ஷார்ஜா பயணம்


ஷார்ஜா புத்தகக் கண்காட்சி உலகின் மூன்றாவது மிகப்பெரிய கண்காட்சியாகும். இதில் 64 நாடுகள் பங்கேற்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் இந்தப் புத்தகத் திருவிழா எக்ஸ்போ சென்டரில் நடைபெற்றது. பதினைந்து லட்சம் புத்தகங்களுக்கும் மேலாக இடம்பெற்றிருந்தன. .

இந்தப் புத்தகக் கண்காட்சி ஷார்ஜாஆட்சியாளர் மேதகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி அவர்களின் கனவு. அவரே நேரடியாகப் புத்தகக் கண்காட்சி நிகழ்வுகளைத் திட்டமிடுகிறார். வழிநடத்துகிறார் என்கிறார்கள்.

இவ்வளவு பெரிய புத்தகக் கண்காட்சியை நான் இதுவரை கண்டதேயில்லை. திருவிழாக்கூட்டம் போல மக்கள் கூட்டம். பல்பொருள் அங்காடியில் சாமான்களை அள்ளிக் கொண்டு போவது போலத் தள்ளுவண்டி நிறையப் புத்தகங்களை வாங்கித் தள்ளிக் கொண்டு மக்கள் செல்வதைக் காண மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது

இந்தப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டுக் கருத்தரங்குகள், எழுத்தாளர்களின் சந்திப்பு, புதிய நூல் வெளியீடு, ஆய்வரங்குகள், சிறார்களுக்கான பயிலரங்குகள், திரைக்கலைஞர்களின் சந்திப்பு. பொதுவிவாதம் எனப் பல்வேறுவகை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

அதில் தமிழ் இலக்கியத்தின் சார்பில் நான் அழைக்கபட்டிருந்தேன். இது என் இலக்கிய வாழ்வில் எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கௌரவம்.

சர்வதேச எழுத்தாளர்களுள் ஒருவனாக அழைக்கபட்டு அரசு விருந்தினராக கௌரவிக்கபட்டேன்.

நவம்பர் 3 மாலையில் நடைபெற்ற அமர்வில் துணையெழுத்து குறித்து உரையாற்றினேன். அரங்கு நிரம்பிய கூட்டம். வெளியிலும் நிறைய வாசகர்கள் நின்றிருந்தார்கள். ஒரு மணி நேரம் நடைபெற்ற நிகழ்வினை தமிழ் 89.4 பண்பலையைச் சேர்ந்த அறிவிப்பாளர் நாகா ஒருங்கிணைப்புச் செய்தார். நிகழ்விற்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு கண்காட்சி நிர்வாகிகள் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதுடன் அடுத்த ஆண்டுப் பெரிய அரங்கினை ஒதுக்கித் தருவதாகச் சொன்னார்கள். இதற்குக் காரணமாக அமைந்த அமீரகத்தைச் சார்ந்த இலக்கிய வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

புத்தகக் கண்காட்சியைச் சுற்றி பார்ப்பதற்கு இரண்டு மூன்று நாட்கள் முழுமையாகத் தேவைப்படுகிறது. மிக அழகான அரங்குகள். ஒவ்வொரு அரங்கிலும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள். அச்சிலும் புத்தக வடிவமைப்பிலும் உருவாகியுள்ள மாற்றங்கள் வியப்பூட்டுகின்றன. பல்வேறு துறைகளைச் சார்ந்த அரிய நூல்களைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். புத்தக கண்காட்சியினுள் கால்வலித்துப் போகுமளவு சுற்றினேன்.

அரபி , உருது, பார்சி, இத்தாலி, ரஷ்யன், சீனா, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்டபல்வேறு மொழிகளில் ஏராளமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாகக் கேரளாவின் டிசி புத்தக நிறுவனம் இந்த நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்வதால் நிறைய மலையாள பதிப்பகங்கள் வந்திருந்தன.

ஆனால் இவ்வளவு பெரிய புத்தகக் கண்காட்சியில் ஒரு தமிழ் பதிப்பகத்தின் அரங்கு கூடக் கிடையாது. அமீரகத்தில் லட்சக்கணக்கில் தமிழர்கள் வசிக்கிறார்கள். புத்தகங்களை வாங்க தயாராகவும் இருக்கிறார்கள். ஆனால் புத்தகக் கண்காட்சில் தமிழ் புத்தக விற்பனை நிலையங்கள் ஒன்று கூடக் கிடையாது என்பது வருத்தமளிக்கிறது.

