வைதீஸ்வரனின் கவிதைகள்

எஸ். வைதீஸ்வரன் நவீன தமிழ் கவிதையின் முக்கிய ஆளுமை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி வருபவர்.. சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையில் கவிதை எழுதத் தொடங்கியவர். இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது மொத்த கவிதைகளின் தொகுப்பான மனக்குருவி வாசித்துக் கொண்டிருந்தேன். நகரவாழ்வின் நெருக்கடியை, தடித்தனத்தை, அவலத்தை, ஆறாத் துயரங்களை, அரிதான சந்தோஷங்களைக் கவிதையில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

வைதீஸ்வரன் ஒரு ஒவியர். முறையாக ஒவியர் கற்றவர். ஒவியர் என்பதால் கவிதையும் காட்சிகளாகவே விரிகின்றன. வண்ணங்களுக்குப் பதிலாகச் சொற்களைக் கையாளுகிறார் அவ்வளவே. வைதீஸ்வரனின் சிறப்பு அவர் உருவாக்கும் படிமங்கள். உருவகங்கள். அபூர்வமான படிமங்களைக் கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“கொடியில் மலரும் பட்டுப் பூச்சி

கைப்பிடி நழுவிக்

காற்றில் பறக்கும் மலராச்சு! “

பாஷோவின் ஜென் கவிதையினைப் போலிருக்கின்றன இந்த வரிகள்.

••

உயிரின் வலி என்ற கவிதை நகரவாழ்வின் நெருக்கடியில் இறந்து கொண்டிருக்கும் மனிதனின் கடைசிமுணுமுணுப்பு கூடக் கேட்கப்படாமல் போகிறது. இதை வாசிக்கையில் புதுமைப்பித்தனின் மகாமசானம் சிறுகதை நினைவிற்கு வந்து போனது. உலகின் அர்த்தமற்ற ஓசைகளைக் காதுகொடுத்துக் கேட்க முடிகிற மனிதனால் இறந்து கொண்டிருப்பவனின் முனகலைக் கேட்க முடியவில்லை. வாழ்வின் ஒசையை விட இயந்திரங்களின் சப்தமும் வணிகச் சந்தையின் கூவலும் மேலோங்கிவிட்டது. உயிரின் வலி என்பது உணரப்படாமல் போகிறது.

கவிதையின் கடைசிவரியில் இறந்து கொண்டிருக்கும் மனிதனின் வாயில் எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும் சித்திரம் நம் மனதை கனக்க செய்துவிடுகிறது. வைத்தீஸ்வரன் குரலை உயர்த்தாமல் நம்மைச் சுற்றி நடக்கும் உலகின் காட்சிகளை. மனித துயரை அடையாளம் காட்டுகிறார். அதுவே அவரது கவிதையின் சிறப்பு

உயிரின் வலி

இடி இடிக்கிறது

பாலத்தின் மேல், இடையிடையில்

ரயிலோட்டத்தால்

அதனடியில்

இரும்பை நீட்டி வளைத்து

தீப்பொறி பரக்க ஓலமிடும்

வெல்டிங் கடைகள்,

படை வரிசை போல்.

அதை யொட்டிய வளைவில்

அரைத்து மாளாமல்

அலறுகிற மாவு யந்திரங்கள்

இவை நடுவில்,

உடம்புக் கடையில் தொங்கும்

ஊதிகள் பலூன்கள்

பூனை நாய், பொம்மைகள்

கூச்சலிட, புழுதியில்

பிழைப்புக்கு நகரும்

மனிதக் கால்கள் ஆயிரம்.

ஈதத்தனைக்கும் அடியில்

இரண்டு முழக்கந்தலுக்குள்

சுருண்டு முனகுகிறானே

நிஜமாக ஒரு மனிதன்,

அவல் ஈன ஒலிகள்

அபோதும் விழக்கூடும்,

ஏதாவது காதுகளில் ?

ஏற்கெனவே

எறும்பு மொய்க்கத்

தொடங்கிவிட்டது,

அவன் வாய் முனையில்…

••

பாதமலர் என்றொரு கவிதை. இதில் கால்களும் மலர்களும் கலைடாஸ்கோப்பில் வண்ணசில்லுகள் உருமாறுவது போல மாறுகின்றன. சட்டென இரண்டு வரி பாய்ச்சலை மேற்கொள்கிறது.

பாவாடை நிழலுக்குள்

பதுங்கி வரும் வெண் முயல்கள்.

க்ளோசப் காட்சி ஒன்றினை போலச் சட்டெனக் கவிதையில் இந்த வரிகள் வெளிச்சத்தை உண்டாக்குகின்றன.

பாத மலர்

மலரற்ற தார் ரோடில்

பாதங்கள் விழிக்கு மலர்.

கார் அலையும் தெருக்கடலில்

பாதங்கள் மிதக்கும் மலர்.

வெயில் எரிக்கும்

வெறுந் தரையில்

வழி யெதிரில்

பாவாடை நிழலுக்குள்

பதுங்கி வரும் வெண் முயல்கள்.

