வெர்மீரின் முகம்

ஜோஹன்னஸ் வெர்மீரின் ஒவியங்கள் இன்று பெற்றுள்ள புகழை அவர் வாழும் நாளில் பெறவில்லை. இதுவரை அவரது 34 ஓவியங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பல்வேறு நாடுகளின் அருங்காட்சியகங்களில் இடம்பெற்றுள்ள அவற்றை ஒரு சேர கண்காட்சியாக வைக்க முயலுகிறார்கள். அது குறித்த ஆவணப்படமே close to vermeer. இதனை சுசான் ரேஸின் இயக்கியுள்ளார்.

ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் பணியாற்றும் ஜார்ஜ் வெபர். தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு மிகப்பெரிய வெர்மீர் கண்காட்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனவு காணுகிறார். 

இதற்காக வெர்மீரின் ஒவியங்கள் இடம்பெற்றுள்ள பல்வேறு மியூசியங்களைத் தொடர்பு கொண்டு அனுமதி கேட்கிறார். இந்த திட்டத்தை செயல்படுத்துவது எளிதாகயில்லை. பலரும் வெர்மீரின் ஒவியங்களை கடனாக அளிக்க மறுக்கிறார்கள். தங்கள் அருங்காட்சியகத்தின் விலைமதிப்பில்லாத சொத்து வெர்மீரின் ஒவியம் என்று விளக்குகிறார்கள்.  இந்த ஒவியங்களை சேகரிக்க முனையும் அவரது திட்டமிடலும் பயணமும் தான் படத்தின் மையப்பொருள்.

வெர்மீர் தனது 43வது வயதில் இறந்துவிட்டார். அவர் எப்படியிருப்பார் என்று யாருக்கும் தெரியாது. அவர் தனது சுயஉருவப்படம் எதையும் வரையவில்லை. அவரது சமகாலத்தை சேர்ந்த ரெம்ப்ராண்ட் எண்பது சுய உருவப்படங்களை வரைந்திருக்கிறார். ஆகவே அவரது தோற்றம்  மற்றும் செயல்பாடுகளை துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது. வெர்மீரின் குடும்பம் மற்றும் வாழ்க்கை சூழல் பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை.

மற்ற ஒவியர்களைப் போல வெளிப்புறக்காட்சிகளை வெர்மீர் வரையவில்லை. அவரது வீட்டின் அறைகள் தான் ஒவியக்களமாக இருக்கிறது. தினசரி நிகழ்வுகளை தான் வரைந்திருக்கிறார். அதிலும் ஒரு ஒவியத்தில் அவர் படம் வரையும் காட்சி சித்தரிக்கபடுகிறது. அதில் வெர்மீரின் முதுகு மட்டுமே நமக்குத் தெரிகிறது. இந்த முதுகை வைத்து வெர்மீர் ஏன் ஒரு பெண்ணாக இருக்க கூடாது என்ற கேள்வியை இப்படத்தில் ஒரு ஆய்வாளர் எழுப்புகிறார்.

வெர்மீர் யாரிடம் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார், யாருக்கெல்லாம்  கற்றுக் கொடுத்தார் என்று தெரியவில்லை, ஆகவே புதிராக உள்ள வெர்மீரின் வாழ்க்கையை இன்றும் ஆராய்ந்தபடி இருக்கிறார்கள்.

இந்த ஆவணப்படம் வெர்மீரின் சிறப்புகளை விவரிப்பதுடன் அவரது கலைவாழ்வின் புதிரையும் அவிழ்க்க முயலுகிறது

தனது சமகாலத்தவரிடமிருந்து வேறுபட்டு தனக்கான தனித்துவ பாணியை வெர்மீர் உருவாக்கிக் கொண்டவிதம் ஆச்சரியமளிக்கிறது. இன்று அந்த ஒவியங்கள் காலத்தின் சாட்சியமாக காட்சிதருகின்றன. வெர்மீரின் முகம் எப்படியிருக்கும் என நமக்கு தெரியாது. ஆனால் அவர் வரைந்துள்ள பெண் முகங்கள் அலாதியான அழகுடன், அமைதியுடன் இருப்பதை காண முடிகிறது.

வெர்மீர் கேமரா அப்ஸ்குராவைப் பயன்படுத்தி தனது ஒவியங்களை வரைந்திருக்கிறார் என்பதை ஒரு காட்சியின் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.  

ஆய்வாளர்கள். கலைவிமர்சகர்கள் படத்தில் வெர்மீரின் ஒவியங்கள் பெற்றுள்ள புகழையும் அதன் தனித்துவத்தையும் பற்றி விரிவாக உரையாடுகிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் வெபர் லண்டனில் பள்ளி மாணவனாக இருந்தபோது வெர்மீரின் ஓவியத்தை முதன்முதலில் பார்த்த அனுபவத்தை உணர்ச்சிபூர்வமாக விவரித்துள்ளார். அந்த வியப்பு அசலானது.  பேச முடியாதபடி அவருக்குள் உணர்ச்சிகள் கிளர்ந்து எழுகின்றன.

வெர்மீரின் ஒவியத்தை பெரிதாக்கி ஆராய்கிறார்கள். குறிப்பாக அவரது வண்ணப்பூச்சில் உள்ள சிறு விரிசல்கள், நிழலான தூரிகைகள், நுணுக்கங்களை காட்டுகிறார்கள்.   

பல்வேறு அருங்காட்சியகங்களிலிருந்து கடனாகப் பெற்ற வெர்மீர் ஒவியங்களை எப்படி காட்சிப்படுத்துகிறார்கள் என்பதையும் துல்லியமாக காட்டுகிறார்கள். .

மக்கள் பார்வைக்காக கண்காட்சி திறக்கபடுவதுடன் படம் நிறைவு பெறுகிறது. இந்த ஆவணப்படத்தில் ஓவியங்களின் வழியே நாம் வெர்மீரை நெருங்கிச் செல்கிறோம். வண்ணங்கள் அவரது குரலாக வெளிப்படுகின்றன.

இந்த கண்காட்சியை காண இரண்டு நாட்களில் 450,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன என்பது இதுவரை இல்லாத சாதனை.

0Shares
0