ஷேக்ஸ்பியரின் உலகம்- 1 லியரும் முட்டாளும்

ஷேக்ஸ்பியரின் கிங் லியர் நாடகம் இருபது முறைக்கும் மேலாகத் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இதில் சில தொலைக்காட்சிக்கான தயாரிப்பு. பெரும்பான்மையான ஷேக்ஸ்பியர் நாடகங்கள் திரைப்படமாகியுள்ளன. லியர் படங்களில் ரஷ்ய இயக்குநரான கிரிகோரி கோஜின்ட்சேவ் இயக்கிய 1971 ஆம் ஆண்டு வெளியான கிங் லியர் நிகரற்றது. இப்படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். இன்று இணையத்தில் அதன் தரமான பிரதி காணக்கிடைக்கிறது.

கிங் லியராக நடித்திருப்பவர் ஜூரி ஜார்வெட். லியர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று தோன்றும்படியான. அற்புதமான நடிப்பு. மகளால் புறக்கணிக்கப்படும் போதும் சூறைக்காற்றில் சிக்கி அவதிப்படும் போதும் அவரது முகமும் உடலும் வெளிப்படுத்தும் நடிப்பு அபாரம்.

.கிரிகோரி கோஜின்ட்சேவின் கடைசித் திரைப்படம் இதுவாகும். பிரம்மாண்டமான நிலப்பரப்பும் கற்கோட்டைகளும் தொலைவிலிருந்து கூட்டமாக நடந்து வரும் மக்களின் வருகையும் பிரமிப்பூட்டுகின்றன. தேர்ந்த அரங்க அமைப்பு, இசை, ஆடைவடிவமைப்பு, உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் கொண்டதாகப் படத்தைக் காவியமாக உருவாக்கியிருக்கிறார். கிரிகோரி கோஜின்ட்சேவ்

ஷேக்ஸ்பியரின் கிங் லியர்1605 முதன்முதலில் நிகழ்த்தப்பட்டது1608 இல் வெளியிடப்பட்டது. நானூறு வருஷங்களைக் கடந்தபின்பும் எது லியரைக் கொண்டாட வைக்கிறது. ஒரு தமிழ் பார்வையாளன் லியரை எப்படி அணுகுகிறான். புரிந்து கொள்கிறான்

நாடகம் தந்தை மகள் உறவின் மீதான விசாரணையாக ஒரு தளத்திலும் மறுதளத்தில் தேசம் சொந்த காரணங்களுக்காகத் துண்டாடப்படுவதையும் இதன் காரணமாக அதிகார மாற்றம் பற்றியதாகவும் உள்ளது. இன்றும் இந்த இருதளங்களும் மாற்றமின்றித் தொடர்கின்றன.

லியர் அரசனுடன் எப்போதும் ஒரு முட்டாள் இருக்கிறான். அவனுக்கு நாடகத்தில் பெயர் கிடையாது. அந்த முட்டாள் உண்மையைப் பேசுகிறவனாக, விசுவாசியாக, துயரை ஆற்றுப்படுத்துகிறவனாக, எதிர்காலத்தை முன்னறிவிப்பவனாக இருக்கிறான்.

ஏன் லியரின் முட்டாள் இளைஞனாகச் சித்தரிக்கப்படுகிறான். இளமை முட்டாள்தனத்தை ஆனந்தமாகச் செய்யும் காலம் என்பதாலா, எது முட்டாளை இவ்வளவு ஞானம் கொண்டவனாக உருமாற்றியது. முட்டாளுக்குக் கடந்தகாலமில்லை. எதிர்காலத்தைப் பற்றிக் கவலை கொள்ளுவதுமில்லை

இன்று நாம் பயன்படுத்தும் முட்டாள் என்ற சொல்லின் பொருளும் மத்திய காலத்தில் பயன்படுத்திய சொல்லின் பொருளும் வேறானது. நாடகத்தில் வரும் முட்டாள் உண்மையில் அறிவாளி. அவன் ஒருவனே லியர் அரசனின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறான். நடக்கப்போகும் நிகழ்வுகளை முன் உணர்ந்து சொல்கிறான்

தன்னை லியரின் நிழல் என்றே சொல்லிக் கொள்கிறான். லியர் அரசன் எந்த நேரமும் முட்டாளைத் தேடுகிறான். துணைக்கு வைத்துக் கொள்கிறான். கிரிகோரி கோஜின்ட்சேவின் கிங் லியரில் இந்த முட்டாள் மிக அற்புதமாக நடித்திருக்கிறான்.

