இந்தியாவைக் கதைக்களனாகக் கொண்டு MERCHANT IVORY தயாரிப்பில் இருபதுக்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்கபட்டுள்ளன. அவற்றில் மிகச்சிறந்த படமாக ஷேக்ஸ்பியர் வாலாவைக் கருதுவேன். 1965 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் ஆங்கில எழுத்தாளர் ரூத் ப்ராவர் ஜப்வாலா. சசிகபூர் மதுர் ஜாஃப்ரி முக்கியக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள் இப்படத்திற்குச் சத்யஜித்ரே இசையமைத்துள்ளார். சுப்ரதா மித்ராவின் அற்புதமான ஒளிப்பதிவு படத்தின் தனிச்சிறப்பு.
ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அதுவும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது அவர்கள் ஏற்பாடும் செய்யும் விருந்து மற்றும் விழாக்களில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் தவறாமல் இடம்பெற்றன.
இந்தியாவில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை நிகழ்த்துவற்காகவே தனியான நாடகக்குழுக்கள் இயங்கின. இப்படமும் அப்படியான ஒரு நாடகக் குழுவினைப் பற்றியதே. பக்கிங்ஹாம் பிளேயர்ஸ் என்று அழைக்கப்படும் டோனி பக்கிங்ஹாம் மற்றும் அவரது மனைவி கார்லா, மகள் லிசி ஷேக்ஸ்பியர் நாடகக் குழு ஒன்றை நடத்தி வருகிறார்கள்.
காலனிய ஆட்சிக்குப் பின்பு ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கான வரவேற்பு குறைந்துவிட்டது. மகாராஜாக்களின் ஆதரவை நம்பியே நாடகம் நிகழ்த்த வேண்டிய கட்டாயம்.
இன்னொரு புறம் சினிமாவின் வருகையால் ஏற்பட்ட மாற்றம். சினிமா நடிப்பை ஏற்றுக் கொள்ளாத நாடக உலகின் மரபான மதிப்பீடுகள் இவற்றை அழகாகப் பின்னிச் செல்கிறது திரைப்படம்.
படத்தின் துவக்கத்தில் பக்கிங்ஹாம்ஸ் குழுவினர் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிமுகப்படுத்துகிறார்கள்.. அவர்கள் ஒரு மகாராஜாவைச் சந்திக்கிறார்கள், அவர் அளிக்கும் விருந்தில் கலந்து கொண்டு மது அருந்தியபடியே உரையாடுகிறார்கள். பின்னர் மகாராஜாவின் முன்னால் ஷேக்ஸ்பியரின் நாடகத்தை நிகழ்த்துகிறார்கள். விசித்திரமான பின்புலத்தில் நாடகம் நிகழ்த்தப்படுகிறது.
அடுத்த நாடக நிகழ்விற்காக அங்கிருந்து இரண்டு நெரிசலான வாகனங்களில் புறப்படுகிறார்கள். வழியில் அவர்களின் கார்களில் ஒன்று பழுதடைகிறது, அவர்களுக்குப் பணக்கார இளைஞனான சஞ்சு உதவி செய்கிறான்.
நாடக குழுவிலிருந்த லிசியின் அழகில் ஈர்க்கப்படுகிறான், லிசியின் அடுத்த மேடை நிகழ்ச்சியைப் பார்ப்பதாக உறுதியளிக்கிறான். ஒரு நாள் பக்கத்துக் கிராமத்தில் நடக்கும் சினிமா படப்பிடிப்பை காணச் செல்கிறார்கள். அங்கே நடிகை மஞ்சுளா அறிமுகமாகிறாள். அவளுக்கும் சஞ்சுவிற்கும் முன்னதாக உறவு இருக்கிறது. ஆயினும் சஞ்சு லிசியிடம் காதல் கொள்கிறான் அவர்கள் நெருக்கமாகப் பழகுகிறார்கள். மஞ்சுளாவின் ஊமை வேலைக்காரன், சஞ்சுவும் லிசியும் கட்டித்தழுவுவதைக் கண்டதாகச் சைகை மொழியில் அவளிடம் தெரிவிக்கிறான். இதனால் ஆத்திரமான மஞ்சுளா லிசியைத் தேடிச் சென்று சண்டையிடுகிறாள்.
ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தைப் பக்கிங்ஹாம்ஸ் நிகழ்த்துவதைப் பார்க்க மஞ்சுளாவை சஞ்சு அழைத்துச் செல்கிறான், அங்கே வேண்டுமென்றே மஞ்சுளா குழப்பத்தை ஏற்படுத்துகிறாள். இதனால் லிசி ஆத்திரம் கொள்கிறாள். தங்கள் மகளுக்கும் சஞ்சுவிற்குமான காதல் குறித்து டோனியும் கிளாராவும் கவலைப்படுகிறார்கள், சஞ்சுவின் காதல் நிறைவேறியதா என்பதே படத்தின் பிற்பகுதி.
நாடகக் குழுவினர் சிம்லாவில் தங்கியிருக்கும் காட்சிகள் சிறப்பானவை. மூடுபனியும் பைன் மரங்கள் அடர்ந்த சாலையும் கண்ணிலே உறைந்து விடுகின்றன.
தி ஹவுஸ்ஹோல்டர் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் ஐவரி சசிகபூரின் மனைவி ஜெனிபர் கெண்டலுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவளது பெற்றோர்கள் நடத்தும் நாடகக்குழு மற்றும் அவர்களின் நாடகப்பயணம் பற்றி அறிந்து கொண்டார். இந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தை உருவாக்கலாம் என்று ஐவரி விரும்பினார். கெண்டல் குடும்பத்தின் குறிப்பேடுகளை மையமாக் கொண்டு ரூத் ப்ராவர் ஜப்வாலா திரைக்கதையை எழுதியிருக்கிறார்.
பிளேபாய் கதாபாத்திரமான சஞ்சுவாக சசிகபூர் சிறப்பாக நடித்திருக்கிறார். சினிமா நடிகை மஞ்சுளாவாக நடித்திருப்பவர் மதுர் ஜாஃப்ரி.
வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த இருவர் காதலிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளையும் நிபந்தனையற்ற அன்பின் முக்கியத்துவத்தையும் பற்றி படம் பேசுகிறது.
1953 இல் கெண்டல் குடும்பத்தினர் இந்தியாவை விட்டு வெளியேறினாலும், ஐவரி தனது திரைப்படத்தை 1965 இல் நடப்பதாக உருவாக்கினார். காரணம் அப்போது தான் காலனிய மயக்கம் தீர்ந்து இந்தியர்களின் ரசனையில் புதிய மாற்றம் உருவாகியிருந்த்து. ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட காலனிய சின்னங்களில் இந்தியர்கள் ஆர்வம் இழந்து போயிருந்தார்கள்.
ஷேக்ஸ்பியர் நாடகங்களை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே மேடையேற்ற வேண்டும் என்று டோனி பக்கிங்ஹாம் விரும்புகிறார். நடிப்பும் கூட விக்டோரியன் பாணியில் இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறார். இந்தியப் பார்வையாளர்கள் ரசனை மிக்கவர்கள். இதனை ஏற்றுக் கொண்டு கொண்டாடுவார்கள் என்று ஆழமாக நம்புகிறார். அப்படியான கடந்த கால நினைவுகளும் அவருக்குள் இருக்கின்றன. ஆனால் காலமாற்றம் ஷேக்ஸ்பியர் நாடகங்களை அதன் மூல வடிவில் ஏற்றுக் கொள்ளத் தயராகயில்லை. அது போன்ற நாடக முயற்சி சலிப்பூட்டுவதாக உணருகிறார்கள். படத்திலும் ஒரு காட்சியில் அது போன்ற விமர்சனம் முன்வைக்கபடுகிறது.
இந்திய நாடகத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய உத்பல் தத் ஷேக்ஸ்பியரை நம் காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார். படத்தில் அவர் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
பார்வையாளர்கள் மாறத் தொடங்கியவுடன் மரபான நாடக முயற்சிகள் கைவிடப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது. ஷேக்ஸ்பியர் விசுவாசிகளுக்கு இது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இது தான் உண்மையான நிலை என்று படம் சுட்டிக்காட்டுகிறது. படத்தில் டோனி பக்கிங்ஹாம் அதனை நன்கு உணர்ந்து கொள்கிறார். ஆனால் அதை மனதளவில் ஏற்க முடியவில்லை. அவரைப் பொறுத்தவரை இந்தியா என்பதே ஒரு நாடகமேடை தான். இந்த மாற்றங்களை லிசி புரிந்து கொள்கிறாள். ஏற்றுக் கொள்கிறாள். அவள் அடுத்த தலைமுறையின் அடையாளம்.
All the world is a stage and we are merely players என்று ஷேக்ஸ்பியர் சொன்னது டோனி பக்கிங்ஹாமிற்கும் பொருந்தக்கூடியதே.