வெர்மரின் தேவதை.

மூன்று வருடங்களுக்கு முன்பாக Girl with a Pearl Earring என்ற திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழா ஒன்றில் காண நேர்ந்தது. டச்சு ஒவியரான ஜோகனஸ் வெர்மரின் வாழ்வைப் பற்றியது என்ற அறிமுகத்தோடு படம் திரையிடப்பட்டது. வெர்மரின் சில ஒவியங்களை முன்னதாகக் கண்டிருக்கிறேன். ஆனால் அவரது வாழ்வு குறித்த எதையும் வாசித்து அறிந்திருக்கவில்லை. அந்தப் படம் துவங்கிய சில நிமிசங்களிலே மொத்த அரங்கமும் நிசப்தத்தில் ஆழ்ந்து போனது.

காலம் அப்படியே பின்னால் திரும்பி பதினேழாம் நூற்றாண்டிற்குள் நழுவிவிட்டதோ எனும்படியாக காட்சிப்பதிவுகளும் இசையும் வெர்மரின் வாழ்வில் நடைபெற்ற சில சம்பவங்களின் உணர்ச்சிபூர்வமான எதிரொலிப்பும் படத்தை பார்வையாளர்களின் குவிந்த கவனத்திற்கு உட்படுத்தியது.

ஒவியர்களின் வாழ்வைப் பற்றி வெளியான திரைப்படங்களில் இது ஒரு மைல்கல் என்றே சொல்வேன். வெர்மரின் புகழ்பெற்ற ஒவியம் ஒன்றின் பின்னால் உள்ள கதையைச் சொல்வது போன்ற திரைக்கதையமைப்பும் அதைக் காட்சிபடுத்தவதற்காக எடுத்துக் கொண்ட கலையமைப்பும் வெர்மரின் ஒவியங்களின் சாயலில் பயன்படுத்தபட்ட ஒளிப்பதிவும் படத்தின் தனிச்சிறப்புகளாகயிருந்தன .

வெர்மரின் காலம் சினிமா அறியாதது. புகைப்படக்கலையின் முன்னோடியாக கருதப்பட்ட கேமிரா அப்ஸ்குரா என்ற படக்கருவியின் மூலம் வானவியல் ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பதினேழாம் நூற்றாண்டு வெர்மரின் காலம். அன்று ஒவியங்கள் கலாச்சார வாழ்வில் மிக முக்கிய இடம் பெற்றிருந்தன. ஒவியங்களைப் பார்வையிடுவதும் சேகரிப்பதும் உயர்வகுப்பின் அடையாளமாக கருதப்பட்டது. வெர்மரின் ஒவியங்களை சமகால கலைவிமர்சகர்கள் கேமிரா அப்ஸ்குராவின் சாத்தியத்தால் உருவாக்கபட்ட ஒவியங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் வெர்மர் அதைப் பயன்படுத்தியிருந்தாரா என்பதற்கான நேரடிச் சான்றுகள் எதுவும் இன்று வரை கண்டுபிடிக்கபடவில்லை.

நவீன ஒவியர்களின் வரிசையில் இன்று பெரிதும் கொண்டாடப்படும் முன்னோடி ஒவியர் ஜோகனஸ் வெர்மர். தன்வாழ்நாளில் அதிகம் அறியப்படாத ஒவியராக இருந்த வெர்மர் இருநூறு வருடங்களுக்கு முன்பாக தியோர் பெர்ஜர் என்ற கலைவிமர்சகரின் ஆழ்ந்த ஈடுபாட்டின் காரணமாக கலையுலகின் கவனத்திற்கு உள்ளானார். தனது சமகால ஒவியர்களைப் போல வெர்மர் அதிகமான ஒவியங்களை வரையவில்லை. அவர் மொத்தமாகவே நாற்பத்தைந்து ஒவியங்கள் தான் வரைந்திருப்பதாக கூறுகிறார்கள். அதில் 35 ஒவியங்களே இன்றைக்கு காட்சிக்கு கிடைத்துள்ளன.