துணையெழுத்துப் புத்தகத்தை விகடன் நிறுவனத்தில் வாங்கி விற்பனைக்கு வைக்க அணுகியிருக்கிறார்கள். அது தற்போது அச்சில் உள்ளது ஆகவே விற்பனைக்கு கிடையாது எனக் கைவிரித்துவிட்டார்கள்.  அதனால் நான் பேசிய அரங்கில் காட்சிக்குக் கூட ஒரு புத்தகம் வைக்கபடவில்லை.

ஒருவேளை புத்தக கண்காட்சியில்  புத்தகம் கிடைத்திருந்தால் நிச்சயம் ஆயிரம் பிரதிகள் விற்பனையாகியிருக்கும். என்னுடைய எந்தப் புத்தகமும் அங்கே விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பது வருத்தமளித்தது.

நிச்சயம் எனது தேசாந்திரி பதிப்பகம் வழியாக அடுத்த ஆண்டுப் புத்தகங்களை நானே கொண்டு வருவேன் என வாக்களித்துத் திரும்பினேன்.

உலகின் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியில் ஏன் தமிழ் பதிப்பாளர்கள் கலந்து கொள்வதில்லை. இவ்வளவிற்கும் விரும்பினால் இலவசமாக இடம் தருகிறோம் என்கிறார்கள். புத்தகங்களைச் சென்னையிலிருந்து இலவசமாக ஷார்ஜா கொண்டுவரவும். திரும்பி அனுப்பி வைக்கவும் உதவுகிறோம் எனச் சொல்கிறார்கள். தனியாக ஒரு பதிப்பகம் இதனைச் செய்வதில் ஆர்வம் காட்டாமல் போனால் பபாசி போன்ற அமைப்புகள் முன்னெடுக்கலாம் தானே.

பலவருடங்களாகப் பல்வேறு தனிப்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் பேசி வந்த போதும் ஒருவர் கூட அரங்கில் கடைபோடுவதில்லை என நிர்வாகிகள் வருத்தமாகத் தெரிவித்தார்கள்.

என்பிடி, சாகித்ய அகாதமி, தமிழ் பல்கலைகழகம் போன்ற அரசு சார் நிறுவனங்கள் கூட ஏன் இது போன்ற விழாக்களைப் புறக்கணிக்கின்றன எனப் புரியவில்லை. இவ்வளவிற்கும் என்பிடி ஹிந்தி ஸ்டால் ஒன்றை அமைத்திருக்கிறது. அவர்கள் வெளியிட்ட தமிழ் புத்தகங்கள் எதுவும் அங்கே கிடைக்கவில்லை

பபாசி போன்ற அமைப்புகள் இதற்கு நிச்சயம் உதவிசெய்ய வேண்டும். பதிப்பாளர்கள் ஒன்றிணைந்து இரண்டோ மூன்றோ அரங்கினை எடுத்துக் கொள்ளலாம். நிச்சயம் லட்சக்கணக்கில் புத்தகம் விற்பனையாகும்.

அன்பிற்குரிய நண்பர் உதயசந்திரன் ஐஏஎஸ் அவர்கள் அரசு சார்பில் இது போன்ற நிகழ்வில் தமிழக அரசின் பதிப்புதுறைகள் கலந்து கொள்ள வழிகாட்டலாம்.

அமீரகம் முழுவதுமே தமிழ் புத்தகங்கள் வாங்க வசதிகள் கிடையாது. ஆகவே நிரந்தரப் புத்தகக் கடைகளைக் கூட நிறுவலாம்.

அமீரகத்தைச் சேர்ந்த பல்வேறு இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். ஆனால் அவர்களின் தேவைக்குப் புத்தகம் கிடைப்பதில்லை. ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டிற்கு வந்து போகிறவர்கள் வாங்கி வருகிற புத்தகங்களை வைத்தே கூட்டம் நடத்துகிறார்கள்.

கண்காட்சிக்கு வந்திருந்த தமிழர்கள் அத்தனை பேருக்கும் தமிழ் புத்தகங்களை வாங்க வழியில்லையே எனப் புலம்பியது காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

••

எனது ஐந்து நாள் பயணத்தின் துவக்கமாக நவம்பர் 1 மதியம் துபாய் விமானநிலையத்தில் இறங்கினேன். விமான நிலையத்திலே வரவேற்க நண்பர்கள் நந்தா, சசிகுமார், குறிஞ்சிநாதன் ஆகியோர் காத்திருந்தார்கள். நந்தா திருச்சியைச் சேர்ந்தவர். டிராவல் ஏஜென்சி ஒன்றில் பணியாற்றுகிறார். சசிகுமார் அரசு மின்வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். குறிஞ்சிநாதன் ஊட்டியைச் சேர்ந்தவர். மூவரும் தீவிர இலக்கிய வாசிப்பாளர்கள். எனது வருகையைப் பற்றி அறிந்த நாள் முதல் நந்தாவும் சசியும் அதை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவர்களே முன்வந்து ஏற்றுக் கொண்டார்கள்.