மண்ணை மிதித்து

மனதைக் கலைத்தது,

முன்னே நகர்ந்து

மலரைப் பழித்தது

பாதங்கள்

••

இன்னொரு கவிதையில் அகிம்சை என்றால் என்னவென்று கேட்கும் மகனுக்கு அதன் அர்த்தம் தெரிந்து கொள்ள அகராதியைப் புரட்டுகிறார் தந்தை. அகராதியோ நெடுநாட்களாக புரட்டப்படாமல் செல்லரித்துப் போய்கிடக்கிறது. அதில் அகிம்சை என்ற வார்த்தை ஹிம்சையாக அரிக்கபட்டுள்ளது. பொருள் திரித்துக் கூற மனமற்ற தந்தை மகனிடம் சொல்கிறார்

“பொருளை நீயே கண்டறிந்து கொள் ஆனால் எங்களைப் போலத் தொலைத்துவிடாதே. “

காந்திய வழியும் அகிம்சையும் இன்றைய தலைமுறையினருக்கும் சொல்லி புரிய வைக்கமுடியாத விஷயங்கள். அவற்றை அவர்களே தேடி அறிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரம் தங்கள் தலைமுறை சேர்ந்தவர் காந்தியை, அகிம்சையை அறிந்திருந்த போதும் அதை அறிந்தே தொலைத்துவிட்டோம் என்ற அவலத்தை நுட்பமாக பதிவு செய்திருக்கிறார்.

எவரும் அகராதியில் தேடி அகிம்சையின் பொருளை அறிந்து கொள்ள முடியாது. அர்த்தம் தரும் அகராதியே கூடச் செல்லரித்துவிட்டிருக்கிறது. இது நம் காலத்தின் அவலம். காந்தியத் தலைமுறை இந்தத் தலைமுறைக்குச் சொல்லும் வழிகாட்டுதலே இக்கவிதை.

**

அகராதி

அகிம்சை என்றால் என்னவென்று

கேட்டான் என் குழந்தை

அர்த்தம் எனக்கு எப்போதோ படித்தது

மறந்துபோச்சு

அக்கம்பக்கத்திலும் ஆருக்கும்

தெரியவில்லை

ஊருலகத்தில் அப்படி ஒரு

வார்த்தையண்டாவென்று என்னை

வேடிக்கையாகப் பார்த்தார்கள்

பழங்கால அகராதியைப் புரட்டினால்

அதற்கு நிச்சயம் பொருள் கிடைக்கும் என்று

தூசு தட்டிப்பார்த்தேன்

நல்லவேளை அகராதி மீதியிருந்தது

செல்லரித்த வரை படமாக

ஆவன்னா பக்கத்தை

பிரிக்கப் பார்த்தேன்…

ஒட்டிக்கொண்டு கிடந்தது சடையாக

போராடித்தான் அதை

திறக்க முடிந்தது

ஆனாலும் ஆவில் ஒரு பொத்தல்

அறம் அன்பு ஆனந்தம்

ஆறுதல் அமைதி அத்தனையும் பொத்தல்

அகிம்சை ஹிம்சையாக இருந்தது

அகராதியை தூக்கி எறிவது தவிர

வழியில்லை அல்லது

எடைக்குப் போட்டுக் கற்பூரம் வாங்கலாம்

மகனிடம் மறந்துபோன விஷயத்தை

ஒப்புக்கொள்ள வெட்கமாயிருக்கிறது…

பொருளை திரித்துக் கூறுவதும்

ஒரு தலைமுறைக்கு நான் செய்யும் துரோகம்

மகனே, எனக்குத் தெரிந்தாலும்

உனக்கு நிரூபிக்க முடியாத சூழல் இன்று

மீண்டும் அதன் பொருளை நீயே கண்டறிந்து

கொள் ஆனால் எங்களைப் போல்

தொலைத்துவிடாதே என்று

சொல்லிவைத்தேன் பொதுவாக

••

வைத்தீஸ்வரன் உலகை நுண்மையாக அவதானிக்க கூடியவர். தன்னைச் சுற்றி நடக்கும் சின்னஞ்சிறு நிகழ்வுகள். வாழ்வின் அபத்த சூழல்கள், இயற்கையின் ஜாலங்கள். அன்றாட உலகின் பரபரப்புக் காட்சிகள் அத்தனையும் கவிதையில் நுட்பமாக பதிவு செய்துவிடக்கூடியவர். இவரது கவிதைகள் எழுப்பும் அபூர்வ அனுபவங்கள் வாசகனை மிகுந்த பரவசப்படுத்துகின்றன

**

தீராத விளையாட்டு என்ற கவிதையில் வெயில் கண்டதும் வீடு நகர்ந்து செல்லும் காட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கால்களற்ற வீடு எப்படி வெயிலை கண்டதும் நகர்கிறது என்ற கேள்வி கவிஞனுக்கே உரியது. வெயில் காட்சியாகத் துவங்கிய வீடு நகரும் விஷயம் மெல்ல தத்துவார்த்த தளத்திற்குச் செல்கிறது.  வீடு உலகம் என்ற எதிர்நிலைகளை ஆராய்கிறது கவிதை.

