பிரெஞ்சு கவிஞரும், ஒவியரும், திரைப்பட ஆளுமையுமான ழான் காக்தூ (Jean Cocteau) எழுதிய The white paper ஒரினச்சேர்க்கையில் நாட்டம் கொண்ட ஒருவனைப் பற்றியது. Gay literature எனப்படும் தற்பால்சேர்க்கை இலக்கியத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது இந்நூல்
இன்று ஒரினச்சேர்க்கை குறித்துப் பொதுவெளியில் திறந்த உரையாடல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன, அதைக் குற்றம் எனக்கருதாமல் அணுக வேண்டிய மனநிலை குறித்துத் தொடர்ந்து பேசியும் விவாதித்தும் வருகிறார்கள், அப்படியும் சமூகம் ஒரினச்சேர்க்கையை இயற்கைக்கு மீறிய தவறான செயல் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறது, பல்வேறுவிதங்களிலும் ஒரினச்சேர்க்கையாளர்கள் அவமானப்படுத்தபடுகிறார்கள், குற்றவாளிகள் போல நடத்தப்படுகிறார்கள்.
பாலுறவுத் தேர்வு என்பது அவரவர் விருப்பம் சார்ந்த ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள், ஒரினச்சேர்க்கை குறித்த இலக்கியப்பதிவுகள் மிகவும் குறைவு. நான் வாசித்தவரை கரிச்சான்குஞ்சுவின் பசித்தமானிடம் நாவல் ஒன்று தான் ஒரினச்சேர்க்கை குறித்துப் பேசியிருக்கிறது.
கிரேக்க இலக்கியங்களில் தற்பால்சேர்க்கை குறித்து கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன, E. M. Forster எழுதிய Maurice என்ற நாவல் ஒரினச்சேர்க்கையைப் பேசுகிறது. 1913ல் எழுதப்பட்டு 1932ல் மறுதிருத்தம் செய்யப்பட்ட போதும் இந்நாவல் பாஸ்டர் இறந்த பிறகு 1971ம் ஆண்டுத் தான் வெளியானது, இங்கிலாந்தின் சட்டமும் இலக்கிய வாசகர்களும் ஒரினச்சேர்க்கையை ஏற்றுக் கொள்ளமறுத்ததே இதற்கான காரணம்.
பிரெஞ்சு நாவலாசிரியரான மார்க்ரெட் யூரிசனார் எழுதிய Memoirs of Hadrian நாவல் ரோமப்பேரரசன் Hadrian ஒரு பாலுறவில் நாட்டம் கொண்டு Antinous என்ற கிரேக்க இளைஞன் மீது காதலான கதையை விவரிக்கிறது, யூரிசனார் இதை மிகத் துல்லியமாக, தீவிரமாக எழுதியிருக்கிறார்
ழான் காக்தூ எழுதிய The White Paper 1928ல் வெளியாகியுள்ளது, அன்றைய பிரெஞ்சு சூழலில் பாலுறவுச் சுதந்திரம் பற்றிப் பேசுவது பண்பாட்டினை அவமதிக்கும் செயலாகக் கருதப்பட்டது, ஆகவே இந்த நூலை தான் எழுதவில்லை எனக் காக்தூ மறுத்தபோதும் பின்னாளில் இது அவரது படைப்பு தான் என உறுதிப்படுத்தபட்டது.
நூலிற்கான ஒவியங்களை வரைந்ததுடன் அதற்கு முன்னுரை எழுதியதை காக்தூ ஒத்துக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய தற்பால்சேர்க்கை வேட்கை தனது அம்மாவிற்கு மனக்கஷ்டத்தைத் தரும் என்ற காரணத்தால் காக்தூ அதை மறைத்துவிட்டார் என்கிறார்கள்.
79 பக்கங்களே உள்ள குறுநாவலிது, புனைவு என்பதை விடவும் ஒரு பாலுறவு வேட்கை எப்படி உருவாகிறது என்பதன் வாழ்வியல் அனுபவங்களின் தொகுப்பு என்றே கூற வேண்டும், சமூகம் ஏற்றுக் கொள்ள மறுத்தபோதும் ஒருபாலுறவு வேட்கை என்பது இயல்பானதே எனக் காக்தூ குறிப்பிடுவது கவனிக்கதக்கது.
வாழ்வின் சில தருணங்களில் நீர்குமிழிகளைப் போலத் தோன்றி மறையும் பாலியல் தூண்டல்கள் நம்மை உலுக்கிவிடக்கூடியவை, குறிப்பாகப் உடலுறவின் முதல் அறிமுகம், நிர்வாணமாக உடலை கண்ட நாள், பாலியல் புத்தகத்தை ரகசியமாக வாசித்த அனுபவம் என முதல்அனுபவங்களின் தொகுப்பு அனைவரின் மனதிற்குள்ளும் ரகசியமாகப் புதையுண்டிருக்கிறது.
பதின்வயதில் உலகை எதிர்கொள்ளும் ஒருவன் குழப்பமும் கிறுக்குதனமும் வேட்கையும் கொண்டவனாகவேயிருக்கிறான், ஆணோ, பெண்ணோ எவராகயிருப்பினும் உடல் ஒரு புதிராக மாறிவிடுகிறது, கண்முன்னே விரிந்து கிடக்கும் உலகை விடவும் கற்பனையே பிடித்தமானதாகிறது, அந்த வயதில் ஒருவனை எது தூண்டும், எந்தக் காட்சி வெறிக் கொள்ள வைக்கும் என யாருக்கும் தெரியாது.