புத்தகக் கண்காட்சி சார்பில் திரு. ஜேக்கப், திரு. பிரான்சிஸ் இருவரும் ஒருங்கிணைப்புச் செய்தார்கள். விமானநிலையத்தில் அரசு சிறப்பு விருந்தினர் எனச் சிறப்பு நுழைவாயில் வழியாக அழைத்துவரப்பட்டேன். ஐந்து நிமிச நேரத்தில் குடியுரிமை பதிவு முடிந்து போனது. ஷார்ஜாவிலுள்ள நட்சத்திரவிடுதியான ஷெரட்டனில் தங்க வைக்கபட்டேன்.

மூன்றாம் தேதி இரவு தான் எனது நிகழ்வு. ஆகவே முதல் இரண்டு நாட்களை உள்ளுர் நண்பர்களைச் சந்திக்கவும் உரையாடவும் முடிந்தது. இந்தப் பயணத்தில் நிறையப் புதிய நண்பர்களைப் பெற்றேன் என்பது மகிழ்ச்சியானது. குறிப்பாக வேதாரண்யத்தில் பாயிண்ட் காலிமர் என்ற பள்ளியை நடத்தி வரும் நண்பர் சுல்தான் ஆரிப்பை ஷார்ஜாவில் சந்தித்து உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அவர் மிகப்பெரிய பிசினஸ்மேன். வீடு முழுவதும் இலக்கியப் புத்தகங்களாக அடுக்கி வைத்திருக்கிறார். அத்தனையும் வாசித்திருக்கிறார். அவருடன் துபாய் வைல்ட் லைப் ம்யூசியத்திற்கு சென்று வந்தேன்.

ஷெரட்டன் ஹோட்டல் கடற்கரையில் அமைந்திருந்தது. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே கடல். அற்புதமான காட்சி.

நவம்பர் 1 மாலை சசிகுமார் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அன்று அவரது திருமண நாள் என்பது கூடுதல் மகிழ்ச்சிதருவதாக இருந்தது. சுவையான உணவு தந்தார்கள். நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். சசி சுஜாதாவின் தீவிர ரசிகர். ஆகவே உரையாடலில் சுஜாதா பற்றி நிறையப் பேசிக் கொண்டோம். இரவு நந்தா தனது காரில் என்னை அறைக்கு அழைத்து வந்தார். ஒளிரும் சாலையை வேடிக்கை பார்த்தபடியே வந்தோம். சாலையெங்கும் புத்தகக் கண்காட்சி விளம்பரங்கள். எழுத்தாளர்களின் புகைப்படங்கள். புத்தக வெளியீடு பற்றிய தகவல்கள். ஒரு தேசம் எழுத்தையும் எழுத்தாளர்களையும் இப்படிக் கொண்டாடுவதைக் காண சந்தோஷமாகயிருந்தது.

இரவிலும் கடுமையான வாகன நெருக்கடி. நத்தை போல ஊர்ந்து நகர்ந்தன கார்கள். அறைக்கு வந்த போது இரவு பனிரெண்டாகியிருந்தது. அறைக்குச் சென்றவுடன் உறங்கிவிட்டேன். விடிகாலையில் நடைபயிற்சிக்கு வந்த போது கடற்கரையின் அழகை முழுமையாகக் காண முடிந்தது. நான் தங்கியிருந்த ஹோட்டலில் தான் அத்தனை முக்கிய விருந்தினர்களும் தங்கியிருந்தார்கள். ஆகவே பலரையும் லாபியில் சந்திக்க முடிந்தது. மலையாள இயக்குனர் கமல், ஆஷீக் அபு இருவருடன் பேசினேன். மறுநாள் பாலைவன சுற்றுலா போகலாம் என ஏற்பாடு செய்திருந்தார்கள். நண்பர்கள் ஏழு பேர் ஒன்றிணைந்து பயணம் செய்தோம். பாலைவனத்திற்குள் நிறைய பயணம் செய்திருக்கிறேன் என்பதால் அது எனக்கு புதிய அனுபவமாக அமையவில்லை. ஆனால் நண்பர்களுடன் பேசி சிரித்தபடியே போனது பிடித்திருந்தது.

-தொடரும்

நன்றி

புகைப்படங்கள்

சுபான், நந்தா, சசிகுமார், குறிஞ்சிநாதன்.

0Shares
0