ஒரு ஆண்டிற்கு இரண்டு தைல ஒவியங்கள் என்று தீட்டிய வெர்மரின் வாழ்வு இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை. ஆங்காங்கே கிடைத்த குறிப்புகள், தேவாலயப் பதிவேடுகளின் உதவி கொண்டு வெர்மரின் வாழ்க்கை சித்திரம் உருவாகியிருக்கின்றனதேயன்றி முழுமையான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
வெர்மரின் ஒவியங்கள் அன்றாட வாழ்வின் காட்சிகளையே முன்வைக்கின்றன. தனிமையும் வறுமையாக வாழ்ந்த வெர்மருக்கு வெளியுலகக் கொண்டாட்டங்களின் மீது நாட்டமில்லை. வீடு தான் அவரது உலகம். வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள்,பால் கொண்டு வருபவள், இசைக்கருவிகளை மீட்டுபவர் என்று தன் கண்முன்னே நடமாடும் மனிதர்களே அவரது உலகின் கலைவடிவங்களானார்கள்.

வெர்மரின் ஒவியங்களின் தனிச்சிறப்பு அவர் நிறங்களைப் பயன்படுத்தும் முறை. குறிப்பாக அவர் தேற்றல் போல நிறங்களைத் தடவி செல்லும் அழகும் நீல வண்ணத்தின் மீது அவர் கொண்டிருந்த அதீத காதலையும் சொல்லலாம். அவரது ஒவியங்கள் மிக நுட்பமானவை. பரோக் வகை ஒவியங்கள் என்று அடையாளம் காணப்படும் வெர்மரின் ஒவியவகை பின்னாளில் பலமுக்கிய ஒவியர்களுக்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறது.

வெர்மரின் பிரபலமான ஒவியங்களாக Girl with a Pearl Earring, The Girl with a Wine glass, Girl reading a Letter at an Open Window, The Milkmaid, The Music Lesson போன்றவற்றை குறிப்பிடலாம். இந்த ஒவியங்கள் யாவும் உருச்சித்திரங்களே. வெர்மர் தன்வாழ்நாளில் நகரக்காட்சிகளாக இரண்டே இரண்டு ஒவியங்களை மட்டுமே வரைந்திருக்கிறார். மேற்குறிப்பிட்ட ஒவியங்களில் முத்துகாதணி அணிந்த பெண் என்ற ஒவியம் வெர்மரின் மோனலிசா என்று சிறப்பிக்கப்படுகிறது.

வெர்மரின் ஒவியங்களுக்கான மாடலாக இருந்தவர்கள் அவரது வீட்டில் வேலை செய்தவர்கள் மற்றும் அவருக்கு மிக நெருக்கமான இருந்த சிலரே. முத்துகாதணி அணிந்த பெண் ஒவியத்திற்கான மாடலான இருந்தவள் கிரீட் என்ற பணிப்பெண் என்று வெர்மரின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். மோனலிசா போலவே வெர்மரின் பணிப்பெண் ஒவியத்திலும் துயரம்படிந்த சிரிப்பு காணப்படுகிறது. அத்தோடு குழந்தமை கொண்ட முகபாவமும் காதில் தொங்கும் முத்தணியும் தலையில் கட்டப்பட்டுள்ள நீலநிற முக்காடும் அதன் மடிப்பில் கலைந்து கிடக்கும் நிறஜாலமும் , அவளது தோற்றத்தை தேவதையின் உருவம் போல அழகு செய்கின்றது.

குறிப்பாக முத்துகாதணி அணிந்த பெண்ணின் கண்கள் காட்டும் பாவமும் அவள் உதட்டில் தட்டி நிற்கும் வெளிப்படாத சொல்லும், மூக்கின் சிறுநிழலும், காதணியில் உள்ள முத்தின் பிரதிபலிக்கும் ஒளியும், கண்விழியினுள் தென்படும் துல்லியப் பிரதிபலிப்பும் இந்த ஒவியத்தை உலகின் தலைசிறந்த ஒன்றாக்கியுள்ளது.

