All men who repeat one line of Shakespeare are William Shakespeare. – Borges

ஒரு எளிய வாசகன் ஷேக்ஸ்பியரை அணுகும்போது அவன் முன்பாக எண்ணிக்கையற்ற கேள்விகள் தோன்றுகின்றன. ஷேக்ஸ்பியர் என்பவர் யார்? அவரது முக்கிய நாடகங்கள் எவை? அந்த நாடகங்களை எப்படி நிகழ்த்தினார்கள்? அவரது வாழ்வுக்குறிப்புகள் நிஜமானவையா? ஷேக்ஸ்பியர் நாடகங்களின் பின்புலம் என்ன? அவரது சமகால அரசியல் கலாச்சார சூழல்கள் எப்படியிருந்தது? ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எப்படி எதிர் கொள்ளபட்டன? எதற்காக நாம் ஷேக்ஸ்பியரை வாசிக்க வேண்டும்? ஷேக்ஸ்பியரின் படைப்புகள் எதை முக்கியத்துவபடுத்துகின்றன?ஷேக்ஸ்பியர் இன்று வரை தொடர்ந்து வாசிக்கபடுவதற்கான காரணங்கள் எவை? என்று கேள்விகள் முடிவற்று கிளைத்துக் கொண்டேயிருக்கின்றன.இந்த கேள்விகளில் இருந்து தான் எனது வாசிப்பும் துவங்கியது. பள்ளிவயதில் புரியாமல் வாசிக்கத் துவங்கினேன். வீட்டில் எனது தாத்தா விரும்பி கிங் லியரையும் மேக்பெத்தையும் வாசிக்க வைத்தார். அதன்பிறகு நானே தேடிப்படித்த நாடகங்கள். விமர்சனங்கள் தாண்டி இன்றும் ஷேக்ஸ்பியர் தொடர்ந்த வாசிப்பிற்கு உரியவராகவே இருக்கிறார்.ஷேக்ஸ்பியர் யார் என்ற கேள்வி இன்றைக்கும் முற்றுப்பெறாதது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் யாரோ ஒருவரின் பெயர் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை எழுதியது இவர் தான் என்று சர்ச்சிக்கபடும். இந்தப் பட்டியலில் கிறிஸ்தோபர் மார்லோவில் துவங்கி பேகன், எட்வர்ட் வெரே, வில்லியம் ஸ்டேன்லி, மேரி சிட்னி ஹேபர்ட், ரோஜர் மேனர்ஸ் என பலரும் இடம் பெற்றிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியரைப் புரிந்து கொள்வதற்குத் தேவை அவரது படைப்புகள் தானே அன்றி சுயசரிதைக் குறிப்புகள் அல்ல. அந்தக் குறிப்புகள் வேறுவேறு காலகட்டங்களில் பலராலும் புனைந்து உருவாக்கபட்டது. திருவல்லிகேணியில் உள்ள கதவு இலக்கம் 14ல் திருவள்ளுவர் வசித்தார் என்று துல்லியமாக சில தமிழ் அறிஞர்கள் சொல்வதைப் போன்ற புனைவுகள் ஷேக்ஸ்பியர் விஷயத்தில் நிறைய உள்ளன.ஷேக்ஸ்பியர் காலத்தில் இருந்த ஒரே ஆவணப் பதிவு தேவாலயப் பதிவேடுகள் மட்டுமே. அந்தப் பதிவேட்டில் அவரது திருமண நாள், மகன் இறந்து போன தேதி மற்றும் அவர் இறந்து போன நாள் பதிவாகி உள்ளது. மற்றவகையில் அவரைப்பற்றிய அதிகக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லைஷேக்ஸ்பியரின் உருவமும் கூட கற்பனையில் வரையப்பட்டதே. எல்லா சித்திரங்களிலும் ஷேக்ஸ்பியர் நடுத்தர வயதுக்காரராகவே சித்தரிக்கபடுகிறார். (திருவள்ளுவருக்கு எப்படி கற்பனையாக ஒரு உருவம் கொடுத்தார்களோ அது போல தான் இன்றைய ஷேக்ஸ்பியர் உருச்சித்திரமும் உள்ளது ) ஷேக்ஸ்பியர் பிறப்பதற்கு முந்திய இங்கிலாந்து எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்வதன் வழியே ஷேக்ஸ்பியர் எந்தச் சூழலில் பிறந்தார், செயல்பட்டார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.