பீகாரைச் சேர்ந்த எழுத்தாளர் ராம்ப்ருக்ஷ் பேனிபுரி (Rambriksh Benipuri )இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர். ஹாஜாரீபாக் மத்தியச் சிறையிலிருந்த நாட்களில் தன்னுடைய ஊரைப்பற்றியும் தனது நினைவில் பதிந்துபோன அபூர்வமான மனிதர்களைப் பற்றியும் தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் தொகுப்பு தான் மண் உருவங்கள். வி.எஸ். ரங்கநாதன் மொழியாக்கத்தில் கலைமகள் வெளியீடாக 1960ல் வெளியாகியுள்ளது

நூலின் முன்னுரையில் கிராமத்தின் அரசமரம் அல்லது ஆலமரத்தடியில் உள்ள மண்பொம்மைகளைப் பற்றி எழுதியிருக்கிறார்.
இவை அபூர்வமான கலைப்பொருட்கள் அல்ல. ஆனால் நிறைவேறாத ஆசையின் வடிவங்கள். பிரார்த்தனையின் சாட்சியங்கள். இந்த மண் உருவங்கள் கிராம மக்களைப் போலவே எளிமையானவை. அசலானவை. இவை காலமாற்றத்தின் மௌனசாட்சியங்களாக இருக்கின்றன. அப்படித் தன் வாழ்நாளில் கண்ட அபூர்வமான மனிதர்களில் சிலரைப் பற்றியே குறிப்புகளே இக்கட்டுரைகள் என்கிறார் பேனிபுரி
எழுத்தாளர் கி.ராஜநாராயணின் கதைகளில் வரும் மனிதர்களை நினைவுபடுத்தும் இந்த புத்தகம் 12 கதாபாத்திரங்களை அறிமுகம் செய்கிறது. இவர்கள் சரித்திர புருஷர்களோ, சாதனையாளர்களோ கிடையாது. எளிய கிராமவாசிகள். எந்த அங்கீகாரமும் பாராட்டும் பெறாதவர்கள்.

கலையின் வேலை வாழ்க்கையைப் பூசி மறைப்பதில்லை. அதை நிஜமாக வெளிப்படுத்துவதே. தானும் அப்படி வண்ணப்பூச்சுகள் எதுவுமின்றி இந்த மனிதர்களை அசலாகப் பதிவு செய்திருக்கிறேன் என்கிறார் பேனிபுரி
1940-50களில் இந்தியா முழுவதுமே இப்படி நடைச்சித்திரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இது போன்று உண்மை மனிதர்களைச் சித்தரிக்கக் கூடிய மலையாள, வங்க, தெலுங்கு மொழியாக்கப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ஒருவகையில் இவர்கள் அறியப்படாத மனிதர்கள். சமூகம் அங்கீகரிக்க மறுத்த இவர்களைப் படைப்பாளிகள் அங்கீகரித்து உரிய முக்கியத்துவத்தை உருவாக்கியிருக்கிறார்கள்
மண் உருவங்கள் தொகுப்பிலும் இத்தகைய மனிதர்களே இடம்பெற்றிருக்கிறார்கள்.
பொதுப்பார்வையில் இவர்கள் உதவாக்கரைகள். ஏமாளிகள் அல்லது முக்கியமில்லாதவர்கள். ஆனால் எழுத்தாளனுக்கு இவர்களே கதாநாயகர்கள். கதாநாயகிகள். இவர்களில் சிலரோடு பேனிபுரி நேரடி உறவு கொண்டிருக்கிறார். சிலரது வாழ்க்கையைத் தள்ளி நின்று அறிந்திருக்கிறார்.
அந்த மனிதர்கள் எவ்வாறு தனது வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியைச் சமமாகப் பாவித்தார்கள் என்பதையும் அவர்களின் கனவிற்கும் நிஜத்திற்குமான இடைவெளியைப் பற்றியுமே ராம்ப்ருக்ஷ் எழுதியிருக்கிறர் .