வெர்மர் இயற்கையான ஒளியைப் பயன்படுத்துவதில் மிகத் தேர்ச்சி பெற்றவர். ரெம்பிராண்டின் ஒவியங்களோடு ஒப்பிடும் போது அவரைப்போலவே வெர்மரின் ஒளியமைப்பும் விசேச ஈடுபாடும் தனித்துவமானது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ரெம்பிராண்டின் ஒவியங்களில் ஒளியின் வழியாக மனித முகபாவமும் அதில் வெளிப்படும் நுண்உணர்ச்சிகளும் முதன்மைப் படுத்தபடுகின்றன என்றால் வெர்மரின் ஒவியங்களில் ஒளியின் வழியே காட்சிகளுக்கு மாயத்தன்மை உருவாகிறது. அது போலவே வெர்மரின் தனித்துவம் அவர் பொருட்களை எந்த அடுக்கில் எந்த வரிசையில் எந்த தளங்களில் பதிவு செய்கிறார் என்பதே.

இன்றைய நவீன ஒளிப்பதிவிற்கு முன்னோடி போல அவரது ஒவியங்களில் முதன்மைபடுத்தபடும் உருவத்திற்கும் அதன் பின்புலத்திற்கும் இடையில் சீரான இலக்கண சுத்தம் காணப்படுகிறது. அதற்கு சிறந்த அடையாளமாக வெர்மரின் இசைக்கூடம் என்ற ஒவியத்தை குறிப்பிடலாம். அந்த ஒவியத்தில் இசைபயிலும் ஒரு பெண்ணும். கற்றுதரும் ஒருவரும் காட்சிபடுத்தபடுகின்றனர். அந்த பெண்ணின் எதிரில் உள்ள நிலைக்கண்ணாடியில் அவர்களின் உருவமும் வீட்டின் பின்புறச் சுவரில் உள்ள கோட்டோவியங்களும் பிரதிபலிப்பு கொள்கின்றன.

ஒவியத்தை மிக நுண்மையான ஆடியின் வழியாகப் பெரிதுபடுத்திப் பார்த்தால் எந்த அளவு சுவர்களின் பிரதிபலிப்பை வெர்மர் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரிய வரும். இந்த ஒவியம் போலவே பால்கறக்கும் பெண்ணைப் பற்றிய ஒவியத்திலும் அறையின் சுவர்களும் அந்த பெண்ணின் ஆடைகளின் மடிப்பும், அந்த மடிப்பில் இயல்பாக பட்டுத் தெறிக்கும் ஒளியும் துல்லியமாக தீட்டப்பட்டுள்ளதை காணலாம்.

ஜோகனஸ் வெர்மர் 1632 ஆண்டு டெல்ப்ட் என்ற நெதர்லாந்தின் புகழ்பெற்ற நகரில் பிறந்தார். அவரது அப்பா பட்டு நெசவு நெய்பவர். அத்தோடு கலைப்பொருட்களை வாங்கி விற்பனை செய்கின்றவர். அதனால் நுண்கலையின் பரிச்சயம் வெர்மருக்கு இளவயதிலே உருவானது. வெர்மரின் இளமைபருவம் பற்றிய தகவல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. அவர் தன்னை ஒரு கலைவிற்பனையாளராக பதிவு செய்து கொண்ட குறிப்பிலிருந்து அவரும் தன்னுடைய அப்பாவை போல ஒவியங்களின் மீது ஆர்வம் கொண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.

கேதரினா போல்னஸ் என்ற பெண்ணை வெர்மர் திருமணம் செய்து கொண்டார். பணக்கார விதவையின் மகள் கேதரினா என்பதால் வெர்மர் மாமியாரின் வீட்டோடு சேர்ந்து வசிக்கத் துவங்கினார். மிகப்பெரிய வீடும் பராம்பரிய சொத்தும் அவரை அன்றாட செலவிற்கு சிரமப்படாமல் இருக்க செய்தது. ஆனால் தன்னால் வீட்டிற்கு தேவையானதை சம்பாதிக்க இயலவில்லை என்ற குற்றமனப்பாங்கு வெர்மருக்குள் தீவிரமாக இருந்தது. அதற்காகவே அவர் தனித்த அறையொன்றில் வசித்தபடியே வெளியே வராமலே நாட்களை கழிக்க பழகியிருந்தார். தனிமையைப் பகிர்ந்து கொள்ள வெர்மருக்கு கிடைத்த ஒரே வழி ஒவியம் தீட்டுவது. மனவெறுமையும் குழப்பமும் அவரை கவ்வியிருந்தன. அதனால் அவர் ஒரு ஒவியத்தை தீட்டி முடிப்பதற்கு இரண்டு வருடகால அவகாசம் கூட எடுத்திருக்கிறார்.