இங்கிலாந்து அரசரான எட்டாம் ஹென்றிக்கு ஆண் வாரிசு இல்லாமல் போகவே அவர் ஆண் குழந்தை வேண்டி தனது பட்டத்து அரசியான காதரீனை விவாகரத்து செய்துவிட்டு ஆனி போல்யன் என்ற பிரபு வம்சத்துப் பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு ரோமில் இருந்த திருச்சபை அனுமதியளிக்கவில்லை. அதனால் ஆத்திரமான மன்னர் திருச்சபையின் அதிகாரங்களை ரத்து செய்ததோடு தானே கிறிஸ்துவ சபையின் முழு அதிகாரம் கொண்டவன் என்று அறிவித்துவிட்டு, அதுவரை இருந்த கார்டினலின் அதிகாரத்தைப் பறித்தார்.மக்களிடமும் ரோமத் திருச்சபையிடமும் அது பலத்த எதிர்ப்பை உருவாக்கியது. அத்தோடு எட்டாம் ஹென்றியின் வழிகாட்டியாகவும் மந்திரியாகவுமிருந்த தாமஸ் மோர் அந்த நடவடிக்கையை ஆதரிக்கவில்லை. அதன் காரணமாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு உருவானது. ஆனால் எட்டாம் ஹென்றியோ எல்லா எதிர்ப்புகளையும் மீறி ஆனியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தாமஸ் மோர் அதைக் கடுமையாக எதிர்க்கவே அவருக்கு மரணதண்டனை விதித்தார் அரசர் (தாமஸ் மோரின் வாழ்வை விவரிக்கும் A Man for All Seasons என்ற ஹாலிவுட் திரைப்படம் மிகச்சிறப்பானது. ஆறு ஆஸ்கார் விருதுகள் பெற்ற இத்திரைப்படம் சரித்திர சித்தரிப்பில் முன்னோடி படமாகும் )எல்லா எதிர்ப்புகளை மீறி 1532 ல் ஆனியை திருமணம் செய்து கொண்ட போதும் அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுத் தரவில்லை. மாறாக அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. எலிசபெத் என்று அந்தக் குழந்தைக்குப் பெயரிட்டார்கள். அதன் சில மாதங்களில் அவள் மீண்டும் கருவுற்றாள் ஆனால் அந்தக் கர்ப்பம் சில வாரங்களில் கலைந்து போய்விட்டது. அதனால் ஆத்திரமுற்ற ஹென்றி அவளை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கத் துவங்கினார். அவரது கள்ள உறவுகள் வலுப்படத்துவங்கின. இதற்கு ஆனி இடையூறாக இருக்கவே அவளைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார் ஹென்றி.அதன் தொடர்ச்சியாக அவர் ஜேன் செமோர் என்ற பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அவள் வழியாக 1537 ல் ஹென்றிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிரசவத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைபாடு காரணமாக ஜேன் மரணமடைந்தாள். அவளது குழந்தை எட்வர்ட், இளவரசராக அறிவிக்கபட்டார்.