1899 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி பீகாரில் உள்ள பெனிபூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் ராம்ப்ருக்ஷ் , கிராமப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தபிறகு மேல்படிப்புக்காக முசாபர்பூருக்கு சென்றார். அங்கே தேச அரசியலில் ஈடுபாடு கொண்டு தனது படிப்பைப் பாதியிலே கைவிட்டு சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டார்.
1920 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ரவுலட் சட்டத்திற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். ஹாஜாரீபாக் சிறையிலிருந்தபடியே அவர் கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வந்தார். இந்தி இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகக் கொண்டாடப்படும் ராம்ப்ருக்ஷ் பேனிபுரி சாகித்திய அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
மண் உருவங்களில் மறக்கமுடியாத கதாபாத்திரம் ரஜியா.
வளையல் விற்கும் அம்மாவுடன் விளையாட்டுச் சிறுமியாக அறிமுகமாகிறாள். நாடோடி இனத்தைச் சேர்ந்தவள். சுடரென ஒளிரும் முகம். பளிச்சிட்ட சிரிப்பு. அழகான காதணி. மணிக்கட்டுவரை ரவிக்கை அணிந்திருக்கிறாள்.
பள்ளிவிட்டு வீடு திரும்பும் சிறுவன் ராம்ப்ருக்ஷ் அந்தச் சிறுமியின் அழகில் மயங்கி அவளுடன் பேச முற்படுகிறான். ஆனால் அவள் எந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதில்லை. தலையை மட்டுமே அசைக்கிறாள்.
ராம்ப்ருக்ஷ் தனது சிற்றன்னைக்கு ரஜியாவின் அம்மா. வளையல் போட்டுவிடுவதை வேடிக்கை பார்க்கிறான். ரஜியாவின் வீடு அதே ஊரில் தானிருக்கிறது. எளிய இஸ்லாமியக் குடும்பம். இந்து இஸ்லாம் எனப் பேதமின்றி ஊர்மக்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
தன் மகளைச் சின்ன எஜமான் ராம்ப்ருக்ஷ் ஆசையோடு பார்ப்பதைக் கண்ட ரஜியாவின் அம்மா “மாப்பிள்ளை என் மகளைக் கட்டிக் கொள்கிறீர்களா“ எனக் கேலியாகக் கேட்கிறாள். “உன் மகள் ஒத்துக் கொள்ள வேண்டுமே“ எனச் சிற்றன்னை கேட்டதும் ரஜியா வெட்கப்படுகிறாள்.

அந்த நிமிஷம் ராம்ப்ருக்ஷ் மனதில் அவள் தனக்கானவள் என்ற எண்ணம் பிறக்கிறது. அன்றிலிருந்து ரஜியாவை எங்கே கண்டாலும் அவளுடன் பேசவும் பழகவும் முயலுகிறார். ஆனால் ரஜியா விலகி விலகிப் போகிறாள்.
ராம்ப்ருக்ஷ் போல அவள் பள்ளிக்குச் சென்று படிக்கவில்லை. அம்மாவிற்கு உதவியாக வளையல் விற்கச் செல்கிறாள். அவளது அழகான கைகளால் வளையல் போட்டுக் கொள்வதை ஊர்பெண்கள் விரும்புகிறார்கள். தாயிடமிருந்து அவள் தொழிலைக் கற்றுக் கொள்கிறாள். பள்ளிப்படிப்பு. உயர்நிலை படிப்பு என ராம்ப்ருக்ஷ் வளருகிறார். அதே நேரம் தன் கண்முன்னே ரஜியா குமரிப்பெண்ணாக வளர்ந்து நிற்பதைக் காணுகிறார்.