நாடகத்தில் Nothing என்ற சொல் 34 முறை இடம்பெற்றுள்ளது. இதில் லியர் மட்டும் பத்துமுறை இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறான். ஒன்றுமில்லை என்பதை ஆராய்வது தான் நாடகத்தின் மையம் போலும். இதனால் தான் தந்தை தன் மீதான அன்பைப் பற்றிக் கேட்கும் போது கார்டிலியா Nothing என்கிறாள்.

கார்டிலியாவிற்கும் மற்ற இரு சகோதரிகளுக்கும் இடையில் எவ்வளவு ஆண்டுகள் இடைவெளி என்ற கேள்விக்கு நாவலாசிரியர் ஜே.ஆர். தோர்ப்பதினைந்து வருஷங்கள் என்கிறார். ஒன்றிரண்டு வயது வேறுபாடு கொண்ட சகோதரிகள் ஒன்று போலத் தான் நடந்து கொள்வார்கள். கார்டிலியா நீண்ட இடைவெளிக்குப் பின்பு பிறந்தவள் ஆகவே அவளிடம் வேறுபட்ட தன்மைகளைக் காண முடிகிறது என்கிறார்கள்.

லியரின் மனைவி என்றொரு நாவலை ஜே.ஆர். தோர்ப் எழுதியுள்ளார் வெளியாகியுள்ளது. இந்த நாவல் நாடகத்தில் குறிப்பிடப்படாத லியர் அரசனின் மனைவியைப் பற்றியது. இப்படி ஷேக்ஸ்பியரின் நாடகத்திலிருந்து எத்தனையோ மறுபுனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஜே.ஆர். தோர்ப் லியர் அரசனின் மனைவி கணவனைப் பிரிந்து தனியே வாழுகிறாள். அவளது நினைவுகளின் வழியே லியரும் பிள்ளைகளும் புதிய கோணத்தில் விவரிக்கபடுகிறார்கள்

டபிள்யூ.எஸ். மார்வின் “லியரின் மனைவி” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதுவும் புதிய பார்வையில் எழுதப்பட்டதே

ஒருவேளை லியரின் மனைவி இருந்திருந்தால் லியரின் மகள்கள் எப்படி நடந்திருப்பார்கள். இது போன்ற பிரச்சனை உருவாகியிருக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

அது போலவே மனைவியை இழந்த காரணத்தால் தான் லியர் அரசன் தன்னைப் பிள்ளைகள் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முயலுகிறான் என்றும் சொல்கிறார்கள்

நாடகத்தில் வரும் முட்டாள் கடைசி அங்கத்தில் திடீரெனக் காணாமல் போய்விடுகிறான். அவன் இறந்து போய்விட்டதாக லியர் அரசனின் பேச்சில் தெரிந்து கொள்ள முடிகிறது. ஏன் உற்றதுணையாக இருந்த முட்டாள் காணாமல் போகிறான் என்பதற்குச் சுவாரஸ்யமான காரணம் ஒன்றைச் சொல்கிறார்கள்

அந்தக் காலத்தில் முட்டாளாகவும் கார்டிலியாகவும் ஒரே நபரே நடிக்கும் சூழல் இருந்தது. ஆகவே ஷேக்ஸ்பியர் முட்டாளைக் கடைசி அங்கத்தில் காணாமல் போகச் செய்துவிட்டார் என்கிறார்கள்.