இது நடந்து இரண்டு ஆண்டுகள் வரை ஹென்றி மறுமணம் செய்து கொள்ளவில்லை ஆனால் 1540ல் அரசியல் காரணங்களுக்காக ஜெர்மானிய இளவரசியான ஆனியை திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமண வாழ்வு அவர் விரும்பியபடி அமையவில்லை. ஆகவே அவளையும் விவாகரத்து செய்துவிட்டு தனது ஐம்பதாவது வயதில் ஐந்தாவது திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் ஆனி போல்யனின் சகோதரி. ஆனால் சில மாதங்களிலே அவளுக்கு ரகசிய காதலர்கள் பலர் இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்ட ஹென்றி அவளது சகோதரியைப் போலவே சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார். இறுதியாக ஹென்றி நோய்வாய்ப்பட்ட நாட்களில் அவருக்குத் துணை செய்த கேதரீன் பார் என்ற பெண்ணை ஆறாவதாக திருமணம் செய்து கொண்டார். இப்படி ஹென்றியால் ஏற்பட்ட குழப்பம் இங்கிலாந்தின் அரியணையில் பெரிய புயலை ஏற்படுத்தியது. யார் அவர்களது எதிர்கால மன்னர் என்ற குழப்பம் உண்டானது. இதனால் உள்நாட்டுக்கலகங்கள் தோன்றின. 1547ல் ஹென்றி இறந்து போகவே அவரது வாரிசாக அரியணை ஏற்றார் எட்வர்ட். அவர் ஆறு ஆண்டுகள் பதவி வகித்து இறந்து போகவே அவரது சகோதரியும் ஹென்றியின் முதல்மனைவியின் வழியில் பிறந்த மகளான மேரி அரசியாக அறிவிக்கபட்டாள். அவள் ரோமானியத் திருச்சபையை மீறி ஹென்றி செய்த காரியங்கள் யாவையும் தடைசெய்ததோடு திருச்சபையை மீறியவர்கள் அத்தனை பேரையும் உயிரோடு தீ வைத்து எரித்தாள். இதனால் மக்கள் அவளை Bloody Mary அழைத்தனர். அவளது மரணத்திற்குப் பிறகு இளவரசியான எலிசபெத் பதவிக்கு வந்தாள். அவளது காலம் இங்கிலாந்து அரசமரபில் தனித்துவமானதாக எலிசபெத் ஆட்சிகாலம் என்று வகைப்படுத்தபடுகிறது. எலிசபெத் பதவியேற்றுக் கொண்டதும் அரசினை வழிநடத்துவதற்கு தகுதியானவர்களை தனது ஆலோசகர்களாக வைத்துக் கொண்டாள். அவளுக்கு இசையிலும் நாடகத்திலும் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அதனால் கலைகளின் வளர்ச்சிக்கு மிகுந்த உதவி செய்தாள். ஹென்றி அரசர் ஏற்படுத்திய சீர்திருத்த திருச்சபையை திரும்பும் நிறுவினாள். அவளது ஆட்சிகாலத்தில் லண்டனின் மக்கள் தொகை இரண்டு லட்சம் பேர். அவள் மிக தைரியமாகவும் நேரடியாகவும் எடுத்த அரசியல் முடிவுகள் அவளை அதிகாரத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது. (இவளது வாழ்க்கை வரலாற்றை எலிசபெத் என்ற பெயரில் சேகர் கபூர் திரைப்படமாக்கினார் ) எலிசபெத் காலத்தைய மக்கள் வாழ்வு மூன்று நிலைகளில் இருந்தது. பிரபுகள் எப்போதும் போல உயர்ந்த வசதியுடன் ஆடம்பரத்துடன் வாழ்ந்தனர். அடுத்ததாக வணிகர்களும் கலைஞர்களும் போகத்துடன் வாழ்ந்தார்கள். எளிய மக்களின் வாழ்வு எப்போதும் போலவே சிக்கல்களும் பிரச்சனைகளும் நிரம்பியதாக இருந்தது. பொதுமக்களின் பிரதான உணவாக ரொட்டியும் சூப்புமிருந்தன. வாரத்தில் புதன், சனி இரண்டு நாட்களிலும் மாமிசம் சாப்பிடுவதை மக்கள் தவிர்த்தனர். அந்த இரண்டு நாட்கள் மீன் சாப்பிடும் நாட்கள் என்று அழைக்கபட்டன. இந்த நாட்களுக்காகவே சிறப்புவகை மீன்கள் விற்கப்பட்டன. ஆடு, மாடு, பன்றி, மான், முயல், காடை, வாத்து, புறா, கோழி போன்றவற்றை உண்பதில் மக்கள் மிக ஆர்வம் காட்டினர். ஒயின், ரம், மற்றும் விஸ்கி குடிக்கும் பழக்கம் பரவலாக இருந்தது. விருந்திற்கான சிறப்பு