வேட்டைக்காரனின் மனைவி

ஆன்டன் செகாவின் வேட்டைக்காரன் (THE HUNTSMAN) சிறுகதை 1885ல் வெளியானது. உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகப் பலரும் தேர்வு செய்துள்ள கதையிது. அளவில் சிறிய கதையே.

ஆனால் அதில் தான் எத்தனை மடிப்புகள். நுணுக்கங்கள். ஆன்டன் செகாவை ஏன் சிறுகதையின் மாஸ்டர் என்று கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இந்தக் கதை ஒரு உதாரணம். கதை யெகோர் என்ற வேட்டைக்காரனைப் பற்றியது. அவன் ஒருநாள் நாட்டுப்புற சாலையில் நடந்து செல்லும்போது, தற்செயலாகத் தனது பிரிந்த மனைவி பெலகேயாவைச் சந்திக்கிறான்.

வேட்டைக்காரனைப் பற்றிய இக்கதையின் ஆதாரமாக இருப்பது பகலின் மௌனம்.

உறைந்து போன நண்பகல். வானத்தில் ஒரு மேகம் கூட இல்லை. . . . வெயிலில் புல் அமைதியற்ற, நம்பிக்கையற்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது எனக் கதை துவங்குகிறது.

யெகோர் நாற்பது வயதானவன், உயரமானவன்,, குறுகலான தோள்கள் கொண்ட சிவப்புச் சட்டை அணிந்த மனிதன். பெரிய பூட்ஸ் அணிந்திருக்கிறான். இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்திருக்கிறான். வெள்ளை தொப்பித் தலையில் காணப்படுகிறது. என அவனது தோற்றம் துல்லியமாக விவரிக்கப்படுகிறது.

வேட்டைக்காரர்கள் மௌனமானவர்கள். நிதானமாகக் காத்திருக்கக்கூடியவர்கள். அதிலும் யெகோர் தனக்கு வேட்டையைத் தவிர வாழ்க்கையில்லை என்று நினைப்பவன். அதை ஒரு கலையாகக் கருதுகிறான்.

அவன் நடந்து வரும் சாலையில் சப்தமேயில்லை. விலங்குகளின் ஓசை கூட இல்லாத பெரும் நிசப்தம். சட்டென அவனது பெயரைச் சொல்லி யாரோ அழைப்பது போலக் கேட்கிறது. திரும்பிப்; பார்க்கிறான். அவனது மனைவி பெலகேயா நிற்கிறாள். அவள் வானிலிருந்து பறந்து வந்துவிட்டவளைப் போலத் தோன்றுகிறாள்.அந்தச் சந்திப்பு ஒரு தேவதையும் மனிதனும் சந்தித்துக் கொள்வது போன்றது தான் என்பதற்காக இதை எழுதினாரா என்று தெரியவில்லை.

அவர்களுக்குத் திருமணமாகி பன்னிரண்டு வருடங்கள் ஆகிறது, ஆனால் யெகோர் மனைவியோடு வாழவில்லை. அந்தத் திருமணமே குடிபோதையிலிருந்த அவனுக்கு எஜமான் செய்து வைத்த நாடகம்.

பெலகேயா ஏன் தன்னைத் திருமணம் செய்து கொண்டான் என்று அவனுக்குப் புரியவில்லை. அது அவளது அதிர்ஷ்டம் என நினைக்கிறான். அவளுடன் இணைந்து வாழ அவனுக்கு விருப்பமில்லாமல் பிரிந்துவிடுகிறான். ஆண்டுகள் கடந்த போதும் பெலகேயாவிற்கு அவன் மீதான அன்பு மாறவேயில்லை. அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாள். எப்போதாவது சும்மா தனது வீட்டிற்கு வந்து போய் இருக்கக் கூடாதா என்று ஆதங்கப்படுகிறாள்.

அவர்களின் இந்தத் திடீர் சந்திப்பு வசீகரமாக கதையில் விரிகிறது. அவளைத் தனது பயண வழியில் சந்திப்போம் என யெகோர் நினைக்கவேயில்லை. ஆகவே தற்செயலாகப் பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவளுடன் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

சில வருஷங்களுக்கு முன்பு ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி அவளது குடிசைக்குத் தண்ணீர் குடிக்க யெகோர் வந்திருந்தான். அதுவும் போதையில், அப்போது அவளைத் திட்டி அடித்துவிட்டுச் சென்றுவிட்டான். அதன்பிறகு அவனைக் காணவில்லை அவள் கண்கள் சோர்வடைந்து விடுமளவு அவனைத் தேடிச் சலித்துவிட்டாள். காண முடியவில்லை. பிரிவு நீள்கிறது. ஆனால் அவளது ஆசை பலித்துவிட்டது போல அவனைச் சாலையில் தற்செயலாக காணுகிறாள்.