வெர்மருக்கு பதினாலு பிள்ளைகள் பிறந்தார்கள். அதில் மூவர் பிறந்த சிலமாதங்களில் இறந்து போய்விட்டார்கள். பதினோறு பிள்ளைகள், மனைவி, வேலைக்காரர்கள், மாமியார் என்று பெரிய குடும்பமாக அவரது உலகமிருந்தது. வெர்மரின் ஒவியங்களின் மீது ஈடுபாடு கொண்டு அவரை தொடர்ந்து பாராட்டி உதவி வந்த புரவலர் வான் ருய்ஜிவென் ((van Ruijven). இவரது உந்துதலின் பேரில் தான் வெர்மர் தனது புகழ்பெற்ற ஒவியங்களை வரைந்திருக்கிறார்.

வருமானமில்லாமல் தொடர்ந்து செலவு செய்து வந்த வெர்மரின் குடும்பம் மெல்ல கடனில் முழ்க துவங்கியது. கடனைப் பற்றிய கவலையின்றி மிக உயர்ந்த விலைக்கு இயற்கையான வண்ணப்பொருட்களை வாங்கி தனக்குத் தேவையான நிறங்களை தானே தயாரித்து கொண்டிருந்தார் வெர்மர். ஆனால் தொடர்ந்த கடன்காரர்களின் தொல்லையும் வேறு பெண்களோடு வெர்மருக்கு தொடர்பு உள்ளதாக மனைவி கொண்ட சந்தேகமும் வெர்மரின் கலைத்திறனை சிதறடித்தன.

தனது நாற்பத்திமூன்றாவது வயதில் வெர்மர் இறந்த போது பதினோறு குழந்தைகளும் தீர்க்கபட முடியாத பெருங்கடனுமே அந்த வீட்டில் மிச்சமாக இருந்தது. அவர் மரணத்தின் பிறகு கதரினா வெர்மரின் ஒவியங்கள் மற்றும் அவர்கள் குடியிருந்த வீட்டை ஏலத்தில் விட்டு கடனை அடைப்பதற்கு முயற்சித்தார். வெர்மரின் ஒவியங்களை உள்ளுர் பிரமுகர்கள் சிலர் சொற்ப விலைக்கு வாங்கி சென்றனர். ஒரு டச்சு பிரமுகர் வீட்டில் காப்பாற்றி வைக்கபட்டிருந்த வெர்மர் ஒவியம் சமீபத்தில் விலைக்கு வந்தது. அப்போது அது ஏலத்தில் எடுக்கபட்ட தொகை 96 கோடி ரூபாய். தன்வாழ்ந்த காலத்தில் ஒவியராக கொண்டாடப்படாத வெர்மர் இன்று உலகின் முக்கிய ஒவிய சேகரம் யாவிலும் இடம் பெற்றிருக்கிறார்

வெர்மரின் ஒவியத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்த Tracy Chevalier என்பவரின் நாவல் தான் Girl with a Pearl Earring. . இந்த நாவல் முத்துகாதணி அணிந்த பெண் ஒவியத்தில் இடம்பெற்றுள்ள பெண் யார். அவள் எப்படி வெர்மரின் வாழ்விற்குள் நுழைந்தாள். இந்த ஒவியம் எந்த சூழலில் வரையப்பட்டது என்ற கற்பனையான கதையொன்றை விவரிக்கிறது. இந்தக் கதையை நிஜமாக்குவதற்கான சில தடயங்கள் இருந்த போதும் இதை கற்பனையான நாவல் என்றே வகைப்படுத்த முடியும்.

ஒவியங்களின் பின்புலத்தின் மீது ஆர்வம் கொண்டு இயங்கும் புதிய படைப்புகள் சமகாலத்தில் பெரிய வரவேற்பு பெற்றுள்ளன. குறிப்பாக டாவின்சி கோடு நாவலில் வழியே டாவின்சியின் ஒவியஉலகம் மீள்பார்வை பெற்றிருக்கிறது. இது போன்ற முயற்சிகளின் ஒன்று தான் இந்த நாவல்.

