர் என்பது தான் கூடுதல் சிறப்பு. கதேயை கொண்டாடும் இவான் துர்கனேவ் இந்த நாவலை மிகவும் விரும்பி படித்திருக்கிறார். துர்கனேவ் எழுத்தில் கதேயின் சாயலைக் காண முடிகிறது. எண்ணிக்கையற்ற கவிதைகளை எழுதியிருக்கிறார் இத்தோடு நாவல். நாடகம் பயண நூல், விஞ்ஞான நூல்கள் கட்டுரை தொகுப்புகள் என எழுதிக் குவித்திருக்கிறார்.
வெர்தரையும் லெர்மன்தேவ் நாவலில் வரும் பிச்சோரினையும் ஒப்பிட்டு வாசிக்க வேண்டும். இரண்டும் அழகான காதல்கதைகள்.

நாவலின் முடிவில் தற்கொலை செய்து கொள்ள இரண்டு துப்பாக்கிகளை லோதேவின் கணவன் ஆல்பர்ட் வசமிருந்தே பெறுகிறான். அந்தத் தேர்வு வியப்பளிக்கக்கூடியது. அவன் இறந்தபின்பு இறுதிச் சடங்கு எதுவும் நடைபெறுவதில்லை. மதகுரு கலந்து கொள்ளவில்லை. ஆகவே அவன் கடவுளாலும் கைவிடப்படுகிறான். அதைத் தான் வெர்தர் விரும்புகிறான். தான் எங்கே புதைக்கப்பட வேண்டும் என்பதைக் கூட அவனே முடிவு செய்திருக்கிறான். அவன் விரும்பியபடியே இரண்டு எலுமிச்சை மரங்களுக்கு இடையே புதைக்கப்படுகிறான்
நாவலின் வேறு ஒரு இடத்தில் அவன் எலுமிச்சை மரங்களுக்கு இடையே இருப்பதை மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறான். அது குறியீடு போலவே உணர்த்தப்படுகிறது.

The Sorrows of Young Werther நாவல் 1774 ஆம் ஆண்டு வெளியானது. காதலுக்காக உயிர்துறக்கும் வெர்தரின் நினைவுகளையும் உணர்ச்சி கொந்தளிப்புகளையும் இளைஞர்கள் கொண்டாடினார்கள். வெர்தர் காய்ச்சல் என்றும் வெர்தர் சிண்ட்ரோம் என்றும் வெர்தர் காதலின் உன்மத்த நிலைக்கான அடையாளமாக மாறிப்போனான்.
இந்த நாவல் கடிதங்களின் தொகுப்பு போலவே எழுதப்பட்டிருக்கிறது. கதேயின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் தான் நாவலாக எழுதப்பட்டிருக்கின்றன.
.Young Goethe in Love என்ற திரைப்படம் இதனை விவரிக்கக்கூடியது.

கதே எழுதிய பாஸ்ட் என்ற நாடகம் மிகவும் புகழ்பெற்றது.. பாஸ்ட் மாயவித்தைகளை கற்றுக் கொள்ள சாத்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னை இழப்பவன். பேரழகி ஹெலனுக்காக ஏங்குபவன். அவனது இன்னொரு வடிவம் போலவே வெர்தர் இருக்கிறான். பாஸ்ட் நாடகத்தை முதலில் எழுதியவர் கிறிஸ்தபர் மார்லோ. அவர் இந்த நாடகத்தை 1589ல் எழுதியிருக்கிறார். அதே கதையைத் தான் கதே பயன்படுத்தியிருக்கிறார். இந்த நாடகத்தை எழுதிய போது அவரது வயது 24
The Beloved Returns என்றொரு நாவலை தாமஸ் மான் எழுதியிருக்கிறார். இது கதேயின் காதல் வாழ்க்கையை விவரிப்பதாகும். தன் வாழ்நாள் முழுவதும் கதேயின் புகழ் பரப்பி வந்தார் தாமஸ் மான்.
லோதே அருகில் இருக்கும் போது வெர்தர் அடையும் மனக்கொந்தளிப்பு மிகத் தீவிரமாக வெளிப்படுகிறது,.
She is to me a sacred being. All passion is still in her presence: I cannot express my sensations when I am near her. I feel as if my soul beat in every nerve of my body. There is a melody which she plays on the piano with angelic skill,—so simple is it, and yet so spiritual! It is her favourite air; and, when she plays the first note, all pain, care, and sorrow disappear from me in a moment.
கதேயிடமிருந்து தான் தஸ்தாயெவ்ஸ்கி இந்த உணர்ச்சி வேகத்தைக் கற்றுக் கொண்டிருக்கக்கூடும். வெண்ணிற இரவுகளில் இதை உணரமுடியும். அவரது முதல் நாவலும் வெர்தர் பாணியில் தான் அமைந்துள்ளது.
அவள் இன்னொருவனைக் காதலிக்கிறாள் என்பதை வெர்தரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நாவலின் ஒரு இடத்தில் இப்படிச் சொல்கிறான்
I sometimes cannot understand how she can love another, how she dares love another, when I love nothing in this world so completely, so devotedly, as I love her, when I know only her, and have no other possession.
எது இந்த நாவலை இன்றும் வாசிக்க வைக்கிறது என்பதற்கு டேவிட் சிம்சன் எழுதிய கட்டுரை ஒன்றில் பதிலிருக்கிறது.
Men and women still feel misunderstood, underappreciated, condescended to and confined to jobs they don’t like.
எலுமிச்சை பூக்கும் நிலம் பற்றிக் கதே ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
Knowst thou the land where the lemon trees bloom,
Where the gold orange glows in the deep thicket’s gloom,
Where a wind ever soft from the blue heaven blows,
And the groves are of laurel and myrtle and rose?
எலுமிச்சை பூக்கும் நிலம் உலகில் எங்கேயிருக்கிறது எனத் தெரியாது ஆனால் அது நம் மனதிலிருப்பதைச் சில வேளைகளில் உணர முடிகிறது