அவள் ஏன் அங்கே வந்தாள் என்று சந்தேகத்துடன் யெகோர் கேட்கிறான். ஒரு வேளை அவள் தான் வருவதை அறிந்திருப்பாளோ என்ற சந்தேகம் அவனுக்குள்ளிருக்கிறது. காட்டுவேலைக்கு வரும் பெண்களுடன் தானும் வந்ததாகச் சொல்கிறாள்.. அவள் கடினமான உழைப்பாளி என்று பாராட்டுகிறான் யெகோர். அவனைப் பார்த்ததே போதும் எனச் சந்தோஷம் அடைகிறாள்.

தேவதாரு மரங்களுக்கு இடையிலுள்ள நிழலில் கொஞ்ச நேரம் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு போகலாமே என்கிறாள் பெலகேயா. அந்த யோசனையை ஏற்றுக் கொள்கிறான். அத்தோடு நீயும் உட்கார் என்று அவளையும் அருகில் அமரச் சொல்கிறான். அந்தப் பதிலுக்குள் அவள் மீதான அன்பு சிறுதுளியாக வெளிப்படுகிறது

பெலகேயா அதைக் கேட்டுச் சிரிக்கிறாள். மகிழ்ச்சியில் அவளது முகம் நிறம் மாறுகிறது. அவர்களுக்குள் பேச எதுவுமில்லை. இரண்டு நிமிஷங்கள் மௌனத்தில் கழிகிறது.உண்மையில் அவள் தான் அந்த நிழல். தருவின் நிழல் மௌனமாகத் தனது குளிர்ச்சியைப் பகிர்வது போல அவள் அருகிலிருப்பதன் வழியே அன்பை வெளிப்படுத்துகிறாள்.

அவன் தன்னால் ஒரு சிறந்த கணவனாக இருக்க முடியாது என்று சொல்கிறான். அத்தோடு அந்தத் திருமணமே ஒரு ஏமாற்று நாடகம் என்று குற்றம் சாட்டுகிறான்.

பெலகேயா அவனைக் குற்றம் சாட்டுவதில்லை. அவனுக்காகத் தான் காத்திருப்பதை உணர்த்துகிறாள். அவள் இப்போதும் அவனது மனைவி தான் என்பதை நினைவுபடுத்துகிறாள்.

அவனோ தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை. தான் சாதாரண வேட்டைக்காரனில்லை என்று பெருமை பேசுகிறான். தன் மீது எஜமானரே பொறாமை கொள்கிறான் என்கிறான்.

பெலகேயாவிற்கு அவன் வேட்டைக்காரனோ, குதிரை வண்டிக்காரனோ யார் என்பது முக்கியமில்லை. அவன் தனது கணவன். தன்னைப் புரிந்து கொள்ளாதவன். நிர்கதியில் தன்னை விட்டுச் சென்றவன். ஆனாலும் நேசத்துக்குரியவன்.

அவனது தன்னிலை விளக்கத்தைக் கேட்டு பெலகேயா அழுகிறாள். உனக்கு நான் சொல்வது புரிகிறதா என்று கேட்கிறான் யெகோர். புரிவதாகத் தலையாட்டுகிறாள். அழும் போது நான் சொல்வது புரியாது என்று யெகோர் கோவித்துக் கொள்கிறான்

அழும் போது மற்றவர் சொல்வது புரியாது என்ற வாசகம் உண்மையே. ஒருவர் உணர்ச்சிப்பூர்வமாக மாறிய பின்பு எதற்கு வேண்டும் நியாய நியதிகள்

அவன் முன்னால் அழுவதன் வழியே தனது அன்பை வெளிக்காட்டுகிறாள் ப அதை யெகோர் புரிந்து கொள்ளவில்லை. வேட்டை அவனை உணர்ச்சியற்ற மனிதனாக மாற்றியிருக்கிறது. அவனது ஆர்வமற்ற பதில்களின் மூலம், அவளிடமிருந்து விலகிக் கொள்ள முயல்வது வெளிப்படையாகத் தெரிகிறது

அவர்கள் பேச்சற்ற மௌனத்தில் உறைகிறார்கள். . நீண்ட மௌனம் அப்போது. யெகோர் ஆகாசத்தில் மூன்று காட்டு வாத்துகள் பறந்து போவதைக் காணுகிறான் அவை நீண்ட தூரம் பறந்து மூன்று புள்ளிகளாக மாறுகின்றன. காட்டிற்கு அப்பால் வெகு தொலைவில் மூழ்கிப்போன பிறகே கண்களைத் திரும்புகிறான்.