ஷேக்ஸ்பியர் நாடகத்தில் புயல் தொடர்ந்து இடம்பெறுகிறது. இந்த நாடகத்திலும் புயலில் சிக்கி லியரும் முட்டாளும் தஞ்சம் தேடுகிறார்கள். அந்தக் காட்சியின் போது முட்டாள் வீடற்றவன் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

உண்மையை நேரடியாக அப்படியே சொல்லிவிட முடியாது. அதைப் பதப்படுத்தி உரிய முறையில் வெளிப்படுத்த வேண்டும், அதைத்தான் நாடகத்தில் வரும் முட்டாள் செய்கிறான் என்கிறார்கள். சில வேளைகளில் இந்த முட்டாளின் செய்கை கிரேக்க நாடகத்தில் வரும் கோரஸை நினைவுபடுத்துகிறது

கார்டிலியாவும் முட்டாளும் லியரின் பராமரிப்பாளர்கள், ஒருவர் இருக்கும் போது, மற்றவர் இருக்க வேண்டியதில்லை. ஆகவே கடைசிக் காட்சியில் முட்டாள் இடம்பெறவில்லை என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

லியருக்கும் முட்டாளுக்குமான உறவைப் பற்றி எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய கட்டுரை சிறப்பானது. இதில். ஷேக்ஸ்பியரைப் பற்றி டால்ஸ்டாயின் மதிப்பீட்டினை ஆராய்கிறார் ஆர்வெல்., லியரின் கதையுடன் டால்ஸ்டாயின் சொந்தக் கதை நிறைய ஒற்றுமைகளைக் கொண்டிருக்கிறது. வீட்டைவிட்டு வெளியேறிய லியர் போலவே டால்ஸ்டாய் கடைசி நாட்களில் நடந்து கொண்டார் என்கிறார் ஆர்வெல்

King Lear and the Fool

லியர் அரசனை முட்டாள் மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறான். உண்மையான சூழலை, மனித இயல்பைப் புரிந்து கொள்ள வைக்கிறான். அவனை வேலை மன்னரை மகிழ்ச்சிப்படுத்துவது மட்டுமில்லை. வழிகாட்டுவது. அவனது பேச்சில் ஞானமும் கேலியும் ஒருங்கே வெளிப்படுகிறது

லியரை வாசிக்கும்போதோ, திரைப்படமாகக் காணும் போதோ நமக்குள் இருக்கும் லியரை, முட்டாளை நாம் அடையாளம் காணுகிறோம். இந்தியத் தந்தை ஒரு போதும் லியர் மன்னராக நடந்து கொள்ள மாட்டான். பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் போது தனது முன்வினை என்றே நினைத்துக் கொள்வான்.

லியர் அரசன் நாடகத்தில் லியர் நடந்த தவறுகளுக்குக் கடவுளைக் குற்றம் சாட்டவில்லை. லியர் தனது அதிகார இழப்பை உணரத் துவங்கும் போது தனது ஆடைகளைக் கிழித்து எளிய மனிதனாக உருமாறுகிறான். வீழ்ச்சி அடைந்த நிலையில் தான் உலகம் அவனுக்குப் புரிகிறது.

where’s my Fool? I have not seen him this two days. என ஆரம்பக் காட்சியில் லியர் தேடுகிறார். முட்டாள் அறிமுகமானதும் அவனது கேலி லியரின் செயலைப்பற்றியதாக இருக்கிறது.அவன் ஒரு இடத்தில் Can you make no use of nothing என இடத்தில் கேட்கிறான்.

ஸ்காட்டிஷ் ஓவியர் வில்லியம் டைஸ் வரைந்துள்ள King Lear and the Fool ஓவியத்தில் முட்டாள் ஆர்வத்துடன் லியரை பார்த்துக் கொண்டிருக்கிறான். கைவிடப்பட்ட நிலையில் லியர் குழப்பத்துடன் எதையோ பேசிக் கொண்டிருக்கிறார். இந்த ஓவியத்தையும் ரஷ்ய லியர் அரசன் திரைப்படத்தையும் ஒன்றாகக் காணும் போது கிரிகோரி கோஜின்ட்சேவ் எவ்வளவு ஆழமாக லியரைப் புரிந்து திரையில் மறுஉருவாக்கம் செய்திருக்கிறார் என்று தெரிகிறது.

0Shares
0