ஒயின்கள் இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆண்களும் பெண்களும் பகட்டாக உடையணியும் பழக்கமிருந்தது. குறிப்பாக நடனவிருந்தில் சிறப்பு உடைகள் கட்டயாமாகயிருந்தன. அது போலவே வேட்டையாடுதலும் வனவிருந்தும் முக்கியமானதாகக் கருதப்பட்டன. சிறிய குற்றங்களுக்குக் கூட கடுமையாகத் தண்டனை வழங்கும் முறைகளிருந்தன. யாரை பற்றியாவது அவதூறு பேசினால் கூட அது கடுமையான குற்றமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடும். அதற்குத் தண்டனையாக கழுத்தில் மிகப்பெரிய இரும்பு கூண்டை மாட்டிவிடுவார்கள். அது போலவே திருடியவனின் கையைத் துண்டிப்பது. பொய் சொல்பவர்களின் நாக்கைத் துண்டிப்பது போன்றவை வழக்கத்திலிருந்தன.1576ல் லண்டனில் முதல் முறையாக பொது நாடக அரங்கம் உருவாக்கபட்டது. அது முதல் நாடகம் பிரதான கலை வடிவமாக வளரத் துவங்கியது. அரச சபை விழாகளுக்கு எனச் சிறப்பாக நாடகங்கள் நிகழ்த்தபட்டன. ஷேக்ஸ்பியர் கூட எலிசபெத் அரசியின் விழாவில் நாடகம் நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் எலிசபெத் பற்றி அவரது நாடகங்களில் அதிக குறிப்புகளில்லை. அவளது மரணத்தின் போது ஷேக்ஸ்பியர் இரங்கற்பா பாடவுமில்லை.1603ல் எலிசபெத் அரசி இறந்து போகவே அரியணைக்கு நேரடி வாரிசுகள் இல்லாமல் போனார்கள். ஸ்காட்லாந்தின் அரச குடும்பத்தை சேர்ந்த ஜேம்ஸ் இங்கிலாந்தின் மன்னராக பட்டம் சூடினார். இங்கிலாந்தின் வரலாற்றில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒருவர் மன்னராவது மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. ஜேம்ஸ் கடவுளின் பிரதிநிதியாகவே மன்னர்கள் செயல்பட வேண்டும் என்று விரும்பினார். ஆகவே இவரது கவனம் முழுவதும் திருச்சபை பணிகளிலே இருந்தது. 1604ல் இவர் 50 அறிஞர்கள் கொண்ட குழுவை நியமித்து எபிரேகு மொழியிலிருந்து பைபிளை மூல அர்த்தம் சிதையாமல் மொழிபெயர்த்து அதை அதற்கு முந்திய மொழிபெயர்ப்புகளோடு ஒப்பு நோக்கி சீரான பதிப்பாக வெளியிட ஏற்பாடு செய்தார். 1611ல் வெளியான அந்த பைபிள் பதிப்பே இன்று வரை நடைமுறையில் உள்ள ஜேம்ஸ் பதிப்பு ஆகும்.**அரசியல் மற்றும் திருச்சபைகளின் குழப்பமான காலமான 1564 ஏப்ரலில் ஷேக்ஸ்பியர் இங்கிலாந்தின் ஸ்ட்ராட்போர்டு அபான் அவோன் என்ற கிராமத்தில் பிறந்தார். ஷேக்ஸ்பியரின் அப்பா ஒரு தோல்பொருள்கள் விற்பனையாளர். அந்தக் கிராமத்தில் அப்போது 200 வீடுகளும் 1500 பேர்களுமே இருந்தார்கள். ஷேக்ஸ்பியர் பிறந்த நாள் துல்லியமாகப் பதிவு செய்யப்படவில்லை. நல்ல நாளில் திருச்சபைக்கு எடுத்து சென்று பலி தரும் வழக்கத்தின் படியே அவர் தேவாலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக குறிப்புகள் கூறுகின்றன. ஷேக்ஸ்பியரின் அப்பா ஜான் ஷேக்ஸ்பியர், அம்மா மேரி ஆர்டன். இருவருமே படிப்பறிவு அற்றவர்கள். ஷேக்ஸ்பியர் காலத்தில் ஆசிரியர்கள் வீடு தேடிவந்து கணிதம் மற்றும் லத்தீன் பாடங்களை