உருளாத உலகத்தில்

வீடு கட்டு

நகராமல் நிற்கும்

என்று ஒருவன் சொல்கிறான். இது வீடு குறித்த விஷயமில்லை. மாற்றமில்லாத வாழ்க்கை குறித்த விஷயம்.

வெளிநாட்டில் நடமாடும் வீடுகள் இருப்பதைப் பற்றிச் சொல்லும் கவிஞன் அது போல நம் வீட்டினையும் நடை பழக்கலாம் என்கிறார்.

வீடும் உலகமும் இருவேறு நிலைகள். ஒன்றையொன்று பாதிக்கும் சக்திகள். உலகோடு ஒத்து போவது அல்லது வீட்டில் தனித்திருப்பது இரண்டும் எதிரெதிர் நிலைகள். வீடு நிலையானது என நினைக்கிறோம். அப்படியில்லை போலும் வீடும் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. அதன் நகர்வை நாம் கவனிப்பதில்லை. கவிஞர் அவற்றைக் கவனிப்பதோடு வீட்டினை நடை பழக்க முடியுமா என்றும் முயற்சிக்கிறார். வைத்தீஸ்வரனின் சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று.  வீடு உலகம் இரண்டிற்குள்ளாக அலைக்கழியும் மனிதனின் குரலை இக்கவிதையாக வெளிப்படுகிறது.

**

தீராத விளையாட்டு

அடிக்கடி

வெயிலுக்குள் நகர்ந்துவிடும்

எங்கள் வீட்டை

என்ன செய்வதென்று

தெரிவதில்லை

உள்ளுக்குள் உள்

நிழலுக்கு நிழல் நகர்ந்து

பதுங்குவதே எங்களுக்கு

பகலாச்சு

கால்களற்று நகரும்

இந்த வீட்டை

கட்டி வைப்பதெங்ஙனம்?

புரியவில்லை

விஞ்ஞானியைக் கேட்டேன்

உலகமே உருள்கிறது என்கிறான்

உருளாத உலகத்தில்

வீடு கட்டு

நகராமல் நிற்கும்

உண்மை என்றான்

உலகம் உருண்டதால்

என் வீடு

மேலும் நகர்ந்தது

நாங்கள் இன்னும்

இருளில் பதுங்கினோம்

ஜன்னல்வழி ஒரு மேதை

எட்டிப்பார்த்து

இன்னலுக்கு வழியிருக்கு

என்றிட்டான்

வெளிநாட்டில்

நடமாடும் வீடுகளை

நான் கண்டேன் அதுபோல

இனி வீட்டை நடைபழக்கி

நிழலுக்கு நகர்த்த முயன்று பார்க்கலாம்

அல்லது

நம் வாழ்வின் அவசரத்துக்கு

வீட்டுக்குப் பதில் சமயோசிதமாய்

நீங்களே நகரலாம் என்கிறான்

வீட்டுக்கும் எனக்கும்

வாய்த்த இந்த விளையாட்டு வாழ்வு

இன்று வரை நிற்கவேயில்லை

••

மன்னிப்பு என்றொரு கவிதையில் இவ்வளவு மரங்கள் வெட்டப்பட்ட போதும் குயிலுக்குக் கோபம் வரவில்லை. அது இன்னமும் காதலையே பாடிக் கொண்டிருக்கிறது என்று வைத்தீஸ்வரன் குறிப்பிடுகிறார்.   இனி வரப்போகும் மனிதனுக்காக இன்றே பாடிக்கொண்டிருக்கும் குயிலின் இடமே கவிஞர் வைதீஸ்வரனின் நிலை. அவரும் என்றோ வரப்போகிற ஒரு வாசகனுக்காகத் தனது இனிமையான கவிதைகளை இடைவிடாமல் எழுதிக் கொண்டேயிருக்கிறார். அவரைப் போன்ற முதன்மை கவிஞரைக் கொண்டாட வேண்டியது நமது கடமை.

மன்னிப்பு

மரங்கள் ஓயாமல்

அழிந்து கொண்டிருந்த போதிலும்

குயில்களுக்கு இன்னும்

கோபமில்லை யாரிடமும்

அதன் குரல் இன்னும்

காதலையே பாடுகின்றன

இனி வரப் போகும்

“ஒரு மனிதனுக்காக“

••

நூலின் அட்டை ஒவியத்தை வைத்தீஸ்வரன் அழகாக வரைந்திருக்கிறார். அநாமிகா பதிப்பகம் நூலை சிறப்பாக வெளியிட்டுள்ளது.

மனக்குருவி

(கவிதைத் தொகுப்பு)

ஆசிரியர்: வைதீஸ்வரன்

வெளியீடு: அநாமிகா ஆல்ஃ பபெட்ஸ்

விலை : ரூ. 450/-

0Shares
0