பதினேழாம் நூற்றாண்டின் கலைவாழ்வையும் டெல்ப்ட் நகரவாழ்வின் கூறுகளையும் வெர்மரின் அந்தரங்கமான உலகையும் சித்திரிக்கும் இந்த நாவல் எழுதப்பட்டு வெளிவருவதற்கு முன்பாகவே அதை திரைப்படமாக்குவதற்கான உரிமையை லண்டனில் உள்ள திரைப்பட நிறுவனம் ஒன்று பெற்று விட்டது. நாவலும் பரந்த வாசக பாராட்டுதலுக்கு உள்ளாகவே திரைப்படம் அடுத்த வருடமே வெளியானது.

இப்படத்தில் காலின் பிர்த் வெர்மராக நடித்திருக்கிறார். ஸ்கார்லெட் ஜான்சன் கிரீட் என்ற பணிப்பெண்ணாக நடித்திருக்கிறார். படத்தை பீட்டர்வெப்பர் இயக்கியிருக்கிறார். படத்தின் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரண்டு கலைஞர்கள். எடார்டோ செரா ((Eduardo Serra) என்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளரான Alexandre Desplat

படம் கிரீட்டின் வாழ்விலிருந்து துவங்குகிறது. பனிபடர்ந்த வீதிகளும் பழமையின் சின்னமாக உள்ள வீடுகளும் நகரினுள் செல்லும் நீர்வழியும் அதில் மிதக்கும் படகுகளும், மரப்பாலமும் என பதினேழாம் நூற்றாண்டின் டச்சு நகரம் மெல்ல கண்முன்னே விரிய துவங்குகிறது. கிரீத்தின் அப்பா ஒரு செராமிக் கலைஞர். அவருக்கு திடீரென ஏற்பட்ட பார்வையின்மை காரணமாக கிரீட் வேலை செய்து சம்பாத்திக்க வேண்டிய அவசியம் உருவாகிறது. வெர்மரின் வீட்டிற்குப் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்க்கிறாள் கிரீட்

படத்தின் ஆரம்ப காட்சி மிகுந்த கவித்துவானது. சமையலறையில் கேரட், முள்ளங்கி பீட்ரூட் வெங்காயம் போன்ற காய்கறிகள் துண்டுகளாக்கபடும் மிக அண்மைகாட்சி தோன்றி மறைகிறது. காய்கறிகளின் உள்பகுதியில் வெளிப்படும் இயற்கையான சிவப்பு பச்சை வெள்ளை நிறங்களும் வெங்காயத்தில் தோல் அகற்றப்படும் போது அதனுள் தோன்றும் நிற மாற்றங்களும் துண்டாக்கபட்ட காய்கறிகள் அடுக்கி வைக்கபடும் போது ஏற்படும் வர்ணக்கலவையும் இயற்கையாக உள்ள நிறங்களைத் துண்டித்து ஏதோவொரு வரிசையில் அடுக்கி உருவாக்குவது தான் ஒவியம் என்று கூறுவது போல அமைந்திருக்கிறது.

அது போலவே டிசம்பர் மாத குளிர்கால காலையும் வீதிகளின் நடமாட்டமும் ஆங்காங்கே மக்கள் நடுக்கத்தோடு பேசி நடப்பதும் குழந்தைகள் தெருவில் விளையாடுவதும் நிலக்காட்சி ஒவியங்களை போலவே படமாக்கபட்டுள்ளன.

வெர்மரின் வீட்டினை அடையும் கிரீட் அங்கே முன்னதாக பணிபுரியும் டனாகாவிற்கு அறிமுகமாகிறாள். டனாகா கிரீட்டை வெர்மரின் வீட்டில் உள்ள அறைகளையும் அங்கு செய்ய வேண்டிய வேலைகளையும் அறிமுகம் செய்து வைக்கிறாள். இந்த காட்சியில் பாதி திறந்த ஜன்னலின் வழியே கசியும் இளஞ்சிவப்பு ஒளியும் பனிக்காலத்தில் எப்போதும் வீட்டிற்குள் பதுங்கியிருக்கும் இருளும், பச்சையும் நீலமும் கலந்த பளிங்குபாத்திரங்களும் அடர்ந்த நிறங்களில் உடையணிந்திருந்த வீட்டோர்களும், ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு வெளிச்சம் கசியும் வீட்டின் அழகும் துல்லியமாக பதிவு செய்யப்படுகிறது.