அவள் வேறு மதத்தைச் சேர்ந்தவள். எளிய குடும்பத்தில் பிறந்தவள். நிச்சயம் தனது காதலை ஏற்கமாட்டாள் என்பதை அவர் உணர்ந்து கொள்கிறார். அவளிடம் தனது காதலை வெளிப்படுத்தவேயில்லை
காலம் மாறுகிறது. வேலை தேடி பாட்னா செல்கிறார். ரஜியா நினைவில் ஒளிரும் நட்சத்திரமாக மட்டுமே இருக்கிறாள். ஒரு நாள் சொந்த ஊர் திரும்பும் போது அவளுக்குத் திருமணமாகி கணவனுடன் வருவதைக் காணுகிறார். அவள் தன்னுடைய கணவரை அறிமுகம் செய்து வைக்கிறாள். தனது தாயைப் போலவே வளையல் விற்கும் அவளுக்கு உதவியாகக் கணவன் கூடவே செல்கிறான்.
அந்தச் சந்திப்பின் போதும் அவளது கண்களில் பரிகாசம் வெளிப்படுகிறது. “உங்களுக்கு உரியவளை இந்த மனுசன் பறித்துக் கொண்டுவிட்டான்“ என்று கேலி பேசுகிறாள்.
பின்பு அவருக்கும் திருமணமாகிறது. அவரது புதுமனைவிக்கு வளையல் போட வருகிறாள் ரஜியா. அவளிடம் “உங்கள் கணவனை நான் கொண்டுபோய்விடுவேன்“ என்று பரிகாசம் செய்கிறாள். ரஜியாவின் கண்களில் மாறாத அன்பு வெளிப்படுவதை உணருகிறார்
சிறுவயதில் நடந்த கேலிப்பேச்சு தான் என்றாலும் சொல்லின் வழியே உருவான அந்தப் பந்தம் உலகம் அறியாதது. அவரைப் போலவே அந்தச் சொல்லை ரஜியாவும் நிஜமாக நம்பியிருக்கவும் கூடும். ஆனால் வாழ்க்கை அவர்களை வேறு திசை நோக்கித் திருப்பிவிட்டது. அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் பள்ளத்தைக் கண்டதும் தானே ஓடும் தண்ணீரைப் போல நேரில் கண்டதும் மனதைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
நகரவாழ்க்கைக்கு மாறிப்போன பிறகு ரஜியாவை மறந்துவிடுகிறார். பத்திரிக்கையாளர், எழுத்தாளர் என அவரது உலகம் மாறிவிடுகிறது. ஒரு நாள் பஜாரில் அவளைத் தற்செயலாகச் சந்திக்கிறார்.
இப்போது அவள் நடுத்தரவயதுப் பெண்மணி. ஆளும் மாறியிருக்கிறாள். அவளது கணவன் உடனிருக்கிறான். கிராமத்துப் பெண்கள் இப்போதெல்லாம் புதுவிதமான அலங்காரம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். வளையல் போடுவதில் அதிக விருப்பமில்லை. ஆகவே காதணிகள் பவுடர் மற்றும் அலங்காரப் பொருட்கள் வாங்க நகரிற்கு வந்துள்ளதாகச் சொல்கிறாள்.
அன்றும் ராம்ப்ருக்ஷ் மனைவிக்கு அவள் புதிதாக வளையல் கொடுத்து விடுகிறாள். அத்துடன் இதை நீங்களே உங்கள் மனைவிக்கு அணிவித்து விட வேண்டும் என்றும் சொல்கிறாள். அன்றும் அவளது கண்களில் பால்ய நினைவுகளின் மேகம் கடந்து போவதைக் காணுகிறார்
நீண்ட காலத்தின் பின்பு அரசியலில் பெரிய மனிதராகித் தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தனது சொந்த ஊருக்குப் போகிறார். அங்கே தற்செயலாக ஒரு சிறுமியைக் காணுகிறார். அவள் அப்படியே ரஜியாவின் சாடை. அதே ஒளிரும் முகம். அதே சிரிப்பு. அதே நீலக்கண்கள். அவள் உரிமையுடன் தன் வீட்டிற்கு வரும்படி அழைக்கிறாள். ரஜியா தான் மீண்டும் சிறுமியாகிவிட்டாளோ என்று நினைத்து வியந்து அவளுடன் நடந்து போகிறார்
அவள் ரஜியாவின் பேத்தி என்பதும் ரஜியாவின் கணவன் இறந்துவிட்டதும் பையன்கள் கல்கத்தாவில் வேலையில் இருப்பதையும் அறிந்து கொள்கிறார். நோயாளியாக உள்ள ரஜியாவின் வீட்டிற்குப் போகிறார்.
