The Milkmaid ஒவியம் 1658ல் வரையப்பட்டது என்கிறார்கள். துல்லியமாக ஆண்டினை கண்டறிய முடியவில்லை என்ற போதும் வெர்மீரின் ஒவியவரிசையைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டினை முடிவு செய்திருக்கிறார்கள்.

ஓவியத்தின் அகம் காலமற்றது. இந்த ஓவியத்தில் காணப்படும் பெண் நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் அழியாத உருவமாக இருக்கிறாள். அவளது பால் குவளையிலிருந்து வழியும் பால் நிற்கவேயில்லை. இந்தப் பால் வடிந்து கொண்டிருக்கும் வரை உலகில் அன்பு நீடிக்கவே செய்யும் என்கிறார்கள். அது உண்மையே. வெர்மீரின் பால் குவளையை ஏந்திய பணிப்பெண்ணின் ஓவியம் ஆழமான நம்பிக்கையை உருவாக்குகிறது
இந்த ஓவியத்தில் இருக்கும் பெண் வெர்மீரின் வீட்டில் சமையல் வேலைகள் செய்கிறவள். அவளது உடையும் தோற்றமும் அக்காலப் பணிப்பெண்களை ஒத்திருக்கிறது. அவள் முன்னுள்ள மேஜையில் பல்வேறு வகையான ரொட்டிகள் உள்ளன.
அவள் தலையில் அணிந்துள்ள துணி மற்றும் அவளது உடைகள் துல்லியமாக வரையப்பட்டிருக்கின்றன. சுவரில் தொங்கும் கூடை, பெண்ணின் கவனம். குவளையிலிருந்து வடியும் பால். உடைந்த ரொட்டித்துண்டுகள். மேஜையில் கிடக்கும் துணி, கேன்வாஸின் இடது பக்கத்தில் உள்ள ஜன்னலிலிருந்து வெளிப்படும் ஒளி என இந்த ஓவியம் வியக்கத்தக்க அளவில் நுட்பமாக வரையப்பட்டிருக்கிறது.
பெண்ணின் முகத்தின் பாதி நிழல் விழுகிறது. அது தான் தனி அழகை உருவாக்குகிறது. அவளது தாழ்ந்த கண்களில் வெளிப்படும் கவனம், நிதானம், அவளுடைய சுருக்கப்பட்ட உதடுகள், பால் குவளையைத் தாங்கிய கைகளின் உறுதி முழுமையான ஈடுபாட்டின் அடையாளமாக இருக்கிறது

ரொட்டியின் மேலோடு, ரொட்டி மீது காணப்படும் விதைகள், ரொட்டி உள்ள கூடையின் பின்னப்பட்ட அழகிய கைப்பிடிகள் துல்லியமாக வரையப்பட்டிருக்கின்றன. அந்தப் பெண்ணின் பின்னுள்ள சுவர் அது எத்தகைய வீடு என்பதையும் அவர்கள் அதிக வசதியானவர்களில்லை என்பதையும் அடையாளப்படுத்துகிறது
சுவரில் காணப்படும் கறைகள், மற்றும் ஆணி, ஆணி துளை. , சுவரில் தொங்கும் பளபளப்பான பித்தளை கொள்கலன். சாளரத்தில் உள்ள கண்ணாடி பலகையின் நான்காவது வரிசையில் சிறிய விரிசல் காணப்படுகிறது. தரையில் கால்களைச் சூடு படுத்திக் கொள்ளும் பெட்டகம் உள்ளது. இது குளிர்காலத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது
கலை வரலாற்றாசிரியர் ஹாரி ராண்ட் இந்த ஓவியத்திலுள்ள பணிப்பெண் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை விரிவாக ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். அவரது ஆய்வின் படி படத்திலிருப்பவர் வீட்டு உரிமையாளரில்லை. அவள் ஒரு பொதுவான பணிப்பெண்.
மேல்தட்டுக் குடும்பங்களில் இது போன்ற பணிப்பெண்கள் வேலைக்கு இருப்பது வழக்கம். அவள் டச்சு ஓவன் எனப்படும் மண் கிண்ணத்தில் மெதுவாகப் பால் ஊற்றுகிறாள். உடைந்த ரொட்டித்துண்டு கலவையின் மீது பாலை சரியான முறையில் ஊற்றி அவள் புட்டிங் செய்ய முயலுகிறாள். இது டச்சுக் குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் செயற்பணியாகும்
இந்த ஓவியம் பற்றி நிறைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. உலகில் அதிகம் பேசப்பட்ட ஓவியங்களில் ஒன்றாக இதையும் கருதுகிறார்கள்.
எனக்கு இந்த ஓவியத்தில் பிடித்த விஷயம் வற்றாது வடியும் பால். ரொட்டித்துண்டுகள் மற்றும் பணிப்பெண்ணின் கவனம். வெர்மீரின் இந்த ஓவியத்தைக் காணும் போதெல்லாம் மனதில் புத்தருக்குச் சுஜாதா கொடுத்த பால் அன்னம் நினைவில் வந்து போகிறது.
கௌதம புத்தர் தமது இறுதிக் காலம் நெருங்கும் வேளையில், தமது சீடர் ஆனந்தரிடம், தனக்கு முதலில் சுஜாதை படைத்த பால் அன்னத்தை உண்ட அன்றே தமக்கு ஞானம் கிட்டியதாகச் சொல்கிறார். வெர்மீரின் புட்டிங் செய்யும் பணிப்பெண்ணும் சுஜாதாவும் வேறுவேறில்லை. அவர்கள் அர்ப்பணிப்புடன் அன்புடன் உணவைத் தயாரிக்கிறார்கள். தருகிறார்கள். வெர்மீரின் பணிப்பெண்ணின் பெயர் கூட உலகம் அறியாது. ஆனால் அவள் நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் தீராத அன்பின் அடையாளமாக வெளிப்படுகிறாள். அது தான் கலையின் சிறப்பு
வெர்மீர் தனது வாழ்நாளில் மிகுந்த பொருளாதாரச் சிரமம் கொண்டிருந்தார். பேக்கரியில் ரொட்டிகளைக் கடனில் தான் வாங்கினார். அவர் இறந்த போது அவரது மனைவியும் 11 பிள்ளைகளும் வறுமையில் வாடினார்கள். இந்த ஓவியம் வரைந்த நாளில் கூட அவர் வறுமையான சூழலில் தான் இருந்திருக்கக் கூடும்.
எளிய அன்றாட நிகழ்வு ஏன் ஓவியத்தில் இத்தனை பேரனுபவமாக மாறுகிறது. அது தான் கலைஞனின் தனித்துவம். அவன் வியப்பூட்டும் காட்சிகளை வரைய விரும்புவதை விடவும் எளிய காட்சிகளை வியப்பூட்டும் வண்ணம் வரையவே ஆசை கொள்கிறான்.
வெர்மீரின் ஓவியங்களில் வெளியுலகம் ஜன்னலின் வழியே தான் அடையாளப்படுத்தப்படுகிறது. இதிலும் அந்தப் பெண்ணின் வலதுபுறம் ஒரு ஜன்னல் காணப்படுகிறது.