எனது பதின்வயதுகளில் தோழனாக இருந்த ஒரு பையன் அடிக்கடி சுடுகாட்டிற்குப் போய்விடுவான், கல்லறையின் மீது ஏறி படுத்துக் கொள்வது அவனுக்குப் பிடித்தமானது, சிதறிக்கிடக்கும் மனித எலும்புகளைக் கையில் எடுத்து அது ஆணா, பெண்ணா என யோசித்துக் கொண்டிருப்பான், அதிலும் வெயிலேறிய கல்லறையில் உட்கார்ந்திருப்பது அவனுக்குப் பிடித்தமானது, அதில் என்ன வேட்கை, ஏன் அப்படியிருந்தான் என அந்த வயதில் புரியவில்லை, ஆனால் மனக்குரங்கு அப்படிப் பட்டது தான். அது சூறாவளியின் வேகம் போலச் சுழலக்கூடியது. விசித்திரமானது.
ழான் காக்தூ மூன்று சம்பவங்கள் தன் மாணவப்பருவத்தில் நடந்த முக்கியமான பாலியல் தூண்டல்கள் என்கிறார், ஒன்று முதன்முதலாகப் பண்ணையில் வேலை செய்யும் குதிரைக்கார இளைஞன் நிர்வாணமாகக் குளிக்கின்ற காட்சி. அதைக் கண்ட போது தனது காதுகள் சூடானதாகவும், தன் உடலில் ஏற்படுத்திய கிளர்ச்சியையும் குறிப்பிடுகிறார். இரண்டாவது தங்கள் பண்ணையினுள் கூடாரம் அடித்துத் தங்கிய ஜிப்சி பெண்களில் இருவர் நிர்வாணமாக மரம் ஏறிய காட்சி. அதில் அவர்களின் உடல் நளினம் தன்னை உலுக்கியது என்கிறார், மூன்றாவது ஒரு பெண்ணின் மார்பை சித்திரமாக வரைந்து குஸ்தாவ் என்ற நண்பனிடம் காட்டியதற்கு அவனது எதிர்வினை. அதன்வழியே அவன் மீது உருவான ஈர்ப்பு.
இப்படி முதல் அனுபகவங்களில் துவங்கி தனது உறைவிடப் பள்ளியின் அனுபவங்களையும், அதில் ஏற்பட்ட பாலுறவு தூண்டுதல்களையும் காக்தூ ஒளிவுமறைவின்றி விவரிக்கிறார். சுயஇன்பம் காணுவதைப் பற்றி மாணவர்கள் எப்படிப் பேசிக் கொள்வார்கள், அது குறித்த குற்றவுணர்ச்சி எப்படி உருவாகிறது என்பதை விவரிக்கிறார்.
ரோஸ் என்ற வேசையுடன் பழகத்துவங்கிய நாட்களில் அவளது பிம்ப் ஆன ஆல்பிரெட் மீது நாட்டம் உருவாகிறது, ஆல்பிரெட்டை He is absolutely male என வியக்கிறான். அவன் மீது தீவிர நாட்டம் கொள்கிறான், அந்த ஈர்ப்பு அவனை எப்படி மாற்றுகிறது என்பதும் விவரிக்கபடுகிறது.
ஒரு கலக்காரனாகத் தன்னை எப்போதுமே முன்னிறுத்திக் கொண்ட காக்தூ சமூகம் மறுத்த பாலுறவு சுதந்திரத்தின் நியாயங்களைப் பகிரங்கமாகப் பேசுகிறார். அதுவே இன்றும் இதை வாசிப்பதற்கான காரணமாக உள்ளது
இந்த நூலுக்குக் காக்தூ வரைந்துள்ள ஒவியங்கள் அபாரமானவை, பிகாசோவின் கோடுகளுக்கு நிகரானவை.
கவிஞர், நாடக ஆசிரியர், அரங்க வடிவமைப்பாளர், நாவலாசிரியர், , திரைப்பட இயக்குனர் எனப் பன்முக ஆளுமையாக இருந்தவர் Jean Cocteau. இவரது ஒன்பது வயதில் அப்பா தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார், அம்மாவால் வளர்க்கபட்ட காக்தூ பதினைந்து வயதில் வீட்டை விட்டு வெளியேறினார்.
பத்தொன்பதாவது வயதில் கவிஞராகிய இவர் இருபத்தைந்து வயதிற்குள் புகழ்பெற்ற கலைஞராகிவிட்டார். மிதமிஞ்சிய குடி, வேசைகளுடன் பழக்கம், தீவிரமான கலைமுயற்சிகள் என வாழ்ந்த இவர் Jean Marais என்ற நடிகருடன் ஒருபாலுறவு நட்பு கொண்டிருந்தார். Blood of a Poet , Beauty and the Beast இரண்டும் இவரது முக்கியத் திரைப்படங்களாகும்.
காக்தூவை வாசிக்கும் போது ஆஸ்கார் வொயில்ட் நினைவிற்கு வந்து போனார், அவர் ஒரினச்சேர்க்கையில் ஈடுபட்டதற்காகச் சிறைக்குச் சென்றவர், ஒரு பாலுறவு குறித்துக் கவிதைகள் எழுதியவர்
அவரது The Ballad of Reading Gaol கவிதையின் வரிகள் மனதில் வந்து போகின்றன
Some kill their love when they are young,
And some when they are old
Some strangle with the hands of Lust,
Some with the hands of Gold:
The kindest use a knife, because
The dead so soon grow cold.
Some love too little, some too long,
Some sell, and others buy;
Some do the deed with many tears,
And some without a sigh:
For each man kills the thing he loves,
Yet each man does not die.
••••