சுத்தமாக மெழுகப்பட்ட தரை. நிறைவான வாழ்க்கையின் அடையாளமாக மூன்று பையன். அவர்களின் மனைவி, பிள்ளைகள். ரஜியா படுக்கையில் நோயாளியாக இருக்கிறாள். அவர் கூடத்தில் அமர்ந்து அவளது வருகைக்காகக் காத்திருக்கிறார்.
அவரைக் காணுவதற்கு முன்பு தனது உடைகளை மாற்றிவிடும்படி மருமகளிடம் சொல்கிறாள் ரஜியா. வேறு உடையினை உடுத்திவிடுகிறார்கள். பின்பு இரண்டு பெண்கள் கைதாங்கலாக அவளைப் பிடித்து அழைத்துக் கொண்டு வருகிறார்கள். வலுவிழந்து மெலிந்த உருவம். அவளது தலைமயிர் முற்றிலும் வெண்மையாகிவிட்டது.. அருகில் வந்து “சலாம் எஜமான்“ என்கிறாள். அப்போது அவளது குழிவிழுந்த கண்கள் விரிந்து ஒளிர்வதைக் காணுகிறார். அந்த முகத்தில் பரவசம். அந்தக் கண்களில் பால்யத்தில் கண்ட அதே அன்பு. அதே கேலி.
காலம் அவளது கூந்தலின் கருமையைத் துடைத்து சுத்தமாக்கி அவளை வெண்ணிற அழகியாக மாற்றியிருப்பதாக அவர் ஏறிட்டுப் பார்ப்பதுடன் கட்டுரை நிறைவு பெறுகிறது
••
இது தான் அவர்களின் கடைசிச் சந்திப்பாக இருக்கக்கூடும்.
அந்த நிமிஷத்தில் இருவரும் முதியவர்கள். ஆனால் மனதில் பால்யத்தின் அலை பேரோசையுடன் எழுந்து அடித்துச் செல்கிறது. தேவதாஸ் கதையில் தனது வாழ்வின் கடைசியில் இப்படித் தான் பார்வதி வீட்டின் முன்பாக வந்து சேருகிறான். அவர்கள் காதலித்துத் தோற்றவர்கள். ஆனால் ரஜியாவோ காதலைச் சொல்லவேயில்லை.
தன்னை விரும்பும் மனிதன் முன்பு ஒரு பெண் எப்போதும் அழகியாகவே இருக்கிறாள்.
ஒரு சிறுகதையைப் போலக் கச்சிதமாக நிறைவுபெறுகிறது கதை. ஆனால் படித்து முடித்தபிறகு மனதில் அந்தக் காட்சி முடிவடைவதில்லை. என்ன பேசியிருப்பார்கள். அவர்களுக்குள் இனி சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது. இனி அவர்கள் இரண்டு பறவைகள் ஒரே கிளையில் அமர்ந்து ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருப்பதைப் போலத் தான் உணர்வார்களா.
உலகம் அவர்களிடமிருந்து நழுவிச் சென்றுவிட்ட அந்தக் கணத்தை விட்டு மனம் நகர மறுக்கிறது.
ஒரு கட்டுரைக்குள் நாவலின் உலகம் முழுமையாக விரிந்து எழுவது போலவே உணர்ந்தேன்.
அந்தக் கிராமத்தில் அவர் இல்லாத போது அவரது பெருமைகளை, வெற்றியைத் தனது உறவினர் மற்றும் பேத்திகளிடம் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள் ரஜியா. அவள் பார்த்த உயர்ந்த மனிதரில்லையா.