கிரீட் வெர்மரின் அறையை தொலைவிலிருந்து பார்க்கிறாள். பாதி கதவு திறந்து கிடக்கிறது. உள்ளே லேசாக வெளிச்சம் அலைந்து கொண்டிருக்கிறது.கிரீத்தின் கண்களில் ஆர்வமும் பயமும் ஒரே நேரத்தில் தோன்றி மறைகின்றன. அவள் மெதுவாக முன்னே செல்ல முயற்சிக்க டனாகா தடுத்து நிறுத்தி வெர்மர் ஒவியம் வரைந்து கொண்டிருக்கிறார் என்கிறாள். கிரிட்டீற்கு வியப்பாக இருக்கிறது.

வெர்மருக்கும் கிரீட்டிற்குமான இந்த இடைவெளி எப்படி மாறிப் போகிறது. வெர்மரின் விருப்பத்திற்குரிய வேலைக்காரியாக கிரீட் எப்படி மாறிப்போகிறாள் என்றே கதை நீள்கிறது. கிரீட் வெர்மரின் கலைத்திறனைப் புரிந்து கொள்கிறாள். அவளது அப்பா ஒரு செராமிக் கலைஞன் என்பதால் அவளால் ஒவியரின் மனவலியைப் புரிந்து கொள்ள முடிகிறது. வெர்மருக்கு உதவி செய்வதற்காக நிறங்களை தயாரிக்கும் வேலை செய்யத் துவங்குகிறாள்.

அந்த நட்பு அவர்களுக்குள் காதலில்லாத ஒரு நெருக்கத்தை உருவாக்குகிறது. அதே நேரம் கிரீட் இறைச்சிகடையில் வேலை செய்யும் ஒருவனைக் காதலிக்கவும் துவங்குகிறாள். வெர்மரின் புரவலரான வான் ரெய்ஜ்வெனிற்கு கிரீட்டை மிகவும் பிடித்துப் போகிறது. அவளை ஒரு ஒவியமாக வரைந்து தரும்படியாக வெர்மரிடம் கேட்டுக் கொள்கிறார். அதை ஏற்றுக் கொண்ட வெர்மர் கிரீட்டை தன் அறைக்கு வரவழைத்து தன் மனைவியின் முத்து காதணி ஒன்றை அணிய வைத்து ஒவியமாக தீட்டுகிறார்.

அது வெர்மரின் மனைவிக்கு ஆத்திரத்தை உருவாக்குகிறது. அவளது கோபமும் வெர்மர் மாமியாரின் வெறுப்பும் ஒன்று சேர்ந்து கிரீத்தை அந்த வீட்டிலிருந்து துரத்துகின்றன. முடிவில் வெர்மர் மீதான அன்பால் அவள் தன் காதலையும் துறக்கிறாள். முடிவில் அந்த முத்து காதணி அவளுக்கு உரிய பரிசாக வந்து சேர்கிறது.
வெர்மரின் வாழ்வையும் கலையின் மீதான ஈடுபாட்டையும் கவித்துவமான விவரிக்கிறது இப்படம்.

பிரசித்திபெற்ற பல முக்கிய ஒவியங்களின் பின்னே இது போல கண்ணுக்குத் தெரியாத கதைகள் ஒளிந்திருக்கின்றன. தேடுதலும் தொடர்ந்த ஈடுபாடுமே அதை வெளிப்படுத்த முடியும். இந்திய ஒவியங்கள், சிற்பங்களின் பின்னால் இப்படி சொல்லித் தீராத கதைகள் உள்ளன. அதை திரைப்படமாக்குவதற்கு தான் நம் கலைஞர்கள் பலருக்கும் விருப்பமில்லை. அந்த வகையில் வெர்மர் மிகுந்த பாக்கியசாலி.
**
Ref: 1) The Cambridge Companion to Vermeer – Wayne E. Franits
        2) A Study of Vermeer – Edward Snow.

0Shares
0