குழந்தைகளுக்குக் கற்பிப்பது தான் வழக்கம். அதுவும் கல்வி கற்றுக் கொள்வது மிகுந்த ஆடம்பரமானதாக கருதப்பட்டது. ஷேக்ஸ்பியரை அவரை அப்பா இலக்கணப்பள்ளி ஒன்றில் சேர்ந்து கற்றுக் கொள்ள ஆசைப்பட்டார். அதற்கு காரணம் ஷேக்ஸ்பியர் காலத்தில் தான் பள்ளியில் முதன்முதலாக கரும்பலகைகள் (Black Board) அறிமுகப்படுத்தபட்டது. ஆசிரியர்கள் கரும்பலகையை உபயோகித்து கற்றுத் தருகிறார்கள் என்பது ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. அதற்காகவே ஷேக்ஸ்பியரை அவரது ஏழாவது வயதில் பள்ளியில் சேர்ந்து படிக்க அனுப்பி வைத்தார் அவரது அப்பா.பள்ளிப் படிப்பை முடித்த பிறகு ஷேக்ஸ்பியர் என்ன செய்தார் என்பதோ அவர் எதற்காக லண்டனுக்கு புறப்பட்டார் என்பதோ தெளிவாக விளக்கபடமாலே உள்ளது. ஆனால் ஷேக்ஸ்பியர் தனது பதினெட்டாவது வயதில் தன்னை விட 8 வயது மூத்தவரான ஆனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்தின் போது ஆனி மூன்று மாதக் கர்ப்பமாக இருந்ததாக தேவாலயக் குறிப்பேடு கூறுகிறது. ஷேக்ஸ்பியருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவள் சுசனா இரண்டாவது இரட்டை பிள்ளைகள். அதில் ஹாம்னெட் என்ற பையன் ஜூடித் என்ற பெண். ஹாம்னெட் தனது ஏழாவது வயதில் இறந்து போய்விட்டான் என்றும் அவனைப் புதைப்பதற்காக தேவாலயத்தில் அனுமதி கேட்ட குறிப்பும் பதிவேட்டில் காணப்படுகிறது.தனது இருபது வயதில் கவிதைகள் எழுதவும் நடிக்கவும் துவங்கிய ஷேக்ஸ்பியர் லண்டனில் நடிகராகவே தனது வாழ்வைத் துவக்கினார். அவருக்கு ஹென்றி ரியோத்ஸ்லே என்ற சவுத் ஹாம்டன் பிரபுவின் நட்பும், ஹென்றி ஹெபர்ட் என்ற பெம்பிரோக் பிரபுவின் நட்பும் கிடைத்தது. அவர்கள் ஷேக்ஸ்பியரின் புரவலர்களாக இருந்தனர். இதில் ஹென்றிக்கும் ஷேக்ஸ்பியருக்கும் இடையில் ஒரின கவர்ச்சியிருந்ததாகவும் ஷேக்ஸ்பியரின் கவிதைகள் ஒரினசேர்க்கையினை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.நடிப்பின் மூலம் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியர் தொடரந்து நாடகங்கள் எழுதத் துவங்கினார். அந்த நாடகங்கள் பிரபலமாகின. லண்டனில் புகழ்பெற்றிருந்த இருந்த பட்ங் கர்ழ்க் இட்ஹம்க்ஷங்ழ்ப்ஹண்ய்ள் ஙங்ய் என்ற நாடகக்குழுவில் நடிகராகச் சேர்ந்து பணியாற்றினார். தொடர்ந்து நாடங்களை எழுதி கவனம் பெற்று வந்தார். 1595 ஆண்டில் மட்டும் ஷேக்ஸ்பியரின் மூன்று நாடகங்கள் அரங்கேற்றபட்டிருக்கின்றன. அதில் ஒன்று ரோமியோ ஜூலியட். புகழின் உச்சியில் இருந்த ஷேக்ஸ்பியர் லண்டனில் தனக்கென பிரம்மாண்டமான வீடு ஒன்றை விலைக்கு வாங்கினார். அத்தோடு 1599 ல் தனியான நாடக அரங்கம் ஒன்றையும் நிறுவினார். குளோப் தியேட்டர் எனப்படும் திறந்தவெளி நாடக அரங்கம் அது. அந்த அரங்கில் தான் ஷேக்ஸ்பியரின் முக்கிய நாடகங்கள் நிகழ்த்தபட்டன. இந்த அரங்கம் ஒரு நாடக நிகழ்வின் போது எதிர்பாரத விதமாக தீக்கிரையானது. ஆனால் சில மாதங்களிலே அந்த அரங்கினை மறு சீரமைப்பு செய்தனர்.