வெர்மீர் (Johannes Vermeer) வண்ணங்களைப் பயன்படுத்தும் முறை அபாரமானது. நிகரற்றது. நீலமும் மஞ்சளும் அவருக்கு விருப்பமான நிறங்கள். ஒளியை அவர் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.
ஓவியத்தைத் திரும்பத் திரும்பக் காணும் போது அந்தப் பெண் ஏதோ சொல்ல முற்படுவது போலவே உணர முடிகிறது. வெர்மீரின் பெண்கள் வசீகரமானவர்கள். முத்து காதணி அணிந்த பெண்ணை யாரால் மறக்க முடியும். ஜன்னல் முன்பாகக் கடிதம் வாசிக்கும் பெண்ணின் அழகை எப்படி மறக்கமுடியும்.
இந்திய மரபில் பால் ஆசையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஒருவரின் மரணத்தருவாயில் கூடப் பாலை தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். பால் என்பது குழந்தையின் முதல் உணவு. பாலும் ரொட்டியும் உயிர்வாழ்தலின் அடையாளங்கள்.
வெர்மீர் பிற ஓவியர்களைப் போல ஓவியம் வரைவதற்காக நிறையப் பயணங்களை மேற்கொள்ளவில்லை. நிலக்காட்சிகளைத் தேடிப் போகவில்லை. அவர் தன் வீட்டினுள் இருந்தபடியே எளிய அன்றாட நிகழ்வுகளைக் கண்டறிந்து தனித்துவமான கோணத்தில் துல்லியமான சித்தரிப்பில் ஓவியமாக்கியிருக்கிறார்.
இதை வரையும் போது வெர்மீரின் மனதில் என்ன இருந்தது என்று தெரியாது. ஆனால் இதைக் காணும் போது நம் மனதில் அந்தப் பால் சொட்டி நிரம்புகிறது. நாம் பேரன்பை உணரத் துவங்குகிறோம். அர்த்தப்படுத்திக் கொள்வதும் தனதாக்கிக் கொள்வதும் கலையின் அம்சங்களே.
நான் இந்த ஓவியத்தில் வடியும் பாலை வற்றாத படைப்பாற்றலாகவே காணுகிறேன். அது வெர்மீரிடம் கடைசிவரை தீவிரமாக வெளிப்பட்டது. உண்மையான கலைஞர்கள் அத்தனை பேர்களிடமும் வற்றாமல் வழிந்தோடவே செய்கிறது. அந்த உயரிய நம்பிக்கையைத் தருகிறது என்பதால் வெர்மீரைக் கொண்டாடுகிறேன்.
••