இப்போது அவள் வேறு ஒருவரின் மனைவி. வேறு ஒருவரின் தாய். பேரன் பேத்திகளுடன் வாழுகிறவள் என்றாலும் அவள் ராம்ப்ருக்ஷ்க்குரியவள். அதை அவளும் உணர்ந்தேயிருக்கிறாள்.
தண்ணீரில் விழும் நிலவைத் தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் தண்ணீருக்கும் நிலவிற்குமான நேசம் என்பதும் விநோதமானது.
காலம் சேர்ந்து வைக்காமல் போன இது போன்ற உறவுகளை இலக்கியம் தான் இணைத்து வைக்கிறது. புரிந்து கொள்ளச் செய்கிறது.
கைத்தாங்கலாக ரஜியாவை இரண்டு பெண்கள் அழைத்து வருவதும் அவள் சலாம் எஜமான் என்று சொல்வதும் கண்முன்னே காட்சியாக விரிகிறது. மறக்கமுடியாத நிகழ்வு.
இந்த உறவுக்கு என்ன பெயர். காதலின் இந்த அபூர்வ முடிச்சு யாருக்கு எப்போது ஏற்பட்டாலும் ஏன் கண்ணீரை வரவழைக்கிறது.
இந்தத் தொகுப்பில் உள்ள மங்கர், சரயு அண்ணா, பைஜு மாமா மூவரும் தனித்துவமிக்கக் கதாபாத்திரங்கள். அதுவும் பைஜு மாமா ஒரு பசுவை வாங்க முப்பது ரூபாய் தேவை என்பதற்காகத் திருடி சிறைக்குப் போகிறார். ஒவ்வொரு முறை சிறையை விட்டு வந்தவுடன் பணம் திருட முயல்கிறார். ஆனால் கடைசி வரை அவரால் பசுவை வாங்க முடியவேயில்லை. இதற்குள் முப்பது வருஷம் சிறையில் கழிந்துவிடுகிறது.
நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களுக்குப் ஓய்வூதியம் உண்டா என்று ஒரு இடத்தில் அவர் கேட்கிறார். அந்தச் சிறையில் உள்ள மரங்கள் யாவும் அவர் நட்டுவைத்து வளர்த்தவை. இன்று அவை வளர்ந்து பெரியதாகி நிற்கின்றன. விடுதலையாகி வெளியே சென்றாலும் அந்த மரங்கள் தன்னைக் கைநீட்டி அழைப்பதாக அவர் உணருகிறார். தனக்குச் சிறிய குற்றத்தைக் கூடச் சரியாகச் செய்யத் தெரியவில்லை. குடும்பக் கஷ்டத்தை நிறைவேற்ற முடியாமல் இப்படிச் சிறைவாசியாகிவிட்டேன் என்கிறார் பைஜு மாமா. உலகம் அவரது வேதனையை அறியவில்லை. ஆனால் ராம்ப்ருக்ஷ் புரிந்து கொள்கிறார். ஆற்றுப்படுத்துகிறார்.
ரஜியாவை படித்துக் கொண்டிருந்த போது மனதில் வைக்கம் முகமது பஷீரின் பால்யகாலச் சகி நாவல் வந்து கொண்டேயிருந்தது. மஜீத்,சுஹரா இருவரும் மறக்கமுடியாதவர்கள். வாழ்க்கையில் ஒன்றுசேராவிட்டாலும் அவர்களின் அன்பு இணையற்றது
சுஹராவும் ரஜியாவும் வேறுவேறில்லை.
சிலரது நினைவில் நாம் எப்போதும் இளமையாகவே இருக்கிறோம் என்பார்கள். அது தான் ரஜியா விஷயத்திலும் நடந்திருக்கிறது.
எழுத்தாளனுக்கு விரல்களில் கண்கள் இருக்க வேண்டும் என்கிறார் ராம்ப்ருக்ஷ்.
இந்த எழுத்து அதன் சாட்சியமாகவே இருக்கிறது.