அந்தக் காட்சி கதைக்குத் தனியழகை உருவாக்குகிறது. தேர்ந்த கலைஞனால் தான் இது போன்ற ஒன்றை எழுத இயலும். இது வெறும் புறச்சித்தரிப்பு மட்டுமில்லை. மனநிலையின் வெளிப்பாடு.

அந்தக் காட்டுவாத்துகள் அவனுக்குள் எதையோ நினைவூட்டுகின்றன. அதன்பிறகே அவன் பெலகேயாவிடம் அவள் எப்படி வாழுகிறாள் என்று கேட்கிறான்.

அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் யாரோ இரண்டு அறியாதவர்களுக்குள் நடக்கும் உரையாடல் போலவே இருக்கிறது. அதுவும் பாதியில் அறுபட்டுப் போகிறது. மீண்டும் மௌனமாகிறார்கள்.

அறுவடை செய்யப்பட்ட நிலத்திலிருந்து ஒரு மென்மையான பாடல் மிதந்து வருகிறது. அவர்களுக்குள் நடைபெற்றிருக்க வேண்டிய நெருக்கமான உரையாடலுக்குப் பதிலாக வெளியுலகின் இனிமைகள் அவர்களை ஆற்றுப்படுத்துகின்றன.

எப்போது வீட்டிற்கு வருவீர்கள் எனக் கடைசியாக. ஒருமுறை கேட்கிறாள். அவனோ நிதானமாக வரவே மாட்டேன் என்று சொல்லிப் புறப்படுகிறான். சாலையில் செல்லும் அவனது அழகான தோற்றத்தை, உடைகளைத் தொப்பியை ரசித்துப் பார்த்தபடியே நிற்கிறாள்.

இதை வாசிக்கையில் எனது மனதில் காட்டுவாத்துகளை யெகோர் பார்த்த காட்சி நினைவில் வந்து போனது.

அவன் கம்பீரமாக தனது துப்பாக்கியோடு நாயுடன் நடந்து செல்கிறான். உயரமான, ஒல்லியான அவனது கவனமற்ற நடையை, அசையும் தோள்பட்டைகளை, கண் இமைக்காமல் பார்த்தபடியே இருக்கிறாள்.

அந்தப் பார்வை அவனைத் தொடுகிறது. தழுவிக் கொள்கிறது.. நேரில் அணைத்துக் கொள்ள முடியாத கணவனைப் பார்வையாலே அணைத்துக் கொள்கிறாள் பெலகேயா.

அதை உணர்ந்தவன் போலத் திரும்பிப் பார்க்கிறான் அவளிடம் ஏதாவது சொல்ல விரும்புவதைப் போலிருக்கிறது அவனது பார்வை. பெலகேயா அவனருகில் செல்கிறாள். கசங்கிய ரூபிள் நோட்டை அவளிடம் கொடுத்துவிட்டு வேகமாக நடந்து போகிறான்.

“குட்பை, யெகோர் விளாசிச்,” என்கிறாள் பெலகேயா.

நீண்டு செல்லும் சாலையில் செல்லும் அவனது உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டேயிருக்கிறாள். அப்படியும் மனது கேட்கவில்லை. பெருவிரலை ஊன்றி எக்கி நின்று தொலைவில் அவனது தொப்பித் தெரிகிறதா என்று பார்க்க நிற்பதுடன் கதை முடிகிறது.

பெருவிரலை ஊன்றி எக்கி நிற்பதை எழுதியதன் மூலம் அவளது தூய அன்பை முழுமையாக வாசகனுக்குக் கடத்துகிறார் செகாவ்.

எவ்வித உறவும் தேவையில்லை என்று நினைக்கும் யெகோர் ஏன் அவளுக்குப் பணம் கொடுக்கிறான். தன்னைக் கண்டுகொள்ளாத யெகோர் மீது ஏன் இவ்வளவு அன்பு காட்டுகிறாள் பெலகேயா. அவர்கள் திரும்பச் சந்திப்பார்களா எனத் தெரியாது.

வேட்டைக்காரனுக்குப் பரிசாக மான்குட்டி கிடைத்தது போன்றது தான் இந்த உறவா.

கதையில் வரும் மௌனம் சந்திப்பின் போது ஏற்பட்ட மௌனமில்லை. அது பிரிவால் உருவாகி வளர்ந்த மௌனம். அதை எளிதில் கலைக்க முடியாது. அமைதியான அசைவற்ற நிலை கதையின் கித்தான் போலிருக்கிறது. அதில் தான் வேட்டைக்காரனையும் அவனது மனைவியின் உருவத்தையும் செகாவ் வரைந்திருக்கிறார். நகை வேலை செய்கிறவர்கள் காதணியில் நுணுக்கமாக மலர்களை உருவாக்குவார்கள். அது போன்ற கலைநுணுக்கமே இக்கதையை இன்றும் கொண்டாடச் செய்கிறது.

0Shares
0