ஷேக்ஸ்பியர் தனது காலகட்டத்தில் மிகுந்த வசதியோடும் புகழோடும் வாழ்ந்திருக்கிறார். அன்றைய நாடக கம்பெனியின் நடிகர்களும் சக நாடக ஆசிரியர்களும் அவரைப்பற்றிய குறிப்புகளை எழுதியுள்ளனர். அக்குறிப்புகளில் அவரது செல்வாக்கு மற்றும் குடும்ப வாழ்வு குறித்த தகவல்களை காண முடிகிறது.அன்றைய நாடகமரபின் படியே ஷேக்ஸ்பியர்காமெடி டிராஜடி டிராஜிக் காமெடி ஹிஸ்டரி எனும் நான்கு வகைகளிலும் நாடகங்கள் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய மொத்த நாடகங்கள் 36 . ஷேக்ஸ்பியரின் மூலப்பிரதிகள் எதுவும் இன்று நம்மிடமில்லை. நடிகர்கள் பயிற்சிக்காக எடுத்து எழுதிச் சென்ற பிரதிகளில் இருந்தே அவரது நாடகப்பிரதிகள் உருவாக்கப்பட்டன. ஒரு சாதாரண மனிதன் தனது அன்றாட உபயோகித்திற்காக சராசரியாக ஐநூறு வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறான். படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் ஆயிரத்திற்கும் அதிகமான சொற்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதன் உச்சபட்ச அளவாக ஷேக்ஸ்பியர் தனது படைப்புகளில் பயன்படுத்தியிருந்த சொற்களின் எண்ணிக்கை 29,066. அவர் எழுதிய மொத்த வரிகளின் எண்ணிக்கை 118,406. இந்த ஒரு லட்சம் வரிகளில் உள்ள மொத்த சொற்களின் எண்ணிக்கை 8,84,647. அவர் மரணத்தின் நாலைந்து வருடங்களுக்கு பிறகு அவரது நண்பர்கள் அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது நாடகபிரதிகளை ஒவ்வொன்றாக வெளியிடத் துவங்கினர். இவை 1623ல் அச்சில் வெளியாகின. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிகப் பெரியது ஹாம்லெட். அந்த நாடகத்தில் 3,901 வரிகள் உள்ளன. மிகச்சிறிய நாடகம் தி காமெடி ஆப் எரர்ஸ் அது 1,911 வரிகளைக் கொண்டது.ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பெண் கதாபாத்திரங்களையும் ஆண்களே ஏற்று நடித்து வந்தனர். இந்த நிலை மாறி அவரது ஒத்தலோ நாடகத்தில் டெஸ்டிமோனோவாக நடிப்பதற்கு மார்க்ரெட் ஹூக்ஸ் என்ற பெண் முன்வந்தார் . இங்கிலாந்தின் நாடக வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் மேடையேறி நாடகத்தில் நடித்தது ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் தான்.ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களுக்கான கருவை பெரும்பாலும் நாட்டுபுறபாடல்களில் இருந்தும் சரித்திரக் குறிப்புகளிலிருந்தும் மரபுகதைகளிலிருந்தும் எடுத்துக் கொள்கிறார். எந்த குறிப்பிலிருந்து அவர் தனது நாடகங்களை உருவக்கினார் என்பதற்கான சான்றுகள் இன்று முழுமையாக கிடைக்கின்றன. ஷேக்ஸ்பியர் கள்ளத்தனமாக மான்வேட்டையாடியதாகவும் அதற்கு உரிய தண்டனையிலிருந்து தப்பிக்கவே லண்டனுக்குச் சென்றார் என்றொரு கதையும், லண்டனுக்கு வரும் வழியில் ஒரு விடுதியில் தங்கியபோது அங்குள்ள பெண்ணிற்கும் ஷேக்ஸ்பியருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒரு மகன் பிறந்தான். அவன் கவிஞனாக வளர்ந்தான் என்றும் சில கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. லண்டனில் வாழ்ந்த போது அவருக்கு ஒரு பிரபு குடும்பத்து இளம் பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டது அது நிறைவேறவில்லை என்றும் ஒரு கதையிருக்கிறது. இந்தக் காதலை Shakespeare in Love என்ற ஹாலிவுட் திரைப்படம் விவரிக்கிறது. இப்படம் ஏழு ஆஸ்கார் விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது ஷேக்ஸ்பியர் 1616ம் ஆண்டு ஏப்ரல் 23ம் நாள் லண்டனில் மரணமடைந்தார். அவரது உடல் ஏப்ரல் 25ம் தேதி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஷேக்ஸ்பியர் தான் இறந்து போவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக தனது உயிலை எழுதி வைத்திருக்கிறார். அந்த உயிலின் நகல் தற்போதும் பாதுகாக்கபட்டு வருகிறது.எல்லாச் சர்ச்சைகளையும் தாண்டி ஷேக்ஸ்பியரைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது அவரது வியக்கத்க்க கற்பனையும் உலக அறிவுமாகும்எப்படி ஸ்ட்ராட்போர்டு போன்ற சிறிய ஊரில் வசித்தபடியே கிரேக்க இலக்கியத்தின் அத்தனை முக்கிய ஆசிரியர்களையும் கற்றார். சோபாக்ளீசின் துன்பவியல் நாடகங்களையும் பிளேட்டோவையும் யாரிடமிருந்து கற்றுக் கொண்டார். ஜெர்மனிய அரசியல் பற்றி புத்தகங்கள் எப்படிக் கிடைத்தன. சட்டதுறையின் நுட்பங்களை அவ்வளவு துல்லியமாக எப்படி எழுத முடிந்தது?. கப்பல்படை மற்றும் ராணுவ செயல்பாடுகளை எங்கிருந்து அறிந்து கொண்டார். அவரது நாடகங்களில் இடம்பெற்றுள்ள தாவரங்கள். விலங்குகள்; பூக்கள் பற்றிய ஆயிரக்கணக்கான தகவல்களை எவ்வளவு ஆண்டுகள் செலவிட்டு சேகரித்திருப்பார். குறிப்பாக பருந்தை பழக்கி பந்தயத்திற்கு விடுவதில் துவங்கி பூ நாகம் வரை எப்படி அவரால் இவ்வளவு நுட்பமாக விவரிக்க முடிந்தது. இந்த ஆச்சரியங்கள் தான் ஷேக்ஸ்பியரை இன்றும் தொடர்ந்து வாசிக்க செய்தபடியே உள்ளது. ஷேக்ஸ்பியரை தமிழில் அறிந்து கொள்ள காரைக்குடியில் உள்ள சோமசுந்தரம் என்ற நாடக ஆர்வலர் பதினெட்டு முக்கிய நாடகங்களை எளிமையாக மொழியாக்கம் செய்து அவரது பொன்முடி பதிப்பகத்திலே வெளியிட்டுள்ளார். ஷேக்ஸ்பியரை நேரடியாக வாசிப்பதற்கு நான் சிபாரிசு செய்வது ஷேக்ஸ்பியரின் ஆர்டன் பதிப்பாகும். (Shakespeare-Arden Edition) மிக நேர்த்தியான பதிப்பது. ஷேக்ஸ்பியர் திரைப்பட வரிசை என்று இருபத்தியோறு திரைப்படங்கள் காணக்கிடைக்கின்றன. காமிக்ஸ், அனிமேஷன் மற்றும் வீடியோ விளையாட்டுகளில் கூட ஷேக்ஸ்பியர் பயன்படுத்தபட்டு வருகிறார்.கிங் லியரை அகிரா குரசோவா, கோதார்ட், ஆர்சன் வெல்ஸ் மூவரும் இயக்கியுள்ளார். மூன்றையும் ஒரே நேரத்தில் காணும் போது அதன் நுட்பமான வித்யாசமும் கலைஞனின் தனித்துவமும் புரியக்கூடும்.-சென்னையில் நடைபெற்ற மாற்று அரங்கம் நாடகப் பயிலரங்கில் வாசிக்கபட்ட கட்டுரை